Published:Updated:

``தனுஷ் வார்த்தைக்காக காத்திருக்கேன்``

``தனுஷ் வார்த்தைக்காக காத்திருக்கேன்``
பிரீமியம் ஸ்டோரி
``தனுஷ் வார்த்தைக்காக காத்திருக்கேன்``

பா.ஜான்சன்

``தனுஷ் வார்த்தைக்காக காத்திருக்கேன்``

பா.ஜான்சன்

Published:Updated:
``தனுஷ் வார்த்தைக்காக காத்திருக்கேன்``
பிரீமியம் ஸ்டோரி
``தனுஷ் வார்த்தைக்காக காத்திருக்கேன்``

“தமிழ் நல்லாப் பேசுறேனா... அட படிச்சது, வேலை பார்த்ததெல்லாம் கோயம்புத்தூர்தான் ப்ரோ. அங்கே பார்த்த நிறைய சினிமாக்கள், என் நண்பர்கள் எல்லாரும்தான் நான் நடிப்பை நோக்கி ஓட முக்கியக் காரணம். சின்ன வயசிலேருந்து நடிப்பு மேல் ஆசை. ஆனா, ஸ்கூல் ஆண்டு விழாவில்கூட மேடை ஏறி நடிச்சு எனக்குப் பழக்கம் கிடையாது. ஆசை சும்மா விடுமா? வேலையை ரிசைன் பண்ணிட்டு விளம்பரங்கள், குறும்படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அப்பதான் வந்தது ‘பிரபுவின்டே மக்கள்’ பட வாய்ப்பு. எனக்கு நடிப்பு மேல ஆர்வம் இருக்குன்னு துளிகூட வீட்ல தெரியாது. திடீர்னு நடிக்கப் போறேன்னு சொன்னதும் `எதுக்குப்பா’ன்னாங்க. ஆனா, முதல் படம் வெளியானதுக்குப் பிறகு `இந்தப் பையனுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்’னு சந்தோஷப்பட்டாங்க. இப்போ தமிழ்ல அறிமுகமாகப் போறேன். எப்படி நடிக்கறேனு நீங்கதான் சொல்லணும்” - தன்னைப்பற்றிய  குட்டி பயோவுடன் பேசத் துவங்கினார் நடிகர் டோவினோ தாமஸ். தமிழ், மலையாளத்தில் உருவாகியிருக்கும் `அபியும் அனுவும்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். டோவினோவின் அடுத்த மலையாளப் படமான ‘தரங்கம்’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்!

``தனுஷ் வார்த்தைக்காக காத்திருக்கேன்``

``துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபஹத் ஃபாசில் இப்போ நீங்கனு அடுத்தடுத்து தமிழில் நடிக்க ஆரம்பிக்கிறீங்களே?’’

``ஆரோக்யமான விஷயம்தானே. நமக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்றதில் எப்பவும் தயக்கம் காட்டக் கூடாது. ‘அபியும் அனுவும்’ படத்தின் இயக்குநர் விஜயலட்சுமி இந்தக் கதை சொன்னப்போ, ரொம்பப் பிடிச்சிருந்தது. காதல் கதைதான். ஆனா, வழக்கமான படமா இருக்காது. அவங்க அப்பா பந்துலு பெரிய இயக்குநர். அப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்ததால ரொம்ப சுலபமா எங்ககிட்ட வேலை வாங்கினாங்க. பிரபு, சுஹாசினி, ரோகினினு கூட நடிச்சவங்க எல்லாரும் அத்தனை எக்ஸ்பீரியன்ஸான ஆட்கள். இது கண்டிப்பா தமிழ்ல எனக்கு நல்ல அறிமுகத்தைத் தரக்கூடிய படமா இருக்கும்.’’

``அதிகமா சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள் பண்ணியிருக்கீங்க... எந்த அடிப்படைல ஒரு படத்தில் நடிக்கணும்ங்கிற முடிவை எடுக்கிறீங்க?’’


``ஒரு நடிகரா நான் இதைத்தான் பண்ணுவேன்னு எப்பவும் நீங்க முடிவு பண்ண முடியாது. நான் நடிச்ச ‘கூதரா’ படத்தில் மோகன்லால் சார் ஒரு கேமியோ பண்ணியிருப்பார். அவர் இருக்கும் உயரத்துக்கு ஒரு படத்தில் சின்னரோல் பண்றதுக்கு அவசியமே கிடையாது. ஆனா, அவர் நடிச்சார். அதுதான் ஒரு நடிகனா நம்ம வேலை. துல்கர்கூட நடிச்ச ‘ஏபிசிடி’ல ஓர் அரசியல்வாதி ரோல், `யூ டூ ப்ரூட்டஸ்’ படத்தில் மூணு லீட் ரோலில் ஒருத்தரா நடிச்சிருப்பேன், பிருத்விராஜ் நடிச்ச `செவன்த் டே’, `என்னு நின்டே மொய்தீன்’ படங்களில் என்னுடைய கதாபாத்திரம் நல்லாப் பேசப்பட்டது. லீட் ரோலில் நடிச்ச `ஒரு மெக்ஸிகன் ஆப்ரதா’, `கோதா’ படம் இந்த வருஷத்தின் பெரிய ஹிட்ஸ்.  இது எல்லாமும் நான் விரும்பி நடிச்சது. நம்மைப் பார்ப்பாங்களா கவனிப்பாங்களானு யோசிச்சு நடிக்கிறதைவிட நம்ம வேலைக்கு நாம உண்மையா இருந்தோம்னா, நமக்கான வாய்ப்புத் தானா வரும்.’’

``சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் நீங்கள். வழிகாட்ட யாராவது இருந்தா, நல்லாயிருக்குமேன்னு நினைத்ததுண்டா?’’

``சினிமா பின்னணி இல்லைதான். ஆனா, வழிகாட்ட நிறைய பேர் கிடைச்சாங்க. பிருத்விராஜ் சார் நிறைய மோட்டிவேட் பண்ணுவார். அவர் எனக்கு  அண்ணன் மாதிரி. அது மாதிரி நிறைய நடிகர்கள், இயக்குநர்கள் இருக்காங்க. சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு நமக்கு அமையும் பின்னணி ரொம்பப் பலமானது. நட்பு ரீதியிலும், சினிமா ரீதியிலும் பல நல்ல வழிகளை நமக்குக் கொடுக்கும்.’’

``தனுஷ் தயாரிப்பில் ‘தரங்கம்’ படத்தில் நடிச்சிருக்கீங்க. எப்படி நடந்தது இந்தக் கூட்டணி?’’

``தனுஷ் சாருக்கு இந்தக் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. எனக்கும் இந்தப் படத்தில் ரொம்ப வித்தியாசமான ரோல். சஸ்பெண்ட் ஆன போலீஸ் ஆபீஸரா நடிச்சிருக்கேன். டார்க் காமெடிப் படமா ரொம்ப ஜாலியா இருக்கும். படத்தின் இயக்குநர் டோம்னிக் அருண் இயக்கிய `மிரித்யும்ஜெயம்’ குறும்படம் ரொம்பப் பிரபலமானது. அவர் `தரங்கம்’ பற்றிச் சொன்னதும் உடனே சம்மதிச்சுட்டேன். படத்தைத் தனுஷ் சார் தயாரிக்கிறார்னு சொன்னதும் இன்னும் சந்தோஷமா இருந்தது. அவரைச் சந்திக்கும் வாய்ப்பு பட வேலைகள் துவங்கினதுக்குப் பிறகுதான் அமைஞ்சது. என்னுடைய படங்கள் பற்றிச் சொன்னார். படம் பார்த்துட்டு தனுஷ் என்ன சொல்லப் போறார்னு காத்திருக்கேன்.’’

``தொடர்ந்து தமிழ்ல நடிப்பீங்களா?’’

``அடுத்து ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறதுக்கான பேச்சுவார்த்தையும் நடந்திட்டிருக்கு. அது ஓகே ஆச்சுன்னா, சீக்கிரமே என்னை வில்லனா பார்ப்பீங்க.’’