
பெண்கள் ஆலம் விருட்சங்களாக வளரும் வீரியம்கொண்டவர்கள்; அவர்களை நான்கு சுவற்றுக்குள் அடைத்து போன்ஸாய் மரங்களாக்காதீர்கள் என்கிறது `மகளிர் மட்டும்’.
பள்ளிக்காலத்தில் ஊர்வசி, சரண்யா மற்றும் பானுப்ரியா மூவரும் ஆயுத எழுத்தில் உள்ள புள்ளிகளைப்போல நெருங்கியத் தோழிகள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தீபாவளி இரவன்று, `அவள் அப்படித்தான்’ படம் பார்க்க விடுதிச் சுவற்றைத் தாண்டுகிறார்கள். அதனால் பள்ளி நிர்வாகம் அவர்களைப் பள்ளியிலிருந்து நீக்க, அன்றிலிருந்து எந்தத் தொடர்புமில்லாமல் வாழ்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மூவரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள், ஒன்று சேர்ந்த தோழிகள் என்ன செய்தார்கள் என்பதை கலர்ஃபுல்லாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரம்மா.
மிகுந்த தன்னம்பிக்கைக்கொண்டவராகப் பானுப்ரியா, தலைமைப்பண்பு கொண்டவராகச் சரண்யா, குறும்பும் குட்டிக்குட்டிப் பேராசையும்கொண்டவராக ஊர்வசி என மூவரின் கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் ஆர்வம்கொண்ட முற்போக்காளராக ஜோதிகா. நாசர், லிவிங்ஸ்டன், அம்புலி கோகுல் என எல்லா நடிகர்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும், பானுப்ரியாவின் மூத்த மகனாக வரும் பாவெலின் நடிப்பு ரகளை. காஸ்ட்டிங் படத்தின் மிகப்பெரும் பலம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஊர்வசியின் லைன் வீட்டில் தொடங்கும் மணிகண்டனின் கேமரா வித்தை பானுப்ரியாவின் புழுதி படர்ந்த ஆக்ரா மாளிகை வழியே பயணப்பட்டு சரண்யாவின் ஹைதராபாத் குருவிக்கூட்டைத் தொடும்போது மிளிர்கிறது. இந்தியாவின் மூன்று மூலைகளில் வாழும் மூன்று மனிதர்களின் பின்னணியை, அவர்களது வீடே சொல்லுமளவிற்கு அசாத்தியமாய் உழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சி.எஸ்.பாலச்சந்தர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் சிறப்பு!
தோழிகளின் சந்திப்பு, அவர்களின் விளையாட்டு, அவர்களின் ஆதங்கம், சங்கர்- கௌசல்யா வரும் காட்சிகள் என நெகிழ்ச்சியான மற்றும் சுவாரஸ்யமான தருணங்கள் படத்தில் ஏராளம். ஆனால், பெரும்பாலான கருத்துகள் வசனங்களாகவே பார்வையாளர்களை அடைகின்றன. அதற்கான பொருத்தமான காட்சியமைப்புகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
ஆனால், `அவர்கள் அப்படித்தான். அவர்களை அவர்களாக இருக்கவிடுங்கள். அதுதான் சுதந்திரம்’ எனச் சொன்னவிதத்திலும், பெண்ணியம், சாதியம் போன்ற விஷயங்களை அரசியல் தெளிவோடு அணுகியதிலும் `மகளிர் மட்டும்’ நம்பிக்கை சினிமாவாக உயர்ந்து நிற்கிறது!
- விகடன் விமர்சனக் குழு