
பரிசல் கிருஷ்ணா
மான் கராத்தேவின் ‘நெருப்பு குமார்’, கபாலிக்குப் பிறகு ‘நெருப்புடா’ குமார்.அருண்ராஜா காமராஜ். `நான் இப்போ டைரக்டர்’ எனச் சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார். சிரிப்புகளுக்கு இடையே பேசியதிலிருந்து...

``என்ன திடீர்னு இயக்கம்?”
“மணி சாரோட ‘ஆய்த எழுத்து’ படம் பார்த்த நைட்ல ஆரம்பிச்ச ஆசை அது. திடீர்னு ஒருநாள், பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி, அவங்களோட லைஃப் டிராவலோட ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன். எனக்குத் தெரிஞ்ச ஊரைக் காமிக்கறதுதான் நேர்மைனு குளித்தலையை மையமா வெச்சுதான் பண்ணிருக்கேன். ஆடிஷன்ஸ் போய்ட்டிருக்கு. ஜனவரில ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது ப்ரோ’’ சிரிக்கிறார்.
“கிரிக்கெட் மேல ரொம்ப ஆர்வமோ?”
``ஆமாம். காலேஜ் டீம்ல இருந்தேன். மூன்று முறை ஸோனல் வின்னர்ஸ். சின்ன வயசுல இருந்தே, என் பேரைக் கேட்டா ‘அருண்ராஜா காமராஜ்’னு அப்பா பேரோடதான் சொல்லுவேன். அதெல்லாமே கிரிக்கெட்டர்ஸ் பேரைப் பார்த்துப் பழகினதுதான். கிரிக்கெட் மேல எனக்கிருந்த ஆர்வம், இப்ப கிரிக்கெட் அடிப்படைல படம் பண்ற வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கு.’’
“ஆனாலும் ‘கவிஞர் + பாடகர்’ அருண்ராஜாதான் வெளில ஃபேமஸ் இல்லையா?”
``ஆமாம். ‘வேட்டை மன்னன்’ல வொர்க் பண்ணிட்டிருக்கறப்ப சந்தோஷ் நாராயணன் கூப்டார். காலேஜ்ல எங்க சீனியர். ஒரு ஆல்பத்துக்காக வொர்க் பண்ணினோம். நான் பாட்டு எழுதறேன்னு கேட்டு, எழுதினேன். அந்தப் பாட்டு ‘உயிர்மொழி’னு ஒரு படத்துல வந்தது. நானும், அந்தோணி தாஸும் சேர்ந்து பாடினோம். திரும்ப ‘பீட்சா’ படம் பண்றப்ப சந்தோஷண்ணா கூப்பிட்டு எழுத வெச்சார். ‘ராத்திரியை ஆளும் அரசன்’, ‘எங்கோ ஓடுகின்றாய்’னு ரெண்டும் ஹிட் ஆச்சு. அப்படியே தொடர்ந்து பண்ணிட்டிருக்கறப்ப ஜிகிர்தண்டா `டிங்டாங்’ சாங். ஜி.வி.பிரகாஷ்குமார் சார் அப்ப தயாரிப்புல இறங்கிருந்தார். அவர்கிட்ட டைரக்ஷனுக்காக ஒரு கதை சொல்லப்போய், அவரும் என் பாட்டுகள் பத்திக் கேட்டு, எழுத வெச்சார்.
‘தெறி - என் 50வது படம். அதுல நீ இருக்கணும்’னு சொல்லி ‘தோட்டா தெறிக்க தெறிக்க’ வாய்ப்பு குடுத்தார். அப்பவரைக்கும் நானா சொல்லிக்கிட்டாதான் நான் எழுதின பாட்டுன்னு தெரியும். ‘தெறி’-க்கப்புறம் அது மாறுச்சு. அதன்பிறகு சந்தோஷண்ணா கபாலி சான்ஸ் குடுத்தது... என் லைஃபையே ‘கபாலிக்கு முன்; கபாலிக்குப் பின்’ அப்டினு மாத்திடுச்சு!’’
``குடும்பம் பற்றிச் சொல்லுங்க?’’
“சொந்த ஊர் குளித்தலை. அப்பா, அம்மா, அண்ணன், அக்கானு எல்லாரும் ஊர்லதான். 2013ல கல்யாணம் ஆச்சு. மனைவி பேர் சிந்துஜா. கொஞ்சம் லவ்; கொஞ்சம் அரேஞ்சுடு மேரேஜ்!” சிரிக்கிறார்.