Published:Updated:

மோடி - எடப்பாடி, ஹெச்.ராஜா - பா.ஜ.க. - சில `விஸ்வாசம்' கதைகள்!

வீரம் பட அறிவிப்பின்போது `சிறுத்தை எப்படிப் பாயுதுனு பாரு' எனக் கொண்டாடியவர்கள் விஸ்வாசம் பட அறிவிப்பின்போது, `அது ஏன் சிறுத்தை எப்பப் பாத்தாலும் எங்க மேலேயே பாயுது?' எனக் கண்ணீர் வடித்தார்கள்.

மோடி - எடப்பாடி, ஹெச்.ராஜா - பா.ஜ.க. - சில `விஸ்வாசம்' கதைகள்!
மோடி - எடப்பாடி, ஹெச்.ராஜா - பா.ஜ.க. - சில `விஸ்வாசம்' கதைகள்!

`நடுச்சாமத்துல பண்ற வேலையாய்யா அது?' என ஊர்ப்பக்கம் கிண்டலடிப்பார்கள். நிஜமாகவே நடுச்சாமத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விட்டிருக்கிறது விஸ்வாசம் படக்குழு. `வீரம் கிராமத்து சப்ஜெக்ட், வேதாளம் சிட்டி, விவேகம் இன்டர்நேஷனல். அப்படின்னா கண்டிப்பா விஸ்வாசம் ஏதோ ஸ்பேஸ் ஸ்பை த்ரில்லர் ஹாரர் தங்கச்சி சென்டிமென்ட் மூவியாதான் இருக்கும்' என யூகங்கள் ஃபர்ஸ்ட் லுக்கைவிட வேகமாகப் பரவுகின்றன. சரி, அதெல்லாம் இருக்கட்டும், சில ரியல் டைம் விஸ்வாசக் கதைகளைப் பார்ப்போமா?

மோடி - எடப்பாடி:

ராமன் - ஜடாயு, துரியோதனன் - கர்ணன் இதிகாச விஸ்வாசக் கதைகளை எல்லாம் விஞ்சியது இந்தக் கதை. டெல்லியிலிருந்து எந்த நேரத்தில் ட்ரங்க்கால் வந்தாலும் டக்கென எடுத்துப் பேசிவிடும் அளவுக்கு விஸ்வாசம். அதனாலேயே, `இந்த ஆடி முடிஞ்சு ஆவணி வந்தா கவுந்துடும்' என நாள்கள் நகர்கிறதே தவிர ஆட்சி கோயிங் ஸ்டெடி. தமிழ்நாடு தகரடப்பா ஆனாலும் சரி, மூழ்காத இரும்பு ஷிப் இந்த ப்ரெண்ட்ஷிப் என நட்பு இன்ச் அளவும் குறையாத இந்த உன்னதக் கதையை வரலாறு என்றும் மன்னிக்கா... ஸாரி மறக்காது!

டாப் ஸ்டார் பிரசாந்த் - அவரின் ரசிகர்கள்:

ஒருகாலத்தில் விஜய் அஜித்துடன் எல்லாம் போட்டி போட்டவரை இப்போது விமலுக்குப் போட்டியா இல்லையா என விவாதமாக்கி இருக்கிறது காலத்தின் கோலம். ஆனாலும் சளைக்காமல் `இந்தக் காலை பூரிப்பான இட்லிபோல பூத்துக்குலுங்க வாழ்த்துகிறேன்' என ஃபேஸ்புக்கில் ரசிகர்களுக்கு கமென்ட் தட்டிக்கொண்டிருக்கிறார். `புலன் விசாரணை 2 படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க சார்' எனச் சொன்ன ரசிகருக்கு, `அது ரிலீஸாகி ரெண்டு வருஷமாச்சே, பாக்கலையா, இருங்க சிடி அனுப்பிவைக்கிறேன்' எனச் சொல்லும் குழந்தை மனசுக்காரர். ரசிகர்கள்கிட்ட உங்களுக்கு இருக்கிற விஸ்வாசம் இருக்கே, வாவ்!

அட்லீ - ராஜ் டிஜிட்டல் சேனல்:

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் என ஊரே ஒருபக்கம் போனாலும் அட்லீ தன் வீட்டில் சப்ஸ்க்ரைப் செய்திருக்கும் ஒரே சேனல் ராஜ் டிஜிட்டல்தான். சும்மாவா இந்த விஸ்வாசம். அவருக்குக் கதை பஞ்சமே ஏற்படாமல் பழைய படங்களைப் போட்டு பார்த்துக் 'கொல்கிறதே' அந்த சேனல். மெளனராகம், சத்ரியன் போன்ற மணிரத்னத்தின் பட வரிசையில் அடுத்ததாக அவர் நாயகனை உல்டா செய்யலாம். ஆனால் அது ஏற்கெனவே `தலைவா' ஆகிவிட்டதால் இம்முறை மாட்டுவது தளபதியாகத்தான் இருக்கும். தளபதி இன் தளபதி, சூப்பரு!

ஹெச்.ராஜா - தமிழக பா.ஜ.க:

பொதுவாகவே அரசியல் கட்சிகளில் கொள்கை பரப்ப, கட்டமைப்பை நிர்வாகிக்க எனத் தனித்தனி வேலைகளுக்காக ஆட்களை நியமிப்பார்கள். ஆனால், உலகத்திலேயே கலாய் வாங்குவதற்காகவே ஒரு ஃபுல்டைம் எம்ப்ளாயீ வைத்திருப்பது தமிழக பா.ஜ.கதான். அந்த எம்ப்ளாயீயும் எவ்வளவு அடி வாங்கினாலும் `என்னா பாஸு அம்புட்டுத்தானா? ப்ச்!' எனத் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு அடுத்த ஏரியாவுக்கு வண்டியைக் கிளப்பிவிடுகிறார். கட்சி மேல் அவரும் அவர் மேல் கட்சியும் வைத்திருக்கும் இந்த பரஸ்பர விஸ்வாசம் வாட்ஸ் அப் பார்வேர்டுகளில் பொறிக்கப்பட வேண்டியவை.

அஜித் - சிவா:

வீரம் பட அறிவிப்பின்போது `சிறுத்தை எப்படிப் பாயுதுனு பாரு' எனக் கொண்டாடியவர்கள் விஸ்வாசம் பட அறிவிப்பின்போது, `அது ஏன் சிறுத்தை எப்பப் பாத்தாலும் எங்க மேலேயே பாயுது?' எனக் கண்ணீர் வடித்தார்கள். ஆனாலும் இந்த ஜோடி அசருவதாக இல்லை. போகும் வேகத்தைப் பார்த்தால் `விநோதம், விவகாரம், விண்வெளி ஓடம், வீட்டுக்குப் போகணும், வேண்டாம் , வலிக்குது' என அகராதியில் இருக்கும் அத்தனை `V' வார்த்தைகளிலும் படமெடுத்துவிட்டுத்தான் இந்த ஜோடி ஓயும்போல. உங்க ரெண்டு பேருக்கும் மத்தியில இருக்குற இந்த விஸ்வாசம் இருக்கே, இன்னும் நிறைய எதிர்ப்பாக்குறோம்!