Published:Updated:

உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!

உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!

நிலவழகன் சுப்பையா

உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!

நிலவழகன் சுப்பையா

Published:Updated:
உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!

லக சினிமா, இப்போது வேற லெவல் சினிமா. தமிழ் சினிமா குறியீடுகளைக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்க, உலக சினிமாவோ பல்வேறு திரைமொழி மாற்றங்களுடன் பறந்துகொண்டிருக்கிறது. மாற்று அரசியல், ரியலிஸம், அக உலகம் என உலக சினிமா தொட்டுக்கொண்டிருக்கும் ஏரியாக்கள் விரிவடைந்து கொண்டே போகின்றன. அப்படி சமீபத்தில் வெளியான வெவ்வேறு திரை மொழிகள் கொண்ட படங்கள் இங்கே!

ரியலிஸம்!

ரியலிஸம் என்பது சினிமாவுக்குப் புதிதல்ல. 1940-களில் இத்தாலிய சினிமா, 80-களில் இரானிய சினிமாக்கள் முழுக்க முழுக்க ரியலிஸ சினிமாக்களைத்தான் முன்வைத்தன. ஆனால்,  இப்போதைய ரியலிஸ சினிமாக்கள் அதன் உச்சம்.  உதாரணமாக இந்த வருடம் வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட The night I swam என்னும் ஜப்பானிய திரைப்படம் இயல்பு வாழ்க்கைக்கு மிக மிக அருகில் நிகழும் ஒரு படம். அடர்ந்த பனி மூடிய அந்த ஜப்பானிய சிறுநகரத்தில் காலையில் விழித்தெழும் சிறுவன் தன் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டதை அறிகிறான். விடிந்திராத அந்தக் காலையில் தன் அக்காவை எழுப்ப முயன்று தோற்று, பெற்றோரின் படுக்கைக்குச் சென்று ஏக்கத்தோடு உறங்கிப்போகிறான். பிறகு அக்கா, தம்பி இருவரும் தானாகக் கிளம்பிப் பள்ளிக்குச் செல்கிறார்கள். ஆனால், ஏதோ தோன்றியவனாகப் பள்ளியின் வளாகத்தைத் தாண்டி ரயில் செல்லும் திசையை நோக்கி நடக்கிறான் சிறுவன்.

உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!

ஆளுயரப் பனியில் அவன் ஒரு சிறு எறும்பைப் போல ஊர்ந்து ஏதோ ஒரு திசையை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறான். எந்த ஓர் இடையூறுமின்றி அவனின் அந்த இயல்பான பயணத்தை கேமரா தள்ளியிருந்து அவதானிக்கிறது. அவனின் பார்வையில் அந்தப் பனி சூழ்ந்த நிலப்பரப்பும் அதன் அழகும் ஆபத்தும் காட்சிகளாக விரிந்துகொண்டே இருக்கின்றன. அவன் எங்கே செல்கிறான், அவனுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற பதைபதைப்பு மட்டும் நம்மை ஒட்டிக்கொள்கிறது. அவன் விளையாடிக்கொண்டே ஒரு ரயில் நிலையத்தை அடைந்து ரயிலுக்காகக் குளிரில் காத்திருந்து ரயில் வந்தவுடன் அதில் ஏறித் தூங்கிப் போகிறான். கடைசி நிறுத்தத்தில் ரயில் நின்றும் எந்தச் சலனமும் இன்றித் தூங்கிக்கொண்டே இருக்கிறான். பிறகு அவனாக விழித்து ரயில் நிலையத்தைத் தாண்டித் தெருக்களை அடைந்து எதையோ தேடுகிறான். ஒரு மீன் வண்டி செல்வதைப் பார்த்து அதை துரத்த முற்பட்டுத் தோற்கிறான்.

தான் தூங்கிய பின்பு வீடு திரும்பி, காலையில் எழும்பும் முன்பே வேலைக்குச் சென்று விடும் அவனின் தந்தையைத் தேடித்தான் இந்தப் பயணம் என்று நமக்குச் சிறிது சிறிதாகப் புரிய ஆரம்பிக்கிறது. தந்தை மீன் சுத்திகரிக்கும் ஆலையில் வேலை செய்பவர் என்பது மட்டுமே அவனுக்குத் தெரியும். அந்த ஒரு தகவலை வைத்துக்கொண்டு நீண்ட தூரம் கடந்து வந்துவிட்ட அவனின் பயணம் நம்மைத் திகிலடையவைக்கும்.

படம் முழுக்க அந்தப் பயணம் எந்த மிகைப்படுத்தலுமின்றி உண்மையாக நிகழ்வதுபோலவே இருப்பதுதான் இந்தப் படத்தின் வெற்றி. அவனின் சின்னச்சின்னச் செயல்கள், அந்த நிலப்பரப்பின் ஊடாக அவனுக்குப் பயணித்து வரத் தெரிந்திருக்கிறது என்பது நமக்கு ஆச்சர்யமாகவும், அவன் பெற்றோரில்லாமல் எத்தனை தனித்திருந்தால் இந்தச் சிறிய வயதில் இதையெல்லாம் கற்றுக்கொண்டிருப்பான் என்பதும் ஒரு மென்சோக உணர்வைக் கிளரும். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஒரு வசனம்கூட இல்லை. அதற்கான தேவையும் அவனுடைய இந்தத் தனித்த பயணத்தில் இருக்கவில்லை. நடிப்பு தொடங்கி கதைக்களம், ஒளிப்பதிவு, இசை என எதிலுமே சினிமாத்தனம் கிடையாது. 

பனிக்காட்டில் தொலைந்துபோனவன் தந்தையைக் கண்டுபிடித்தானா, பல மைல் தூரம் தாண்டி வந்தவன் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர்ந்தானா, அவன் தந்தையை அன்று இரவாவது பார்க்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்ததா... என்ற கேள்விகள் மேலெழுந்து இறுதியில் நவீன வாழ்க்கை குடும்பங்களை எவ்வாறு சிதைக்கிறது என்ற ஒற்றை உணர்வை நமக்கு விட்டுச்செல்கிறது, `தி நைட் ஐ ஸ்வாம்’ திரைப்படம்.

உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!

காக்டெய்ல் சினிமா!

ஆவணப் படங்களுக்கும் சினிமாக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து இரண்டையும் சரியான அளவில் கலந்து வெளிவரும் படங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி காக்டெய்ல் பாணியில் சமீபத்தில் வெளிவந்த படம் போலந்து நாட்டைச் சேர்ந்தது. படத்தின் பெயர் The Last Family.

உலகப் புகழ்பெற்ற போலந்து சர்-ரியலிச ஓவியர் Zdzislaw Beksinski மற்றும் அவரின் குடும்பத்துக்கு ஓர் அசாதாரணமான வரலாறு இருந்தது. அவர்கள் தங்களுடைய கடைசி முப்பது வருட வாழ்க்கையை வீடியோ படங்களாக எடுத்துவைத்திருந்தார்கள். அவர்கள் குடும்ப உறவுக்குள் நிகழும் சிறிய பிரச்னைகள் ஆரம்பித்து மரணம் வரை அனைத்தையும் படம்பிடித்து வைத்திருந்தார்கள். அதோடு சேர்ந்து அவரின் மகன் ஒரு வாரிசை உருவாக்க முடியாத உடல் சிக்கல்கொண்டவனாக இருக்கப்போக, அவர்களின் கடைசி வருடங்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகிறது. மகன் இருப்புக் கொள்ள இயலாத ஒரு மனநிலையைக் கொண்டவன். இவர்களுக்குள் நடந்த உருக்கமான போராட்டமே இந்தக் காவியம்.

ஒரு சுயசரிதைப்படம் இத்தனை வீரியமாக, சுவாரஸ்யமாக இருக்க முடியுமா என்பது ஆச்சர்யமே. இந்தப் படத்தில் கையாண்ட திரைமொழி, நடிப்பு, கலை வடிவமைப்பு, கதை நிகழும் காலகட்டத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவு என்று தற்கால சினிமாவின் மிகச்சிறந்த உதாரணம் என்று இதைச் சொல்லலாம். தங்களுடைய கடைசி இருப்பைக் கலையாகவும் ஆவணமாகவும் மாற்றத்துடித்த ஒரு குடும்பத்தின், நெஞ்சைக் கனக்கவைக்கும் சுயசரிதை. இதைப்போல ஒரு குடும்பத்தை மிகவும் அந்நியமாக அணுகி, அதன் அன்றாட வாழ்க்கையின் அழகியலையும் முரண்களையும் பேசிய படம் வெகு சிலவே.  

உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!

திகிலற்ற கதை சொல்லல்! (Anti Thriller)

மிகை உணர்ச்சியற்ற கதை நகர்வு அல்லது திகிலற்ற கதை சொல்லல் முறை இப்போதைய உலக சினிமாவில் ட்ரெண்ட். பிரான்ஸில் வெளியான Staying Vertical படம் இந்த ஜானரைச் சேர்ந்தது.

ஒரு திரைக்கதை எழுத்தாளன் தன்னுடைய அடுத்த கதையை எழுத முடியாமல் தவிக்கும் ஒரு தருணத்தில் தூரத்து நிலத்துக்கு, எழுதுவதற்கான புத்துணர்ச்சியைத் தேடிச் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர்கள், அவன் உருவாக்கிக்கொள்ளும் புதிய உறவுச்சிக்கல்கள், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் நடக்கும் அபத்தமான நிகழ்வுகள் என்று இந்தப் படம் நம்முடைய ஒவ்வோர் எதிர்பார்ப்போடும் விளையாடி, அதை உடைத்துக்கொண்டே செல்லும். நாம் நினைத்ததுபோல எதுவுமே நடக்காது. ஆனால், திரையில் நிகழும் அபத்தங்களை விலகியிருந்து ரசித்துக்கொண்டே இருப்போம். நம்மைக் கதையிலிருந்து விலக்கிவைத்திருப்பதன் மூலமும், நம் முன்முடிவுகளை உடைத்துக்கொண்டே இருப்பதன் மூலமும், இதுவரை சினிமாவில் இப்படியெல்லாம் காட்டவே கூடாது என்ற வரையறைகளுக்கு எதிர்மறையாகப் படம்பிடிப்பதன் மூலமும் வழக்கமாக நமக்குப் பழக்கப்பட்ட சினிமாவாக இது இருக்காது.

உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!

குட்டிக் கதைகள்!

சொல்லப்படும் கதையின் அளவும் தற்கால உலக சினிமாவில் குறைந்துகொண்டே வருகிறது. சம்பவங்கள் குறைக்கப்பட்டுப் பாத்திரங்களின் அனுபவமும் அவர்களின் இருத்தலும் இன்றைய சினிமாவில் பிரதானமாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட Hanna என்னும் பிரெஞ்ச் படம் மிக முக்கியமானது. படத்தின் ஆரம்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் உணவருந்துகிறார்கள். அவர்களின் முகம் சோகம் தோய்ந்து உற்சாகமற்று இருக்கிறது. பின்பு, கணவரைத் தானே கொண்டுசென்று ஒரு சிறையில் விட்டு விட்டு வீடு திரும்புகிறார் மனைவி. கணவர் என்ன குற்றம் செய்தார் என்பது படம் முழுக்கச் சொல்லப்படவே இல்லை. ‘எந்தக் குற்றமும் நான் செய்யவில்லை, எல்லோரும் அந்தத் தீங்கான செயலை நான் செய்ததாக நம்புகிறார்கள்’ என்று மனைவியிடம் ஒரே ஒரு முறை அங்கலாய்கிறார் கணவர். அதற்குப் பிறகு படம், அந்த வயதான மனைவியை மட்டுமே சுற்றி நிகழ்கிறது. தன் கணவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்தால் தனது சுற்றமும், நட்பும், சொந்தக் குழந்தைகளும்கூட அவரை ஒதுக்கிவைக்கிறார்கள். எண்ணற்ற அவமானங்களை, பய உணர்ச்சிகளை, வெறுமையை, உடல்வலியை, மனவலியைப் படம் முழுக்க அனுபவித்துக்கொண்டே இருக்கிறார் அந்தப் பெண். வயதான காலத்தில் தனித்திருப்பதே கடினமானது. அதோடு குற்ற உணர்ச்சியும், புறக்கணிப்பும் சேர்ந்து கொள்ளும்போது அந்த வயதில் அவர் படும் அவஸ்தை நம்மை இம்சிக்கும்.

படத்தின் இறுதியில் விரக்தியின் உச்சத்துக்கே தள்ளப்பட்ட அவர், சுரங்க ரயில் நிலையத்தின் வழியே வெறுமை சூழ நடந்து செல்வதை கேமரா அவர் பின்சென்று படம் பிடித்துக் கொண்டே இருக்கும். தண்டவாளத்தின் முன்பு ஒரு ரயிலுக்காகக் காத்திருக்கும்போது ரயில் வரும் சப்தம் கேட்ட உடனே ஒரு தடுமாற்றத்துக்கு உள்ளாவார். ஏதோ அசம்பா விதம் நடக்கப்போகிறதென்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். அங்கு ஒரு பெரிய கேள்வியும் நமக்குள் எழும், `அவர் ரயிலில் விழுந்து இறந்தாலும் துன்பமே. வாழ்க்கையைத் தொடர்ந்தாலும் துன்பமே. அவர் எதைத் தேர்ந்தெடுத்தார் என்பது படத்தைப் பார்க்கும்போது நீங்கள் அனுபவிக்க வேண்டிய உணர்வு.

உலக சினிமா சொல்லும் சீக்ரெட்ஸ்!

பெண் இயக்குநர்கள்!

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஆண்களின் பார்வையில் பேசப்பட்டு வந்த பெண்களின் உலகம் எவ்வளவு உண்மையைவிட்டு விலகி இருந்தது என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகிறார்கள் பெண் இயக்குநர்கள். பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட்டு, கோல்டன் பேர் விருதை வென்ற ஹங்கேரியின் On Body and Soul படம், பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்களில் மிக முக்கியமானது.  Ildiko enyedi என்ற பெண் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் கருவே மிகவும் கவித்துவமானது. உணர்வுகளற்ற ஒரு பெண், தான் வேலைபார்க்கும் இடத்தில் இருக்கும் தன்னைவிட வயது முதிர்ந்த ஆணுடன் இணக்கம் கொள்கிறாள். நேரில் அவர்கள் இருவரும் தங்கள் பரஸ்பர விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்ளவில்லை. ஆனால், இருவரும் கனவில் ஆண் மானாகவும் பெண் மானாகவும் சந்தித்துக்கொள்கிறார்கள். ஏதோ ஓர் உள்ளுணர்வில் இந்த மானைப் பற்றிய கனவை ஒருநாள் பகிர்ந்து கொள்கிறார்கள். அது இருவருக்கும் ஒரே மாதிரி நிகழ்ந்திருப்பதைக் கண்டு ஆச்சர்யம் கொள்கிறார்கள். அந்தக் கனவுக்குப் பின் அவள் இனம்புரியாத உணர்வுகளுக்குள் ஆட்படுகிறாள். அவர்களின் காதலும் உணர்வுகளும் ஒன்றோடொன்று மோதிச் சிக்குருகிறது. ஒவ்வோர் இரவும் மான்களாக இருவரும் கனவில் சந்தித்துக் கொள்கிறார்கள். உணர்வுதளத்தில் இத்தனை ஆழமாகப் பெண்ணின் அக உலகத்தை ஓர் ஆணால் காண்பிக்கவே முடியாது என்று சிந்திக்க வைக்கும் படம் இது.

 இயற்கையுடன் இயைந்த தொழில்நுட்பம்!


 இன்றைய டிஜிட்டல் கேமராக்கள் மிக மிகக் குறைந்த ஒளியில்கூடப் படம் பிடிக்கும் சாத்தியங்களை அளிக்கின்றன. நம் அன்றாட வாழ்க்கையில் நம் கண்கள் எதைப் பார்க்கிறதோ அதே துல்லியத்தோடு கேமராக்கள் படம்பிடிக்கின்றன. டிஜிட்டல் புரட்சி நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் எடிட்டிங்கும் பெரிய மாற்றத்துக்குள்ளாகி வருகிறது.

எடிட்டிங்கே தேவையில்லாத அளவுக்கு ஒரு கட் கூட இல்லாமல் இரண்டு மணிநேரம் தொடர்ந்து படம்பிடிக்கப்பட்ட படம் ஜெர்மனியில் வெளியான விக்டோரியா. அதிகாலை பெர்லினின் ஓர் இரவு நடன விடுதியில் ஆரம்பிக்கும் படம், இரண்டு மணிநேரம் நிகழ்ந்து விடியலில் முடியும். இரண்டு மணி நேரத்துக்குள் பாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் உறவுகளை விஸ்தரித்து, படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பரபரப்பை தொற்றிக் கொள்ளவைத்து, ஒரு வங்கிக் கொள்ளையில் கொண்டுபோய் நிறுத்தி நம்மை அப்படியே உறைந்துபோக வைப்பார்கள். விக்டோரியா மூன்று மாதங்கள் ஒத்திகை பார்த்து, மூன்றே டேக்கில் எடுக்கப்பட்ட படம். இத்தகைய படங்களைப் பார்க்கும்போது சினிமாவின் அசுர வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. எதிர் காலத்தில் சினிமாவின் சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்ற ஆவல் அதிகரித்துக்கொண்டே போகிறது.