
கார்த்தி

இயக்குநர்களுக்கு என்றே காத்துக்கிடந்து படம் பார்க்கும் ரசிகர் கூட்டம், உலகெங்கும் உண்டு.

ரசிகர்களின் டாப் லிஸ்ட்டில் இருக்கும் டொரென்டினோ ``இனி படம் இயக்க மாட்டேன்’’ என ஒதுங்கியது அதிர்ச்சி. நோலனின் `டன்கிர்க்’, கை ரிட்சியின் `கிங் ஆர்த்தர்’ , மேட் ரீவ்ஸின் `வார் ஃபார் தி பிளான்ட் ஆஃப் தி ஏப்ஸ்’ எனப் பல படங்கள் இந்த ஆண்டு வெளிவந்துள்ள நிலையில், மோஸ்ட் வான்ட்டட் இயக்குநர்களின் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல் இதோ...


`சேவிங் பிரைவேட் ரியன்’, `ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’, `பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்’ என வரலாறுகளைக் கிளறுவதாகட்டும்; `ஜுராஸிக் பார்க்’, இண்டியானா ஜோன்ஸ், `எக்ஸ்ட்ரா டெரஸ்ட்டியல்’ என வேறு காலகட்ட சினிமாவாகட்டும், 70 வயதான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்தான் ஹாலிவுட்டின் பிரம்மா. 2020-ம் ஆண்டு வரை தன் பாக்கெட்டில் திரைப்படங்கள் வைத்திருக்கும் ஸ்பீல்பெர்க், இந்த டிசம்பருக்குத் திரைக்குக் கொண்டுவர இருக்கும் திரைப்படம் `தி போஸ்ட்’. பத்திரிகைத் துறைக்கும் அரசுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். `தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகைக்கும் அரசுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் பற்றிய கதைக்களத்துடன் வெளிவர இருக்கிறது `தி போஸ்ட்’. இதுவரை ஆஸ்கர் வரலாற்றில் அதிக முறை பரிந்துரை செய்யப்பட்ட மெரில் ஸ்ட்ரீப்தான் படத்தின் நாயகி. வாஷிங்டன் போஸ்ட்டின் பதிப்பாளராக மெரிலும், எடிட்டராக டாம் ஹாங்க்ஸும் நடிக்கும் இந்தப் படம் அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தும்!

டெனிஸ் இயக்கிய `பிரிசனர்ஸ்’, `சிகாரியோ’ இரண்டுமே விமர்சகர்கள் மத்தியில் பெருமதிப்பைப் பெற்ற படங்கள். கடந்த ஆண்டு வெளியாகி ஆஸ்கரில் எட்டு விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட `அரைவல்’, ஏலியன்கள் பற்றிய வித்தியாசமான புரிதலைக் கொடுத்தது. 1982-ம் ஆண்டில் ஹாரிசன் ஃபோர்டு நடிப்பில் வெளியான படம் `பிளேடு ரன்னர்’. 1982-ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் 2019-ம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பதுபோன்ற கதையைக் கொண்டது. அதன் அடுத்த பாகத்தை 2049-ம் ஆண்டில் நடக்கும் கதையாக எடுத்திருக்கிறார்கள். படத்தின் பெயர் `பிளேடுரன்னர் 2049’. அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் `லா லா லேண்ட்’ படத்தின் ஹீரோ ரியன் கோஸ்லிங். ஹாரிஸன் ஃபோர்டு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரிலீஸூக்காக ரசிகர்கள் மரண லெவல் வெயிட்டிங்!

கடந்த 50 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த ரொமான்டிக் டிரையாலஜி சினிமாவை `பிஃபோர் சன்ரைஸ் - 1995’, `பிஃபோர் சன்செட் - 2004’ , `பிஃபோர் மிட்நைட் - 2013’ என மூன்று பாகங்களாக எடுத்தவர் அமெரிக்க இயக்குநர் ரிச்சர்டு லிங்க்லேட்டர். 30 ஆண்டுகளாக ஒரே குழுவை வைத்துப் படம் எடுத்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது ஹாலிவுட். இது இப்படி இருக்க, 12 ஆண்டுகள் (2002-2013) ஒரு சிறுவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைத் தொகுத்து `பாய்ஹுட்’ (2014) என்ற படத்தை வெளியிட்டு மறுபடியும் ஆச்சர்யப்படுத்தினார். மனிதம் பற்றித் தெளிவாகப் படம் எடுக்கும் மிகச் சில அமெரிக்க இயக்குநர்களுள் இவரும் ஒருவர். கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்களில் மூன்று பேர் நண்பர்கள். இவர்களில் ஒருவரின் மகன் ஒரு போரில் இறக்க, மற்ற இருவரும் அவனின் கடைசி அஞ்சலிக்கூட்டத்திற்காக ஒன்று கூடுவதே `லாஸ்ட் ஃப்ளாக் ஃப்ளையிங்’ (Last Flag Flying). படம் நவம்பரில் ரிலீஸ்.

தற்போதைய சூழலில் டி.சி காமிக்ஸ் சார்பாக வெளியாகும் எல்லா படங்களிலும் தவறாமல் இடம்பிடிக்கும் பெயர் `ஜேக் ஸ்நைடர்’. இவரின் கதைகளுக்கேற்பதான் பேட்மேனும் சூப்பர்மேனும் இப்போது மாயாஜாலம் புரிகிறார்கள். இவரது ஸ்கிரிப்ட்தான் `வொண்டர் வுமன்’. இப்போது ஜேக் ஸ்நைடரின் `ஜஸ்டிஸ் லீக்’ படத்துக்காக ஹாலிவுட்டே பரபர வெயிட்டிங். பேட்மேன், சூப்பர்மேன் என டஜன் கணக்கில் இருக்கும் சூப்பர்ஹீரோக்களோடு மோதும் வில்லன்கள்தான் படத்தின் கதை. பல ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடெக்ஷன் துவங்கிய நிலையில் ஜேக் ஸ்நைடரின் மகள் இறந்துவிட, படத்திலிருந்து விலகிவிட்டார் ஜேக். படம் ஹிட் அடித்து மீண்டும் ஜேக் படங்கள் இயக்க வர வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை.

74 வயதான அமெரிக்க இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸெஸுக்குத் திரைத் துறையில் 50-வது ஆண்டு இது. இப்போதும் ஓயாமல் ஆஸ்கரின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடிப்பவர். டிகாப்ரியோவை வைத்து இவர் இயக்கிய `தி ஏவியேட்டர்’, `தி டிபார்டட்’, `ஷட்டர் ஐலேண்டு’, `தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ எல்லாமே டிகாப்ரியோவின் திரையுலக வாழ்வில் மிக முக்கியமான படங்கள். கடந்த ஆண்டு `ஹேக்சா ரிட்ஜ்’ புகழ் ஆண்டிரியூ கார்ஃபீல்ட்-ஆடம் டிரைவர் இணையை வைத்து `சைலன்ஸ்’ என்னும் படத்தை எடுத்திருந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து கேங்ஸ்டர் சினிமாவை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். படத்தின் பெயர் `ஐரிஷ்மேன்’. சார்லஸ் பிராண்டின் `I heard you paint houses’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட படம். 74 வயதான ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ராபர்ட் டீ நீரோதான் படத்தின் ஹீரோ. அல் பாசினோ, ஹார்வி கீட்டல், ஜோ பெஸ்கி என அதிரடி ஸ்டார்காஸ்ட் கொண்ட படம் இது. ஃப்ளாஷ்பேக்கில் டீ நீரோவை இளமையாக மாற்ற மிகப்பெரிய விஷுவல் எஃபெக்ட்ஸ் டீம் உழைத்துக்கொண்டிருக்கிறது. படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகவிருப்பது கூடுதல் சிறப்பு. ஆனால், அதற்கு 2019 வரை காத்திருக்க வேண்டும்.

``லாஜிக் பார்த்து எல்லாம் இதயத்தின் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாது” என்பார் வூடி ஆலன். ஆள் பார்க்க, எழுத்தாளர் அசோகமித்திரன்போல் இருப்பார். 80 வயதைக் கடந்த லெஜென்டரி இயக்குநர்கள் பட்டியலில் இன்னும் இயக்கிக்கொண்டிருப்பவர் வூடிதான். காதல், காமெடிதான் வூடி ஆலனின் அடிநாதம் என்றாலும், ஒவ்வொரு முறையும் அதை மல்டி காஸ்ட்டிங்கில் எடுத்து ஆச்சர்யப்படுத்துவார். இந்த ஆண்டின் இறுதியில், `வொண்டர் வீல்’ (Wonder Wheel) படத்தை வெளியிட இருக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் கேட் வின்ஸ்லெட்டும், ஜஸ்டின் டிம்பர்லேக்கும் நடிக்க விருக்கிறார்கள்.

அகிம்சையின் பேருருவாக இருக்கும் புத்தரின் சிலையை வைத்தே ரத்தம் வரும் அளவுக்கு ஒருவனை அடிப்பான் படத்தின் நாயகன். அதுதான் `கிம் கி டுக்’கின் ஸ்டைல். சாதாரணமாகக் கடந்துபோக முடியாத திரையாக்கம்கொண்ட இயக்குநர். இவரது படங்கள், உலகில் யாருமே பேசத்தயங்கும் தாறுமாறான உறவுச்சிக்கல்களைப் பேசும். இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக இருக்கிறது `தி டைம் ஆஃப் ஹ்யூமன்ஸ்’. போர்க்கப்பலில் பயணிக்கும் வெவ்வேறு வயதினர் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் கதை. ``கொரியாவை மட்டும் அல்ல, உலகத்தையே அசைத்துப்பார்க்கும் இந்தத் திரைப்படம்’’ என மெர்சல் காட்டுகிறது படக்குழு.

ஹாலிவுட்டின் தல ஜார்ஜ் குளூனி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்குச் சொந்தக்காரர். இதற்கு முன் சில படங்கள் இயக்கியிருந்தாலும், அக்டோபர் மாதம் வெளிவர இருக்கும் `சபர்பிகான்’ (Suburbicon) கொஞ்சம் ஸ்பெஷல். காரணம், படத்தின் கதையை எழுதியிருப்பது கோயன் சகோதரர்கள். `மில்லர்ஸ் க்ராஸிங்’, `ஃபார்கோ’, `தி பிக் லெபோஸ்கி’, `நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்’ என கோயன் சகோதரர்கள் எழுதிய பல படங்கள் ஹாலிவுட் சினிமாவின் டாப் 100-ல் இடம்பிடித்திருப்பவை. `சபர்பிகான்’ படத்தின் கதை நம்ம `பாபநாசம்’ படம்போல ரொம்ப சிம்பிள். படத்தின் ஹீரோ, ஒரு கொலைச் சம்பவத்தைச் சத்தம் இல்லாமல் மறைத்து, சிலரைப் பழிவாங்குகிறார். எதற்காகக் கொலையை மறைக்கிறார் என்பதே `சபர்பிகான்’ சஸ்பென்ஸ்.