Published:Updated:

எனக்கும் ஈகோ இருக்கு!

எனக்கும் ஈகோ இருக்கு!

எனக்கும் ஈகோ இருக்கு!

எனக்கும் ஈகோ இருக்கு!

Published:Updated:
##~##
உதடு பிரியாத புன்னகை, சிநேகம் ததும்பும் கண்கள்... சீக்கிரமே அணுகலாம் 'யுவன்ஷங்கர் ராஜா’வை.

''ஏன், இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும் அடிக்கடி சண்டை போட்டுக்குறாங்க? செல்வ ராகவன்-யுவன், கௌதம்மேனன்-ஹாரிஸ் ஜெயரஜ், வசந்தபாலன்- ஜி.வி.பிரகாஷ்?''

''நான் என்னைப்பற்றி மட்டுமே சொல்றேன். பெரும்பாலும் மியூஸிக் டைரக்டர்கள் தனியாவே இருக்காங்க. சதா ட்யூன், சப்தம்னு ஏதாவது மனசுக் குள் ஓடிட்டே இருக்கும். பெரும்பாலான நேரத்தைத் தனிமையில் கழிக்கும் மனுஷன் எதுக்கும் கோவிச்சுக்கவே செய்வான். மியூஸிக்ல ஒரு விஷயம் சரியா இருக்கும்னு நினைச்சு செய்வோம். அவங்க முற்றிலும் வேறுவிதமாக யோசிக்கும்போது, நமக்குக் கோபம் வந்துடும். எனக்கும் ஈகோ இருக்கு. ஆனால், நான் அட்ஜஸ்ட் செய்து நடந்துக்குவேன். 'நான் பெரியவனா... நீ பெரியவனா’?ன்னு யுத்தம் நடந்தால், எதுவும் சரி வராது. இப்பக்கூட பிரிவு முடிஞ்சு நானும் செல்வாவும் சேர்ந்தாச்சு!''

எனக்கும் ஈகோ இருக்கு!

''என்ன சொன்னார் செல்வராகவன்?''

''ஒரு படம் வெளியே பண்ணிட்டு வந்திருக்கார். வேறு ஒரு அனுபவமும் அவருக்குக் கிடைக்கிறது நல்லதுதான். 'ஸாரி, உன்னை மிஸ் பண்ணிட்டேன்’னு சொன்னார். 'அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாம் திரும்ப சேர்ந்தால், அந்தப் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. நம்ம மத்த படங்களை இந்தப் படம் இசையில் மிஞ்சணும். நாம் திரும்ப சேர்ந்ததுக்கு ஓர் அர்த்தம் இருக்கணும்’னு சொன்னேன். கதை சொன்னார். சூப்பர்ப். எனக்கு அதில் செம வேலை இருக்கு. ஆரம்ப காலம் தொட்டு, நானும் செல்வாவும் ஃப்ரெண்ட்ஸ்தான். இப்பவும் எப்பவும் அதில் மாற்றம் இல்லை. எவ்வளவோ நாட்டுப் பிரச்னைகள் தீருது. எங்க பிரச்னை தீராதா என்ன?''

''வெளிப்படையா இருப்பீங்க நீங்க. உங்களுக்குப் பிடிச்ச மத்த மியூஸிக் டைரக்டர்கள் யார்?''

''நிறைய! ஹாரிஸ், விஜய் ஆண்டனி, தரன், ஜி.வி.பிரகாஷ் எல்லோரும் நல்லாப் பண்றாங்க. சமீபத்தில் 'மைனா’ வில் இமான் மியூஸிக் பிடிச்சிருந்தது. சில இடங்களில் பக்கா பெர்ஃபெக்ட். மத்தபடி நமக்குன்னு தெளிவா ஒரு சாயல் வர கொஞ்சம் டைம் எடுக்கும். எனக்கும் இவ்வளவு வருஷம் கழிச்சு இப்பத்தான் அப்படி ஒரு சாயல் வந்தது. மத்தவங்களுக்கும் வரும். நல்லா வருவாங்க!''

''எம்.எஸ்.வி, இளையராஜா மாதிரி 'அரசாட்சி’ செய்த காலங்களை உங்களால் கொண்டுவர முடியாதா?''

''முன்னாடி வீட்ல ஒரு டெலிபோன் இருந்தது. இப்ப எவ்வளவு செல்போன், எத்தனை வகையான ஐ-பாட்!

அது அந்தக் காலம்... பொற்காலம். இனிமேல் நான்னு இல்லை, யாராலும் அவங்களை மாதிரி அரசாட்சி பண்ணவே முடியாது. எல்லோரும் சேர்ந்து கிடைச்ச இடத்தில் இருந்துட்டுப் போக வேண்டியதுதான். நேரம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடந்து போயிட்டு இருக்கு! ரொம்ப நேர்மையா ஒரு பொண்ணுகிட்ட ஒரு பையன் போய், 'ஐ லவ் யூ’ சொன்னா, 'என்னடா, ஒண்ணுமே 'பெப்’ இல்லையே’ன்னு ஜனங்க அலுத்துக்கிறாங்க. ஏதாவது டிராமா பண்ணியே ஆகணும். இப்ப சிம்பு படத்துக்காக, 'எவன்டி உன்னைப் பெத்தான்... பெத்தான்... பெத்தான்’னு பாட்டு போட்டேன். அந்தப் பாட்டெல்லாம் காலத்துக்கும் நிக்குமான்னு கேட்டால், நிக்காது. ஆனா, இன்னிக்கு ஹிட் அடிக்கும். இளைஞர்களுக்கு ஃபாஸ்ட் பீட்ஸ்தான் பிடிக்குது. இனிமேல் அப்படித்தான் ஆகும். நாமளும் அந்த வேகத்துக்கு அவங்களோட சேர்ந்து போயிட வேண்டியதுதான். இனிமேல் அந்த 'அரசாட்சி’ எல்லாம் வர வாய்ப்பே இல்லை!''

எனக்கும் ஈகோ இருக்கு!

''திடீர்னு 'மியூஸிக் நைட்’னு களம் இறங்கிட்டீங்க?''

''எனக்கு ரொம்ப நாளாவே தனியா பெரிசா மியூஸிக் நைட் பண்ணணும்னு ஆசை. எப்பவோ பண்ணியிருக்கலாம். ஆனா, அதற்கான பக்குவம், அனுபவம், தகுதி எல்லாம் இப்பதான் செட் ஆனதா உணர்கிறேன். 'ஜனவரி 16 'மியூஸிக் நைட்’ நிச்சயம் என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான ஓர் இரவு. நா.முத்துக்குமார் எழுதி, விஷ்ணுவர்தன் டைரக்ட் பண்ண ஒரு பாட்டில் நடிச்சிருக்கேன். என்னை முழுசா இந்தத் தமிழ் உலகம் அங்கீகரிக்கும் முயற்சி இந்த மியூஸிக் நைட். அதற்கான தினப்படி பயிற்சி, பாடல்கள்னு பரபரப்பா நகர்ந்துட்டு இருக்கு நாட்கள்!''

''உங்களுக்குக் காதல்... கல்யாணம்?''

''இந்த வருஷம் கல்யாணம்னு முடிவில் இருக்கேன். நான் நினைச்ச... என் மனசுக்குப் பிடிச்ச பெண்ணாகவும் இருக்கலாம். அப்படி எதுவும் இல்லாமல், அப்பா - அம்மா பார்த்துவைக்கிற பெண்ணாகவும் இருக்கலாம்!''

''மனசுக்குப் பிடிச்ச பெண்ணும் இருக்கா?''

''இருக்கலாம். எல்லாமே கடவுள் கையில்தானே இருக்கு. எப்படி இருந்தாலும், வீட்டில் மறுப்பு சொல்லாமல் நடத்திவைக்கத் தயாரா இருக்காங்க. அதுதான் விஷயம்!''