
கே.ஜி.மணிகண்டன்
“அஜித்துக்குப் பிடிச்ச படம் ‘முகவரி.’ இதை அவரே பல இடங்கள்ல பதிவு பண்ணியிருக்கார். அந்தப் படத்துக்கு டப்பிங் பண்ணும்போதே, ‘`என் ஒவ்வொரு படத்துக்கும் டப்பிங் பேசும்போது என்னடா நடிச்சிருக்கனு என்னை நானே திட்டிக்குவேன். முதல் முறையா, ‘நானா இப்படி நடிச்சிருக்கேன்’னு ஆச்சர்யப்பட்டேன் துரை’’னு கட்டிப்பிடிச்சுப் பாராட்டினார். தவிர, அன்னிக்கு ராத்திரியே ஒரு கார் வாங்கி எனக்குப் பரிசா கொடுத்தார். ஓர் இயக்குநரா எனக்குக் கிடைச்ச பெரிய மரியாதையா அதைப் பார்க்குறேன்.” ‘முகவரி’யில் தொடங்கி, ‘6 மெழுகுவத்திகள்’ வரை வளர்ந்த, வளரும் ஹீரோக்களை இயக்கிக்கொண்டிருந்த வி.இஸட்.துரை, முதல் முறையாக, குணச்சித்திர வேடங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் சமுத்திரக்கனியைப் பல கெட்டப்களுக்கு மாற்றி, ‘ஏமாலி’யை இயக்கியிருக்கிறார்.

‘` ‘ஏமாளி’தான் சரியான வார்த்தை. நீங்க சொல்ற ஏமா`லி’க்கு என்ன அர்த்தம்?”
‘`காதலிச்சிக்கிட்டிருக்கிறவங்க, காதலிச்சவங்க, காதலிக்கப் போறவங்க, காதலிக்கலாமா வேணாமானு யோசிச்சுக் கிட்டிருக்கிறவங்க எல்லோருக்கும் ஒரு பாதிப்பைக் கொடுக்கிற படம்தான் ‘ஏமாலி.’ காதல்ல காலம் காலமா நம்மாளுங்க பண்ணிக்கிட்டிருக்கிற ஒரு தப்பை ஸ்ட்ராங்கா சுட்டிக்காட்டி, அந்தத் தொடர்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி பண்ணியிருக்கோம். அந்த முற்றுப்புள்ளி சம்மட்டி அடியா இருக்கும். நான்கடுக்குக் கதை. முதல் அடுக்குல சமுத்திரக்கனி சாஃப்ட்வேர் இன்ஜினீயரா வர்றார். இரண்டாவது அடுக்கு, லிவிங் டு கெதர் எபிசோடு. தமிழ்சினிமாவுல இதுவரை லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்புக்கான தெளிவான கருத்தைப் புரியவைக்கலை. இந்தப் படத்துல அதைக் கவிதை மாதிரி சொல்லியிருக்கோம். மூணாவது லேயர்ல போலீஸ் அதிகாரி, நாலாவது லேயர்ல சி.ஐ.டி ஆபீஸரா வருவார் சமுத்திக்கனி. சொல்றப்பவே, சமுத்திரக்கனி எப்படிப் பண்ணியிருப்பார்னு ஓர் ஆர்வம் வருதில்ல... அதான், இந்தப் படத்துக்கான யுஎஸ்பி. ‘ஏமாளி’யை ஏன் ‘ஏமாலி’னு வெச்சிருக்கேன்னு படத்துல அழகான ஒரு ட்விஸ்ட் இருக்கு. பந்தி முடிஞ்சதும் ஸ்வீட் தர்ற மாதிரி, படம் முடிஞ்சதும் ஆடியன்ஸுக்கு நான் தரப்போற ஸ்வீட் அது.”

``சமுத்திரக்கனிதான் நடிக்கணும்னு முன்கூட்டியே முடிவெடுத்தீங்களா?”
“நிச்சயமா. ஆக்சுவலா, இந்தக் கதைக்கு அரவிந்த் சாமி - கெளதம் கார்த்திக் காம்பினேஷன் நல்லா இருக்கும்னு பலபேர் சொன்னாங்க. ஆனா, நான் கனிதான் நடிக்கணும்னு உறுதியா நின்னேன். ஏன்னா, சினிமால நான் அறிமுகம் ஆனதிலிருந்து சமுத்திரக்கனி எனக்குப் பழக்கம். சமுத்திரக்கனி நடிச்சா அவரோட நடிப்பும், உடல்மொழியும் இப்படித்தான் இருக்கும்னு ஒரு நினைப்பு இருக்கில்ல, அதைக் கச்சிதமா உடைக்க இந்தக் கதை அவருக்குப் பொருந்தும்னு நம்புறேன்.”
‘’காதல் களத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள் எந்தளவுக்கு உதவியாக இருந்தன?”
“அவரைச் சந்திச்சுக் கதை சொல்லச் சொல்ல அவருக்கு ஆர்வம் அதிகரிச்சுக்கிட்டே இருந்தது. திடீர்னு ஒரு கட்டத்துல என்னைத் தடுத்து நிறுத்தி, ‘க்ளைமாக்ஸ் என்னன்னு சொல்லிடுங்களேன் ஃப்ளீஸ்’னு சொன்னார். அப்பவே எனக்கு அவ்ளோ சந்தோஷம். என் வசனங்களே ரொம்பத் துணிச்சலான, டேரிங்கான வசனங்களா இருந்தது. ஜெயமோகன் சார் அதை இன்னும் டேரிங்கா மாத்தினார். ஏன்னா, கதைக்கும் அதுதான் தேவையா இருந்தது. சுருக்கமா, ‘பீப்’ சவுண்ட் படத்துல இன்னொரு முக்கியமான கேரக்டர்னுகூடச் சொல்லலாம். அதுக்காக ஆபாச வசனங்கள் அதிகமா இருக்கும்னு நினைச்சுடாதீங்க. ‘`பல பொண்ணுங்க, ஒருத்தனோட லவ் புரபோஸலை ‘முடியாது’னு சொல்ல முடியாமத்தான், ‘ஓகே’ சொல்றாங்க’’னு ஒரு வசனம் வரும். இப்படிப் பல உண்மையான வசனங்கள் படம் முழுக்க இருக்கும்.”

“17 வருடத்துல, 6 படங்கள் இயக்கியிருக்கீங்க. ஏன் இவ்வளவு இடைவெளி?”
“எங்க குடும்பமே பிசினஸ்ல பிஸியான ஃபேமிலி. இருந்தாலும் நான் சினிமாவை விடறதில்லை. ஏன்னா, நான் சாகுறவரைக்கும் சினிமால இருக்கணும்னு ஆசைப்படுற ஆள். அதேசமயம், ஒரு படம் பண்ணுனா அதை ரசிச்சுப் பண்ணணும். பெரிய நடிகரோ, சின்ன நடிகரோ... லோ பட்ஜெட் படமோ, ஹை பட்ஜெட் படமோ... நான் எடுக்குற படங்கள்ல ஒண்ணாவது காலம் கடந்தும் ஆடியன்ஸ் மனசுல நிக்கணும். ‘ஏமாலி’ போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்ல இருக்கு. படம் பார்த்த எல்லோரும் பாராட்டுறாங்க. ஆனா, ‘எனக்கு அடுத்த படம் கிடைக்குமா’ங்கிறது தான் எனக்குள்ள இருக்கிற கேள்வி. என்கூட வந்தவங்க, எனக்கு முன்னாடி போய்க்கிட்டிருந்த பலபேர் இன்னிக்கு சினிமால இல்லை. ஆனா, நான் இருக்கேன். அதுக்குக் காரணம், டெக்னாலஜி அடிப்படையில மட்டுமில்லாம, ஸ்க்ரிப்ட் அடிப்படையிலேயும் என்னை அப்டேட் ஆன ஆளா வெச்சிருக்கிறதுதான்.”

“பொதுவா இயக்குநர்கள் வளரும் நடிகர் டு டாப் ஹீரோவுக்கு இலக்கு வெச்சிருப்பாங்க. நீங்களோ அஜித், விக்ரம், சிம்பு, பரத், ஷாம்னு ரிவர்ஸ் கியர் தட்டியிருக்கீங்களே?”
“ஒரு கதை ரெடியானதும், இதுக்கு யார் சரியா இருப்பாங்கனு யோசிக்கிறதைவிட, எனக்கு யார் சரியா இருப்பாங்கனுதான் யோசிப்பேன். ஒரு நடிகருக்காகக் காத்திருக்கிறதும், திரும்பத் திரும்ப அவங்களைத் தொந்தரவு பண்றதும் எனக்குப் பிடிக்காது. ‘முகவரி’ பார்த்துட்டு, விக்ரம் கதை கேட்டார். சிம்பு போன் பண்ணி ‘உங்களோட வொர்க் பண்ணணும் தலைவா’னு சொன்னார், ‘தொட்டி ஜெயா’ பண்ணுனேன். ‘தொட்டி ஜெயா’ பரத்துக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது, ‘சேர்ந்து வொர்க் பண்ணலாம்’னு சொன்னார், ‘நேபாளி’ ரெடியாச்சு. பிறகு, அந்தப் படம் ஷாமுக்குப் பிடிச்சுப்போக, ‘6 மெழுகுவத்திகள்’ பண்ணுனோம்.இப்படித்தான் என் டிராவல் இருந்தது. திரும்ப, சிம்பு ‘தொட்டி ஜெயா-2’ பண்ணலாம்னு சொல்லிக்கிட்டே இருந்தார். நான் வேற ஒரு கதையைச் சொன்னேன், அவருக்கும் பிடிச்சிருந்தது. முழுக்க முழுக்க இங்கிலாந்து அல்லது அமெரிக்கால நடக்குற மாதிரியான கதை. படத்துக்கு ‘ஊரே அலறுது’னு டைட்டில் யோசிச்சு வெச்சிருக்கார், சிம்பு. சீக்கிரமே அலறவிடுவோம்.”