Published:Updated:

சினிமா விமர்சனம் : போராளி

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : போராளி

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

கை தீர்க்கத் துரத்தும் மனித விலங்கு களிடம் இருந்து வாழ்க்கையைக் காப்பாற் றப் போராடும் 'போராளி’!

 சசிகுமாரும் அல்லரி நரேஷ§ம் எங்கி ருந்தோ தப்பி சென்னைக்கு வருகிறார்கள். பெட்ரோல் பங்க் வேலைக்கு இடையே, 'பிள்ளையார் பெய்டு சர்வீஸ்’ ஆரம்பித்து ஜோராக (ஆமாம்... ஒரே பாட்டில்தான்!) முன்னேறுகிறார்கள். எல்லாம் நலமாகப் போய்க்கொண்டு இருக்கும்போது, 'இருவரும் மனநிலை சரியில்லாதவர்கள்’ என்று அவர் களைத் தேடி வருகிறது ஒரு கும்பல். ஏன்... எதற்கு... எப்படி? என்பதுதான் போராளியின் போராட்டம்!

'நாடோடி’ ஃபார்முலாதான் என்றாலும் ஜாலியாக ஆரம்பித்து, நடுவே ஆக்ஷன் கியர் தட்டி, மீண்டும் ஜாலியாக முடித்திருக்கும் சமுத்திரக்கனியின் இயக்கம் இதம். கீரியும் பாம்புமாக சதா சண்டை போடும் 'சாந்தி - காந்தி’ தம்பதி, பார்த்ததும் முத்தம் கொடுக்கும் குடிகார பேச்சுலர், 'நான்தான் முடிவெடுப்பேன்!’ என்று மல்லுக்கு நிற்கும் ஞானசம்பந்தன், சொல்லாமலே காதலிக்கும் நைட்டி லேடி

சினிமா விமர்சனம் : போராளி

என கலகலப்பான கேரக்டர்களைக் கச்சிதமாக உருவாக்கி உலவ விட்டது அழகு. கொஞ்சம் நாடகமாக இருந்தாலும், முதல் பாதி முழுக்கக் கட்டம் கட்டிச் சிரிக்கவைக்கிறார்கள் காம்பவுண்ட் பார்ட்டிகள்!

'தீமைக்கும் நன்மை செய்’ என்கிற பாசிட்டிவ் எண்ணம்கொண்ட இளைஞனாக சசிகுமார். 'நீ என்னைக் கல்யாணம் பண்ணிக் கக் கூடாது. நான் கல்யாணமே பண்ணிக்கக் கூடாது!’ என்று ஸ்வாதியிடம் இருந்து விலகும்போதும், பின்பாதியில் சடைமுடி ஆவேச நடையின்போதும் மனசை அள்ளுகிறார். 'காதல்’ என்றதும் சசிகுமாரின் விளக்கத்துக்கு ஸ்வாதியின் ரியாக்ஷன்... செம ஆக்ஷன்!

நிவேதாவிடம் வழியும்போதும், காதுக்குள் ஒலிக்கும் ரீங்காரத்துக்குத் துடிக்கும் போதும் பிரமாதப்படுத்துகிறார் அல்லரி நரேஷ்.  

'ஒரு காந்திக்குக் கல்யாணத்தை முடிச்சு வெச்சு, அவனை 'சாந்தி... சாந்தி’னு புலம்பவெச்சுட்டானுங்களே!’ என்று முன்பாதி காமெடிக்கு கஞ்சா கருப்பு குத்தகை. அதைப் பின் பாதியில் தன் தோளில் சுமந்துகொள்கிறார் பள்ளித் தோழனாக வரும் சூரி. குண்டூசி கேரக்டர் தான். ஆனாலும், ஊசிப் பட்டாசாகத் தெறித்து வெடிக்கிறார் 'கெடைக்காரி’ வசுந்தரா.

'அக்கா, தங்கச்சிட்டகூட இங்கிலீஷ்ல அசிங்கமாத்தாண்டா பேசுறீங்க?’, 'படிச்சவன் பாக்குறதுக்கு ஒரு வேலை... படிக்காதவனுக்கு பாக்குறது எல்லாமே வேலைதான்!’ எனப் படம் நெடுகப் படையெடுக்கும் வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.

சினிமா விமர்சனம் : போராளி

கிராமத்து அத்தியாயத்தில் எக்கச் சக்க கேரக்டர்கள். யார் யாருக்கு என்ன உறவு... அவர்களுக்குள்என்ன பிரச்னை என்று கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.

சேஸிங் ரேஸிங் பின்னணி இசையில் ஈர்க்கிறார் சுந்தர்சிபாபு. சென்னை குறுக்குமறுக்கு சந்துத் துரத்தல் காட்சிகளிலும், செம்மண் பூமி புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகளிலும் ஆக்ஷனில் அதிரடிக்கிறது எஸ்.ஆர்.கதிரின் கேமரா. 'போராளி’ என்ற தலைப்பின் எதிர்பார்ப்பை 'சிலோன்’ புரோட்டாவுடன் ஏறக்கட்டிவிடுகிறார்கள்!      

''உடம்புக்கு ஒண்ணுன்னா... அதை சட்டுனு கவனிக்கிறோம்... ஆனா, மனசுக்கு ஒண்ணுன்னா...'' என்கிற பாடு பொருள்தான் படத்தின் பலம். சீரியஸான விஷயத்தையும் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறான் இந்தப் பொழுதுபோக்குப் போராளி!