Published:Updated:

“100 நாள் 100 லைக்ஸ் திட்டத்தின்படி”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“100 நாள் 100 லைக்ஸ் திட்டத்தின்படி”
“100 நாள் 100 லைக்ஸ் திட்டத்தின்படி”

ஆர்.சரண், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

பிரீமியம் ஸ்டோரி

மிழ்நாடே பிக்பாஸ் ஃபீவரில் வெலவெலத்துக்கொண்டிருந்த சமயம்... நம்ம தனுஷின் ‘காதல் கொண்டேன்’ வினோத், ‘சுள்ளான்’ சுப்பிரமணி, ‘தேவதையைக் கண்டேன்’ பாபு,  ‘புதுப்பேட்டை’ கொக்கி குமாரு, ‘ஆடுகளம்’ கே.பி.கருப்பு, ‘மாப்பிள்ளை’ சரவணா, `மாரி’, ‘யாரடி நீ மோகினி’ வாசு, ‘வேலை இல்லா பட்டதாரி’ ரகுவரன் ஆகியோர் போட்டியாளர்களாக பிக்பாஸில் கலந்து கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்குமென ‘சின்னப்புள்ளத்தனமான’ கற்பனை...

பிக்பாஸ் தன் ஆட்டோமேட்டட் குரலில் ஒரு டாஸ்க்கைக் கொடுக்கிறார். “வணக்கம் கன்டஸ்டன்ட்ஸ்!  உங்களை நீங்களே கேமரா முன்னாடி அறிமுகப்படுத்திக்கங்க!” இது போதாதா... ஒவ்வொருவரும் தாதாவாய் மாறி  கேமரா முன் தாளிக்க ஆரம்பிக்கிறார்கள். முதல் போணியே நம்ம சுள்ளான் சுப்பிரமணிதான். “நான்லாம் மோசமான ஆளு. மாஸ் காட்டுனேன்னு வையி... மல்லாந்துருவே... சுள்ளான்னு எம்பேரைச் சொன்னேனு வையி சுருண்டுருவே... பறந்து பறந்து அடிப்பேன், பஞ்சர் ஆகிடுவே. எனக்கு ஏற்கெனவே ஏழரை. நீ ஏதாச்சும் சொல்ல, நான் ஏதாச்சும் செய்ய...கடைசியில எங்கப்பன் என்னைச் செருப்பால அடிப்பான். பேசாம கப்பை எங்கிட்ட கொடுத்திரு பிக்பாஸு... இல்லைனா கேட் ஏறிக்குதிச்சுப் போய்ட்டே இருப்பேன்.” -சிம்பிளாக சீன் வைக்கிறார் மாஸ் என்ட்ரி `சுள்ளான்!’

   ‘தேவதையைக் கண்டேன்’ பாபுவுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.  “ஏய் தம்பி இந்தாய்யா... ஏன்யா முக்கிக்கிட்டுக் கத்துறே? சூடா நம்ம டீயைக் குடி. நார்மலா போகும்” என்றவர், கேமராவைப் பார்த்து, “பிக்பாஸய்யா! நான் டீமானிட்டைசேஷன் டைம்லயும் டீ வித்தவன். ஆமா, டீ வித்தவங்கெல்லாம் இப்ப என்னவா இருக்காங்கன்னு தெரியும்ல பிக்பாஸ்..? பார்த்துச் செய்யிங்க!” எனப் போட்டிக்குத் தொகிறினார். “ஏய்... யாருகிட்ட? பார்க்குறதுக்குத்தான் நான் சுள்ளான். சூடானேன்... சுளுக்கெடுத்திருவேன்” என சுள்ளான் துள்ள, அல்லையில் அடித்துக் கட்டிலில் படுக்க வைக்கிறார் கே.பி.கருப்பு.

“100 நாள் 100 லைக்ஸ் திட்டத்தின்படி”

“ஏய்... எங்க வந்து என்ன  கரைச்சலைக் கொடுத்துட்டிருக்கே... கொன்டே புடுவேன். நான்லாம் சுனாமிலயே ஸ்விம்மிங்கைப் போட்ட ஆளு” என்ற கே.பி.கருப்பு, தன் கையிலிருக்கும் சேவலை கேமராவுக்குக் காட்டி, “பிக் பாஸ்... ஐ ஆம் லவ்விங் யூ!” என்கிறார்.

“நான் வட சென்னையவே கன்ட்ரோல்ல வெச்சிருந்த ஆளு. கொக்கி குமாருனா கொயந்தகூட வாயை மூடும்! இப்ப எம்.எல்.ஏ ஆகப்போறேன். பார்த்து செய்யி பிக்பாஸு... இல்லை செஞ்சு பார்த்துருவே!” -இது புதுப்பேட்டை குமாரு. “திவ்யா திவ்யா... திவ்யா திவ்யா” எனப் பாட்டுப்பாடிக்கொண்டே ஆக்‌ஷனுக்கு ரெடியாகிறார் ‘காதல் கொண்டேன்’ வினோத். “நான்லாம் பாய்சன் கிடைச்சாலே பாயசம் மாதிரி குடிப்பேன். இப்ப பாயசமே கிடைச்சிருக்கு. விட்ருவேனா?” -இது நம்ம மாப்பிள்ளை சரவணா. “என்ன பிக்பாஸ்... ஒரே கலீஜ் பசங்களோட கோத்துவிட்டுட்டே. நான்லாம் ஜாக்கி ஜட்டி போடுற ஆளு. இவனுகளைப் பார்த்தா ஜட்டியையே பார்க்காதவனுக மாதிரி இருக்கானுக. பேசாம இவனுக எல்லோரையும் எலிமினேட் பண்ணிரு பிக்பாஸ்! என் ரேஞ்சே வேற... சாஃப்ட்வேர் புரொக்ராமர் யூ நோ..?” என்கிறார் ‘யாரடி நீ மோகினி’ வாசு.  

மீசையை முறுக்கிவிட்ட மாரி, “செஞ்சுருவேன்!” என கேமராவை விரலால் தட்டினார். அடுத்து வந்த வி.ஐ.பி ரகுவரன்,  “வி.ஐ.பினா வேலை இல்லா பட்டதாரினு நினைச்சிட்டியா? வெறித்தனமான இலிமினாட்டி பையன்னு அர்த்தம்!” என்று ரணகள மிரட்டல் விடுக்கிறார்.               

 எல்லாம் சரியா போனா எப்புடி..? பிக்பாஸின் அடுத்த டாஸ்க் அப்புடி! ``மாமனார் ரஜினி அரசியலில் புகுந்து வென்று சி.எம் ஆகிறார் என்று வெச்சுக்குவோம்.  மருமகன் தனுஷும் எம்.எல்.ஏவாகி அமைச்சரவைல இடம் பிடிச்சிட்டார்னு வெச்சுக்குவோம். அவர் என்ன திட்டங்கள் கொண்டுவந்தா செமையா இருக்கும்?” - இதுதான் பிக்பாஸின் கேள்வி. எல்லோரின் அட்ரீனல் சுரப்பியும் செமத்தியாய் வேலை செய்ய ஆரம்பித்தது. ‘காதல் கொண்டேன்’ வினோத்தே ஆரம்பித்தார்.

 “நேத்துவரை டீப்பா லவ் சிம்பல் கொடுத்த பொண்ணுங்க திடீர்னு ஒன் ஃபைன் மார்னிங் ரொம்ப சேஃபா ‘நட்புடா... இதெல்லாம் ரொம்பப் தப்புடா’னு திடீர்னு ரிவர்ஸ் கியர் போட்றாளுக. ‘அப்போ தலையக் கோதிவிட்டது, நெத்தியில முத்தம் கொடுத்தது, ஒத்தைக்காதுல இயர்ஃபோன்ல பாட்டுக்கேட்டதெலாம் நட்பாடி?’னு கேட்டா ‘அது நட்புக்கும் மேலே...லவ்வுக்கும் கீழே’னு கோனார் நோட்ஸ் கொடுக்குறாளுக. அதனால காதலர்களுக்கென தனி ஆதார் கார்டு மாதிரி ‘சேதார் கார்டு’னு ஒண்ணு கொடுக்கணும். அதை ஆதாரமா வெச்சு யாருக்கும் சேதாரம் இல்லாம  பார்த்துக்கணும். அதுக்கு தனுஷ் குரல் கொடுக்கணும்... கடைசியா திவ்யா எனக்கு வேணும். டாட்” என்கிறார் வினோத்.

“அடிச்சான் பாருய்யா முதல் பால்ல சிக்ஸர்!” என்றது பிக்பாஸ் குரல். “வினோத்துக்கு ஆதரவா நான் நிப்பேங்க. காதலிக்கிறவங்களுக்கு சேதார் கார்டு திட்டம் கட்டாயம் கொண்டு வரணும். காதலிச்சு கல்யாணம் பண்ணவங்களுக்கு ரேஷன்ல 5 லிட்டர் பாமாயில் எக்ஸ்ட்ரா கொடுக்கச் சொல்லணும். பீச்சுல ஃப்ரீயா டீயும் சுண்டலும் தரச் சொல்லணும். டைம்பாஸுக்காகக் காதலிக்கிறது பொண்ணோ பையனோ, கடுமையா தண்டிக்கணும். அதுக்குனே காதல் துறைனு தனித் துறையை உருவாக்கி அதுக்கு நம்ம தனுஷையே மினிஸ்டராக்கிடணும். அவ்ளோதாங்க..!” என்கிறார் ‘தேவதையைக் கண்டேன்’ பாபு.

“ஏ... இந்தாருங்கய்யா... என்ன பொண்ணுகளைப் பத்தி தப்பா பேசுறீங்க? ஐரின் புள்ள மாதிரி லவ் பண்ணா உசிரைக் கொடுக்குற புள்ளைகளும் இருக்குதுகய்யா... காதலுக்குக் கண் இல்லய்யா... கலப்புத் திருமணத்துலயும் என்னை மாதிரி கலர்க் கலப்புத் திருமணம் பண்ற ஆளுகளுக்கு தாலுகா ஆபீஸ்ல வேலை ஒதுக்கணும்யா. அப்புட்டுத்தேன்” என்றார் கே.பி. கருப்பு.

 “ஷோக்கா சொன்ன கருப்பு. நான்லாம் அதனாலதான்  ‘மாப்பிள்ளை’யாகவே முடிஞ்சது’’ என்று பஞ்ச் வைத்தார் `மாப்பிள்ளை’ சரவணா! 

 “சிட்டியில நல்ல ரவுடிகளையே பார்க்க முடியல. நாலு நல்லி எலும்பு, கொஞ்சூண்டு சதை வெச்சதெலாம் பெரிய தாதாவா சுத்திக்கினு திரியுதுக. அதனால மானியம் கீனியம் கொடுத்து எங்களை மாதிரி சீனியர் ரவுடிகளுக்கு லோன்ல ஏ.கே.47, பி.கே.57ன்னு வெப்பன் வாங்கக் காசு கொடுத்தீங்கன்னா தொழிலை பார்டர் தாண்டிப் பண்ணுவோம். வட்டம், மாவட்டம்னு கட்சில காசு பார்த்து நாங்களும் புள்ளகுட்டிகளோட செட்டில் ஆகி மக்களுக்கு சேவை செய்வோம். அதுக்கு எதுனா பண்ணச் சொல்லுங்க தல!” - காரியச் சித்தனாய் பெருசாய்  ஸ்கெட்ச் போட்டார் கொக்கி குமாரு. 

“100 நாள் 100 லைக்ஸ் திட்டத்தின்படி”

இதைக் கேட்டதும் 1000 வாட்ஸ் பளிச் புன்னகைக்குப் போனார் மாரி. “ஆமா, `செஞ்சிருவேன்’னு சொன்னதுக்கு குண்டாஸ்ல போட்டு உள்ளே வெச்சு செஞ்சுட்டாங்க. பொண்ணுங்க முன்னாடி சீன் போட்றதுக்கும், யார்கிட்டயாச்சும் ‘இந்தாளு பெரிய கையி, செம அராத்து’னு பில்ட்-அப் பண்றதுக்குனே சில டம்மி போலீஸ் வேணும். அதுக்குனே ஸ்பெஷலா வேலைக்கு ஆளு  எடுக்கணும்.” என்றார் மாரி.

 ‘அட செமையா இருக்கே!’ என எல்லோரும் தலையாட்ட, தன் ஐடியாவைச் சொன்னார் ‘யாரடி நீ மோகினி’ வாசு. “இங்கிலீஷ்ல பேசத் தெரியாததை குத்தமா பார்க்கக்கூடாது. நம்ம அ.தி.மு.க மினிஸ்டர்ஸ்ங்க அது தெரிஞ்சா டெல்லிக்குப் போறாங்க? அதனால, எம்.என்.சி கம்பெனிகள்ல எல்லாம் மீட்டிங்ல கட்டாயம் தமிழ்ல மட்டும்தான் பேசணும்னு சட்டம் கொண்டு வரணும். எம்புட்டு அடி..!” என்கிறார் வாசு.

“ஃபேஸ்புக்ல அதிகமா ஸ்டேட்டஸ், மீம்ஸ் போடுற பசங்களுக்குனு ஃபேஸ்புக் ஓனர் மார்க் தன்னோட பணத்துல இருந்து ஒரு குறிப்பிட்ட  தொகையை மாசாமாசம் ஒதுக்கணும். ஃபேஸ்புக் வளர்ச்சித் துறைனு தனித்துறையை உருவாக்கி அது மூலமா இவங்களுக்கு 100 நாள் 100 லைக்ஸ் திட்டத்தின்படி எல்லோருக்கும் வேலைவாய்ப்புனு உத்தரவாதம் தரணும்! குறிப்பா பிக்பாஸைக் கலாய்ச்சு மீம்ஸ் போட்டா இங்க்ரிமென்ட்!” என்ற முத்தான யோசனையைச் சொன்னார் வி.ஐ.பி ரகுவரன். எல்லோரும் கைதட்டி ‘சூப்பர்’ என ஆமோதித்தார்கள்.

“அடேய் இலுமினாட்டி கம்னாட்டி...உன்னைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்!” என்று பிக்பாஸ் வாய்ஸில் பேசிக்கொண்டு ஹல்க் சைஸில் ஓர் உருவம் வீட்டுக்குள்ளே வர... எல்லோரும்  ஓட ஆரம்பித்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு