பிரீமியம் ஸ்டோரி

சூப்பர் காஸ்ட்டிங், பெரிய பட்ஜெட் எனப் பல ஹைஃபை படங்களே சொதப்ப, சத்தம் இல்லாமல் செம ஹிட் அடிக்கின்றன சின்ன படங்கள். சிறுபட்ஜெட் படங்கள் மீது பெரும் கவனத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் இளம் தலைமுறை இயக்குநர்கள். அப்படி, ரிலீஸுக்கு முன்பே சினிமா ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் அறிமுகம் இங்கே! 

இது நண்பர்களின் கதை!

சிறிய பட்ஜெட் படங்கள்..!

“நான் சொல்ல வந்த கருத்தை ரியலிஸ்டிக் சினிமாவா கொடுக்கணும்னு ஆசைப்பட்டு, ‘மாயபிம்பம்’ படத்தை உருவாக்கியிருக்கேன். இது நண்பர்களின் கதை. நண்பர்களின் மூலமா நன்மைகளும் கிடைக்கும் தீமையும் கிடைக்கும். நல்லது கிடைச்சா எப்படி இருக்கும் கெட்டது கிடைச்சா எப்படி இருக்கும்னு இந்தப் படத்தில் சொல்லியிருக்கோம். ஆனா, எதுவுமே நாம நினைக்கிற மாதிரி இருக்காது... இதைத்தான் ‘மாயபிம்பம்’ சொல்லப்போகுது.’’ எனத் தன் முதல் படத்தின் கதையைத் தனக்கான முகவரியாகச் சொல்லித் தொடங்குகிறார் இயக்குநர் சுரேந்தர்.

“முழுக்க முழுக்கப் புதுமுகங்கள் மட்டுமே நடிச்சிருக்காங்க போலிருக்கே?”

“ஆமாம். ஹரி கிருஷ்ணன், ஆகாஷ் பிரபு, ராஜேஷ், அருண் குமார், ஜானகி இவங்கதான் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள். இந்தப் படத்தோட கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொன்னப்ப, ‘நான் பண்றேன். ஆனா, ஃபேமஸான நடிகர்களை வெச்சுப் பண்ணுங்க’னு சொன்னாங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இந்தக் கதைக்குப் புதுமுகங்கள் நடிச்சாதான் நல்லாயிருக்கும். ஏன்னா, படம் பார்க்கிறவங்களுக்கு அவங்க கதாபாத்திரமா மட்டும்தான் தெரியணும். அதுக்காகவே நான் புதுமுகங்களை வெச்சுத்தான் படம் பண்ணணும்கிறதுல உறுதியா இருந்தேன். பல தயாரிப்பாளர்கள் அதுக்கு ஓ.கே சொல்லலை. அதான், நானே தயாரிப்பாளர் ஆயிட்டேன். நடிகர்கள் மட்டுமில்ல, இசையமைப்பாளர் நந்தா, கேமராமேன் எட்வின், எடிட்டர் வினோத்னு டெக்னிக்கல் டீமும் புதுசுதான்.’’

சிறிய பட்ஜெட் படங்கள்..!
சிறிய பட்ஜெட் படங்கள்..!

``படம் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க. ஆனால், டீசர், ட்ரெய்லர்னு எதையுமே வெளியிடலையே?’’

“ஆமாம். அவ்வளவு ஏன், இன்னும் சென்சாருக்குக்கூட போகலை. ஏன்னா, அதையெல்லாம் பண்ணிட்டா, உடனே படத்தை ரிலீஸ் பண்ணனும். கொஞ்சம் லேட் ஆனாலும், ‘இது எப்பவோ எடுத்த படம்’ங்கிற பேச்சு வந்துடும். சமூக வலைத்தளங்கள்லயும் ப்ரமோட் பண்ணலை. நான் அதுல விளம்பரம் பண்ண ஆரம்பிச்சா, மக்கள் அதை மறக்கிறதுக்குள்ள படத்தை ரிலீஸ் பண்ணனும். அதுக்கான சூழலை உருவாக்கிட்டுத்தான் ரிலீஸ் பண்ணணும்கிறதுல நான் உறுதியா இருக்கேன்.” 

சிறிய பட்ஜெட் படங்கள்..!

புதுமுகங்களை வெச்சுப் பண்றதுல ஏதாவது சிரமங்கள் இருந்துச்சா?”

``இந்தப் படம் பண்றதுக்குப் பெரிய சவாலா இருந்தது நடிகர்களோட நடிப்புதான். புதுமுகங்கள்கிட்ட இருந்து சிறந்த நடிப்பை வாங்குறது எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. ஒவ்வொரு ஷாட்டுக்கும் நிறைய நேரங்கள் எடுக்கும்போது, ‘பெரிய நடிகர்களை வெச்சே பண்ணியிருக்கலாம்’னு தோணுச்சு. ஆனா, இப்போ படம் பார்த்த பலரும், ‘பசங்க நல்லா நடிச்சிருக்காங்க’னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கு. ’’

சிறிய பட்ஜெட் படங்கள்..!

“இதுவரை படம் பார்த்தவங்க கொடுத்த பாராட்டில் மறக்க முடியாதது?”

“பாராட்டுக்களைவிட ‘மாயபிம்பம்’ படத்துக்காக ஓர் அங்கீகாரம் கிடைச்சிருக்கு.  ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சாரோட உதவியாளர் மராத்தியில படம் பண்ணிட்டு இருக்கார். அவர் `மாயபிம்பம்’ பார்த்துட்டு மராத்தியில் ரீமேக் பண்ணலாம்னு சொல்லியிருக்கார். ரொம்பச் சந்தோஷமாக இருக்கு.’’

“மக்களின் விருதுக்காகக் காத்திருக்கிறோம்”

சிறிய பட்ஜெட் படங்கள்..!

மிழக - கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும் மலையிலும் வாழும் நிலமற்ற உழைக்கும் மக்கள் வாழ்வியலையும் அங்கு நடக்கும் அரசியலையும் பேசும் படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. இந்தப் படத்தை ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’ படங்களின் இணை இயக்குநரும் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் கதாசிரியருமான லெனின் பாரதி இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசை. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நடிகர் விஜய்சேதுபதி தயாரித்துள்ள படம் இது.

“மலைப்பிரதேச மக்களின் கதையை முதல் படமாகப் பண்ண என்ன காரணம்?”

“உலகமயமாதல் நடந்த பிறகு, இருநூறு வருடங்களில் நடக்கும் மாற்றங்கள் இருபதே வருடங்களில் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் நான் சிறுவயதில் பார்த்த எங்கள் ஊர் கிராம மக்களுக்கும் நகரத்தில் வாழும் மக்களுக்கும் உள்ள வேறுபாடு என் மனதைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அப்போதுதான், இந்த மக்களின் வாழ்வியலைப் படமாக்க வேண்டும் என்ற யோசனை வந்தது. அங்குள்ள அரசியலைப் பேச வேண்டுமென்றும் தோன்றியது. எந்த ஒரு பெரிய நடிகரும் இல்லாமல் கதைக்களத்தை மட்டும் நம்பி வெளிவரவிருக்கும் படம் இது.”

சிறிய பட்ஜெட் படங்கள்..!

“படமாக்குவதில் என்ன மாதிரியான சவால்களைச் சந்தித்தீர்கள்?’’

“படக்குழுவில் இருக்கும் எல்லோரும் மூன்று வருடங்கள் ‘சினிமாக்காரர்கள்’ என்று சொல்லாமல் மேற்குத் தொடச்சி மலையில் உள்ள கிராமத்தில் தங்கி அவர்களோடு சகஜமாகப் பழகி அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாகக் கவனித்த பிறகே, படப்பிடிப்பு ஆரம்பமானது. ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘களவாணி’ ஆகிய படங்களில் சின்ன கேரக்டரில் நடித்த ஆண்டனி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாகக் காயத்ரி கிருஷ்ணா நடித்துள்ளார். ஹீரோயினை அந்த மக்களுள் ஒருவராக மலைக்குக் கூலி வேலைக்கு அனுப்பி அந்த மக்களின் கலாச்சாரத்தை உணர வைத்தோம். ஷூட்டிங் ஆரம்பிக்கும் வரை அவர் நடிகை என்றே மக்கள் யாருக்கும் தெரியாது. ‘இந்தப் பொண்ணுக்கு வீட்ல ரொம்பக் கஷ்டம். வேலைக்குச் சேர்த்துக்கோங்க’ என்று அவரை மக்களோடு மக்களாக வேலைக்கு அனுப்பினோம். மற்றபடி எல்லோருமே புதுமுகங்கள். அந்த ஊர் மக்கள் பலரும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.”

சிறிய பட்ஜெட் படங்கள்..!

“படத்துக்கு நிறைய விருதுகள் கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்களே?”

“ஆமாம். கேரளாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது, சிறந்த அறிமுகத் திரைப்படம் என்ற விருது, நியூயார்க்கில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது, பயோஸ்கோப் க்ளோபல் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது என படம் வெளியாகும் முன்பே பல விருதுகளைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி. ஆனால், யாருக்காகப் படம் எடுத்தோமோ அவர்களுக்குப் படம் போய்ச்சேர வேண்டும். சீக்கிரமே படம் திரைக்கு வரும். மக்களின் விருதுக்காகக் காத்திருக்கிறோம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு