பிரீமியம் ஸ்டோரி

முதல் படத்துக்கும், முதல் சூப்பர் ஹிட் படத்துக்கும் இடையில் ஒன்பது வருட இடைவெளி. இடையில் நேர்ந்த அவமானங்கள், தோல்விகளையெல்லாம் தொடர்வெற்றிகளில் நேர்செய்த `பிதாமகன்’ விக்ரமின் 25.

1. இயற்பெயர் கென்னடி. அப்பா ஜான் விக்டர். அம்மா ராஜேஸ்வரி. ரசிகர்களுக்கு சீயான். நண்பர்களுக்கு கென்னி.

2. செம ஜாலி, கலகல பேர்வழி. ஆனால், படிப்பில் செம கெட்டி. ஏற்காடு கான்வென்டில் படிக்கும்போது பள்ளியில் ஃபர்ஸ்ட் க்ளாஸ், லயோலா காலேஜில் டிஸ்டிங்ஷன் என்று கெத்து காட்டியவர்.

3. மனைவி பெயர் ஷீலா. மகள் அக்‌ஷிதாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. மகன் துருவ். தன்னை நடிகனாக உயர்த்திய பாலாதான் மகனின் முதல் படம் இயக்க வேண்டும் என்பது விக்ரமின் விருப்பம். இப்போது பாலா இயக்கத்தில் `வர்மா’ படத்தின் மூலம் சினிமாவுக்கு வருகிறார் துருவ்.

4. சைதாப்பேட்டையில் நடந்த ஒரு மோசமான விபத்தில் இரண்டாண்டுகள் சிகிச்சை எடுத்துக்கொண்டவர் விக்ரம். ‘வேற வழியே இல்லை. காலை எடுத்தே ஆகணும்’ என்ற நிலையில் இருந்தவரைப் போராடி மீட்டெடுத்தவர் விக்ரமின் அம்மா. “அப்போது என்னை, அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, குழந்தையாகப் பார்த்துக்கொண்ட தாய்கள் மருத்துவமனை நர்ஸ்கள்” என்று அடிக்கடி குறிப்பிடுவார்.

விக்ரம் 25

5. பிஸி ஆவதற்கு முன்,  திரைத்துறையில் குறிப்பிடத்தகுந்த, டப்பிங் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் விக்ரம். `அமராவதி’ அஜித், `காதலன்’ பிரபுதேவா, `புதிய முகம்’ வினீத், `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ அப்பாஸ் என்று பலருக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.  `குருதிப்புனல்’ படத்தில்கூட ஒரு கதாபாத்திரத்துக்கு விக்ரம் குரல் கொடுத்ததுண்டு. தான் குரல் கொடுத்ததில் பெருமிதமாக நினைக்கும் படம், ரிச்சர்ட் அட்டன் பரோவின் ‘காந்தி.’ அந்தப் படத்தில் இளவயது காந்திக்கு விக்ரம் குரல் கொடுத்திருக்கிறார்.

6. வழக்கமாக வெளியில் வரவிரும்பாத  விஐபி அல்ல விக்ரம். வீட்டில் ஜிம் இருந்தாலும் பெசன்ட் நகரின் ஏதாவது ஜிம்மில் அடிக்கடி இவரைப் பார்க்கலாம். ஷாப்பிங், பீச் வாக்கிங் ரொம்பப் பிடிக்கும். குடும்பத்தோடு தியேட்டர் சென்று படங்கள் பார்ப்பது பிடிக்கும். குடும்பத்தோடு இருக்கும்போது யாராவது போட்டோ எடுத்தால் மட்டும் கொஞ்சம் தயங்குவார். மற்றபடி, விக்ரம் ரொம்பவே ரசிகர் ஃப்ரெண்ட்லி.    

7.
சினிமாவுக்கு அடுத்து போட்டோகிராபியில் ஆர்வம் உண்டு. “ஒண்ணு கேமரா முன்னாடி நிப்பேன். இல்லேன்னா கேமரா பின்னாடி நிப்பேன்” என்பார்.  விக்ரமின் மகன் துருவ்,  போட்டோகிராபியில் பதினாறடி பாய்கிறாராம்.

8. இராமாயணத்தில் வாலி எதிரில் இருப்பவரின் பலத்தில் பாதியை எடுத்துக் கொள்வதுபோல, விக்ரம் எதிரில் இருப்பவரிடமுள்ள எனர்ஜியில் பாதியை எடுத்துக்கொள்ளும் ரகம். தனது அலைவரிசைக்கு ஏற்ற எவரும் உரையாட அமைந்துவிட்டால், கொஞ்சநேரத்திலேயே  டபுள் எனர்ஜியோட ஐக்கியமாகிவிடுவார்.

9. ஸ்டார் ரேட்டிங்கில் எல்லாம் நம்பிக்கை இல்லை. விக்ரமாக மட்டுமே ரசிகர்களுக்கு நினைவில் இருப்பதும் பெரிய விஷயமில்லை. அதைவிட சேது, காசி, சித்தன், அம்பி, அந்நியன், லிங்கேசன், லவ் என்று தன் கதாபாத்திரங்களாகத் தன்னை ரசிகர்கள் நினைவில் நிறுத்துவதுதான் விக்ரமுக்கு எப்போதும் பிடிக்கும்.

10. மணிரத்னத்தின் `ராவணன்’ படத்தில் அமைந்த சவால், விக்ரம் விரும்பி ஏற்றது. தமிழில் விக்ரம், இந்தியில் அபிஷேக் பச்சன் என்று முடிவாகிவிட்டது. இந்தியில் ஐஸ்வர்யாராய்க்கு ஜோடியாக, அபிஷேக்குக்கு எதிர்ப்பாத்திரத்தில் யாரும் செட் ஆகாதபோது விக்ரமைக் கேட்கிறார் மணி. முதலில் மறுத்தவர், ஒரே படத்தில், ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் ஷூட்டிங் செய்யப்பட, ஒவ்வொன்றிலும் எதிரெதிர் கதாபாத்திரங்களை தானே செய்யப்போகிறோம் என்கிற சவால் ஈர்க்க, சட்டென்று ஓகே சொல்லிவிட்டார்.    

11. “வசனங்களை நினைவில் வைத்துக்கொள்வதில் ரொம்ப வீக் நான்” என்பார். செட்டில் மனப்பாடம் செய்துகொண்டு கடகடவென்று ஒப்பித்து நடித்துமுடித்ததும் மறந்துவிடுவார். ஆனால், எப்போதும் நினைவில் இருக்கும் வசனம் ஒன்றுண்டு. சேது படத்தில் ‘அபிதகுஜலாம்பாளி’டம் பேசும் ‘ஒரு காலத்துல நான் சந்தோஷமா இருந்தேண்டி’ எனத் தொடங்கும் வசனம்தான் அது.

12. பறவைகள்மீது பெரும் பிரியம்.  ஆப்பிரிக்கன் கிரே, கோக்கடூ என்று பல வகைப் பறவைகள் வளர்க்கிறார். அவற்றுக்கு வித்தியாசமான பெயர்களிடுவது விக்ரம் ஸ்பெஷல். உதாரணத்துக்கு, ஒரு கிளியின் பெயர் ‘ரவுடி!’

13. இரண்டு பாராட்டுகளை விக்ரம் அடிக்கடி குறிப்பிட்டு மகிழ்வார். இரண்டுமே யார் சொன்னது என்பதைச் சொல்ல மறுத்துவிட்டார். அந்நியனில் இவர் நடிப்பைப் பார்த்துவிட்டு ஒருத்தர் இவரை  ``நடிப்புல மனுஷ பச்சோந்திய்யா நீ” என்றிருக்கிறார்.   “விக்ரம்கிட்ட ‘ஒரு காட்சில நீங்க நெஜமா சாகணும்’னு சொன்னா, ‘ஓகே சார். டப்பிங் முடிஞ்சு கடைசியா அந்த சீன் ஷூட் பண்ணிக்கலாம்’னு சொல்லுவார்” என்று ஒரு பிரபலம் சொல்லியிருக்கிறார். “இந்த இரண்டைவிடப்  பெரிய பாராட்டு எதுவும் ஒரு நடிகனுக்கு இருக்க முடியாது” என்பார்.

14. ஒவ்வொரு வேடத்துக்கும் வித்தியாசம், மெனக்கெடல் என்று பிரமிக்க வைக்கிறவர் விக்ரம். அவர் பார்த்து பிரமிக்கிற நாயகன், கமல். விக்ரமின் ஆல் டைம் ஃபேவரிட் கேரக்டர் கமலின் சப்பாணி கதாபாத்திரம். அந்தக் கேரக்டருக்காகவே ‘16 வயதினிலே’ படத்தை நூற்றுக்கணக்கான முறை பார்த்தவர் விக்ரம்.

15. `இவர் போல விக்ரம்’ என்ற பாதையை விக்ரம் விரும்புவதில்லை. அப்படியும் கேட்டால் ‘ரஜினி சாரோட மாஸ், கமல் சாரோட க்ளாஸ் ரெண்டையும் கலந்த ஒரு பாதைலதான் பயணிக்க விருப்பம்’ என்பார்.

விக்ரம் 25

16.  ‘எனக்கு விருது கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை’ என்ற டிப்ளமேட்டிக் பேச்செல்லாம் விக்ரமிடம் எதிர்பார்க்க முடியாது. பிதாமகன் படத்துக்காக தேசிய விருது கிடைத்தபோது,  “சேதுவுக்கே வரவேண்டியது. இப்பதான் வருதா... ஓகே...  இன்னும் நெறைய வாங்கணும்” என்றவர் விக்ரம்.

17. இவரைப் பிழிந்து, இவரின் உழைப்பை உறிஞ்சி எடுக்கும் இயக்குநர்கள் என்றால் விக்ரமுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே  இயக்குநர்கள் பாலா, ஷங்கர், மணிரத்னம் மூவரையும் பிடிக்கும். இவர்கள் தவிர, தன்னை இயக்கியவர்களில் இயக்குநர் ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம் இருவரையும் மிகுந்த மரியாதையோடு குறிப்பிடுவார் விக்ரம்.

18. எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் செய்து பார்ப்பதில் விக்ரமுக்கு அலாதிப் பிரியம். அவற்றில் என்ன சவால் என்று கேட்டால் விக்ரம் சொல்வது ஒன்றுதான், ``எந்த கேரக்டரிலும் விக்ரம் தெரியவே கூடாது. நிஜமான, இயல்பான விக்ரம் எப்படி இருப்பார்  என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்க விரும்புவேன்” என்பார். இவரின் கதாபாத்திரங்களில் இவருடைய ஃபேவரிட், `தெய்வத்திருமகள்’ கிருஷ்ணா, `பிதாமகன்’ சித்தன், சேது.

19. உடன் நடித்தவர்களிலேயே சிறந்த ஜோடி யார் என்று கேட்டால் யோசிக்காமல் ‘சாரா’ என்பார். தெய்வத்திருமகள் நிலா பாப்பா! “அது ஒரு மேஜிக்” என்பார்.

20. இயக்குநராகும் ஆசையை மூட்டை கட்டி, ஓரத்தில் வைத்திருக்கிறார். “என்னைவிடச் சிறந்த எழுத்தாளர்கள், இயக்குநர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட நடிக்கவே ஆசை” என்பார். அப்படியும் இயக்கினால் ஹீரோவாக விக்ரமின் சாய்ஸ் யார் தெரியுமா? இயக்குநர் பாலா. “அவரோட முதல் படத்துல நான் ஹீரோன்னா, என் முதல் படத்துல அவர்தான் ஹீரோ” என்பது விக்ரமின் கனவு.

21.
எம்.ஜி.ஆர் படங்களில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’, சிவாஜி படங்களில் ‘நவராத்திரி’. ரீமேக் செய்யப்பட்டால் விக்ரம் நடிக்க விரும்பும் படங்கள்.

22. ஆரம்பத்தில் ​சோஷியல் நெட்வொர்க் எதிலும் அதிக ஆர்வம் காட்டாதவர்​, இப்போது இன்ஸ்டாகிராமில் செம பிஸி. இவர் போட்ட இன்ஸ்டா போட்டோவை பி.சி.ஸ்ரீராம் பாராட்ட, விக்ரமுக்கு குஷியோ குஷி. மூணு லட்சம் ஃபாலோயர்கள் கொண்ட விக்ரம் ஃபாலோ செய்யும் ஒரே நபர், அவரின் மகன் துருவ்.

23. ஹீரோவாகப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், விக்ரமுக்கு வில்லனாக நடிப்பதுதான் மிகவும் பிடிக்கும். ஒரு ஹீரோ எப்படி இருந்தாலும், ஹீரோ என்பதாலேயே ரசிகர்களுக்குப் பிடிக்கும். அதையும் மீறி உழைத்தால் மட்டுமே வில்லனை ரசிகர்கள் பாராட்டுவார்கள் என்பது விக்ரம் சொல்லும் காரணம். 

24.பிறமொழி சேனல்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது முடிந்தவரை அந்தந்த மொழிகளிலேயே பேச முயற்சி செய்வார் விக்ரம். மொழி தெரிகிறதோ தெரியவில்லையோ, தயக்கமே இருந்ததில்லை.

25. ``நமக்கு நாமே நல்லவனா இருக்குறதவிட, மத்தவங்களுக்கு நல்லவனா இருக்கணும்” - இதுதான் விக்ரமின் ரியல் லைஃப் பன்ச்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு