Published:Updated:

“ரொமான்ஸ்ல அப்பாதான் என் குரு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ரொமான்ஸ்ல அப்பாதான் என் குரு!”
“ரொமான்ஸ்ல அப்பாதான் என் குரு!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி

‘சத்யா டீம் ரெடி!’ என சிபிராஜ் மெசேஜ் தட்டியதும்... அவர் வீட்டுக்குப் பரபரவெனப் போய் நின்றால் ரம்யா நம்பீசன், வரலட்சுமி என கலர்ஃபுல் கச்சேரி.

“என்ன பிரதர்... ரம்யா நம்பீசனுக்கும் உங்களுக்கும் டைரக்டர் நிறைய கிஸ் சீன்ஸ் வெச்சு ரொமான்ஸ் பண்ணச் சொன்னாராம். நீங்கதான் பெரிய மனசுக்காரரா அதை வேணாம்னு சொல்லிட்டீங்களாமே...’’ எனக் கேட்டால்... “அய்யோ பிரதர்... என்னங்க எடுத்த எடுப்புலயே ரொமான்ஸ் கேள்வியா... சரி, இதுக்கு நான் கடைசியா ட்விஸ்ட் வெச்சுப் பதில் சொல்லுறேன்.” என நிறுத்த ஷாக் ஆகிக் குறுக்கிடுகிறார் ரம்யா.

“அச்சச்சோ... இதையெல்லாம் என்கிட்டச் சொல்லவே இல்லையே... மிஸ் பண்ணிட்டீங்களே சிபி. சரி, என்ன காரணம்னு இப்பவே சொல்லிடுங்க..” என ரிக்வெஸ்ட் தட்ட... என்டர் ஆகிறார் வரலட்சுமி. “ரொமான்ஸ் வேண்டாம்னு சொல்லுற ஒரு ஹீரோவா சிபிராஜ்? ஆச்சர்யமா இருக்கே. கடைசிலயாவது அந்த ட்விஸ்ட்டைச் சொல்லியே ஆகணும்” என அன்புக் கட்டளையிடுகிறார் வரலட்சுமி.

“ரொமான்ஸ்ல அப்பாதான் என் குரு!”

“நான் உங்களுக்கு என்ன பண்ணேன், இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே பிரதர்... சரி, நாம படத்தைப் பற்றிப் பேசுவோமே...” என டாபிக் மாற்றுகிறார் சிபி. “ ‘சத்யா’ படம் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்ததிலேயே தெரிஞ்சது, படம் ரொம்ப நல்லா வந்துருக்குன்னு. படத்தில் என்னையும் சரி, மற்ற நடிகர்களையும் சரி இயக்குநர் ப்ரதீப் நல்லா நடிக்க வெச்சிருக்கார். வரு, ரம்யானு எங்க எல்லாருக்குமே கரியர்ல இது ஒரு பெஸ்ட் படமா இருக்கும்” எனச் சொல்லிவிட்டு ரம்யாவின் பக்கம் திரும்புகிறார் சிபி.

“முதல் விஷயம், இது தெலுங்கில் வந்த ஒரு பெரிய ஹிட் படம். அதுக்கப்புறம், இந்தப் படத்தில் என்னோட கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது. ரொம்ப த்ரில்லான ஸ்கிரிப்ட். அதனால இந்தப் படத்தில் நடிக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.  என்னை நீங்க ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் பார்க்கப் போறீங்க.” எனக் கண்களை உருட்டிப் பேசுகிறார் ரம்யா நம்பீசன். “யா... யா” என அதை ஆமோதித்தவாறு பேச்சைத் தொடர்ந்தார் வரலட்சுமி... “கதைக்கு எது தேவையோ அதைப் பண்ண வெச்சிருக்கார் இயக்குநர். த்ரில்லருக்கான சரியான சமயம் இது. டப்பிங் பண்றப்பதான் படம் பார்த்தேன். அதிலையே தெரிஞ்சுருச்சு படத்தோட வெற்றி. இது கண்டிப்பா ஒரு வித்யாசமான படமா இருக்கும்” என தம்ஸ் அப் காட்டுகிறார் வரு.

“ரொமான்ஸ்ல அப்பாதான் என் குரு!”

`` `சத்யா’ங்கறது கமல் சாரோட பட டைட்டில். அதை எப்படி இந்தப் படத்துக்குத் தேர்ந்தெடுத்தீங்க? கமல் என்ன சொன்னார்?” இது சிபிராஜுக்கான கேள்வி. “இந்தப் படம் ஷூட்டிங் ஆரம்பிக்கறப்போ டைட்டில் எதுவும் வெக்கலை. ஆனால், ஹீரோ கேரக்டர்  சத்யானு இருந்தா நல்லாயிருக்கும்னு ஃபீல் பண்ணி ஷூட்டிங் ஆரம்பிச்சோம். செட்ல எல்லாரும் `சத்யா, சத்யா’னு கூப்பிடவும் `இது நல்லாயிருக்கே...இதையே வெச்சுரலாம்’னு நானும் ப்ரதீப்பும் நினைச்சோம். முதலில் கிடைக்கும்னே நினைக்கலை. ஆனால், கமல் சார் டைட்டிலைக் கொடுத்தது பெரிய ஆசிர்வாதம். நாங்க அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கோம்” என நெகிழ்கிறார் சிபி.

“ரொமான்ஸ்ல அப்பாதான் என் குரு!”

“அப்பாதான் தயாரிப்பாளர். ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகுதான் அப்பா அந்த ஒரிஜினல் தெலுங்கு படமான `க்ஷனம்’ பார்த்தார். `அப்படியே எடுத்துடுங்க’னு அப்பா சொல்லியிருந்தார். ஒரு ஃப்ரெஷ் படம் பண்றதை விட, ரீமேக் படம் பண்றது ரொம்பக் கஷ்டம். அதை கவனமா கையாண்டிருக்கார்  ப்ரதீப். படம் பார்த்துட்டு ‘பர்ஃபெக்ட்’னு அப்பா சொன்னார்’’ என சிபி முடிக்க...

“ரொமான்ஸ்ல அப்பாதான் என் குரு!”

``கிளைமேக்ஸ் வந்துடுச்சு... அந்த ரொமான்ஸ் ரகசியம் என்னென்னு சொல்லிடுங்க சிபி?” என ரம்யா சீண்டுகிறார். “என் பையன் வளர்றான். ஏற்கனவே நம்மளைப் பார்த்துத்தான் பல விஷயங்களை அவன் கத்துக்குறான். அப்பாவே நான் வளர்ந்த பிறகுதான் காதல் படங்கள் பண்ண ஆரம்பிச்சார். அதனால அப்பாவோட வழியை நானும் பின்பற்றுறேன். ரொமான்ஸ்ல அப்பாதான் என் குரு” என சிபிராஜ் சொல்ல,  வரலட்சுமியும் ரம்யாவும் சேர்ந்து  “பார்றா...” என கோரஸ் போடுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு