Published:Updated:

தமிழ்நாட்ல தமிழன் எங்கேய்யா?

தமிழ்நாட்ல தமிழன் எங்கேய்யா?

தமிழ்நாட்ல தமிழன் எங்கேய்யா?

தமிழ்நாட்ல தமிழன் எங்கேய்யா?

Published:Updated:
##~##

''கொஸ்டீன்லாம் ரெடியா?'' என்று தோளில் கை போட்டு விசாரிக்கிறார். சட்டென்று எட்டி சட்டையைக் கொத்தாகப் பற்றி, முகத்தின் அருகில் வந்து உறுமி, ''நான் சொன்ன போட்டோலாம் வரணும்... சரியா!''  என போட்டோகிராபரை மிரட்டி அனுப்புகிறார். பட்டிக்காட்டு ராஜா பாரதிராஜாவை தேனியில் சந்தித்தோம். 'தெக்கத்திப் பொண்ணு’ படப் பிடிப்பில் இருந்தவரிடம் பேசியதில் இருந்து...  

''பெரிய இடைவெளிக்குப் பிறகு 'அப்பன் ஆத்தா’ பண்ண வர்றீங்க. படத்தின் கரு என்ன?''

''இத்தனை வருஷத்தில் மிகப் பெரிய புரட்சியான படங்கள் எதுவும் நான் பண்ணதில்லை. 'அப்பன் ஆத்தா’ அந்தக் குறையைப் போக்கும். 80 சதவிகித கிராம மக்கள் இன்னும் இன்னொசன்ட்ஸ். அதுக்காக, மேம்போக்கா 'இடியட்’னு சொல்லிட முடியாது. பாவப்பட்டவன். அந்த ஊர்ல வெள்ளை வேட்டி கட்டி யவனும், பஞ்சாயத்து போர்டு பிரெசிடென்ட்டும்தான் அவனைப் பொறுத்தவரை பிக் ஷாட்.  

தமிழ்நாட்ல தமிழன் எங்கேய்யா?

ஓர் அப்பாவி 'அப்பன் ஆத்தா’. எல்லா கஷ்டங்களையும் அனுபவிச்ச பின்னாடி, 'நாங்க வெந்து நொந்து நொம்பலப்பட்டது போதும். எங்க பிள்ளை களாச்சும் வாழ்க்கையில் நல்லா வரணும்’னு நினைக்குறாங்க. தன் பிள்ளைகளைப் பெரிய விஞ்ஞானியா, ஜர்னலிஸ்ட்டா, புரொஃபஸரா, டாக்டரா ஆக்க நினைக்கிறாங்க. ஆனா, ஒரு கட்டத்தில் தே பிகம் கரப்ட். பெத்த பிள்ளைகளே இப்படி ஆகிப்போச்சுன்னா... ஒரு தாயும் தகப்பனும் என்ன செய்வாங்களோ, அதைச் செய்றாங்க என் 'அப்பன் ஆத்தா’... எ ஃபிலிம் பை பாரதிராஜா!''

''பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து வெற்றிக் கூட்டணி இனி இணைய வாய்ப்பே இல்லையா?''

''இளையராஜாகிட்டயும் வைரமுத்துகிட்டயும் கேட்க வேண்டிய கேள்வியை என்கிட்ட மட்டும் கேட்கக் கூடாது. நான் என்னிக்குமே அவங்களோட சேர மாட்டேன்னு சொல்லலை. ஐ நெவர் டோல்டு! என் அண்ணன் - தம்பியை நேசிச்சேன். அப்பன் - ஆத்தாவ நேசிச்சேன். இன்னிக்கும் என்கூட வேலை பார்க்கிறவங்களை நேசிச்சிட்டுதான் இருக்கேன். இதில் எங்கே பங்கம் வந்த துன்னு அவங்க ரெண்டு பேரும்தான் பேசணுமே தவிர... நான் இல்லை!''

''இயக்குநர்கள் சங்க 40-வது ஆண்டு விழா மேடையில் உங்களுக்கும் இளையராஜாவுக்கும் கருத்து மோதல் நடந்ததே... என்ன பிரச்னை?''

தமிழ்நாட்ல தமிழன் எங்கேய்யா?

''வளர்ச்சி. வளர்ச்சிதான் காரணம். நான் இன்னிக்கு வரைக்கும் வளர்ந்ததா நினைக்கவே இல்லை. என் மண்ணும் வாசமும் என்கிட்ட அப்படியே இருக்கு. அவன் வளர்ந்துட்டதா நினைச்சி, உடம்புக்குப் போர்வை போர்த்திக்கலாமா? முகத்துக்குக் கண்ணாடி போட்டா, முழு முகமும் மறைஞ்சிடுறது இல்ல. நான் நிதர்சனமானவன். இது ஜனங்களுக்கும் தெரியும். நீ யார் என்பதை ஜனங்களிடம் சொல்வதில் என்ன இருக்கிறது? நீ பட்ட கஷ்டம் மற்றவர்களுக்குப் பாடமாக, ஊக்கமாக இருக்கும். அதைவிட்டுட்டு, நான் புருஷாத்தமம் பண்ண விரும்பலைனு சொன்னா எப்படி?''

''அந்த விழாவுக்கு அனைத்துக் கலைஞர்களும் வந்திருந்தார்கள். தமிழக முதல்வரை மட்டும் ஏன் அழைக்கலை?''

''நோ... நோ... அது இயக்குநர் சங்க விழா. அங்கே சி.எம்-மைக் கூப்பிடணும்னா, நான் இந்த நாட்டுல அடுத்ததா மதிக்கிற ராமதாஸையும் கூப்பிடணும். கலைஞரை நான் மதிக்கிறேன். ஐ லவ் ஹிம். அவங்க எல்லா மேடையிலும் ஏறி ஆச்சு. இது வேற... க்ரியேட்டிவ் பீப்பிள் வான்ட் டு ஷோ அவர் ஸ்ட்ரெங்க்த். கலைஞருக்கும் நாங்க அழைப்பு கொடுத்தோம். அவர் வந்திருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்போம். நாங்க ஏற்கெனவே அவருக்கு நிறைய டார்ச்சர் கொடுத்தாச்சு. இனிமேலும் அவருக்கு டார்ச்சர் கொடுக்க விரும்பலை!''

''இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக பத்மஸ்ரீ விருதையே தூக்கி எறிந்த நீங்கள், இப்போது சைலன்ட் ஆகிடீங்களே?''

தமிழ்நாட்ல தமிழன் எங்கேய்யா?

''இங்கே எங்கேய்யா இருக்கான் தமிழன்? தேர் இஸ் நோ தமிழன் இன் தமிழ்நாட். கேரளாவில் க்ளீன் மலையாளி இருப்பான், ஒரு பகுதியில்தான் தமிழன் வாழ்வான். ஆந்திராவிலும் அப்படித்தான். தமிழ் நாட்டில் மட்டும்தான் 50 பெர்சன்ட் தமிழன், 50 பெர்சென்ட் அதர் பீப்பிள் இருக்கான். எல்லோரையும் ஏத்துக்கிட்ட பூமி இது. சென்னைப்பட்டணத்துல இருந்து சின்னச் சின்ன ஜமீன் வரைக்கும் நாயக்கன்தானே ஆண்டான்? தென் பாண்டித் தமிழன், திருநெல்வேலித் தமிழன், வன்னியன் அப்படின்னு சுத்தத் தமிழன் 50 பெர்சென்ட்தான் இருக்கான். காடாக இருந்த அமெரிக்காவில் மற்ற வர்கள் குடியேறிய பிறகு, அங்கே இருந்த ஆதி சிவப்பிந்தியர்கள் எப்படி வேல்யூ இல்லாமப் போனார்களோ, அப்படித்தான் தமிழனும் இங்கே வேல்யூ இல்லாமப் போயிட்டான். எப்போ ஈழத்தில் லட்சக் கணக்கான சகோதரத் தமிழன் செத்துப் போனபோது உன்னால் வருத்தப்பட முடியவில்லையோ... இனிமேல் அதைப் பற்றிப் பேசிப் பிரயோஜனமே இல்லை. எனவே, இனிமேல் தமிழ் பற்றியோ, தமிழனுக்கு உணர்ச்சியூட்டுவது பற்றியோ நான் பேசப்போவது இல்லை. ஆத்மார்த்தமா எவன் ஒருவன் தமிழ் இனத்தையும், மொழியையும்பற்றி அக்ரஸிவ்வாகப் பேசுகிறானோ, அன்னிக்கு நான் மறுபடியும் முழங்குவேன்!''

''கலைஞரும்கூட ஆரம்ப காலங்களில்...''

(வேகமாக இடைமறிக்கிறார்) ''ஆரம்ப காலங்களில் பேசினார். இப்ப பேசலைன்னு சொல்ல வர்றீங் களா? ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரைக்கும் அவரை நான் நல்ல தமிழனாகத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். தட் இஸ் டிஃபரென்ட். அதைக் களங்கப் படுத்திவிடாதீர்கள்!''

''இயக்குநர் அமீர், 'எனக்கு பாரதிராஜா மேல் இருந்த மரியாதையே போயிருச்சு’ன்னு சொல்லி இருக்காரே?''

''அமீர் சொன்னதைப்பத்தி நான் கவலைப்படலை. ஐ டோன்ட் கேர்! எனக்குப் பொய் வேஷம் போடத் தெரியாது. அரிதாரம் பூசத் தெரியாது. நான் யாருக்கும் பயந்து மைக் பிடிச்சவன் இல்லை. மூணு முதல் அமைச்சர்களை முறைச்சிக்கிட்டு வந்தவன் நான். அரசியல் எனக்கு சரி வராது. பொய் பேசுகிறவனுக்குத்தான் அரசியல். இன்னிக்கும், ஐ லவ் மை பீப்பிள். ஐ லவ் மை சாயில். ஐ லவ் மை லாங்குவேஜ்!

சினிமாங்கிறது எனக்கு செகண்டரி. இந்த மொழியும் இந்த கலாசாரமும் தான் எனக்குப் பிச்சை போட்டுச்சு. நல்லா இருக்கேன். கார் வசதியோடு நல்லா இருக்கேன். கடைசி வரைக்கும் இவங்களுக்கு விசுவாசமா இருப்பேனே தவிர, அரசியல் கிரசியல் எல்லாம் நத்திங். என் மக்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா, கட்சி இல்லாமல்... மேடை இல்லாமல் களத்தில் இறங்கிப் போராட எப்போதும் தயார். அதற்காக சினிமாவில் இருந்து ரிட்டயர்ட் ஆகிட்டும் வருவேன்!''

'' 'எங்கள் மீனவனை அடித்தால் உங்கள் மாணவனை அடிப்போம்’ என்று சீமான் சொன்னது தப்பா?''

''அவன் சரியாத்தானே சொல்லியிருக்கான். நியாயத்தைச் சொன்னான். இதுக்கு எதுக்கு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுன்னு எனக்குப் புரியலை. எங்க மீனவனை அடிப்பதை நீ தடுத்து நிறுத்தினால், எதுக்குடா உங்களை அடிக்கப்போறோம்? எனக்கும் சீமானுக்கும் நிறையக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவன் தனி இயக்கம் ஆரம்பிச்சான். ஆனால், அவன் அப்படிச் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. வாட் ஹி செட் இஸ் கரெக்ட்!''

தமிழ்நாட்ல தமிழன் எங்கேய்யா?

''ஸ்பெக்ட்ரம் பிரச்னை பத்தி உங்க கருத்து?''

''அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. தீர்ப்பு என்னன்னு தெரிஞ்சாத் தான் பாவம், அந்த ராசா குற்றவாளியா இல்லையான்னு தெரியும்!''

''தமிழ் சினிமாவில் முதல்வர் குடும்பத்தினர் ஆதிக்கம் அதிகம் இருப்பதா சொல்றாங்களே..?''

''அதெல்லாம் நீங்கதான் சொல்றீங்க. அரசியல்ல மட்டும்தான் அந்தப் புள்ளைங்க ஈடுபடணுமா? என் பையனை நான் நடிகனாக்க விரும்பலையா? டைரக்டர் ஆக்க விரும் பலையா? எஸ்.ஏ.சந்திரசேகரனும், சிவகுமாரும் அவங்கவங்க பசங்களை நடிகர் ஆக்கலையா? சிவாஜி பையன் நடிக்க வரலையா? ராஜ்குமார் பையன் வரலையா? உங்க ஃபேமிலியில 10 பேரைக் கொண்டுவாங்க. போட்டி வரட்டும். நீங்க தோத்துட்டீங்க என்பதற்காக... அவங்களைத் திட்டக் கூடாது. ஜெயிக்க முயற்சிக்கணும். கீப் ட்ரையிங்!''

'' 'கடவுளோடும் மக்களோடும் மட்டுமே கூட்டணி’ என்ற விஜயகாந்த் இப்போது கூட்டணிபற்றி அறிவிக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறாரே?''

''எனக்கு தமிழ்நாட்டில் 'கலைஞன்’ என்பதுதான் அடையாளம். 'சினிமாவில் விளையாட்டு காட்டினான், வித்தியாசமா கதை சொன்னான், உணர்ச்சிகளைக் குவிச் சான்’னுதான் மக்கள் என்னை அங்கீகரிச் சிருக்காங்க. நான் அரசியல் ஞானம் உள்ளவன், உலகப் பொருளாதாரம் தெரிஞ்சவன், பூலோகம் தெரிஞ்சவன், மக்களுடைய வறுமை புரிஞ்சவன்னு எவனும் என்னை ஏத்துக்கிடலை.

தமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயன்னு சிலருக்குத் தெரிஞ்சுபோச்சு. ஏன்னா, எந்த மொழிக்காரனும் வரலாம், இங்கே தலைவன் ஆகலாம், மந்திரி ஆகலாம். என் பாவப்பட்ட ஜென்மத்துக்கு இன்னும் அறிவு வரலை.

தமிழ்நாட்ல தமிழன் எங்கேய்யா?

லஞ்சத்தை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம், சாப்பாடு கொடுப்போம், சட்டை கொடுப்போம்னு மைக் பிடிச்சுச் சொல்லிடலாம். திட்டம் என்னன்னு என்னிக் காவது பிராக்டிக்கலா சொல்லி இருக்கியா? எங்கள் மக்களை ஏமாற்றியவன் எவனாக இருந்தாலும், என்றைக்கு இருந்தாலும், அவனுக்கு அடி விழுவது நிச்சயம்!''

''விஜய், அஜீத்தும் அரசியலுக்கு வருவாங்கன்னு பேச்சிருக்கே?''

''அதேதான் திரும்பவும் சொல்றேன். 'எனக்கு டான்ஸ் ஆடத் தெரியும், பாட்டுப் பாடத் தெரியும், குதிக்கத் தெரியும், சண்டை போடத் தெரியும். அதனால், எனக்கு அரசியலும் தெரியும்’னு சொல்லி மக்களை ஏமாற்ற நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. காமராஜர், பக்தவச்சலம், கக்கன், பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி அவங்கள்லாம் எங்கே... மக்களோட அடிப்படைப் பிரச்னைகளே தெரியாத இவங்கள்லாம் எங்கே?''

படங்கள் : ஜெ. தான்யராஜு