Published:Updated:

தீரன் அதிகாரம் ஒன்று - சினிமா விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீரன் அதிகாரம் ஒன்று - சினிமா விமர்சனம்
தீரன் அதிகாரம் ஒன்று - சினிமா விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று - சினிமா விமர்சனம்

பிரீமியம் ஸ்டோரி

ட இந்தியக் கொள்ளையர்களை உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடும் தமிழக போலீஸின் அதிரடி அத்தியாயமே `தீரன் அதிகாரம் ஒன்று.’

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் கச்சிதமாக உப்புக்காரம் போட்டு ஒரு மசாலா த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வினோத். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவ்வளவு டீட்டெய்லிங். காவல்துறை அதிகாரிகளின் சாதனைகளை மட்டுமன்றி அன்றாட பிரச்னைகளையும்  காட்சிப்படுத்தியதில் தனித்து நிற்கிறார். அதற்காகவே ஒரு ஸ்பெஷல் சல்யூட் வினோத்!

காவல்துறையிலுள்ள யதார்த்தம், அரசின் மெத்தனம் போன்றவற்றை நுணுக்கமாய்ப் பேசியிருப்பதும் சிறப்பு. டி.எஸ்.பி தீரன் திருமாறனாகக் கார்த்தி. காவல்துறைத் தேர்வுக்குச் சென்றால் டிஸ்டிங்ஷனில் பாஸாகிவிடுகிற கச்சிதம். காதல் முதல் காத்திரம் வரை கம்பீர போலீஸாகக் கலக்கியிருக்கிறார். காதலில் குறும்புத்தனமும் காக்கிச்சட்டையில் ரௌத்திரமும் என மொத்தப்படத்தையும் முதுகில் தாங்கியிருக்கிறார் கார்த்தி.

ரகுல் ப்ரீத் சிங்கிற்குக் கார்த்தியைக் கள்ளத்தனமாகக் காதலிப்பதைத் தவிர்த்து, பெரிய வேலைகள் இல்லை. வில்லனாக நடித்திருக்கும் அபிமன்யு சிங்கையும் அவரின் ஆட்களாக வருபவர்களையும் பார்த்தாலே நடுக்கம் வருகிறது. கச்சிதமான காஸ்ட்டிங்! 

தீரன் அதிகாரம் ஒன்று - சினிமா விமர்சனம்

பாடல்களைவிடப் பின்னணி இசையில் ஈர்க்கிறார் ஜிப்ரான். வில்லன் கும்பலின் தீம் இசை பதறவைக்கிறது!

ராஜஸ்தான் பாலை நிலங்களோடு வெப்பத்தையும் புழுதியையும் சேர்த்தே கேமராவுக்குள் பிடித்திருக்கிறார் சத்யன் சூரியன். திரைவழியே அனல் அடிக்கிறது. படத்தைப் பரபரவெனத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன். இடையிடையே வரும் அனிமேஷன் காட்சிகள் க்ளாஸ். திலீப் சுப்பராயனின் சண்டை வடிவமைப்பு செம மாஸ். திரையில் 90’களைப் பிசிறில்லாமல் கொண்டுவந்திருக்கும் கலை இயக்குநர் கதிருக்கு எக்ஸ்ட்ரா லைக்ஸ்.

இந்தியா முழுக்கப் பழங்குடியினர் வஞ்சிக்கப்பட்டுவரும் சூழலில், ஒரு குறிப்பிட்ட பழங்குடிச் சமூகத்தையே ஒட்டுமொத்தமாகக்  காட்டுமிராண்டிகளாகக் காட்சிப்படுத்தியிருப்பது பெரிய நெருடல்!

ரொமான்ஸ் காட்சிகளையும், ஆங்காங்கே தலைதூக்கும் தெலுங்கு மசாலா ஹீரோயிசத்தையும் அந்தக் குத்துப்பாடலையும் தவிர்த்திருந்தால், இன்னும்கூட யதார்த்தம் கூட்டியிருக்கலாம். வில்லன் கும்பலுக்கு ஒரு பயத்தை வரவழைப்பதற்காக நடுரோட்டில் வைத்து இருவரை போலீஸ் சுட்டுக்கொல்வதெல்லாம் அநியாய அத்துமீறல்!

தீரன் அதிகாரம் ஒன்று - சினிமா விமர்சனம்

காவல்துறை அதிகாரிகளின் வலிகளை ஆவணப்படுத்தியதில் கவர்கிறான் இந்தத் தீரன்.  

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு