பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

TOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்!”

TOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
TOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்!”

பா.ஜான்ஸன்

“முதல்நாள் ஷூட்டிங். `எல்லாம் தயாரா இருக்கு.  ஏன் லேட்டு’ன்னு இணை இயக்குநரிடம் கேட்குறேன்.

TOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்!”

`சார் நீங்கதான் ஸ்டார்ட்... கேமரா சொல்லணும்’னு அவர் சிரிக்க, நானும் சிரிச்சுக்கிட்டே ஸ்டார்ட்...  கேமரா, ஆக்‌ஷன் சொன்னேன். பத்துவருஷம் ஒளிப்பதிவாளரா இருந்த பழக்கம், நான் இயக்குநர்ங்கறதயே மறந்துட்டேன்” என்று சிரிக்கிறார் செழியன். இயக்கிய முதல் படத்திற்கே கொல்கத்தா சர்வதேசத் திரைப்பட விழாவில் 2017-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த படம் என்கிற தங்கப் புலி விருதை வென்ற மகிழ்ச்சியோடு இருந்தவரிடம் பேசினேன்.

“விருதுச் செய்தி வந்த பிறகுதான் நீங்க படம் எடுத்த தகவலே தெரியுது. ஏன் இதைப் பற்றிச் சொல்லவே இல்லை?”

“இது கொரில்லா முறையில் எடுக்கப்பட்ட  இண்டிபெண்டன்ட் சினிமா. மறைந்திருந்து இயங்குவதுதானே கொரில்லா முறை. இலக்கை அடைந்த பிறகு செஞ்சது நான்தான்னு பொறுப்பு எடுத்துக்கலாம். ஒரு விஷயத்தை சீரியஸா செய்யணும்னு நினைக்கும் போது எல்லோருக்கும் தெரியப்படுத்தி, அந்த விளம்பரமே நம்ம கவனத்தைச் சிதறடிக்கும் இல்லையா? என் நெருங்கின நண்பர்களுக்குக்கூட நான் படம் எடுக்கிறது தெரியாது. நம்ம வேலையை எளிமையா  செஞ்சிட்டே இருக்க வேண்டியதுதான்.  ஒழுங்கா செஞ்சா எல்லோருக்கும் தெரியப்போகுது... நாங்க சென்னையில் ஒரு வீட்ல பத்து நாளுக்குமேல  ஷூட் பண்ணோம். பக்கத்து வீட்டுல இருக்கிறவங்களுக்குக்கூட  ஷூட்டிங் நடக்குதுன்னு முதல் ஒரு வாரத்துக்குத் தெரியாதுனா பாத்துக்கங்க.”

TOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்!”

“ `டூலெட்’ படத்திற்கான ஆரம்பப்புள்ளி எது?”

“இந்தக் கதையை 2007-ல யோசிச்சேன். படத்தோட கதையும் அந்த வருஷம்தான் நடக்குது. சென்னைக்கு வந்ததும் எல்லோரும் சந்திக்கிற முதல் பிரச்னையே தங்குறதுக்கு இடம் கிடைக்கிறதுதான். சிவகங்கைல எங்க வீடெல்லாம் பூட்டினதா எனக்கு ஞாபகமே இல்ல. யார்னாலும் வருவாங்க போவாங்க, சாப்பிடுவாங்க. அந்த மாதிரி சூழல்ல வளந்துட்டு சென்னையோட வாடகை வீட்டு நிலைமைய யோசிச்சுப்பாருங்க. தனியா இருந்தா பெட்டிய தூக்கிட்டுப் போயிரலாம். குடும்பமா இருந்தா எவ்வளவு பெரிய பிரச்னை? 2007-ல ஐடி துறையோட வளர்ச்சி, பன்னாட்டு நிறுவனங்கள் உள்ள வருதுனு பெரும் படையெடுப்பு மாதிரி நடக்குது. வீட்டு வாடகை பலமடங்கா உயருது. பேச்சிலருக்கு வீடு கொடுக்க மாட்டேன்னு சொன்னவங்க பேச்சிலருக்கு வீடு கொடுத்துட்டு குடும்பங்களைக் காலி பண்ணச் சொல்றாங்க. 2007-லயே நூறு பக்கத் திரைக்கதையா எழுதி வச்சிட்டேன். அப்ப இண்டிபெண்டன்ட் சினிமாவுக்கான சூழல் இல்லை. கதையை அப்பப்ப திருத்தி கடைசில திரைக்கதை இருபது பக்கத்துக்கு வந்ததும் ஷூட்டிங் கிளம்பிட்டோம்.”

“முதல் படத்திலேயே, முழுக்க புதுமுகங்களை நடிக்க வெச்சு இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?”

“படத்துல ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் இல்ல. எல்லோரும் கதாபாத்திரங்கள்தான். நம்ம ஊரைப் பொறுத்தவரை பெரிய சாகசங்கள் செய்றவர்தான் ஹீரோ. அப்படிப் பார்த்தா சென்னையில் வாழ்றதைவிடப் பெரிய சாகசம் இல்லை. அப்ப நம்ம ஒவ்வொருத்தரும் ஹீரோதான். இந்தப்படத்தில முதன்மைக் கதாபாத்திரங்களா சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா, குட்டிப் பையன் தருண் மூணு பேருமே அறிமுகம். படத்துல வர்ற  மற்ற கதாபாத்திரங்களும் பெரும்பாலும் புதுமுகங்கள்தான். படத்திற்கு எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். இந்திய சினிமாவின் மகத்தான ஆளுமை. அவருடைய ஒத்துழைப்பு இந்தப் படத்துக்குப் பெரிய பலம். படத்தில் பாடல்களும் இல்லை. பின்னணி இசையும் இல்லை. சென்னைங்கிற இந்த நகரத்தின் சத்தங்களும் ஓசைகளும் நம்முடன் இருக்கும் ஒலிகளும்தான் படத்தோட பின்னணி இசை. பட வேலைகள் எல்லாம் ஆரம்பிச்சு ஷூட்டிங் போகலாம்னு நினைக்கும் போது நம்ம 500, 1000 ரூபாய் எல்லாம் செல்லாமப் போயிருச்சு. படம் எடுக்கலாம்னு சொன்ன தயாரிப்பாளருக்கும் பிரச்னை. என்ன செய்யலாம்னு யோசிக்கும்போது நம்மளே எடுத்திருவோம்னு என் மனைவி பிரேமா தைரியம் கொடுத்தாங்க. இப்போ ‘ழ சினிமா’ன்னு ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சாச்சு.

TOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்!”

“படத்தை தியேட்டரிலும் ரிலீஸ் பண்ணுவீங்களா? இல்லை திரை விழாவுக்கு மட்டும்தானா?”

“தியேட்டருக்கு விரைவில் வரும். ஆனா, நான் எடுக்கும்போது தியேட்டருக்கு வரணும்னு யோசிச்சு எடுக்கல. எந்த சீன்ல கைதட்டுவாங்க, எந்த சீன்ல சிரிப்பாங்கன்னு யோசிச்சிருந்தா இந்தப்படத்தை எடுத்திருக்க முடியாது. இப்ப ஒரு அங்கீகாரம் வந்திருக்கு. இன்னும் திரைவிழாக்கள் இருக்கின்றன. அவற்றில் கலந்துகொண்டதும் திரைக்கு வரும்.”

TOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்!”

“நம்ம ஊரு படங்கள் இதுமாதிரி சர்வதேச அங்கீகாரம் அடையறது கம்மியா இருக்கே, ஏன்?”

“தமிழ்ல இண்டிபெண்டன்ட் சினிமா எடுக்க ஆரம்பிச்சாச்சு. அது இன்னும் தீவிரமடையணும். ஈரான் மாதிரி ஒரு பத்து இயக்குநர்களாவது தமிழ்ல வரணும். நம்ம கலாசாரம் சார்ந்த படங்களை வணிக சமரசம் துளியும் இல்லாம எடுக்கணும். நம்மகிட்ட பணம் இருக்கு. தொழில் நுட்பம் இருக்கு.  திறமைசாலிகள் குவிஞ்சிருக்காங்க.  ஆனா, துணிச்சல் மட்டும் இல்லை. ஏன்னா இங்க ஒரு இண்டிபெண்டன்ட் சினிமா எடுக்கிறதுங்கிறது காட்டுக்குள்ள தனியா போறதுமாதிரிதான். உங்களுக்கு வழிகாட்ட முன்னால யாரும் இல்ல. பாதுகாப்புக்கு பின்னாலயும் யாரும் இல்ல. ஒரு சாலையை தனியா கடந்தாதான் விபத்து. கூட்டமா கடந்தா ட்ராஃபிக் ஜாம் ஆயிரும். அதுமாதிரி தமிழ்ல இண்டிபெண்டன்ட் சினிமாவை எடுக்க நிறைய பேர் முன் வரணும்.’’