
அண்ணாதுரை - சினிமா விமர்சனம்
தன்னால் பாதிக்கப்பட்ட தன் தம்பியின் வாழ்க்கையை மீட்கத் தன்னையே பலிகொடுக்கும் பாசக்கார, நேசக்கார அண்ணன்தான் இந்த `அண்ணாதுரை.’
கதை..? இறந்துபோன காதலியின் நினைவாக, வாழ்வே மாயம் என `குடி’மகனாகத் திரிகிறார் அண்ணாதுரை. தன் குடிப்பழக்கத்தாலேயே ஒரு கொலைப்பழியில் சிக்கி ஜெயிலுக்குச் செல்கிறார். அதனால் ஒட்டுமொத்தக் குடும்பமுமே இடிவிழுந்த மரமாகக் கருகிவிடுகிறது. ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆகும் அண்ணாதுரைக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஸ்கூல் பி.டி வாத்தியாரான தம்பி, தம்பிதுரை பெரிய ரௌடியாக மாறி நிற்கிறார். அண்ணாதுரை குடிப்பழக்கத்திலிருந்து மீண்டாரா, தன் தம்பியை நல்வழிப்படுத்தினாரா, அண்ணாதுரை, தம்பிதுரையின் குடும்பம் என்ன ஆனது, நாம் படம் பார்த்து முடிப்பதற்குள் மொத்தம் எத்தனை கொட்டாவிகள் விட்டோம் என்று ஏகப்பட்ட கேள்விகள்.
அண்ணன் பெயர் அண்ணாதுரை. தம்பி பெயர் தம்பிதுரை என உலகின் மிக எளிமையான அண்ணன் - தம்பி கதையை எடுத்துக்கொண்டு ஆள்மாறாட்டக் கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர்
ஜி.சீனிவாசன். படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரை, ‘நாம் பண்டரிபாய், பாகவதர் காலத்தில் இருக்கிறோமா’ என்ற பிரமையை ஏற்படுத்துகிறது படம்.

தாடி வைத்தால் அண்ணாதுரை, தாடி இல்லை என்றால் தம்பிதுரை என்று ‘தில்லுமுல்லு’ செய்திருக்கிறார் விஜய் ஆன்டனி. அதிலும் ஒரு காட்சியில் அண்ணாதுரை, தாடியை எடுத்துவிட்டு ‘தம்பிதுரை’யாக ஆள்மாறாட்டம் செய்கிறார். ஓ மை காட்!
கெட்டவர்களிடமிருந்து ஒரு பெண்ணை சண்டைபோட்டுக் காப்பாற்றி, தாவணி பறிக்கப்பட்ட பெண்ணுக்குத் தன் சட்டையைக் கழற்றிக் கொடுக்கும் ஹீரோவின் அறிமுகக் காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது அண்ணாதுரை என்னமாதிரியான படமென்று. தம்பிதுரை கேரக்டருக்கு ரொமான்டிக் ஏரியா. அதிலும்கூட இறுகிய முகத்தோடு வலம்வருகிறார் விஜய் ஆன்டனி. டயானா, ஜுவல் மேரி, மகிமா என மூன்று ஹீரோயின்கள். எல்லோருமே சென்டிமென்ட் ஜூஸ் பிழிந்து சிதறடிக்கிறார்கள். ராதாரவிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தம்மாத்துண்டு ரோலைப் பார்க்கும்போது, நமக்கே ‘ரத்தக்கண்ணீர்’ வருகிறது.
`இந்த ஊர் பழி சொல்லுமே தவிர வழி சொல்லாது’, `நீ செத்துப்போனு சொன்னாலே செத்துப்போயிருவேன், போனுதானே சொல்ற...போறேன்’ என்றெல்லாம் கறுப்பு - வெள்ளை காலத்து வசனங்கள் எரிச்சலில் எக்ஸ்ட்ரா மிளகாய்களைக் கிள்ளிப்போடுகின்றன. தில் ராஜுவின் எளிமையான ஒளிப்பதிவும், நீள நீளமான கிளைக்கதைகளை `நறுக்கி’ சிறிய படமாக்கிய விஜய் ஆன்டனியின் நேர்த்தியான எடிட்டிங்கும் ஓகே. `இ.எம்.ஐ’ பாட்டும் அதன் விஷுவல்ஸும் பாலைவனத்தில் ஜில் ஜிகர்தண்டா.

அண்ணாதுரை என்ற தமிழகத்தின் முக்கியமான தலைவரின் பெயரை டைட்டிலாக வைத்து, சிதைச்சுட்டீங்களே ப்ரோ!
- விகடன் விமர்சனக் குழு