
``பார்ட்டிக்கு வந்திடுங்க ஃப்ரெண்ட்ஸ்!’’
“ ‘பாகுபலி’க்குப்பிறகு சத்யராஜ் சார், நாசர் சார், ரம்யா கிருஷ்ணன் மேம் சேர்ந்து நடிக்கும் படம். எங்க அப்பாவின் தயாரிப்பில் ‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் அறிமுகமான சுரேஷ் சாரின் 300-வது படம். நெகட்டிவ் ரோலில் ஜெயராம் சார், என் டீம் சிவா, ஜெய், என் டீமுக்குப் புதுவரவுகளான ஷாம், ‘கயல்’ சந்திரன், அடுத்து ரெஜினா கசாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டினு மூணு ஹீரோயின்கள்... இப்படி, படத்தின் மொத்த நடிகர் நடிகைகளுமே முன்னாள், இந்நாள் ஹீரோ ஹீரோயின்கள். தவிர, அம்மா கிரியேஷன்ஸின் 25-வது ஆண்டில் சிவா சார் தயாரிக்கும் படம். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிச்சிட்டு வந்திருக்கோம். லெட்ஸ் ஸ்டார்ட் ‘பார்ட்டி’ ” - வழக்கமாகவே அடித்து ஆடுபவர், ஃபுல்டாஸ் கிடைத்தால் சும்மா இருப்பாரா? இறங்கி அடிக்கிறார் வெங்கட் பிரபு.
`‘பணம் மாத்துறது, டபுளிங்’ டைப்பில் ரொம்ப நாளாவே ஒரு லைன் மனசுல இருந்துச்சு. ஆனால், போன வருஷம் டீமானிட்டைசேஷன் நேரத்துல, ‘எங்ககிட்ட பழைய பணம் இவ்வளவு கோடிகள் இருக்கு. அதை மாற்றிக்கொடுத்தால் உங்களுக்கு இவ்வளவு கமிஷன் தர்றோம்’னு நிறைய விஷயங்கள் நடந்ததா செய்திகள் வந்துச்சு. ‘பார்ட்டி’க்கான தொடக்கப்புள்ளி அதுதான்.”
“டீமானிட்டைசேஷனுக்கும் நீங்க பண்ற ‘பார்ட்டி’க்கும் என்ன சம்பந்தம்?”
“இது, டீமானிட்டைசேஷன் பற்றின படம் கிடையாது. வெறும் காசு மாத்துற கதை. ‘டிசம்பர் 31-க்குள் பழைய பணத்தை மாத்தணும். ஜனவரி 1-ல் இருந்து புதிய பணம் மட்டுமே செல்லும்’னு பணமதிப்பிழப்பு சமயத்தில் சொன்னாங்க. இந்த கான்செப்ட்டை, டிசம்பர் 31-ம் தேதி நைட் நடக்குற என் காசு மாத்துற கதைக்குள்ள அடாப்ட் பண்ணிக்கிட்டேன், அவ்வளவுதான். சத்யராஜ் சார், நாசர் சார்னு ஒவ்வொருவரும் படம் தொடங்கும்போது தொடர்பு இல்லாம தனித்தனி கேரக்டர்களாத்தான் இருப்பாங்க. ஆனால், ஒரு பிரச்னையால் எல்லோரும் ஒண்ணு கூடுறாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணணும்னா எல்லோரும் ஒண்ணா பயணப்படவேண்டியது அவசியமாகுது. அப்படி டிசம்பர் 31-ம் தேதி புத்தாண்டை எதிர்நோக்கி நடக்கும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், அந்த ஓரிரவுக்குள் தங்களோட பிரச்னையைத் தீர்த்தாங்களா இல்லையா என்பதே இந்த ‘பார்ட்டி’.”

“சத்யராஜ், நாசர், ஜெயராம்னு சீனியர்களை ஒண்ணு சேர்க்கணும்னு எப்படித் தோணுச்சு?”
“நான் சத்யராஜ் சாரோட மிகப்பெரிய ரசிகன். படத்தில் அவருக்கு, வயதான ஒருத்தர் சின்னப் பசங்களோடவே சுத்திகிட்டு தன்னை யூத்தா மெயின்டெய்ன் பண்ற கேரக்டர். ரொம்ப என்ஜாய் பண்ணி பண்ணினார். நாசர் சார் கூட ஏற்கெனவே ‘பிரியாணி’ படம் பண்ணியிருக்கேன். ‘சரோஜா’வுக்குப் பிறகு ஜெயராம் சார் கூட இதில் வொர்க் பண்றேன். அவருக்கு டெரரான நெகட்டிவ் கேரக்டர். ரம்யாகிருஷ்ணன் மேமுக்கு ஒரு சீன் சொன்னா, அடுத்த செகண்டே ‘ஓகே பிரபு, ரெடி. டேக் போலாம்’னு நடிக்கத் தயாராகிடுவாங்க.”
“சீனியர்களின் இந்த அனுபவத்துக்கு உங்க டீம் ஜூனியர்கள் எப்படி ஈடுகொடுத்தாங்க?”
“இதில் சிவாவுக்கு அல்வா மாதிரி எளிதா வர்ற கேரக்டர். வெச்சு செஞ்சுட்டாப்ல. ஜெய்க்கு, இங்கிலீஷ் படம் ‘ஸ்னாட்ச்’ல பிராட் பிட் பண்ண மாதிரியான ஒரு ரோல். ஷாமுக்கு கொஞ்சம் நெகட்டிவ் ஷேடு கேரக்டர். அவர் போர்ஷன்ல ஆக்ஷன் இருக்கும். பணக்கார வீட்டுப்பெண்ணாக நிவேதா பெத்துராஜ். கொஞ்சம் ஆண்மை கலந்த டாம் பாயாக ரெஜினா கசாண்ட்ரா. சஞ்சிதா ஷெட்டிக்கு, மைண்ட் கேமில் பிளான் பண்ணி ப்ளே பண்ற கேரக்டர். இவரோட ஐடியா படிதான் எல்லாமே நடக்கும்.”
“இசையமைப்பாளரா பிரேம்ஜி என்ன பண்ணியிருக்கார்?”
“என் எல்லாப் படங்களுக்கும் யுவன்தான் இசை. ஆனால், இதில் பிரேம்ஜி. அதனால் அவன் நடிக்கல. மியூசிக் டைரக்டரா ஒரு வெற்றியைக் கொடுக்கணும்னு நினைக்கிறான். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். படத்தின் பேரே `பார்ட்டி’யா இருக்கிறதால, டிசம்பர் 31-ம் தேதி அன்றைக்கு ஒரு பார்ட்டி பாடல் ரிலீஸ் பண்றோம். ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் பற்றி சொல்லியே ஆகணும். நியூ இயர் நைட் ஜாலியையும் கதைக்கான பரபரப்பையும் தன் கேமராவில் அவ்வளவு அழகாக அள்ளிட்டு வந்திருக்கார்.
`யார் பார்ட்டிக்குக் கூப்பிட்டாலும் நாங்க கேங்கா கிளம்பிப் போயிடுவோம்’னு சொல்வாங்க. இப்ப நாங்க எங்க ‘பார்ட்டி’க்குக் கூப்பிடுறோம். ஃப்ரெண்ட்ஸ், கேங்கோட மறக்காம வந்திடுங்க.”