தங்கையின் கணவனுக்காக ஊரையே வெட்டிச்சாய்க்கும் வில்ல அண்ணன், அவனிடமிருந்து தன் தங்கை கணவனைக் காப்பாற்றக் களமிறங்கும் நாயக அண்ணன், என இரண்டு பிரதர்களுக்கும் இடையே நடக்கும் ‘கேம் ஆஃப் தாலிபாக்யம்’தான் கொடிவீரன்!
இயக்குநர் முத்தையா எடுத்துக்கொண்டிருக்கும் `உறவுமுறைக்காக உயிரைக்கொடுப்போம்’ சீரிஸில் அம்மா, மாமனார், அப்பத்தாவிற்கு அடுத்து இந்தமுறை ‘மச்சான்’ சென்ட்டிமென்ட்.
அதே பழைய காட்சிகள், அதே பழகிய வசனங்கள், அதே பண்டைய காலத்து சடங்குகள், அதே மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக்கொடுக்கும் திரைக்கதை... அதே டெய்லர் அதே வாடகை!
கொடிவீரனாக சசிகுமார். க்ளைமாக்ஸில் அன்பால் உருகி அட்வைஸ் செய்யும்போது மட்டும்தான் நாமறிந்த சசிகுமார். இன்னும் கூட சுறுசுறுப்பும் குறும்பும் கூட்டியிருக்கலாம். சசிகுமாரின் தெய்வ மச்சானாக விதார்த். கொடுத்த கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

சசிகுமாரின் தங்கையாக சனுஷா, விதார்த்தின் தங்கையாக மஹிமா, பசுபதியின் தங்கையாக பூர்ணா என, படத்தில் மூன்று நாயகிகள். மஹிமா இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போக, சனுஷாவோ சிரித்துக் கொண்டேயிருக்கிறார். படத்தில் தனித்துவமான தங்கை பூர்ணாதான். மிகச்சில காட்சிகளே வந்தாலும் அவருடைய உழைப்பு அபாரமானது. அதிலும் ஆட்டை வெட்டுகிற காட்சியிலும், மொட்டைத்தலையோடு கொலைவெறியில் அமர்ந்திருக்கிற காட்சியிலும் மிரட்டல்!
பசுபதி படம் முழுக்க போர் அடிக்கிற அளவுக்கு நிறைய வெட்டுகிறார். நன்றாக முறைக்கிறார். சசிகுமார் வீட்டிற்குள் நுழைந்து கறிச்சோறு சாப்பிடுகிற காட்சியில்தான் பசுபதி... புலிபதி ஆக பயமுறுத்துகிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சசிகுமாரும் பசுபதியும் பூர்ணாவும் சனுஷாவும் பக்கம் பக்கமாய் வசனம் பேசுகிறார்கள். பயம், பதற்றம், பரலோகம் என பன்ச் வசனங்களிலேயே அந்தாக்ஷரி விளையாடுகிறார்கள். ரைமிங்கும் டைமிங்கும் வசனங்களில் கூடி வரவேண்டுமென ரஃப் டிராஃப்ட், ஃபேர் டிராஃப்ட், சூப்பர் ஃபேர் டிராஃப்ட் எல்லாம் எழுதியிருப்பார்கள் போல.
ஓப்பனிங் தற்கொலையில் தொடங்கி இறுதிக்காட்சி மீன்பிடித் திருவிழாச் சண்டைவரை எஸ்.ஆர்.கதிர் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் அவ்வளவு உழைத்திருக்கிறார். என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசையில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகின்றன. சுப்பராயன் குடும்பத்தினர் அமைத்த சண்டைக் காட்சிகளில் அவ்வளவு ரத்தம்!

பிரியமோ, வன்மமோ கொஞ்சமாவது நடைமுறைக்கு யதார்த்தமாக இருந்தால்தான் அதைத் திரையில் ரசிக்க முடியும்.
கொடிவீரனில் நிறைந்திருப்பது வெறும் பாசாங்குதான்!
- விகடன் விமர்சனக் குழு