Published:Updated:

``இயக்குநராகப் போகிறேன்!’’

``இயக்குநராகப்  போகிறேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
``இயக்குநராகப் போகிறேன்!’’

பா.ஜான்ஸன்

``இயக்குநராகப் போகிறேன்!’’

பா.ஜான்ஸன்

Published:Updated:
``இயக்குநராகப்  போகிறேன்!’’
பிரீமியம் ஸ்டோரி
``இயக்குநராகப் போகிறேன்!’’

“சினிமாக்கு வந்து ஏழு வருஷம் ஆகப்போகுது. ஆனா, மக்கள் இப்போ பார்க்கும் விதம், வர்ற போன்கால் எல்லாம் வித்தியாசமா இருக்கு. `ஓ வெற்றின்னா இப்படித்தான் இருக்குமா’ன்னு தோணுது. ரொம்ப உற்சாகமாய் இருக்கு” - சந்தோஷக்கண்களுடன் சாந்தமாகப் பேசுகிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். 2017 ஜிப்ரானின் ஆண்டு.  `அதே கண்கள்’, `மகளிர் மட்டும்’, `அறம்’, `தீரன் அதிகாரம் ஒன்று’, `மாயவன்’, `சென்னை டு சிங்கப்பூர்’ என வருடம் முழுக்க பேக் டு பேக் படங்களால் அதிரடித்த ஜிப்ரானை `விஸ்வரூபம்-2’ இசை இடைவெளியில் சந்தித்தேன்.

“தொடர்ச்சியாக உங்களுடைய படங்களில் பின்னணி இசை அதிகமாகப் பேசப்படுகிறதே... பின்னணி இசை ரகசியம் என்ன?”

“படிப்புதான். சிங்கப்பூர் லசால்(LASALLE) காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ்லதான் நான் பின்னணி இசை படிச்சேன்.  `பின்னணி இசை படத்தின் உயிர்நாடி மாதிரி. உடனடியா இல்லன்னாலும் எப்பவாவது ஒருநாள் அதைக் கவனிப்பாங்க’னு கமல் சார் அடிக்கடி சொல்வார். அதுதான் உண்மை. இப்போ நான் அதை நேரடியாவே பார்க்கிறேன். பின்னணி இசைங்கறது பெரிய ஆர்ட். வசனம் இல்லாம இசை வழியா இயக்குநர் என்ன சொல்ல விரும்பறார், எந்த இடத்தில் இசை இருக்கவே கூடாதுனு ரொம்ப நுட்பமான விஷயங்களைப் புரிஞ்சிக்கணும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  `அறம்’ முழுக்க எமோஷனலா இருந்தது.  `தீரன்’ படத்துல கமர்ஷியல் ட்ரீட்மென்ட். இப்போ இதுக்கான பாராட்டுகள் வரும்போது, சரி நாம படிச்சது வீண்போகலை, உதவியா இருக்குன்னு சந்தோஷமாய் இருக்கு.”

“இடையில் சில படங்கள் சரியாகப் போகாதபோது எப்படி எடுத்துக்கிட்டீங்க?”

“ஆரம்பத்தில் நிறைய கோபம் வந்தது. நாம ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு பாட்டை உருவாக்கியிருப்போம். ஆனா, அந்தப் படம் சரியா போகலைனா, கோபம் வருத்தமா மாற ஆரம்பிச்சிடும். இருந்தாலும், நல்ல இசைக்கான பாராட்டு யார் யாரிடமிருந்தும் நிச்சயம் வரும். ``இப்போ வரை உங்களுடைய பெஸ்ட் `அமரகாவியம்’ சார்’’, `` `திருமணம் எனும் நிக்காஹ்’ பிரதர்’’னு நிறைய பேர் கால் பண்ணி சொல்லிட்டே இருக்காங்க. இப்போகூட ஒரு வீட்ல கொலு வைக்கும்போது `கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்’ பாடலைப் போட்டாங்கனு அனுப்பியிருந்தாங்க. நம்ம வேலையை எந்தக் குறையும் இல்லாம பண்ணிட்டா, அது வெற்றி தோல்விங்கறதைத் தாண்டி என்னைக்கும் நிக்கும்னு நம்புறேன்.”

``இயக்குநராகப்  போகிறேன்!’’

“இந்த மாதிரி படங்கள்தான் பண்ணணும்னு எல்லை எதுவும் வெச்சிருக்கீங்களா?”

“நான் இசை கேக்கறதில் எந்த எல்லையும் வெச்சுக்கறதில்லை. அதேபோல, இசையமைக்கிறதிலும் எந்த எல்லையும் எனக்குக் கிடையாது. எல்லா விதமான இசையும் பண்றதுதான் என்னோட ஆசை. எனக்கும் குத்துப் பாட்டு பண்ணணும், மாஸ் இன்ட்ரோ பாட்டு பண்ணணும்னுதான் ஆசை.’’

“கமல்ஹாசனுடன் தொடந்து நான்காவது படம். அனுபவம் எப்படியிருக்கு?”

“கமல் சார், ஒருத்தருக்குப் பின்னால் இருக்கும் வியாபாரத்தைப் பார்ப்பவர் கிடையாது. என் கலைக்கு என்ன தேவையோ அதை இவங்க கொடுப்பாங்களானு மட்டும்தான் பார்ப்பார். அந்த மாதிரி ஒருத்தருடன் வேலை செய்றது கடவுளுடைய ஆசீர்வாதம். என்ன பண்ணணும், என்ன மாதிரியான இசை வேணும்னு நிறைய விஷயங்களைத் தெளிவா சொல்லிடுவார். என்ன பண்ணணும்கிறதுல நமக்கும் எந்தக் குழப்பமும் இருக்காது. அவரோட அவ்ளோ ஆர்வமா வேலை செய்றேன்.

`விஸ்வரூபம்’ முதல் பாகத்தைவிட `விஸ்வரூபம் -2’ சிறப்பா கொடுக்கணும்னு ஆரம்பத்தில் ஒரு சின்ன பிரஷர் இருந்தது. ஆனா, எல்லாத்தையும் கமல் சார் உடைச்சிட்டார். `விஸ்வரூபம் -2’ படத்தில் இசை இன்னும் வலிமையா இருக்கும். பின்னணி இசையில் பரிசோதனை முயற்சிகள் பண்ணிட்டிருக்கோம். படமும் முதல் பாகத்துடைய க்ளைமாக்ஸ்ல இருந்தே ஆரம்பிக்கிறதால, வேற லெவல்ல இருக்கும்.”

``இசையமைப்பாளர்கள் வரிசைகட்டி நடிக்க வர்றாங்களே...?’’

 “எனக்கு நடிக்கும் ஆசை இல்லை. ஆனா, `உத்தம வில்லன்’ல கேமியோ பண்ணது மாதிரி, அடுத்து வரப்போற ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். நடிப்பைவிட இயக்குநராகும் ஆசைதான் எனக்கு. ஆமாம், நான் இயக்குநராகப் போகிறேன். என்ன படம், எப்படிப் பண்ணப்போறோம்ன்றதை சீக்கிரமே சொல்றேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism