Published:Updated:

அருவி - சினிமா விமர்சனம்

அருவி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
அருவி - சினிமா விமர்சனம்

அருவி - சினிமா விமர்சனம்

அருவி - சினிமா விமர்சனம்

அருவி - சினிமா விமர்சனம்

Published:Updated:
அருவி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
அருவி - சினிமா விமர்சனம்

மூகத்தால், குடும்பத்தால் வெளியேற்றப்பட்டு நிராகரிப்பின் வலியை உணர்ந்த ஒரு பெண்,  வாழ்க்கைக்கான அர்த்தம்பொதிந்த கேள்விகளோடு  தனக்கான அடையாளத்தையும் அன்பையும் தேடி நடத்தும் உணர்வுப்போராட்டம்தான் ‘அருவி.’ 
 
பிறந்ததிலிருந்தே அப்பா செல்லம், வயதுக்கேற்ற குறும்புத்தனம், அந்தந்த வயதுகளுக்கே உரித்தான ரகசியங்கள், பள்ளி கல்லூரிகளில் கொஞ்சம் திமிர், நிறைய கெத்து, காதலைச் சொல்லும் பையனிடம் காட்டும் சின்ன அலட்டல், சினிமாத்தனமான  ஆசைகள், அழகாயிருக்கிறோம் என்கிற ரகசியப் பெருமிதம் என அச்சு அசலான சராசரிப் பெண்ணாக வளரும் அருவி, எப்படி இயல்புக்கு மாறான வாழ்க்கை வாழ விதிக்கப்படுகிறாள், அதில் எப்படித் தன்னையே இழக்கிறாள், தொலைத்துவிட்ட தன்னை மீட்டெடுக்க எப்படிப் போராடுகிறாள் என்பதுதான் `அருவி’ சொல்லும் கதை.

இது ஒரு பெண்ணின் கதைதான். ஆனால், அந்தக் கதையை மையமாக வைத்து, மதத்தின் பெயரால் பெண்களின்மீது நடத்தப்படும் பாலியல் சுரண்டல், கார்ப்பரேட் சாமியார்களின் தந்திரங்கள், நவீன வாழ்க்கையின் பெயரால் நடக்கும் அத்துமீறல்கள், கல்விப்பிரச்னை, சமூகப் பிரச்னைகளைப் பணமாக்கும் ஊடகப் போலித்தனங்கள், திருநங்கைகளின் மீதான அலட்சியப்பார்வை என்று பல்வேறு விஷயங்களை அழகியலோடும் சினிமாவுக்கான தனித்துவமொழியோடும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் அறிமுக இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமனுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

வாழ்க்கைப் பயணம், இயல்பான நகைச்சுவை, த்ரில்லர், நெகிழும் தருணங்கள் எனப் பலவற்றையும் எந்தத் திணிப்பும் இல்லாமல் கதையின்போக்கிலேயே கொண்டுவந்த வகையில் அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்வண்ணம் உருவாகியிருக்கிறது ‘அருவி.’

நாயகன் இல்லை, தடாலடிச் சண்டைகளோ  சவடால் வசனங்களோ இல்லை, அபத்தமான காதல் காட்சிகள் இல்லை, நட்சத்திரப் பளபளப்பு இல்லை... இன்னும் பல ‘இல்லை’கள் உண்டு என்பதால்தான் இந்த `அருவி’ தனித்துவமான கலைப்படைப்பாக மிளிர்கிறது.

அருவி - சினிமா விமர்சனம்

சிறுமியாக, கல்லூரி மாணவியாக, துப்பாக்கியோடு சீறுகிற கோபக்காரியாக, அன்புக்கு ஏங்கித்தவிக்கிற பெண்ணாக என்று ஏராளமான உணர்வுகளை அள்ளி வீசுகிற அதிதி பாலன் தமிழ்சினிமாவிற்குக் கிடைத்திருக்கும்  பெரும் புதையல். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுவிதமான உணர்வுகளைப் பதிவு செய்து `அருவி’ என்னும் மனுஷியின் வாழ்க்கையை அப்படியே நமக்குள் கடத்துகிறார். ‘`தம்பி எனக்கு பர்த்டே வாழ்த்து சொல்லமாட்டேங்கிறான்” என்று பொருமுவது, அப்பாவின் கசப்பும் வெறுப்பும் கலந்த பதிலைக் கேட்டு அதிர்ந்துபோவது, ``காசு தந்திட்டேன்கிறதுக்காக வீட்டுப்பக்கம் வந்துடாதே” என்ற தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு உடைந்துபோவது, துப்பாக்கி முனையில் ஒரு பீர்பாட்டிலைச் சுற்றிவிட்டு நடத்துகிற சாகச விளையாட்டு, மேல்தட்டு அலங்காரப்பூச்சு கொண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளரை, ‘`ஒரு டீ போட்டுக் கொண்டு வர்றீங்களா?’’ என்று விரட்டுவது, இறுதியில் தேகம் உருகிப் பரிதாபக் கோரிக்கை வைப்பது என்று ஒரு நடிப்பு நயாகராவையே நம் கண் முன் காட்டியிருக்கிறார் ‘அருவி’ அதிதி பாலன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகள் பட்டியலில் தனது முதல் படத்திலேயே  இடம் பிடித்துவிட்டார் அதிதி.

படத்தில், அருவியின் பாதையில் பயணிக்கும் பல மனிதர்களில் நம் மனதை நெகிழ்த்துவது திருநங்கை எமிலியாக வருகிற அஞ்சலி வரதன். அருவி-எமிலி நட்பில் அவ்வளவு ஆழம். திருநங்கைப் பாத்திரத்தை இத்தனை மதிப்போடு மரியாதையாக உருவாக்கியிருப்பதற்காக இயக்குநருக்குப் பாராட்டுகள். ஆனால், அப்படி ஒரு பாத்திரத்தை வைத்துவிட்டு, அந்த விடலைப்பையன், திருநங்கையை இழிவாகப் பேசும் வசனம் திரும்பத் திரும்ப ஒலிப்பது படத்தின் அடிப்படைக்கே முரண்.

ஒரு பாசக்காரத் தந்தையாக மகள்மீது அன்பு பொழிவதாகட்டும், ஊராரின் பழிச்சொல்லுக்கு பயப்படுவதோடு, அவமானமும் அச்சமும் பீடிக்க, தன் மகளை வீட்டை விட்டுத் துரத்துவதாகட்டும்... தந்தையாக நடித்திருக்கும் திருநாவுக்கரசு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒருவர். ``அப்பா, நாத்தம் அடிக்குதுப்பா!” என்ற மகளின் வார்த்தைகளுக்காக சிகரெட் குடிப்பதை நிறுத்திவிட்டு, பிறகு புகைக்க ஆரம்பிக்கும் இடம், நம்மைக் கலங்கவைக்கிறது.

ரியாலிட்டி ஷோ இயக்குநராகக் கவிதாபாரதி, இயக்குநரின் கோப வார்த்தைகளைப் பொறுத்துக்கொண்டு, கடைசிநேர நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துணை இயக்குநராக நடித்திருக்கும் பிரதீப் ஆண்டனி, ஒவ்வொரு அசைவிலும் மேல்தட்டுத்தன்மை தெறிக்க நடந்துகொண்டு, நிகழ்ச்சி என்று வந்தவுடன் சமூக அக்கறை இருப்பதாகத் தணிந்தகுரலில் பேசிக்காட்டிக்கொள்ளும் லட்சுமி கோபால்சுவாமி மூவரும் ஊடக நிகழ்ச்சிகளின் இன்னொரு பக்கத்தை அச்சு அசலாக வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

எல்லோருக்கும் சாப்பாடு சொல்லச் சொல்லி போலீஸுக்குத் துண்டுச்சீட்டு அனுப்பும்போது,  பீர் ஆர்டர் செய்யும் அந்தக் குறும்புக்கார இளைஞன் `மைம்’ பாலா, விளையாட்டுப் போக்கில் நிஜமான கதாபாத்திரமாகவே மாறி, தன் அடிமனது ஆசைகளைத் திறந்துகாட்டும் அந்த செக்யூரிட்டி தாத்தா விஜயராமன், ‘கேமரா... ரோ...லிங் சார்’ என்று ராகம் போட்டுச் சொல்லும் உதவி ஒளிப்பதிவாளர் அபிநயகுமார் என, சின்னச்சின்னப் பாத்திரங்களும் அவ்வளவு சுவாரஸ்யமானவை. தோழியின் அப்பாவாக வரும் மணிக்குட்டி, கார்ப்பரேட் சாமியாராக வரும் கார்த்திகேயன், முதலாளியாக வரும் மதன்குமார் ஆகிய மூவரும் தந்திரக்கார ஆண்களின் பிரதிநிதிகளாகத் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள்.

‘`நீ எல்.டி.டியா, மாவோயிஸ்டா?” என்று அதிகாரக் கேள்வி கேட்கும் வடமாநிலக் காவல்துறை அதிகாரிவரை ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நடித்தவர்களில் பெரும்பகுதியினர் புதுமுகங்கள் என்பதும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு பெண்மீதான மதிப்பீடுகளை இந்தச் சமூகம் அவள் உடல் சார்ந்தே முன்வைப்பது, பாதிக்கப்பட்டவள் பெண்ணாகவே இருந்தாலும், `‘அவ அப்படி இருக்கப் போய்தான இப்படியாச்சு’’ எனத் திரும்பவும் அவளையே குற்றம்சாட்டுவது என்று, ஆணாதிக்கத்தின் அழுகல் வாசனை நிறைந்த பழைமைவாத மனநிலையை  காத்திரமான வசனங்கள்மூலம் விமர்சனத்துக்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர்.

மொத்தக் கதையும் டிவி நிலையத்திற்குள் நகர்கிறதே என்ற உணர்வே எழாமல், மிக இறுக்கமாக நகரும் காட்சிகளிலும்கூட ஆங்காங்கே இயல்பான நகைச்சுவைக்கு இடம் கொடுத்துத் திரைக்கதை அமைத்திருப்பது புத்திசாலித்தனமான யோசனை. சாமியார்கள், மீடியா என, போகிறபோக்கில் அருவி பாத்திரம்  கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும், பேசுபொருளின் மைய நீரோட்டத்தைவிட்டு விலகிச் செல்லாமல் கதை அருவியாய் நகர்வது அருமை.

இதுபோன்ற கதையை குட்டி பட்ஜெட்டுக்குள் மிகச்சிறிய இடத்துக்குள் படமாக்கினால் மேடைநாடகம் போல் ஆகிவிடுகிற சாத்தியங்கள் உண்டு. ஆனால், அப்படியொரு உணர்வே எழவிடாமல் செய்பவை ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட்டின் கேமராவும்,  ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவின் எடிட்டிங்கும்தான்! அருவியின் இருபது வருட வாழ்க்கையை அத்தனை அழகாக மணிமணியாய்க் கோத்துக்கொடுத்திருக்கிற ரேமண்ட் டெர்ரிக்கின் எடிட்டிங், அலுப்பூட்டும் வாய்ப்புள்ள ஆரம்பக்காட்சிகளையும் மெய்மறக்கவைக்கும் அனுபவமாக மாற்றியிருக்கிறது. பிந்துமாலினி - வேதாந்த் இசையில் பின்னணி இசை நேர்த்தி. குட்டிக்குட்டியாய்ப் பாடல்கள்மூலம் கதை சொன்ன விதமும் அழகு.

அருவி - சினிமா விமர்சனம்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை எல்லாம் ஒரு ‘ஸாரி’யில் விட்டுவிடலாமா? அங்கே வெறும் மன்னிப்பு மாத்திரமே போதுமானதாய் இருக்குமா? அருவி வீட்டை விட்டு வெளியேறக் காரணமாக இருக்கும் ‘அந்த நிகழ்வு’ சரியா? துணிச்சல் பெண்ணாக முன்பாதியில் வரும் அருவி, பிறகு ஏன் அத்தனை கலங்கித் தவிக்கிறாள்? ரியாலிட்டி ஷோவுக்கு வரும் அந்த மூன்று பேருக்கு ‘ஆபத்தில்லை’ என முன்கூட்டியே அருவிக்கு எப்படித் தெரிந்தது? துப்பாக்கியை அத்தனை இயல்பாக அருவி கையாள்வது எப்படி?  படம் நெடுக இப்படியான கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆனால்... படத்தின் நோக்கமும் அது சொல்ல விரும்பும் செய்தியும், படமாக்கிய விதமும் அவற்றை அவசியமற்றவையாக மாற்றிவிடுகின்றன.

படம் முடிந்து வெளியே வந்தபிறகும் ‘`எனக்கும் உங்களை மாதிரியெல்லாம் வாழணும்னு ஆசை’’ என்ற அருவியின் கரகரத்த குரல், காதுகளுக்குள் கேட்டபடியிருக்கிறது. அருவியை நம்மில் ஒருத்தியாக உணரத்தொடங்குகிறோம். அதுதான் `அருவி’யின் வெற்றி.

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism