கொலைகளையும் கொலைகாரர்களையும் இணைக்கும் மாயச் சங்கிலிதான் `மாயவன்’ காட்டும் மாயாஜாலம்.
விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி பலவிதமான தீமைகளுக்குக் காரணமாகிவரும் அவலத்தை, பரபரப்பான கதைக்களத்தைக் கொண்டு கச்சிதமாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் சி.வி.குமார். படத்தில் காட்டப்பட்டிருப்பதுபோன்ற விஞ்ஞான விபரீதங்கள் வரும்காலங்களில் நிகழ்ந்தால், நிச்சயம் `மாயவன்’ நினைவுக்கு வருவான்.

சலிப்பூட்டாத சயின்ஸ், எதிர்பார்க்காத திருப்பங்கள், வித்தியாச வில்லன்கள், லாஜிக் பார்க்கத்தேவையற்ற மேஜிக் எனப் பக்காவான பாக்கெட் நாவல் கதை. அதை சீரியஸ் ஆக்காமல் சிம்பிளாக எடுத்திருக்கிறார் இயக்குநர். அதுவே படத்திற்குப் பல இடங்களில் பலமும், பலவீனமாகவும் மாறியிருக்கிறது காவல்துறை ஆய்வாளர் குமரனாக , சந்தீப் கிஷன். அவரது வாட்டசாட்டமான உடலமைப்பு காக்கி உடைக்கு கம்பீரம் சேர்க்கிறது. குறைகள் தெரியாத உறுத்தாத நடிப்பு. நாயகியாக லாவண்யா த்ரிபாதி. அலட்டல் இல்லாத நடிப்பைக் கொடுத்ததுபோல், வசனங்களில் வாயசைவும் சரியாகக் கொடுத்திருந்தால் கச்சிதமாக இருந்திருக்கும்.
நுனி நாக்கு ஆங்கிலம், கோட் சூட் என ஸ்டைலிஷான லுக்கில் டேனியல் பாலாஜி. இடம் கிடைத்திருந்தால் இன்னுமே மிரட்டியிருப்பார். குணச்சித்திர வேடத்தில் பகவதி பெருமாள் கவனிக்கவைக்கிறார். ஜாக்கி ஷெராஃப் கௌரவத் தோற்றத்தில் வந்து நிறைய மிரட்டுகிறார்!
முற்பாதியை வழக்கமான `ஹூ டன் இட்’ கதையாகக் கொண்டு சென்று, பிற்பாதியில் வைத்த ட்விஸ்ட், ரோலர் கோஸ்டர் எஃபெக்ட். நாயகனிலிருந்து பேய் பிசாசுகள் வரை யார்யாரையோ எதை எதையோ கொலையாளியென சந்தேகிக்கவைத்து, சஸ்பென்ஸைக் கொண்டு சென்றதில் சாதித்திருக்கிறார் திரைக்கதையாசியர் நலன் குமாரசாமி. வசனங்களில், வழக்கமான நலன் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதை நிகழும் இடங்கள் மொத்தமே ஐந்தாறுதான். அந்த உணர்வைத் தராமல் படமாக்கிய ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் நிறையவே பாராட்டுக்குரியவர். ஜிப்ரானின் பின்னணி இசையும் கோபி ஆனந்தின் கலை இயக்கமும் படத்தின் ப்ளஸ்.
கருத்து சொன்னாலும், கலக்கலாகச் சொன்னதில் `மாயவன்’ பாஸ்தான்!
- விகடன் விமர்சனக் குழு