Published:Updated:

பலூன் - சினிமா விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

பலூன் - சினிமா விமர்சனம்

பிரீமியம் ஸ்டோரி

பேய்ப் படம் எடுக்கக் கதை தேடிச் செல்லும் இயக்குநருக்கு, பேய்களே பொக்கே கொடுத்து கதை சொன்னால் என்னாகும் என்பதே பலூன் சொல்லும் கதை.

கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் சிரிக்க வைத்து, கொஞ்சம் நெளியவைத்துக் கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சினிஷ்!  

காதல் காட்சிகளில் பாஸ் மார்க் வாங்கும் ஜெய், எமோஷனல் காட்சிகளில்  ‘`எட்டாங்கிளாஸ் ஃபெயில்ண்ணே” என்கிறார். அஞ்சலி பார்க்க அழகாக இருக்கிறார். பேயாக பயமுறுத்துகிறார்.

படத்தில் சிக்கிய பால்களில் எல்லாம் சிக்ஸர் அடிப்பது யோகிபாபு. காமெடி ஒன்லைனர்களில் தெறிக்க விடுகிறார். பேய் பிடித்துக் கட்டிலில் அமர்ந்து தலையை முறுக்கும் சிறுவனைப் பார்த்து, “என்ன ஹெட்போனே இல்லாம பாட்டு கேட்கிறான்?” என்று கலாய்ப்பது கலகல சாம்பிள். அந்தச் சுட்டிப்பையனும் யோகிபாபுவுக்கு ஈடுகொடுத்துக் கலாய்த்து அசத்தியிருக்கிறான். இந்தக் கலகலப்புக் காம்போவில் பக்காவாக செட் ஆகி சிரிப்புக்கூட்டுகிறார் யோகிபாபுவின் நண்பராக வரும் கார்த்திக் யோகி.  ஃப்ளாஷ்பேக்கில்  ஜனனி ஐயருக்கு நடிக்க வாய்ப்பு வருவதற்குள்ளேயே செத்துப்போகிறார். வில்லன்கள் நாகிநீடுவும் ராமச்சந்திரனும் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்!

பலூன் - சினிமா விமர்சனம்

அன்லிமிட்டட் காமெடியும் திகிலும் கலந்து ஹீலியம் பலூனாய் உயர்ந்து நிற்கிறது முதல்பாதி. இரண்டாம் பாதி ரெகுலர் ரூட்டில் பறக்கத்தொடங்கி ‘புஸ்’ ஆகிவிடுகிறது. அந்த எமோஷனல் ஃப்ளாஷ்பேக்கில் கொஞ்சம்கூட எமோஷனலே இல்லை.

நல்ல காட்சிகளையும் கூட பலவீனப் படுத்துகின்றன வசனங்கள். வில்லன் நாகி நீடு ஒரு காட்சியில், ‘எதுக்குனு தெரியலை. சும்மா கொன்னு வைப்போம்!’ என அசால்ட்டாகச் சொல்கிறார்!

டைட்டில் கார்டில் டைரக்டர் பெயருக்குப் பின்னால் யுவன் பெயரை ஸ்பெஷலாகப் போடுகிறார்கள். தன் அபாரமான பின்னணி இசையால் அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் யுவன். ஒளிப்பதிவாளர் ஆர்.சரவணன் பசுமையான ஊட்டியைக்கூட அத்தனை அமானுஷ்யமாக படம்பிடித்திருக்கிறார்.

பலூன் - சினிமா விமர்சனம்

பேய்ப்படங்களின் டெம்ப்ளேட் விஷயங்கள் அத்தனையும் இந்தப்படத்திலும் இருக்கின்றன. அதை நாயகனே ஒரு காட்சியில் பட்டியலும் இடுகிறார். ஆனால் அதற்குபிறகு ஏதோ வித்தியாசமாக பண்ணப்போகிறார் என எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான்!

அதே பழைய பலூன்!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு