ஆனந்த விகடன் விருதுகள்
தொடர்கள்
Published:Updated:

வீட்டுக்குள் ஒரு காதல் கோட்டை

வீட்டுக்குள் ஒரு காதல் கோட்டை
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக்குள் ஒரு காதல் கோட்டை

பரிசல் கிருஷ்ணா, சுஜிதா சென், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

வீட்டுக்குள் ஒரு காதல் கோட்டை

கார்த்திகா - திரு, விஜயலட்சுமி - ஃபெரோஸ் என்று வீட்டுக்குள்ளேயே காதல் கோட்டை கட்டியிருக்கிறார் இயக்குநர் அகத்தியன். வீட்டுக்குள் நுழைந்தால் மழலை வணக்கம் சொல்லி வரவேற்கிறான் விஜயலட்சுமி - ஃபெரோஸ் தம்பதியின் மகன் நிலன்.

“எங்களோட குடும்பத்துல சினிமா சம்பந்தமான நிறைய விவாதங்கள் நடக்கும். ஆனா,  கருத்து முரண்கள் இருக்காது. சமீபத்துல எங்க எல்லோருக்கும் பிடிச்ச படம் `அருவி.’ இப்போ தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி ரொம்பவே நல்லா இருக்கு. எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு, போன வருஷம் அதிகமான அறிமுக இயக்குநர்களும் நடிகர்களும் வந்திருக்காங்க. அதுல நானும் ஒருத்தன் என்பதில் எனக்கு செம சந்தோஷம்.

என்னோட குடும்பத்துக்கும், சினிமாவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனக்குப் படம் இயக்கணும்னு ஆசை வந்ததே அகத்தியன் அங்கிளைப் பார்த்துதான். என்னுடைய `பண்டிகை’ படக்கதையைத் திருகிட்ட சொல்லும்போது அவரும் எனக்கு ரொம்ப உதவி பண்ணினார். படத்தின் வெற்றிக்கு என் மொத்தக் குடும்பமும்தான் காரணம். அடுத்து ஒரு நல்ல கதை ரெடி பண்ணிட்டிருக்கேன். சில கதைகளை எழுதும்போதே அதுக்கான முகங்கள் மனசுல வந்துடும். ஆனா, இப்போ எழுதிட்டிருக்கிற கதைக்கு யாரை ஹீரோவா போடுறதுன்னே தெரியலை. ரொம்பக் குழப்பமா இருக்கு”  படபடவெனப் பேசுகிறார் இயக்குநர் ஃபெரோஸ்.

வீட்டுக்குள் ஒரு காதல் கோட்டை

“கார்த்திகா - விஜயலட்சுமி ரெண்டு பேரும் தங்களோட லவ் பத்தி உங்ககிட்ட சொல்லும்போது எப்படி ரியாக்ட் பண்ணீங்க?” இது அகத்தியனுக்கான கேள்வி.

``என்னோட 22-வது வயசுலயே நான் சென்னைக்கு வந்துட்டேன். சின்ன வயசுல இருந்தே தனியா இருந்ததுனால ‘குடும்பம்’ என்ற ஒரு அமைப்புமீது அதிகப் பரிச்சயம் இல்லை. உறவுன்னா என்ன என்ற புரிதலைக் கொடுத்ததே என் இரு மகள்களோட திருமணம்தான். இந்த பந்தத்தின் மூலமா எத்தனையோ புது மனிதர்கள் நம்மளோட வாழ்க்கையில அறிமுகமாகுறாங்க. காதல்ல நான் சாதி மத பேதம் பார்க்க மாட்டேன். என் பொண்ணுங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்கனு தெரிஞ்ச உடனேயே, ‘எனக்குத் தெரியாம அங்க இங்கனு மீட் பண்ணாதீங்க. தைரியமா அவங்கள வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து பேசுங்க’னு சொல்லிட்டேன்” என்று அகத்தியன் சொல்லும்போது அனைவரின் முகத்திலும் ஒரே புன்னகை.

“முதல்முதல்ல திருவைக் காதலிக்கிறேன்னு அப்பாகிட்ட சொல்லும்போது கொஞ்சம் பயமா இருந்துச்சு. துணைக்கு என்னோட ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரைக் கூட்டிட்டுப் போனேன். அப்போ நான் காலேஜ் படிச்சுட்டிருந்தேன்.  திருவைப் பத்தி அப்பாகிட்ட சொல்லும்போது, அவர் என்ன பண்றார்னு கேட்டார், ‘உதவி இயக்குநரா இருக்கார். கூடிய சீக்கிரமே படம் பண்ணுவார்’னு சொன்னேன்.  அப்ப அப்பா ஒரு ப்ராமிஸ் கேட்டார். அதை நீங்களே சொல்லுங்கப்பா’’ என்கிறார் கார்த்திகா.

“ ‘அவர் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கார். அவரை நீ எப்ப படம் பண்ணுவனு டார்ச்சர் பண்ணாம, நல்லா பாத்துக்கறேன்னு ப்ராமிஸ் பண்ணு’ இதான் நான் என் பொண்ணுகிட்ட கேட்டது. ஏன்னா... முதல் படம் எடுக்குற வலி எனக்குத் தெரியும்” என்கிறார் அகத்தியன். 

வீட்டுக்குள் ஒரு காதல் கோட்டை

“அப்போ நான் சீரியல்ல உதவி இயக்குநரா இருந்தேன். முதல்ல கார்த்திகாவைப் பிடிக்கும்னு அவங்களோட தங்கச்சி நிரஞ்சனி கிட்டதான் சொன்னேன். நிரஞ்சனி அப்ப ஆறாவதுதான் படிச்சிட்டிருந்தா. இந்த விஷயம் கார்த்திகாவுக்குத் தெரிஞ்சு, அவங்க என்னோட காதலுக்கு ஓகே சொன்னதுக்கு அப்புறம்தான் அகத்தியன் சார்கிட்ட பேசினேன்” என மலரும் நினைவுகளில் மூழ்குகிறார் திரு.

“விஜயலட்சுமி  இப்போ ஏன் படங்கள்ல நடிக்கிறது இல்ல?”

“நான்தான் இப்போ தயாரிப்பாளர் ஆகிட்டேனே. `பண்டிகை’ படத்தோட தயாரிப்பாளர் நான்தான்.  இந்த வருஷம் நிலன் பொறந்துட்டான். லைஃப் செம ஜாலியா போகுது. எங்களோடது பப்பி லவ். நாங்க லவ் பண்ண ஆரம்பிச்ச உடனேயே ஃபெரோஸ் படிப்புக்காக அமெரிக்கா போய்ட்டார். திரும்ப லீவ்ல அவர் வரும்போது அப்பா கிட்ட ஃபெரோஸ் பத்தி சொல்லணும்னு நினைச்சேன். அக்கா எந்த இடத்துல வெச்சு தன்னோட லவ்வைச் சொன்னாளோ, அதே இடத்துக்கு நானும் அப்பாவைக் கூட்டிட்டுப் போனேன். அந்தநாள்லயே ஃபெரோஸும் அப்பாகிட்ட போன்ல பேசுனார்” என விஜயலட்சுமி சொல்ல ``இரு இரு நான் சொல்றேன்’’ என ஆர்வமாகிறார் ஃபெரோஸ்.

‘` `என்னோட பொண்ணுங்கதான் எனக்கு எல்லாமே. அவங்களுக்கு எதாவது ஒண்ணு ஆச்சுனா சும்மா விட மாட்டேன்’னு அகத்தியன் அங்கிள் செல்லமா மிரட்டினார். அப்புறம் ஒருதடவை எனக்கும் விஜிக்கும் ப்ரேக்-அப் ஆகுற அளவுக்கு சண்டையெல்லாம் வந்தது. அப்போ அங்கிள்தான் எங்களை சமாதானப்படுத்தினார்” என்று ஃபெரோஸ் சொல்ல, ‘`ப்ரேக்-அப் ஆகப்போற விஷயத்தை எனக்குச் சொன்னதே திருதான். லவ் பண்றேன்னு என்கிட்ட சொன்ன, இப்போ ப்ரேக்-அப் மட்டும் தனியா ஃபெரோஸ் கிட்ட சொல்லுவியா?’’னு கேட்டேன். ஒருவழியா குடும்பமா சேர்ந்து உட்கார்ந்து அவங்களை சமாதானப்படுத்தி ஒண்ணு சேர்த்து வெச்சோம்” என்கிறார் அகத்தியன்

வீட்டுக்குள் ஒரு காதல் கோட்டை

“உங்களோட அடுத்த படமான `மிஸ்டர் சந்திரமௌலி’ல என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்?” இது இயக்குநர் திருவுக்கான கேள்வி.

``இது அப்பா-மகன் உறவைப் பத்தி சொல்ற ஒரு எமோஷனல் ட்ராமா. `விக்ரம் வேதா’ இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இதுக்கு இசையமைச்சிருக்கார். கார்த்திக் - கெளதம் கார்த்திக் கம்போதான் படத்தோட ஹைலைட். உண்மையிலேயே இவங்க ரெண்டு பேருமே இதுவரை செட்டுக்கு லேட்டா வந்ததே கிடையாது. குறிப்பா கெளதம் கார்த்திக் ஒரு மணிநேரத்துக்கு முன்னாடியே செட்டுக்கு வந்துருவார். ‘இவ்வளவு சீக்கிரம் வராதீங்க சார்’னு நானே அவர்கிட்ட சொல்லிருக்கேன். அவ்ளோ எனர்ஜெட்டிக்கா இருப்பார். படம் சூப்பரா வந்துட்டிருக்கு. சீக்கிரமே திரைக்கு வரும்.’’

“நீங்க பார்த்து வியந்த ஹீரோ யார்?” என்று அகத்தியனிடம் கேட்டால், சின்ன யோசனைகூட இல்லாமல் வேகவேகமாக வருகிறது பதில்.

“ `காதல் கோட்டை’ மன்னன்தான். அப்போ அஜித்துக்கும் எனக்கும் ஒரு போட்டி இருந்துச்சு. அதுல ஒருநாள்கூட நான் ஜெயிச்சது கிடையாது. அதிகாலை 5 மணி ஷூட்டிங்க்கு நாம 4.45-க்கே போயிட்டா அஜித்துக்கு முன்னாடியே ஸ்பாட்ல இருக்கலாம்னு   நினைப்பேன். ஆனா, அடுத்தநாள் அவர் எனக்கு முன்னாடி 4.30-க்கே அங்க இருப்பார். அவரோட டெடிகேஷன்தான் அவரை இந்த இடத்துல உட்காரவெச்சிருக்கு. நிறைய ஹீரோஸ், இயக்குநர்கள் ஃபாலோ பண்ணவேண்டியது  இந்த டெடிகேஷனைத்தான்’’ என `தல’ ரெஃபரென்ஸோடு முடிக்கிறார் அகத்தியன்.