Published:Updated:

“திருமணத்துக்கு முன்பைவிட இப்போதான் நல்ல நல்ல கேரக்டர்கள் வருது!”

“திருமணத்துக்கு முன்பைவிட இப்போதான் நல்ல நல்ல கேரக்டர்கள் வருது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“திருமணத்துக்கு முன்பைவிட இப்போதான் நல்ல நல்ல கேரக்டர்கள் வருது!”

ம.கா.செந்தில்குமார்

“ ‘நிச்சயம், இது உனக்கு வேறமாதிரியான சினிமா; நீ இதுவரை பண்ணாத ரியாக் ஷன்ஸ்; நீயே பார்க்காத ஜோதிகா...’ இவை, ‘நாச்சியார்’ படம் பண்ணும்போது பாலா சார் சொன்ன வார்த்தைகள். இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் பேசும், இப்படித்தான் ரியாக்ட் பண்ணும்கிறதுல பாலா சார் ரொம்பத் தெளிவா இருந்ததால், என் வேலை ரொம்ப எளிதாயிடுச்சு. படம் தொடங்கியதில் இருந்தே, ‘இந்தக் கேரக்டருக்கு உன் குரல்  செட்டாகாது. பேஸ் வாய்ஸ் வேணும். ஆனா,  நீதான் இதுக்கு டப் பண்ணணும்’னு சொல்லிட்டே இருந்தார். அப்படியே பேசவும் வெச்சார். இப்ப ட்ரெய்லர் வந்ததும் பார்த்துட்டு, ‘என் வாய்ஸை ஏதாவது மாத்தினீங்களா, இல்ல, வேற ஏதாவது சேர்த்தீங்களா?’னு பாலா சார்க்கு போன் பண்ணிக் கேட்டேன். ‘இல்லில்ல... அது உன் வாய்ஸ்தான். நீ எப்படிப் பேசினியோ, அது அப்படியே இருக்கு. நான் எதுவுமே பண்ணலை’னு சொன்னார். நம்மை அறியாமலேயே நம்மை வேறொரு ஆளா, வேறொரு குரலா மாத்திக்காட்டுற இந்த மேஜிக்தான் பாலா சாரோட சிறப்பு. இளையராஜா சார் உட்பட ஒருசிலர் படம் பார்த்துட்டு, ‘இது உனக்கே வித்தியாசமான படம்’னு பாலா சார்கிட்ட சொல்லியிருக்காங்க. அவருக்கே இது வித்தியாசமான படம்னா, எனக்கு இது ரொம்பவே முக்கியமான படம்.” - எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் பேசுகிறார் ‘நாச்சியார்’ ஜோதிகா. முதல் இன்னிங்ஸைவிட இரண்டாம் இன்னிங்ஸில் ரொம்பவே ஈர்க்கும் ஜோவுடன் ஒரு கிரீன் டீ சந்திப்பு!

“பாலா சார் தயாரிப்பில் நான் நடிச்ச படம் ‘மாயாவி.’ அந்தப் படப்பிடிப்புத் தளத்துக்கு ஒரே ஒருமுறை பாலா சார் வந்திருந்தார். அவரை அந்த ஒருமுறை பார்த்ததுதான். பாலா சார்னா, சூர்யாவின் குரு, மென்டர், ப்ரார்த்தனாவின் அப்பானு அவ்வளவுதான் எனக்குத் தெரியும். ஆமாம்,  அவர் பொண்ணு ப்ரார்த்தனாவும் என் பொண்ணு தியாவும் கிளாஸ்மேட்ஸ். ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே, ஆண்டுவிழா, சமயங்களில் ஸ்கூல் முடிஞ்சு வரும் ப்ரார்த்தனாவை அழைச்சுட்டுப் போக அமைதியாக, ஆர்வமாகக் காத்திருப்பார்.  இப்படி ஒரு நல்ல அப்பாவாக‌ பாலா சாரைத்  தெரியும். மெச்சூரிட்டியான அவரோட படங்கள் மூலமா அவரைப் பார்த்தாலே பயம் கலந்த ஒரு மரியாதை.  அதனால அவர்கிட்ட பேசவே கொஞ்சம் பயம். ஸ்கூல்ல பார்க்கும்போதுகூட‌ ‘ஹலோ சார்’, கிளம்பும்போது ‘பை சார்’. அவ்வளவுதான் எங்க இருவருக்குமான உரையாடல். அப்படிப்பட்டவரின் படத்தில் நடிப்பது புது அனுபவம்தான்.”

“திருமணத்துக்கு முன்பைவிட இப்போதான் நல்ல நல்ல கேரக்டர்கள் வருது!”

“இந்தப்படத்துக்காக அவரை முதல்ல சந்திச்சப்ப என்ன சொன்னார்?”

“ ‘ஒரு படம் பண்றியா?’னு பாலா சார் கேட்டதே எனக்குப் பெரிய ஆச்சர்யம். சார்ட்ட முழுமையான ஸ்க்ரிப்ட் இருந்தது. சொன்னாங்க. ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’னு கல்யாணத்துக்குப் பிறகு நான் நடிச்ச படங்களிலிருந்து இது ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரம். நான் இந்த மாதிரி கேரக்டர் பண்ணினது இல்லைனு சொல்வதைவிட, இதுக்கு நெருக்கமான கேரக்டர்கூடப் பண்ணினதில்லை. சார் பாதி ஸ்க்ரிப்ட் சொல்லிட்டிருக்கும்போதே, ‘பண்றேன் சார்’னு ஒப்புக்கிட்டேன். ‘நீ ஒரு வித்தியாசமான அனுபவத்தை நோக்கிப் போற. என்னை நந்தாவா மாற்றினவர், இப்ப உன்னை ‘நாச்சியாரா’ மாற்றப்போறார்.’ இது, இந்த ப்ராஜெக்ட் சைன் பண்ணும்போது சூர்யா எனக்குச் சொன்னது. நிஜத்தில் நடந்ததும் அதுவேதான்.”

“நாச்சியார் அப்படி என்ன ஸ்பெஷல் கேரக்டர்?”

“என் இமேஜுக்கு நேர் எதிரான கதாபாத்திரம். ரௌடி போலீஸ், நேர்மையான போலீஸ்னு சில வகை போலீஸ் பாத்திரங்களைப் பார்த்திருப்போம். அதில் ‘நாச்சியார்’, நேர்மையான, நோ-நான்சென்ஸ் போலீஸ். பேசுவதைவிடச் செயல்படுவதே சிறந்ததுனு நினைப்பவள்.  `நாச்சியார்’ படத்தைப் பெண்கள் ரொம்பப் பெருமையா பார்ப்பாங்க. நேரடியான வசனங்கள் இருக்கு. மற்றபடி, ரிலீஸ் வரை, ‘நாச்சியார் யார்?’ என்ற சர்ப்ரைஸ் அப்படியே இருக்கட்டுமே.”

“யூனிஃபார்ம், அந்த கெத்து உடல்மொழி... ‘நாச்சியார்’க்கு எப்படித் தயாரானீங்க?”

“போலீஸ் யூனிஃபார்ம், நாச்சியாரின் குணாதிசயம்... இவை இரண்டும்தான் எனக்கான பெரிய சவால். அந்த யூனிஃபார்ம்ல  பார்க்கும்போது நம்பும்படியா  ஃபிட்டா இருக்கணும் என்பதற்காக 10 கிலோ எடை குறைச்சேன். உடனடியாக எடை குறைக்க உடற்பயிற்சியைவிட டயட்தான் முக்கியம். அரிசி, கோதுமை, ப்ரெட்னு நிறைய உணவுகளைத் தவிர்த்தேன். எடை குறைத்தது மட்டுமே என் வேலை. மற்றவை அனைத்தும் பாலா சார் மேஜிக். சார் சொல்லித்தந்ததை உள்வாங்கிட்டு அந்த உணர்வோட நடிக்கணும், அவ்வளவுதான். நடிப்பு, டப்பிங் மாடுலேஷன் உட்பட பக்கத்துலயே இருந்து தன் மனசுல இருந்தவற்றை, என் மனசுக்கு மாத்திவிட்டார்னுதான் சொல்லணும். இது பாலா சார் படம், எல்லாமே அவரோட மைண்டு ஒர்க், அவ்வளவுதான்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“திருமணத்துக்கு முன்பைவிட இப்போதான் நல்ல நல்ல கேரக்டர்கள் வருது!”
“திருமணத்துக்கு முன்பைவிட இப்போதான் நல்ல நல்ல கேரக்டர்கள் வருது!”

“இயக்குநர் பாலா என்றாலே டெரர், நடிகர்களை டார்ச்சர் செய்வார் என்கிற இமேஜ் இருக்கிறதே. உங்களை எப்படி வேலை வாங்கினார்?”

“இப்படியெல்லாம் அவர் மேல நாம வெச்சிருக்கிற அபிப்பிராயங்களுக்கு, அவர் நேரெதிரான மனிதர். ஒரு நாளைக்கு நாலு காட்சிகள்னு எனக்கு 30 நாள் ஷூட்னு  சார் ரொம்பத் தயாரிப்போட வந்தார். என்னை ரொம்ப ரிலாக்ஸான மனநிலையிலேயே வெச்சிருந்தார். உடம்பு முடியலைனா ‘முகம் முக்கியம். கண்ணு பளிச்சுனு இருக்கணும். ஒரு வாரம் ஷூட்டிங் கேன்சல். நீ ஓய்வெடுத்துட்டு வா’னு சொல்லி அனுப்பிடுவார். இத்தனைக்கும் இது சாரோட சொந்தத் தயாரிப்பு. இந்தமாதிரி ஒரு வசதியான சூழல்ல நான் இதுவரை எந்தப் படத்துலயும் நடிச்சதே இல்லை. இந்த மரியாதை, நான் சூர்யாவின் மனைவி என்பதால் மட்டுமே இல்லை, எல்லா ஆர்ட்டிஸ்டையும் அவர் அதே தன்மையில்தான் அணுகுறார். ஒவ்வொரு ஷாட்டையும் முதல் டேக், இரண்டாவது டேக்லயே ஓகே  பண்ணிடுவார். அப்ப, ‘நாம நல்லா பண்றோம்’னு நமக்கே ஒரு தன்னம்பிக்கை தருவார். இதுதான் பாலா சாரின் மிகப்பெரிய பலம்.”

‘`ஒட்டுமொத்தமா ‘நாச்சியார்’ அனுபவம், இதில் நீங்கள் கற்றவை, பெற்றவை என்ன?”

“கல்யாணத்துக்கு முன் எனக்கு ஒரு ‘பப்ளி இமேஜ்’ இருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’ மாதிரியான படங்கள் பண்ணும்போது ‘ஸ்வீட் கேர்ள்’ இமேஜ். இப்படி இமேஜ் உள்ள ஒரு பெண்ணை, தன் கதாபாத்திரத்துக்காக தோற்ற அமைப்பு, உடல்மொழி, பேச்சுவழக்குனு ஒட்டுமொத்தமா மாற்றுவது என்பது எல்லா இயக்குநர்களுக்கும் சாத்தியமாகாது. இதை எல்லா  இளைய இயக்குநர்களும் பாலா சார்கிட்ட இருந்து கத்துக்கணும். ‘இந்தமாதிரி நடிக்க ஆர்ட்டிஸ்ட் இல்லை’னு பலர் சொல்வாங்க. ஆனால் ஒரு டைரக்டர் நினைச்சா, இருக்கிற நடிகர்களையே தனக்குத் தகுந்தாற்போல் மாத்திக்காட்ட‌ முடியும் என்பதற்கு பாலா சார் ஓர் உதாரணம். எந்த இமேஜ் உள்ள நடிகர் நடிகைகளையும் ஓர் இயக்குநர் தான் நினைக்கிற கதாபாத்திரத்துக்கு மாற்ற முடியும் என்பதுதான் நான் கற்றது.”

“உங்களுக்கு சூப்பர் ஜூனியர் நடிகர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்த அனுபவம் சொல்லுங்க?”

“எதையும் நேர்மறையா எடுத்துக்கிற நடிகர். முதல் நாள் பட பூஜை அன்றைக்கு செட்ல மீட் பண்ணினவர், கேரவன் வந்து வாழ்த்தினார். இது அவசியமே இல்லை. ஆனால் இந்தத் தலைமுறை நடிகர்களிடம் இந்தத் தன்மை ரொம்பக் குறைவு. ஜி.வி. எவ்வளவு மெச்சூர்டான நடிகர் என்பதை இதில் நீங்க பார்ப்பீங்க. நடிப்பில் இது அவருக்கு அடுத்தகட்டமா இருக்கும்.”

“அடுத்து மணிரத்னம் படத்தில் கமிட் ஆகியிருக்கீங்க. அதில் என்ன ஸ்பெஷல்?”

“மணி சாரின் தயாரிப்பில் ‘டும் டும் டும்’ல நடிச்சிருக்கேன். மணி சார் டைரக்ஷன்ல‌ நடிப்பது இதுதான் முதல்முறை. இன்னும் படப்பிடிப்பு தொடங்கலை. ஆனால், நிறைய பயிற்சிப் பட்டறைகள், வாசிப்பு, விவாதங்கள்னு நடந்தது. இது ஒரு வித்தியாசமான அனுபவம். ஒட்டுமொத்தப் படத்தையும் கேரக்டர் பாயின்ட் ஆஃப் வியூல பார்ப்பதும், ஆடியன்ஸை கன்வின்ஸ் பண்றதுக்கான அப்ரோச்சா இல்லாம அந்த கேரக்டரை வெச்சுக்கிட்டு எப்படி ஆடியன்ஸை கன்வின்ஸ் பண்றதுனு பார்ப்பதும்தான்  பாலா சார், மணி சார்கூட டிராவல் பண்ணுனதுல எனக்குப்  புரிஞ்ச விஷயம். திருமணத்துக்கு முன்பைவிட  இப்போதான் நல்ல நல்ல கேரக்டர்கள் வருது. இந்த வயசுல இப்படியான இயக்குநர்கள், படங்கள், கதைகள் வர்றது எனக்கே அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யம்.”

“திருமணத்துக்கு முன்பைவிட இப்போதான் நல்ல நல்ல கேரக்டர்கள் வருது!”

“கிட்டத்தட்ட 20 வருடங்கள். எப்படி இருக்கு இந்தப் பயணம்?”

“1999-ல் முதல் படம் ரிலீஸ். கிட்டத்தட்ட 20 வருஷம். நடிக்க வரும்போது எனக்கு 19 வயசு. 27 வயசுல கல்யாணம் ஆச்சு. திரும்ப வந்து ‘36 வயதினிலே’ பண்ணும்போது எனக்கு 35 வயசு. சரியா சொல்லணும்னா,  ஏழெட்டு வருஷங்கள்தான் நான் வொர்க் பண்ணியிருக்கேன். அதில் 45 படங்களுக்கும் மேல் பண்ணியிருக்கேன். அப்படிப் பார்த்தா, சினிமாவில் ஏழு வருட அனுபவம்தான். ஆனால், அதில் கடைசியில் ‘மொழி’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘சந்திரமுகி’னு நல்ல நல்ல‌ படங்கள் பண்ணியிருக்கேன். அதோட தொடர்ச்சினுதான் இப்ப பண்ணிட்டிருக்கிற படங்கள்.  உண்மையைச் சொல்லணும்னா, 36 வயதினிலேக்குப் பிறகு ஒன்றரை வருஷம் வரை எனக்கு எந்தப் படமும் வரலை. ‘மகளிர் மட்டும்’ சைன் பண்ணின சமயத்துலதான் நிறைய படங்கள் வந்தது. அதில் நாலு, பெரிய ஹீரோ படங்கள். ஆனால் பெண்களுக்கு முக்கியத்துவ‌ம் தந்து, பவர்ஃபுல்லா இருந்தாதான் பண்ணணும் என்பதில் உறுதியா இருக்கேன். ஏன்னா, என் பசங்களை வீட்ல விட்டுட்டுப்போய் நடிக்கிறோம்னா, அந்தளவுக்கு முக்கியத்துவம் உள்ள கதையா, கதாபாத்திரமா இருக்கணும்ல.”

“‘நாச்சியார்’ டீசர்ல நீங்க பேசின கெட்டவார்த்தை நிறைய விவாதங்கள் கிளப்புச்சே?

``அது கெட்ட வார்த்தைதான். நான் மறுக்கலை. ஆனால் அந்த வார்த்தை இங்க சகஜமா புழங்குது. நிறைய படங்கள்ல நிறைய ஆண்கள் அதைப் பேசியிருக்காங்க. ஒரு பெண் முதல்முறையா பேசுறதால, விவாதம் ஆகியிருக்குனு நினைக்கிறேன். தவிர ‘நாச்சியார்’ போல்டான போலீஸ் கேரக்டர். அது அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்றமாதிரியான வசனம். அந்த சீன்ல இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்துப் பேசணும். ஆனால் நான் ரொம்பவே கன்வின்ஸிங்கா, கன்ட்ரோல் பண்ணித்தான் பேசியிருக்கேன். ஏன்னா அது கதையின் ஒரு பகுதி. பொருத்தமான ஓரிடத்தில் இந்த வசனம் வரும். படம் பார்க்கும்போது எல்லோரும் இருநூறு சதவிகிதம்  கன்வின்ஸ் ஆகிடுவாங்கனு நம்புறேன்.

“திருமணத்துக்கு முன்பைவிட இப்போதான் நல்ல நல்ல கேரக்டர்கள் வருது!”

‘இப்ப நான் பண்ற படங்கள் எல்லாமே குழந்தைகள் பார்க்கிறமாதிரியான படங்களா இருக்கணும்னு நினைப்பேன்’னு நிறைய இன்டர்வியூவுல நான் சொன்னதைச் சொல்லி, ‘அப்படிச் சொன்ன நீங்களே இப்ப `நாச்சியார்’ல இப்படிப் பேசியிருக்கீங்க’னு கேக்குறாங்க. அவங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லணும். குழந்தைகள்னா 10 வயசு வரை உள்ளவங்க மட்டும் கிடையாது. இப்ப எனக்கு 39 வயசு. என்னைப்பொறுத்தவரை பதினேழு, பதினெட்டு வயசு வரை உள்ளவங்ககூட குழந்தைகள்தான். அந்த வயசுல உள்ள ஸ்டூடன்ட் எல்லாரும் கண்டிப்பா இந்தப் படத்தைப் பார்க்கணும். செல்போனை ஹேண்டில் பண்ற அவங்களுக்கு சோஷியல் மீடியா வழியா வர்ற கெட்ட வார்த்தைகள் எல்லாமே தெரியும். ஆனால் ‘நாச்சியார்’ படத்தில்  எதுவுமே அசிங்கமான விஷயங்கள் கிடையாது. எல்லாமே ரியாலிட்டி, உண்மை.
ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காகத்தான் சொல்றேன், கிளாமர், ஐட்டம் சாங் உள்ள படங்களை ஃபேமிலி என்டர்ட்டெயினர்னு விளம்பரம் பண்றதும் அதைக் குழந்தைகள் உட்பட குடும்பத்தோட போய்ப் பார்க்கிறதையும் என்ன பண்ணப்போறோம்? ‘நாச்சியார்’ நல்லவளா கெட்டவளா என்பதை, படத்தைப் பார்த்துட்டு முடிவு பண்ணுங்க. நன்றி!”