Published:Updated:

“அந்தத் திருடர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”

“அந்தத் திருடர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அந்தத் திருடர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”

கே.ஜி.மணிகண்டன், படங்கள்: பா.காளிமுத்து

``கேன்ஸர், Obsessive-compulsive disorder, 1800களில் தமிழ்நாட்டில் நடந்த சுதந்திரப் போராட்டம், மீரா பாய், சிவாஜி, கால்டுவெல், ஒளரங்கசீப்... இன்னும் சிலர். இவற்றைத்தான் கடந்த சில நாள்களா படிச்சுக்கிட்டு இருக்கேன்.”

- ‘என்னென்ன புத்தகங்கள் படிச்சிட்டிருக்கீங்க?’ என்ற கேள்விக்கு இயக்குநர் மிஷ்கினிடமிருந்து வந்த பதில் இது. ‘சவரக்கத்தி’ ரிலீஸ் பரபரப்புக்கு இடையில்  புத்தகங்களின் காதலர் இயக்குநர் மிஷ்கினைச் சந்தித்தேன்.


‘`இயக்குநர் மிஷ்கினைவிட, ‘சவரக்கத்தி’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’னு நடிகர் மிஷ்கின் பிஸியா இருக்காரே...?”

“நான் நடிக்கிறதுக்காக வரலை. ஆனா, நண்பர்கள் விடமாட்டேங்கிறாங்க. தியாகராஜன் குமாரராஜா என் தம்பி. ‘சூப்பர் டீலக்ஸ்’ கதை உருவாகும்போது என்னையும் எழுதச் சொன்னான்; எழுதிக்கொடுத்தேன். ‘நடிக்கவெச்சிடாதே’னு சொன்னேன், ‘நீங்கதான் நடிக்கிறீங்க’னு உறுதியா நின்னான். கசாப்புக் கடையில கொத்துக்கறி போடுறமாதிரி, என்னைக் கொஞ்சம் கொஞ்சமா பீஸ் பீஸ் ஆக்கிட்டான். படத்துல ரொம்ப டேரிங்கான கேரக்டர் எனக்கு. ‘நடிகன்’ மிஷ்கினுக்கு இது மிக முக்கியமான படமா இருக்கும்னு நம்புறேன். ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ ராம்பிரகாஷ் ராயப்பாவும் என் தம்பி. அவன் கதை சொன்னவிதமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது; மாட்டிக்கிட்டேன்.  சொர்ணவேல் ஆத்மார்த்த நண்பர்; அமெரிக்காவில் திரைத்துறைப் பேராசிரியர். ‘ஒரு இண்டிபென்டென்ட் ஃபிலிம் பண்ணலாம்’னு சொன்னார். படத்தோட பேர் `கட்டுமரம்.’ ‘சிங்காரம்’ங்கிற மீனவர் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். என்னை முறுக்கிப்போட்ட கேரக்டர் இது. இப்படி எனக்கு நெருக்கமான கேரக்டர்கள் அமைஞ்சா, நடிக்கலாம்னுதான் தோணுது.’’

“அந்தத் திருடர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”

‘`மற்றவங்க உங்களுடைய அன்புத்தம்பிகள், நண்பர்கள்னா, சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா உங்க சொந்தத்தம்பி, எப்படி இருந்தது அந்த அனுபவம்?’’

‘`ஆதித்யா நாலைஞ்சு வருஷம் முன்னாடியே என்கிட்ட உதவியாளரா சேரணும்னு சொன்னான். அடிச்சுத் துரத்திட்டேன். சில இயக்குநர்கள்கிட்ட உதவியாளரா வேலை பார்த்துட்டு, திரும்ப என்கிட்ட வாய்ப்புக்காக வந்து நின்னான். ‘அண்ணன்னு சொல்லக்கூடாது, சார்னு சொல்லு’னு மற்ற உதவி இயக்குநர்களுக்குக் கொடுத்த அதே இடத்தைத்தான் இவனுக்கும் கொடுத்தேன். ஏன்னா, என்னை ஒரு காரணமா வெச்சுக்கிட்டு என் முதுகுல அவன் சவாரி பண்ணிட்டு வரக்கூடாது. சொந்தக்கால்ல நிக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்போ, அவனுக்கான ஒரு படம் தயாரிக்கிறதுல தப்பு கிடையாதுனு தோணுச்சு.  இயக்குநர் ஆயிட்டான். ‘பேரன்பு’ படத்துல நடிக்கிறான். இனி என்ன பண்ணப்போறான்னு ஓரமா நின்னு அவனை வேடிக்கை பார்க்கப்போறேன்.”

‘`ராம், பூர்ணா, மிஷ்கின்... இந்த காம்போ படத்துல என்ன செஞ்சிருக்காங்க?”

“பத்து பதினைந்து சீன்ஸ் எழுதும்போதே, ஹீரோ கேரக்டர் எனக்கு சரியா வரும்னு தோணலை. அப்போதான், என் நண்பன், நான் மிகவும் மதிக்கிற சக படைப்பாளி ராம் ஞாபகத்துக்கு வந்தான். ‘ஹியூமர் கேரக்டர் இது. நான் பண்ணா மோசமா இருக்கும்’னு சொன்னான். ‘நீதான் பண்ற... ஏன்னா, நான் அந்தக் கேரக்டரை பண்ணா, இன்னும் மோசமா இருக்கும்’னு சொன்னேன். படத்துல ராம் ஹீரோ; நான் வில்லன். இந்தக் கதையின் நாயகி, பூர்ணா. ஐந்து ஹீரோயின்கள் இந்தக் கதையைக் கேட்டுட்டு, ‘கதை நல்லா இருக்கு. எங்களுக்கு இது ஒத்துவராது’னு ஒதுங்கிட்டாங்க. ‘உடனே நடிக்கிறேன்’னு பூர்ணா சொன்னாங்க. அவங்க பெரிய லெவல்ல இருக்கவேண்டிய நடிகை. நிச்சயம் அந்த இடத்தை அடைவாங்க!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அந்தத் திருடர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”

“மிஷ்கின்கிட்ட இருந்து சமகால அரசியல், சமகால வாழ்வியல் சார்ந்த சினிமாக்களை எதிர்பார்க்க முடியாதா?”

“என்னால நேரடி அரசியல் படம் பண்ணவே முடியாது. ஏன்னா, நான் டிவி பார்க்கிறதில்லை, பேப்பர் படிக்கிறதில்லை, ஃபேஸ்புக், ட்விட்டர்னு எதிலேயும் இல்லை. சுருக்கமா சொன்னா, என்னை நானே வாழவே தகுதியில்லாத அல்லது தகுதியைத் தேடிக்கிட்டு இருக்கிற ஒரு மனிதனாதான் பார்க்குறேன். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, நெரூடா... இவங்கதான் என்னை ஆதர்சமா பார்த்துக்கிறாங்க. சில மேடைகள்ல நான் அரசியல் பேசினாலும், உண்மையிலேயே எனக்கு அதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது. ‘செவன் சாமுராய்’ படத்துல சொல்லப்பட்ட அரசியல், இன்னைக்கு இருக்கிற அரசியலுக்கும் கனெக்ட் ஆகும். என் படங்களும் இப்படித்தான் இருக்கணும்னு ஆசை.”

“ரஜினி, கமல், விஷால்... சினிமாவுக்கும் அரசியலுக்குமான தொடர்பை இன்னும் இறுக்கிக்கிட்டே இருக்காங்களே...?”

“தலைவனா வர்றவன் காந்தியா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். இதைச் சொன்னா, ‘இந்தக் காலத்துல அப்படியெல்லாம் இருக்கமுடியாது’னு சொல்வாங்க. ஆனா, இருக்கணும். மக்களுக்கான தலைவன், காந்தி மாதிரிதான் இருக்கணும். முக்கியமா நான் இவர்கள் யாருக்கும் எதிரி கிடையாது. என் குடும்பத்தின் மூத்தவர்கள் அவர்கள். அரசியலுக்கு வரும்போது அவங்க புத்தர்களா மாறணும்னு ஆசைப்படுறேன். அவ்ளோதான். ‘ரஜினி, கமல்... அரசியலுக்கு வரட்டும், மக்களுக்கு நல்லது பண்ணட்டும்’னு இந்தப் பேரண்டத்தை வணங்கிக்கிறேன்.”

“அந்தத் திருடர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”

“தயாரிப்பாளர் சங்கத்துல, ‘பைரஸி ஒழிப்பு’ தலைவரா, உங்களோட செயல்பாடுகள் என்ன?”

“எனக்குப் பதவிமேல எல்லாம் நம்பிக்கை இல்லை. அப்பவே விஷால்ட்ட வேணாம்னு சொன்னேன். அந்த ஆக்டிவிட்டியை என்னால பண்ணமுடியாது. ஏன்னா, உலகம் இயங்கிக்கிட்டு இருக்கிறவரைக்கும் திருடர்கள் இருப்பாங்க. இதுதான், உலக நியதி. அந்தத் திருடர்களுக்கு எனது வாழ்த்துகள்! அவங்களை நம்பியும் ஒரு கூட்டம் இருக்கும். குழந்தைகள் இருப்பாங்க. தவிர, அவங்களும் என் சகோதரர்கள்தான். எப்படியோ எங்ககிட்ட இருந்து திருடி சம்பாதிக்கிற பணத்துல அவங்க குழந்தைக்கு சாப்பாடு போடட்டுமே... ஆனா, அந்தக் குழந்தைகள்கிட்ட இன்னும் எப்படியெல்லாம் திருடலாம்னு சொல்லித்தராம, நல்லவிதமா வளர்த்தா போதும். ஏன்னா, எங்களோட உழைப்பை உங்களுக்குக் கொடுக்கிற தானம்னு நினைக்கிறோம்!”

“அந்தத் திருடர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”

“இயக்குநரா அறிமுகமாகி 11 வருடங்களைக் கடந்திருக்கீங்க. கோபம், அன்பு, சர்ச்சை, விவாதம்... இதுதான் மிஷ்கினைச் சுத்திக்கிட்டு இருக்கிற விஷயங்கள். மனிதர்களை அணுகுறதுல வேறேதும் மாற்றம் ஏற்பட்டிருக்கா?”

“11... பெரிய அனுபவம். நிறைய படிச்சிருக்கேன், நிறைய எழுதியிருக்கேன். என் திரைக்கதைகளே என்னை ரொம்ப மாத்தியிருக்கு. சக மனிதர்கள்மேல இன்னும் அன்பு அதிகமாகிட்டேதான் இருக்கு. அதுக்கு புத்தரோ, ஜே.கிருஷ்ணமூர்த்தியோகூட காரணமா இருக்கலாம். எனக்குள்ள நிறைய முட்டாள்தனங்கள் இருக்குனு நான் உணர்றேன். ஒரு பெரும் வாழ்வுக்கு பதில் கிடையவே கிடையாது. எதுக்காக வாழ்றோம், எதைநோக்கிப் போறோம்... இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எங்கே தேடியும் விடை கிடைக்கமாட்டேங்குது. அதனால, எப்பவுமே போராட்டம் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. இதையெல்லாம் மீறி, மலர்கள் இருக்கு; குழந்தைகளோட சிரிப்பு இருக்கு; மழை இருக்கு; மேகம் இருக்கு; என்னைக்கோ ஒருநாள் வர்ற வானவில் இருக்கு... இதெல்லாம்தான் எனக்கான சந்தோஷத்தைக் கொடுக்குது.”