Published:Updated:

“விஜய் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கு!”

“விஜய் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“விஜய் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கு!”

ம.கா.செந்தில்குமார், படங்கள்: வீ.நாகமணி

“உண்மையைச் சொல்லணுனா, விகடன் வெளியிட்ட `ஒன் மேன் ஆர்மி’ புத்தகத்தைப் படிக்கிறதுக்கு முன்புவரை டிராஃபிக் ராமசாமின்னா, பேனரைக் கிழிக்கிறவர், கோர்ட்டுக்குப் போறவர்னு மட்டும்தான் தெரியும். ஆனால் படிச்சு முடிச்சபிறகு, ‘இவர் உண்மையிலேயே ஒன்மேன் ஆர்மிதான்னு புரிஞ்சுகிட்டேன். அதன்பிறகுதான் இந்தப் படத்தை பண்ணியே ஆகணும்னு முடிவு பண்ணினேன்’” என்றபடி டிராஃபிக் ராமசாமியைக் கட்டியணைத்துக் கொள்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். `டிராஃபிக் ராமிசாமி’ பயோபிக்கில் டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார் எஸ்.ஏ.சி.

``முதல்ல இயக்குநர் விக்கிதான், ‘எஸ்.ஏ.சி சார் உங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க’ என்று என்னை சந்தித்தார். ‘ஓ.கே வரச்சொல்லுங்க’னு சொல்லிட்டேன். இந்த இளைஞனைப் பார்க்க மூணு மாடி ஏறி, மூன்று முறை என் ஆபீஸுக்கு வந்தார். ‘உங்க வாழ்க்கையைப் படமா எடுக்கப்போறோம்’னு சந்திரசேகரன் என்கிட்ட சொன்னப்ப, ‘இப்படியெல்லாம் நடக்குமா’னு எனக்கு பயங்கர ஷாக். ‘இத்தனை வருஷமா ஒருத்தன் எந்தப் பிரதிபலனும் பார்க்காம போராடிட்டே இருக்கானே, அதைப் படமா எடுக்கணும்னு அவங்க நினைச்சதையே தமிழகத்தில் மாற்றம் வருவதற்கான அறிகுறியாத்தான் நான் பார்க்குறேன்’’ என்னும் டிராஃபிக் ராமசாமியின் இயல்பான பதிலால் உற்சாகமான எஸ்.ஏ.சந்திரசேகரன்,  ``இந்த சமூகப் போராளியை மக்கள் மிகச்சரியா பயன்படுத்தத் தவறிட்டாங்களே’ங்கிற எண்ணம் எனக்கு இருக்கு. அதனால உங்களை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்க மூணு முறையல்ல, முப்பது முறைகூட உங்க ஆபீசுக்கு வருவேன்`` என்றவர் தொடர்ந்து பேசினார்.

“விஜய் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கு!”

``இவரை மூணுமுறை சந்தித்தபோதும் ஒவ்வொருமுறையும் குறைந்தது ரெண்டு மணி நேரத்துக்கும்மேல பேசிட்டிருந்திருக்கேன். அப்ப இவருக்கு  எங்கெங்கிருந்தோ  பாதிக்கப்பட்ட யார்யாரெல்லாமோ போன் பண்ணிப் பேசுறாங்க. அவங்க யார், என்னனுகூட இவருக்குத் தெரியாது. போலீசுக்கு போன் பண்ணாம இவருக்கு போன் பண்ணி, `சார் இந்த இடத்துல இப்படி ஆகிடுச்சு’னு தங்களோட பிரச்னையைச் சொல்றாங்க. இவரும் உடனடியா சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு போன் போடுறார். ‘என்ன, உங்க ஏரியாவுல இப்படி நடக்குதாமே..? இதோ, நான் வந்துட்டே இருக்கேன்’னு அவர் பேசுற விதம் இருக்கே அதுவே ஒரு தனி ஸ்டைல். அப்படி அவரோட இருந்த அந்த நேரத்துல, எப்படிப் பேசுறார், அப்ப அவரோட உடல் மொழி எப்படி இருக்குனு நிறைய விஷயங்களை கவனிச்சுட்டே இருப்பேன். எண்பத்து மூணு வயசு உள்ள நபர் மாதிரியே இருக்கமாட்டார். ஒரு மனுஷன் எவ்வளவு சுறுசுறுப்பாவும் நம்பிக்கையோடும் இருக்கணும் என்பதற்கு இவர் உதாரணமா இருக்கார். இவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம்” எஸ்.ஏ.சி பேசப்பேச அதை அவரின் அருகே அமைதியாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் டிராஃபிக் ராமசாமி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“விஜய் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கு!”

“நீங்கள் ஆரம்பகாலத்தில் அரசியல் படங்கள் பண்ணினவர். இவர் அரசியலிலேயே இருக்கிறார். அதைப் பற்றி ஏதாவது பேசிக்குவீங்களா?” என்றதும், சிரித்த எஸ்.ஏ.சந்திரசேகரன், “நான் நிறைய அரசியல் படங்கள் எடுத்திருக்கேன், அதுக்கான அவஸ்தைகளையும் பட்டிருக்கேன். ஆனால், இவர் பட்ட கஷ்டம் வேறு யாரும் பட்டிருப்பாங்களானு எனக்குத் தெரியலை. இவரை நான்கைந்துமுறை போலீஸ் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிச்சிருக்கு. `முதல் ரெண்டு அடிதான் எனக்கு வலிச்சுது. அதுக்குப்பிறகு போலீஸ்காரன் அடிச்சது எதுவுமே எனக்கு வலிக்கலை.’ - இது, அந்தச் சமயத்தில் இவர் சொன்ன வார்த்தை.  அப்போ இவர் மனசுக்குள்ள எந்தளவுக்கு வைராக்கியம் இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்க்கணும். இந்தக் காட்சிகள், வசனங்கள் எல்லாமே படத்துல பதிவு செஞ்சிருக்கோம்’’ என்றபடி டிராஃபிக் ராமசாமியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டவர் தொடர்கிறார்.

“எனக்கும் இவருக்கும் பல விஷயங்கள்ல ஒற்றுமை உண்டு. நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு என் மனைவியைக் கூட்டிட்டு வரும்போது, எங்ககூட இருந்த எல்லாப் பொருள்களும் என் சம்பாத்தியத்துல வாங்கினவை. வரதட்சணை வாங்குற பழக்கம் உச்சத்துல இருந்த அந்தக் காலத்துலயே, ‘அந்தப் பேச்சுக்கே இடமில்லை’னு சொல்லிட்டு வந்துட்டேன். அதேபோல இவரோட அப்பா இவருக்குப் பார்த்திருந்த பெண்ணோட அப்பாகிட்ட வரதட்சணை கேட்க, அவங்களால கொடுக்க முடியாத சூழல். அதை அந்தப் பெண் இவர்கிட்ட சொல்லி அழும்போது அதைத் தாங்கமுடியாம, அவங்களைத் திருப்பதி கூட்டிட்டுப்போய் தாலிகட்டி கூட்டிட்டு வந்துட்டார்” என்னும் எஸ்.ஏ.சி-யைத் தொடர்கிறார் ராமசாமி.

“விஜய் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கு!”

“ஒருமுறை ‘அந்நியன்’ படத்துக்காக டைரக்டர் ஷங்கர் ஆபீஸிலிருந்து போன் பண்ணி, ‘ஹீரோ விக்ரமுக்கு உங்க பெயரைப் பயன்படுத்திக் கலாமா’னு  கேட்டாங்க. என்ன நினைச்சாங்களோ, திடீர்னு அவங்களே பிறகு ‘ராமானுஜம்’னு பேர் வெச்சுக்கிட்டாங்க” என்றவரிடம் ‘நடிகர்கள் பலர் அரசியல் பிரவேசம் எடுப்பதை ஒரு சமூக ஆர்வலரா எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்றதும், யோசிக்காமல் சட்டெனப் பேசுகிறார். ‘இப்ப உள்ள காலகட்டத்துக்கு அது சரியா வராது. முதல்ல அவங்க தொழிலையே அவங்களால் முறைப்படுத்த முடியலை. இதுல அவங்க எப்படி மக்களுக்கு நல்லது செய்யப்போறாங்க?’’ என்று சொன்னதும், ‘`இந்தக் கருத்தில் நான் முரண்படுறேன். எந்தத் தொழில் செய்பவரா இருந்தாலும் அரசியலுக்கு வரலாமே. ஒரு குழந்தை பிறந்தவுடனே அது ஓடும்னு நினைக்கிறது தவறு. படிப்படியாகத்தான் ஆரம்பிக்க முடியும்” என்ற எஸ்.ஏ.சி-யிடம், “இது விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான முதல் அறிகுறி என்று எடுத்துக்கொள்ளலாமா?’’ என்றதும் “ஒரு தந்தையாக என் மகனுக்கு அவர் ஓடுவதற்கான எல்லா விஷயங்களையும் தயார் செஞ்சு கொடுத்துட்டேன். ஆனா, அவர் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கு” என்று பன்ச்சோடு முடிக்கிறார்.