Published:Updated:

இசை முகங்கள்!

இசை முகங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இசை முகங்கள்!

ஆர்.வைதேகி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியம் ப.சரவணக்குமார்

பின்னணிப் பாடகர்களில் இது அடுத்தத் தலைமுறைக்கான காலம். இளசுகள் குரலில் பல வித்தைகள் காட்டுகிறார்கள். இளம் பாடகிகளின் குரல்களால் இளைப்பாறுகிறது ரசிகக் கூட்டம். புதிதாக பாடவந்திருக்கும் திறமையாளர்களில் கவனம் ஈர்த்தவர்கள் இங்கே!

ஷாஷா திருப்பதி

பேருதான் திருப்பதி. ஆனா, ஷாஷா காஷ்மீரி ரோஜா.  ‘காவியத்தலைவனி’ல் ‘ஹே மிஸ்டர் மைனர்...’ முதல் ‘எந்திரன் 2.0’-ல் ‘மெக்கானிக்கல் சுந்தரியே’ வரை இசைப்புயலின் டாப் 10 குரல்களில் ஒருவராகத் தொடர்பவர் ஷாஷா திருப்பதி.

‘`ஷாஷான்னா பாதுகாவலர்னு அர்த்தம். வளர்ந்ததெல்லாம் கனடாவில். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இசையில் பயங்கர ஆர்வம். அம்மா பாடல்கள் எழுதுவாங்க. நான் பாடுவேன். விளையாட்டா பண்ணின அந்த விஷயம்தான் எனக்கு வாழ்க்கையாகப் போகுதுனு சத்தியமா நினைக்கலை.

இசை முகங்கள்!

ரஹ்மான் சாருக்கு நிறைய பாடிட்டேன். ஆனாலும் இன்னும் உதறல் போகலை. ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துல ‘ராசாளி...’ பாட்டுக்கான ரெக்கார்டிங்... ஒரு பக்கம் பாடலாசிரியர் தாமரை, இன்னொரு பக்கம் ரஹ்மான் சார். எனக்குத் தமிழ் செம தகராறு. நான் பாடப்பாட தாமரை மேடம் ஒவ்வொரு வார்த்தையையும் கரெக்ட் பண்ணிட்டே இருக்காங்க. ‘லிரிக்ஸை அப்புறம் டப் பண்ணிக்கலாம். இப்போ டியூன்ல கவனம் செலுத்து’னு ரஹ்மான் சார் கோபப்பட்டதுல என் கண்லேர்ந்து கடகடனு கண்ணீர்... அதைப் பார்த்து ரஹ்மான் சாரே ஒருமாதிரியாகி என்னைச் சமாதானப்படுத்தினார். அந்தப் பாட்டை ரெக்கார்ட் பண்ணி முடிச்சதும் தம்ஸ் அப் காட்டினார். அப்புறமென்ன... ‘கண்ணீரே...கண்ணீரே... சந்தோஷக் கண்ணீரே...’னு மனசுக்குள்ள ரஹ்மான் சார் சாங்...’’ என ஜாலியாகப் பேசும் ஷாஷாவுக்கு நடிகையாக வேண்டும் என்ற கனவும் உண்டு.

‘`பாட வந்ததுலேர்ந்தே நடிக்கவும் ஏகப்பட்ட ஆஃபர்ஸ். ஆனா அப்பல்லாம் நான் யோசிக்கவே இல்லை. இப்ப நடிச்சா என்னன்னு தோணுது. பாடகியா என்னை ஏத்துக்கிட்ட தமிழ் மக்கள் நடிகையாகவும் ஏத்துப்பாங்கன்ற நம்பிக்கை இருக்கு...’’

ஷாஷா செம ஷார்ப்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜோனிடா காந்தி

இசைப்புயலின் விஷ் லிஸ்ட் வாய்ஸில் தவறாமல் இடம்பிடிக்கிற ஸ்வீட்டி ஜோனிடா காந்தி. ‘வேலைக்காரன்’ படத்தில் ‘இறைவா’ லிரிக் வீடியோவில் அனிருத்துடன் ஆட்டம்போட்டிருக்கும் அதே பொண்ணு. யூட்யூப் கண்டுபிடித்த யூத் டேலன்ட்.

‘`பேச்சிலர் ஆஃப் ஹெல்த் சயின்ஸ்,  பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்னு ரெண்டு டிகிரி முடிச்சிருக்கேன். அதெல்லாம் பேருக்குப் பின்னாடி போட்டுக்கிறதுக்காகப் படிச்சது. பேருக்கு முன்னாடி பாடகிங்கிறதுதான் எனக்கான அடையாளமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.

இசை முகங்கள்!

17 வயசுல நான் பண்ணின மியூசிக்கல் வீடியோஸ் செம வைரலாச்சு. யூட்யூப்ல என் முகமும் குரலும் பாப்புலராச்சு. வீட்டைப் பொறுத்தவரைக்கும் படிப்புதான் முக்கியம்னு சொல்லிட்டாங்க. அதுலேர்ந்து எஸ்கேப் ஆக யூட்யூப் சேனலை யூஸ் பண்ணிட்டிருந்தேன். ஆனா, அது ரஹ்மான் மாதிரியான லெஜண்டு கிட்ட என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கும்னு சத்தியமா நினைக்கலீங்க... என்னுடைய கோக் ஸ்டுடியோ பெர்ஃபாமன்ஸைப் பார்த்துட்டு ரஹ்மான் சார் பாராட்டி ட்வீட் பண்ணியிருந்தார். ரெண்டு வருஷம் கழிச்சு ஒருநாள் ரஹ்மான் சார் ஸ்டுடியோவிலேர்ந்து போன் வந்தது. ‘ஓகே கண்மணி’ படத்துக்கான பாடல் ரெக்கார்டிங்... உடனே சென்னை வர முடியுமா’னு கேட்டாங்க, வந்தேன். தமிழ்ல என்னுடைய முதல் பாடல் ‘மென்டல் மனதில்...’ அப்புறம் ‘24’ படத்துல ‘மெய் நிகரா’ பாடுற சான்ஸ் கொடுத்தார். ஒவ்வொருமுறை ரஹ்மான் சார் ஸ்டுடியோவுக்குள்ள கால் வைக்கிறபோதும் புதுசு புதுசா ஏதோ ஒண்ணைக் கத்துக்கிட்டே இருக்கேன். எல்லோருக்கும் கிடைக்காத பிளெஸ்சிங் அது.

‘இறைவா’ சாங் பாடினபோதும் அனிருத் எனக்கு ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிச்சு அதுக்கு அர்த்தம் சொல்லிப் புரிய வெச்சார். செம ஃபன்னான எக்ஸ்பீரியன்ஸ். அடுத்து அனிஷ் சூட் கூட ‘கேஸல்ஸ்’னு ஒரு சிங்கிள்ஸுக்கான வேலையில தீவிரமா இருக்கேன். இசைதான் என் உலகம்’’ என்கிறார் ஜோனிடா!

கலக்கு கண்ணு!

பத்மலதா

உத்தமவில்லனில் வரும் `காதலாம் கடவுள் முன்’ உட்பட மனதில் நிற்கும் பாடல்களைப் பாடியவர் பத்மலதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், துளு என ஆறுமொழிகளில் அசத்துபவர்.

‘` `குட்டிப்புலி’, ‘நையாண்டி’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘அமரகாவியம்’,  ‘ஆப்பிள் பெண்ணே’, ‘கோலிசோடா’னு நிறைய படங்கள்ல பாடியிருக்கேன்.  ‘உத்தம வில்லன்’ படத்துல கமல் சார் வரிகளுக்குப் பாடினது மறக்க முடியாத அனுபவம்’’  என  நேற்று பாட வந்தவருக்கான அடக்கத்துடன் சொல்பவருக்கு ‘கவண்’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’,  ‘எட்டுத் தோட்டாக்கள்’ என 2017-லும் ஏகப்பட்ட ஹிட்ஸ். இவர் பாடிய ‘காந்தாரி யாரோ’வும் (மகளிர் மட்டும்), ‘டிங்கா... டிங்கா’வும் (தீரன் அதிகாரம் ஒன்று) பாடகி யார் என விசாரிக்கவைத்த பாடல்கள். 

இசை முகங்கள்!

‘`ட்ராக் பாடச்சொன்னாலும் பாடுவேன். அதை வெறும் ட்ராக்கா மட்டும் நினைச்சுப் பாடாம, ஃபைனலா நினைச்சுப் பாடுவேன்.  ட்ராக்ல பாடின குரலையே ஃபைனல்ல பாட வைக்கணும்னு இசையமைப்பாளர் நினைக்கிற அளவுக்கு என்னுடைய அதிகபட்ச உழைப்பைக் கொடுப்பேன். அப்படி ட்ராக் பாடப் போய், அது பிடிச்சு என்னையே பாட வெச்சு ரிலீசான பாடல்கள் அதிகம். மியூசிக் சம்பந்தமான எந்த வேலையைக் கொடுத்தாலும் என்னால  சந்தோஷமாகவும் நிறைவாகவும் பண்ண முடியும்.

அதே மாதிரி எந்தப்  பாட்டு கொடுத்தாலும் என்னால பாட முடியும். ஜாஸ் ஸ்டைல், ராப் ஸ்டைல்னு எல்லாத்துக்கும் நான் ரெடியா இருப்பேன்...’’ என்னும் பத்மலதா நண்பர்களுடன் இணைந்து  ‘மெக்ஸிகன் ப்ளூஸ்’ என்கிற பெயரில்  இசைக்குழு வைத்திருக்கிறார். இந்த வருடம் சென்னையில் திருவையாறு அரங்கில் நிகழ்ச்சி நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறது இந்த இசைக்குழு.

பலே பத்மலதா!

ஷரண்யா கோபிநாத்

`சிலுக்கு மரமே’, `முன்னாள் காதலி’, `போதைப் பூ’ தொடங்கி, பல லேட்டஸ்ட் பாடல்களில்  ஒலிக்கிற மெட்டாலிக் குரலுக்குச் சொந்தக்காரி ஷரண்யா.

‘’சின்ன வயசுல ஸ்கூல் கொயர்ல பாடியிருக்கேன். காலேஜ் படிக்கும்போது க்ரோமோசோல்னு ஒரு இசைக்குழு ஆரம்பிச்சோம். நிறைய போட்டிகள்ல கலந்துகிட்டு ஜெயிச்சோம். அப்படியொரு போட்டியிலதான் இசையமைப்பாளர் ஜிப்ரானின் மேனேஜர் ராகவேந்திரா எனக்கு அறிமுகமானார்.

திடீர்னு ஒருநாள் ராகவேந்திரா போன் பண்ணி ஜிப்ரான் சார் மியூசிக் பண்ற தெலுங்குப் படத்துல ட்ராக் பாடக் கூப்பிட்டார். அதுவே ஃபைனலாச்சு. அப்புறம் ‘ஜில்’ படத்துல ‘பொரி மசாலா பொரி’னு ஒரு டூயட் பாடினேன். அடுத்து ‘உத்தமவில்லன்’ படத்துல கமல் சார்கூட  ‘சிங்கிள் கிஸ்க்கே லவ்வா’ பாடினேன்...’’ ரெக்கார்டிங் ரெக்கார்டு சொல்லும் ஷரண்யா ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், ஃபேஷன் டெக்னாலஜி படித்தவர்.தற்போது தனியார் வங்கியில் பணிபுரிகிறார்.

இசை முகங்கள்!

‘`பகல்ல பேங்க் வேலை... சாயந்திரம் மியூசிக்னு ரெண்டையும் அழகா பேலன்ஸ் பண்ணிட்டிருக்கேன். வேலை நேரத்துல மியூசிக்கையோ, மியூசிக்குக்கான நேரத்துல வேலையையோ போட்டுக் குழப்பிக்கிறதில்லை. ரெண்டும் இல்லாத நாள்கள் தியேட்டர் ஆர்ட்ஸுக்கான அழகான தருணங்கள்.

என் குரல் வழக்கமானதில்லை. அப்படி தனியா தெரியறதாலதான் இத்தனை பாடல்கள் என்னைத் தேடி வருது. வேற யாராலயும் பாட முடியாதுங்கிற பாட்டு எனக்குத்தான் வரும். அதே நேரம் ரெகுலரான மெலடி பாடுற மாதிரியான ஸ்வீட் வாய்ஸ் எனக்கு இல்லைங்கிறதால நிறைய பாடல்கள் மிஸ் ஆகுறதும் உண்டு. ஆனா இதுவரைக்கும் நானா தேடிப் போய் யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டதில்லை. ஸோ... எந்த ரேஸ்லயும் நான் இல்லை...’’

ஷரண்யா ஸோ ஹேப்பி!