Published:Updated:

இனி ஆபரேஷன் பண்ணினா உயிருக்கு ஆபத்து!

இனி ஆபரேஷன் பண்ணினா உயிருக்கு ஆபத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி ஆபரேஷன் பண்ணினா உயிருக்கு ஆபத்து!

கு.ஆனந்தராஜ், படம்: சொ.பாலசுப்ரமணியன்

“சினிமால நடிச்சு 25 வருஷமாகுது. ஆனாலும், இன்னிக்கும் மக்கள் என்னை மறக்காம இருக்காங்கன்னா, ‘பிந்து கோஷ்’னு என் பெயரைக் கேட்டதுமே அவங்களுக்கு ஞாபகம் வர்ற என் பருமனான உருவம்தான். ஆனா, அதுதான் இப்போ எனக்குப் பெரிய வலிகளைக் கொடுத்திட்டிருக்கு’’ - உடலில் சுகவீனம் இருந்தாலும், குரலில் பழைய உற்சாகத்துடன் பேசுகிறார் பிந்துகோஷ். 1980, 90-களில் காமெடி நடிகையாகக் கலக்கியவர், இப்போது சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு சிறிய வாடகை வீட்டில் தனிமைச் சூழலில் வசித்துவருகிறார்.

“சென்னைதான் எனக்குப் பூர்வீகம். ரெண்டு அக்கா, ஒரு தங்கை, மூணு தம்பிங்கனு பெரிய குடும்பம் கிருஷ்ணவேணிங்கிறதுதான் என்னோட நிஜப்பெயர். படிப்புல ஆர்வமில்லாம, ஒண்ணாம் வகுப்பிலேயே பல வருஷம் ஃபெயிலானேன். ‘நான் படிக்கலை’னு பெற்றோர்கிட்ட சொல்லிட்டு, எனக்கு  ஆர்வமிருந்த இசைத் துறையில் கவனம் செலுத்தினேன். நிறைய மேடை நிகழ்ச்சிகள்ல பாடிட்டிருந்த நிலையில, 11 வயசுல சினிமா வாய்ப்பு கிடைச்சது. என் முதல் படம் ‘களத்தூர் கண்ணம்மா.’ கமல் சாரோட நானும் ஒரு குழந்தையா நடிச்சிருப்பேன். தொடர்ந்து நிறைய படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். காலையிலிருந்து சாயந்திரம்வரை அவங்க சொல்றமாதிரி நடிச்சா, ஒரு ரூபாய் சம்பளம் கொடுப்பாங்க. எனக்கு டான்ஸும் நல்லா வரும் என்பதால், முறையா நடனம் கத்துக்கிட்டு, குரூப் டான்ஸரா வேலைபார்க்க ஆரம்பிச்சேன்’’ என்பவருக்கு, சக டான்ஸ் குரூப் தோழிகள் வைத்த பெயர் ‘விமலா.’

இனி ஆபரேஷன் பண்ணினா உயிருக்கு ஆபத்து!

``இளமைப் பருவத்தில் நான் ரொம்ப ஒல்லியாயிருப்பேன். அப்போ ஃபேமஸா இருந்த தங்கப்பன் மாஸ்டர், தான் கோரியோ பண்ற படங்கள்ல எல்லாம் எனக்குத் தவறாம குரூப் டான்ஸரா வாய்ப்பு கொடுப்பார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயானு கிளாஸிக் காலத்துல உச்சத்துல இருந்த எல்லோர் கூடவும் குரூப் டான்ஸ் ஆடியிருக்கேன். நடிகை நளினியின் அப்பா வைக்கம் மூர்த்தி மாஸ்டர் கூடவும் அசிஸ்டென்ட்டா நூற்றுக்கும் மேலான மலையாளப் படங்கள்ல வேலைபார்த்திருக்கேன். அவர் இல்லாத நேரங்களில் நானே கோரியோகிராப்பியும் செய்வேன்’’ என்பவர் தன் இளமைக்கால போட்டோக்களை ஒவ்வொன்றாக ஆர்வத்துடன் காட்டுகிறார். ஒவ்வொரு புகைப்படத்துக்குப் பின்னாலும் ஒரு கதை. கூடவே டான்ஸர் விமலா எப்படி நடிகை பிந்துகோஷ் ஆனார் என்பதைக் கேட்டதும் ஆர்வத்தோடு சொல்ல ஆரம்பித்தார்.

‘`1982-ம் வருஷம், ‘கோழிகூவுது’ படத்துல நடிக்க, குண்டா, வெகுளியான தோற்றத்துல, நல்லா டான்ஸ் ஆடத் தெரிஞ்ச ஒரு லேடி ஆர்ட்டிஸ்ட் வேணும்னு அப்படத்தின் டைரக்டர் கங்கை அமரன் தேடிட்டிருக்க, அவரைச் சந்திச்சு அந்த வாய்ப்பைப் பெற்றேன். அப்போ என் உருவத்தை வெச்சுப் பலரும் என்னை ‘கோஷ்’னு கூப்பிடுவாங்க. ‘கோழிகூவுது’ பாடல் ஷூட்டிங் சமயம், ஒருநாள் திடீர்னு என்னை தாரா மாஸ்டர் ‘பிந்துகோஷ்’னு கூப்பிட, பிறகு அதுவே என் நிரந்தரப் பெயராகிடுச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இனி ஆபரேஷன் பண்ணினா உயிருக்கு ஆபத்து!

20 வருஷத்துக்கும் மேல டான்ஸரா இருந்தும் கிடைக்காத புகழ், சினிமாவில் ஒரு சில படங்களில் நடிச்சதுமே கிடைச்சது. ரஜினி, கமல், மோகன், பிரபு உள்ளிட்ட அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலரின் படங்கள்லயும் நடிக்க ஆரம்பிச்சேன். சினிமாவில் காமெடி ரோல், நடிகர் ஜெய்கணேஷ் ட்ரூப்ல அவருக்கு ஜோடியா டிராமா ஆக்டிங், ஸ்டார் நைட், வெளியூர் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகள்னு இடைவிடாம 15 வருஷங்களுக்கும் மேல ஓடிட்டிருந்தேன். நிறைய சம்பாதிச்சேன். சென்னை தசரதபுரம் பகுதியில ஒன்றரை கிரவுண்ட்ல நிலம் வாங்கி அதுல பெரிய வீடு கட்டினேன். ‘படிப்பும் இல்ல, சினிமாத் துறையில் இருந்துட்டு வெயிட்டும் போட்டுட்ட’னு என்னைச் சுற்றிய ஏளனங்களையெல்லாம் கடந்து, எனக்குனு ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கிட்டேன்.’’

இப்படிப் பரபரவென இருந்த ஒருவர் ஏன் திரையுலகை விட்டு வெளியேறினார்? 

“என் வீட்டுக்காரர் ரங்கநாதன், சினிமா பிரபலங்கள் பலரின் மேனேஜரா இருந்தார். நாங்க ரெண்டு பேரும் காதலிச்சோம். எங்க வீட்டின் எதிர்ப்பை மீறி அவரைக் கல்யாணம் செய்துகிட்டேன். அதனால, எப்படியாச்சும் நல்ல நிலைக்கு வரணும்னு உழைச்சேன். அதிகாலை ஷூட்டிங் கிளம்பினா, நைட்டு 10 மணிக்குதான் வீட்டுக்கு வருவேன். சாப்பாடு, தூக்கத்துல சரியா கவனம் செலுத்தலை. இதனால தைராய்டு பிரச்னை ஏற்பட, அதுக்கும் கவனம் கொடுக்கலை. எங்க பெரிய பையன் திருமுருகன் பிறந்து 10 வருஷம் கழிச்சு சின்னப் பையன் சிவாஜி பிறந்தான். அதற்குப் பிறகு என் உடல் எடை 116 கிலோவில் வந்து நின்று, ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. ஆபரேஷன் பண்ணி, எடையை 90 கிலோவா குறைச்சேன். ஆறுமாசம் கழிச்சு மறுபடியும் எடை அதிகரிக்க, மூணு முறை ஆபரேஷன் பண்ணியாச்சு. இனி ஆபரேஷன் பண்ணினா உயிருக்கு ஆபத்துனு டாக்டர்ஸ் சொன்னதால, வீட்டில் ஓய்விலிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என் சினிமா வாய்ப்புகளும் நின்னுபோயிடுச்சு’’ என்பவர், பல ஆண்டுகளாகத் தனிமையில் வசித்துவருகிறார்.

இனி ஆபரேஷன் பண்ணினா உயிருக்கு ஆபத்து!

“இப்போ 85 கிலோவில் என் எடையைக் கட்டுக்குள் வெச்சிருக்கேன். டி.வி-யில் ரொம்பப் பிடிச்ச பாட்டுபோட்டா, என் கால்கள் என்னையும் மீறி சமயங்களில் ஆட ஆசைப்படும். அப்படி அஞ்சு, ஆறு தடவை கீழ விழுந்திருக்கேன். அப்படி விழுந்தாக்கூட தூக்கிவிட இப்போ யாரும் என்கூட இல்லை. 13 வருஷத்துக்கு முன்னாடி கணவர் இறந்துட்டார்.  பசங்களுக்குக் கல்யாணமாகிடுச்சு.  அவங்கவங்க குடும்பத்தோட சந்தோஷமா இருக்கட்டும்னு தொந்தரவு செய்றதில்லை. அவங்க ரெண்டு பேரும்கூட சினிமாவில் டான்ஸ் மாஸ்டராதான் வேலைபார்க்கிறாங்க. அவங்களுக்கும் சராசரி வருமானம்தான் என்பதால, முடிஞ்ச அளவுக்கு எனக்குச் செலவழிக்கிறாங்க. இதோ... ஒரு பெட் வைக்கிற அளவுக்கு சின்ன ஹால், சின்னதா கிச்சனும் பாத்ரூமும் இருக்கிற இந்த வீட்டோட வாடகை 5,000 ரூபாய். தைராய்டு, இதயப் பிரச்னை, மூட்டுவலினு என் மருந்து, மாத்திரை செலவுக்கே மாசம் 3,000 ரூபாய் தேவைப்படுது. சாப்பாடு உள்ளிட்ட மற்ற தேவைக்கெல்லாம் சேர்த்தா மொத்தம் மாசத்துக்கு ரூபாய் 12,000 ஆயிடும்.

முன்ன சொந்த வீட்ல வாழ்ந்தப்போ, வேலையாள்கள் இருந்தாங்க. 10 நாய்களை வளர்த்தோம். குடும்பக் கஷ்டத்துக்கு அந்த வீட்டை வித்தாச்சு. இன்னிக்கு அன்றாடத் தேவைக்கே சிரமப்படுறேன். சினிமால நடிச்சு 25 வருஷமாகுது. இந்த 69 வயசுல, சாமி குடும்பிடுறது, டி.வி பார்க்கிறது, பழைய சம்பவங்களை நினைச்சுப்பார்க்கிறதுனு என் வாழ்க்கையை ஓட்டிட்டிருக்கேன். என்னை ஞாபகம்வெச்சு நீங்க பார்க்க வந்திருக்கிறது, ரொம்ப வருஷம் கழிச்சு வாழ்க்கையில சந்தோஷத்தை தரிசிக்க வெச்சிருக்கு.

மக்கள் நம்மளை காலம் கடந்தும் ஞாபகம் வெச்சிருக்காங்க என்பதுதான், ஒரு கலைஞனுக்குப் பெரிய சந்தோஷம், திருப்தி, நிம்மதி எல்லாம்’’ - சட்டென விழிகளின் ஓரம் கசியும் நீரைத் துடைத்துக்கொண்டு புன்னகைக்கிறார், எத்தனையோ பேரை நடித்து மகிழ்வித்த பிந்துகோஷ்.