என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - கோவை
Published:Updated:

சினிமா விமர்சனம் : ஒஸ்தி

விகடன் விமர்சனக் குழு

##~##

'நான் கண்ணாடி மாதிரிலே’ என நல்லவனுக்கு நல்லவனும் கெட்ட வனுக்குக் கெட்டவனுமான அதிரடி அடிதடி 'ஒஸ்தி’ போலீஸ் கதை!  

 இந்த வருட கோட்டாவுக்குத் தமிழ் சினிமாவின் 'போலீஸ் ஸ்டோரி’!

வில்லன் சோனு வகுக்கும் வில்லங்க வியூகங்களுக்குக் குறுக்கே நிற்கிறார் 'ஒஸ்தி’ போலீஸ் சிம்பு. அவருடைய 'ஆகாத’ சகோதர னான 'ஜித்தன்’ ரமேஷையே சிம்புவுக்கு எதிராகக் கொம்பு சீவுகிறார் சோனு. இறுதியில் எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடந்து முடிகிறது!

சல்மான் கான் நடிப்பில் இந்தியில் தடதடத்த 'டபாங்’ படத்தைத் தமிழுக்குத் தழுவி இருக்கிறார் இயக்குநர் தரணி.  

சினிமா விமர்சனம் : ஒஸ்தி

பரபர பஞ்ச், சோனுவோடு டிஞ்ச், ரிச்சாவோடு இச், மல்லிகாவோடு நச், ரமேஷ§டன் ப்ச்... எனப் படம் முழுக்கத் துறுதுறுவென வலம் வந்து கவனிக்கவைப்பது சிம்பு ஸ்பெஷல்! ஆனால், முகத்தில் அநியாயத் துக்குக் குழந்தைத்தன கோட்டிங் இருப்பதாலோ என்னவோ... 'இன்ஸ்பெக்டர்’ ஆக மனதில் நிற்க மறுக்கிறார் சிம்பு.

ஒஸ்தியின் ஊறுகாய்... ரிச்சா கங்கோபாத்தியாய். 'நடிக்கவே வேண்டாம்’ என்று யூனிட்டில் சொல்லிவிட்டார்கள்போல. இடுப்பையும் முதுகையும் மட்டும் கேமராவுக்குக் காட்டிவிட்டு, சிலையாக நின்றுகொண்டே இருக்கிறார். ஆனால், கிடைக்கும் மைக்ரோ செகண்ட் இடைவெளி யிலும்... பொண்ணு கண்ணு கதை, கவிதை, காவியம் பேசுது!  

'ஆக்ரோஷமா சொல்ல வேண்டிய டயலாக்கை, இப்படி ஆட்டுக் குட்டி யைத் தடவிக் கொடுத் துட்டுச் சொல்ற மாதிரியே சொல்றியே!’ என்று 'ரசிகர்களின் ஆதரவோடு’ சிம்பு வைப் படம் முழுக்கக் கலாய்க்கும் சந்தானம்தான் ஒஸ்தியின் ஆஸ்தி!  

வார்த்தையின் இறுதியில் ஒரு 'லே’ போட்டுவிட்டாலே, அது திருநெல்வேலி பாஷை என்பது என்ன லாஜிக்லே?

பறந்து பறந்து அடிப்பது, பதறப் பதற பஞ்ச் பேசுவது என கோடம்பாக்கம் கொஞ்ச நாட்களாக மறந்திருந்த அக்கப்போர்களை அலங்காரம் பண்ணி அரங்கேற்றி இருக்கிறார்கள். 'நான் ஒரு ஓட்டு போட்டா, பத்தாயிரம் ஓட்டு போட்ட மாதிரிலே’, 'சிவாஜி தி பாஸ்... ஒஸ்தி தி மாஸ்’, 'நான் கண்ணாடி மாதிரி... முறைச்சா முறைப்பேன்... சிரிச்சா சிரிப்பேன்லே’ என்று படத்தில் வில்லனின் அடியாட்கள் முதற்கொண்டு அத்தனை கேரக்டர்களும் பஞ்ச் பார்சல் செய்கிறார்கள்.

சினிமா விமர்சனம் : ஒஸ்தி

சிக்ஸ் பேக் சீற்றம் தாங்காமல் சட்டை கிழிந்து பறப்பதெல்லாம்.... அவ்வ்வ்வ்!

தடதட அதிரடிதான் என்றாலும் 'தமிழ்நாட்டுக் காப்புதான்..’, 'நெடுவாழி...’, 'வாடி வாடி...’, 'கலா சலா...’ என தமனின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹம்மிங் ரகம். சேஸிங், ரேஸிங் என அலைபாயும் மசாலா கதையிலும் கோபிநாத்தின் கேமரா செம நேர்த்தி!

படத்தில் எல்லாரும் பக்கம் பக்கமாகப் பேசித் தீர்க்கிறார்கள். வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது... உலகம் இவ்வளவு அமைதியானதா என்று?