Published:Updated:

“இப்படி மண்ணு மாதிரி இருக்கியே!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“இப்படி மண்ணு மாதிரி இருக்கியே!”
“இப்படி மண்ணு மாதிரி இருக்கியே!”

ரமணி மோகனகிருஷ்ணன், படம்: ஜெ.வேங்கடராஜ்

பிரீமியம் ஸ்டோரி

‘`இந்த உலகத்துல இருக்கிற ஆதி மொழிகளுக்கே உள்ள சொத்து, கெத்து... கிராமியப் பாடல்கள். அந்த மொழிகள்ல எல்லாம் அவங்களோட பண்பாடு, கலாசாரம், தொழில், வேலை சார்ந்த நாட்டார் பாடல்கள் நிச்சயமா இருக்கும். ஒரு வகையில, நம்ம மொழியைக் கடத்தி வந்ததுல, மறைக்கப்பட்ட கதைகள கொண்டு வந்ததுல நாட்டுப்புறப் பாடல்களுக்கும் முக்கியப் பங்கிருக்கு. அப்போவே ‘இண்டிபெண்டன்ட் மியூசிக்’கா கேசட்டுல வந்த நாட்டுப்புறப் பாடல்கள், இப்போ யூ-ட்யூப்வரை வந்திருக்கு’’ - அதிரும் குரலில் பேசுகிறார், நாட்டுப்புறப் பாடகி சின்னப்பொண்ணு.

கௌதம் வாசுதேவ் மேனனின் ‘ஒன்றாக என்டர்டெய்ன்மென்ட்’ தயாரிப்பில், கார்த்திக்கின் வெஸ்டர்ன் இசையில், மதன் கார்க்கி வரிகளில், சதீஷின் நடனத்தில் யூ-ட்யூபில் சமீபத்தில் வெளியாகி அசத்திய ‘கூவ’ பாடலை, ‘இது புதுசா இருக்கே’ என்று பார்த்தால், அந்த மெர்சல் காம்போவில், பார்ட்டி கவுனில் வந்து பாடுகிறார், ஆடுகிறார் சின்னப்பொண்ணு. `கூவ’க்கான வியூக்கள் மில்லியனைத் தாண்டும் நிலையில் சின்னப்பொண்ணுவிடம் பேசினேன்.

“இப்படி மண்ணு மாதிரி இருக்கியே!”

சின்னப்பொண்ணு

``இது புதுக் கூட்டணியா இருக்கே?’’

‘`கார்த்திக் சார் மியூசிக்ல கௌதம் சார் படத்துக்குப் பாட்டு பாடணும்னு சொல்லி அவர் மேனேஜர் போன் பண்ணுனார். நான் போனப்போ அங்க ஏற்கெனவே ட்ராக் இருந்துச்சு. கார்த்திக் சார் ரெண்டு முறை பாடிக் காமிக்க, கொஞ்ச நேரத்துல நான் பாடிக் கொடுத்துட்டேன். கார்த்திக் சாருக்கு ரொம்பப் புடிச்சுப்போச்சு. ‘இங்க செம்மையா போயிட்டிருக்கு ஜி, 10 நிமிஷம் வந்துட்டுப் போங்க’னு கௌதம் சாருக்கு கார்த்திக் சார் போன் பண்ண, அவரும் வந்துட்டார். ரெண்டு பேரும், ‘சும்மா ஏதாவது எஃபெக்ட்ஸ் குடுங்க மேடம்’னு சொல்ல, ‘யார்ரா நீ’ன்னு நான் பாடினப்போ, ‘வாவ்’ன்னாங்க!”

``அந்த கெட்டப் சேஞ்சு நல்லா இருக்கே..!”

‘`ரெக்கார்டிங் முடிஞ்ச கொஞ்ச நாள்ல, கௌதம் சார் மேனேஜர் மறுபடியும் போன் பண்ணினார். ‘இதை வீடியோ ஷூட் பண்ணலாம்னு சார் ப்ளான் பண்றார். உங்களுக்கு டிரெஸ் அளவெடுக்க ஆள் வருவாங்க’ன்னு சொன்னார். கௌதம் சாரோட சகோதரிதான் அந்த கவுனை வடிவமைச்சாங்க. கேரளாவுல இருந்து ஒரு வாரம் கழிச்சு அந்த டிரெஸ் வந்ததும்தான் ஷூட்டை ஆரம்பிச்சோம். பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்த வருஷம் நல்லபடியா ஆரம்பிச்சிருக்கு.”

``பாடல்ல வர்ற ‘கூவ’ங்கிற வார்த்தை திட்டுற வார்த்தைதானே?’’

``ஆமா. எங்க ஊருல ‘ஆக்கங்கெட்ட கூவ’ன்னு திட்டுவாங்க. ‘இப்படி மண்ணு மாதிரி இருக்கியே’ன்னு சொல்ற வார்த்தை அது. இந்தப் பாட்டுல ஹீரோ அப்படித் திட்டு வாங்குவாரு.’’

“இப்படி மண்ணு மாதிரி இருக்கியே!”

``தமிழ்நாட்டு நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவரா செயல்பாடுகள் எப்படிப் போகுது?’’

‘இப்போதான் 3000-க்கும் மேலான கலைஞர்கள், 50,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களோட மாநாட்டை நடத்தி முடிச்சோம். 1997-ல ஆரம்பிச்ச சங்கம், 98, 99-ல மாநாடு நடந்துச்சு. அதுக்கு அப்புறம் இத்தனை வருஷங்கள் கழிச்சு இப்போதான் மாநாடு நடக்குது. சந்தா மூலமா பணம் திரட்டி... நலிவடைந்த கலைஞர்களுக்கும், ஆதரவற்ற கலைஞர்களுக்கும் ஊக்கத்தொகை கொடுக்க ஏற்பாடு பண்ணுறோம். அரசாங்கம் கொஞ்சம் உதவி பண்ணினாலும், அது எல்லோருக்கும் சரியா போய்ச்சேர்வதில்லை. நிறைய அலைய வேண்டியது இருக்கு. அதை மாத்தணும்.’’

``சினிமாப் பயணம்..?’’

``கவிஞர் அறிவுமதி சார் பேசிய நிறைய மேடைகள்ல நான் பாடியிருக்கேன். அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகம். ‘சந்திரமுகி’ படத்துல ‘வாழ்த்துறேன் வாழ்த்துறேன்’ பாட்டுக்கு பி.வாசு சார் புது வாய்ஸ் வேணும்னு கேட்டப்போ, அறிவுமதி சார் என்னைச் சொல்லியிருக்கார். ‘நாக்குமுக்கா’ பாடல் வாய்ப்பு கிடைச்சது, இன்னும் சுவாரஸ்யமான அனுபவம். ஒருமுறை தி.நகர்ல, சிவாஜி சார் வீட்டுக்குப் பக்கத்துல ‘மக்கள் கலை இலக்கிய விழா’ நடந்துச்சு. அதுல நான் பாடினதை, அப்போ காலேஜுல படிச்சுட்டிருந்த ‘காதலில் விழுந்தேன்’ பட இயக்குநர் பி.வி.பிரசாத் கேட்டிருக்கார். ‘நாம படம் எடுக்கும்போது இவங்கள பாடவைக்கணும்’னு நெனச்சாராம். அஞ்சு வருஷம் கழிச்சு, எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார். நான் சினிமாவில் பாடுவேன்னெல்லாம் நினைச்சதே இல்லை. ஆனா, என் வீட்டுக்காரருக்கு அந்த ஆசை இருந்துச்சு.

நானும் என் வீட்டுக்காரரும் கச்சேரிகள்ல பாடும்போது காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுகிட்டோம். அவரு டோலக்கு, பறைன்னு எல்லா இசைக் கருவிகளையும் வாசிப்பார். கல்யாணத்தப்போ அவருக்கு 21 வயசு, எனக்கு 18 வயசுதான். 26 வருஷம் ஆகிடுச்சு... சின்னப்பொண்ணு - குமார்னு, எங்க விசிட்டிங் கார்டுல இருந்து எல்லாத்துலேயும் என்னோட பேருதான் முன்னாடி இருக்கும். ‘அட ஏங்க’னு என் வீட்டுக்காரர்கிட்ட கேட்டா, ‘நீ என்ன அந்தக் காலத்துல இருக்கே?’னு சிரிப்பாரு. ரெண்டு குழந்தைகளோட சந்தோஷமா இருக்கோம். என் பொண்ணு பாடுறா, பையன் கீபோர்டு வாசிக்கிறான்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு