Published:Updated:

சவரக்கத்தி - சினிமா விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சவரக்கத்தி - சினிமா விமர்சனம்
சவரக்கத்தி - சினிமா விமர்சனம்

சவரக்கத்தி - சினிமா விமர்சனம்

பிரீமியம் ஸ்டோரி

கொலைக்கத்திக்கும் சவரக்கத்திக்கும் இடையிலான வாழ்வா சாவா துரத்தலே ‘சவரக்கத்தி’!

பரோல் முடிந்து மாலை 6 மணிக்குள் சிறை செல்ல வேண்டிய தாதா மங்கா. அப்படிப்பட்ட ஒருவனைச் சிகை திருத்தும் சாமானியன் வம்புக்கிழுத்தால் என்னாகும்? ஒண்ணே முக்கால் மணிநேரமும் ‘கொலவெறி சேஸிங்.’ கத்தியில் ஆரம்பித்து, கத்தியில் முடியும் படத்தில் நடுவில் எக்கச்சக்க எமோஜிக்கள்.

 சாதாரணக் கதையை வைத்துக்கொண்டு படத்தில் வரும் சின்னச் சின்னப் பாத்திரங்களிலும் அதுபேசும் மனிதத்திலும் கவனம் ஈர்த்திருக்கிறார்கள் இயக்கிய ஜி.ஆர்.ஆதித்யாவும் திரைக்கதை எழுதிய மிஷ்கினும். வெல்டன் பிரதர்ஸ்! 

சவரக்கத்தி - சினிமா விமர்சனம்

கொலைசெய்ய அஞ்சாத ரௌடியாக மிஷ்கின் முறைப்பும் விறைப்புமாய் அட்டகாசப் பாத்திரம். புரிந்துகொள்ள முடியாத சிக்கலான கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். காமெடியாக எதுவும் பண்ணாமலே நம்மைச் சிரிக்க வைத்திருப்பதில் தெரிகிறது அவரது உழைப்பு!

வாய்ச்சவடாலையே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவனாக இயக்குநர் ராம். `முகலாயச் சக்கரவர்த்தி அக்பருக்கே எங்க முப்பாட்டன்தான் ஷேவிங் பண்ணினார் தெரியுமா?’ என அளந்து விடும் அண்டப்புளுகன்! `அடியே சுபத்ரா உன் நகையைக் கழட்டிக் கொடுடி!’ என மனைவியை அதட்டி மிரட்டுவதாகட்டும், அதே மனைவியை மீட்க, ரௌடியிடம் கதறிக் கெஞ்சுவதாகட்டும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

ராமின் மனைவியாக வரும் பூர்ணா தனித்துவமான நடிப்பில் அசத்தலாக ஸ்கோர் செய்திருக்கிறார். புள்ளத்தாச்சிப் பெண்ணாய், செவிக்குறைபாடு உள்ளவராகப் பரிதாபம் சுமந்தாலும், முணுக்கென்றால் மூணு  பழமொழி சொல்வது, கணவனின் கையாலாகாத்தனத்தைப் போகிறபோக்கில் குத்திக்காட்டுவது, அதே கணவனுக்கு ஆபத்து எனும்போது வரிந்து கட்டிக் கொண்டு அடிக்கப்பாய்வது என  விட்டுக்கொடுக்காமல் கெத்து காட்டியிருக்கிறார். அசத்திட்டீங்க பூர்ணா!

சவரக்கத்தி - சினிமா விமர்சனம்

படத்தின் சின்னச் சின்னப் பாத்திரங்களும் கூடக் கவனம் ஈர்ப்பது திரைக்கதையின் பலம். ராமின் சலூன் உதவியாளர் கொடுக்கு, மிஷ்கின் கேங்கில் இருக்கும் சைஸ்வாரியான அடியாட்கள், எமோஷனலாக மிஷ்கினைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பெத்தப்பா, ‘இங்லீஷ் பஞ்ச்’ ஷாஜி, ‘பொய்யாமொழி’ டீக்கடைக்காரர், ஆஸ்பத்திரி நர்ஸ், துரத்தும் இன்ஸ்பெக்டர், காதல் ஜோடி, மகளைத்தேடும் பெற்றோர், கரும்பு ஜூஸ் கடை அம்மா, வாடகை சைக்கிள்கடைக்காரர், குப்பை பொறுக்கும் ஆள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். முதல் காட்சியில் `படாத இடத்தில் பட்ட’ மிஷ்கினின் அடிப்பொடி, க்ளைமாக்ஸ் வரை உடல்மொழியாலேயே நம்மைச் சிரிக்க வைத்திருப்பதெல்லாம் மிஷ்கின் டச்!

சவரக்கத்தி - சினிமா விமர்சனம்

மூச்சுகூட விடாமல் ஓடும் திரைக்கதையை அபாரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது கார்த்திக் வெங்கட்ராமின் கேமரா. சின்னப் படம்தான் என்றாலும் நேர்த்தியான எடிட்டிங்கில் முழு மிஷ்கின் படம் பார்த்த எஃபெக்ட் கொடுக்கிறது ஜூலியன் எடிட்டிங் டேபிள். அரோல் கரோலியின் பின்னணி இசை சூப்பர். படத்தின் நடுவே வரும் ஒற்றைப் பாடலான `அண்ணாந்து பார்’ மயிலிறகால் மனதை வருடிக்கொடுத்து என்னமோ செய்கிறது.

சவரக்கத்தி - சினிமா விமர்சனம்

டார்க் ஹியூமர் படமா அல்லது சென்சிட்டிவ் த்ரில்லர் படமா என்பதில் இயக்குநர் குழம்பி இருப்பது பல காட்சிகளில் அப்பட்டமாய்த் தெரிகிறது. கதையே இல்லாமல் வெறும் சேஸிங்காய்க் காட்சிகள் நீள்வதும், வழக்கமான மிஷ்கின் படத்தில் வரும் மரவட்டை ஊர்ந்து செல்வது போன்ற குறியீட்டுக் காட்சிகளும் படத்தின் மைனஸ் ஏரியாக்கள். மாற்றுத் திறனாளிகளை வைத்து காமெடி பண்ணுவது, மனநலம் குன்றியவர்களைச் சித்திரித்திருப்பது போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாமே இயக்குநரே!

ஆழமான கதைசொல்லலிலும் அபாரமான நடிப்பிலும் பளபளக்கிறது இந்த `சவரக்கத்தி’.

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு