Published:Updated:

"சூர்யா, கார்த்தி ஒரே படத்தில்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"சூர்யா, கார்த்தி ஒரே படத்தில்!”
"சூர்யா, கார்த்தி ஒரே படத்தில்!”

இயக்குநரின் அட்டகாச பிளான்!ம.கா.செந்தில்குமார்

பிரீமியம் ஸ்டோரி

“இது விவசாயிகளின் பிரச்னையைப் பற்றிய படம் கிடையாது. ஆனால், ஒரு விவசாயிக்கு வர்ற சொந்தப் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும்தான் கதை. ‘இப்படியெல்லாம் பண்ணினா விவசாயத்துலயும் ஜெயிக்கலாம்’னு சொல்றவன், ‘மத்தவங்க பேருக்குப் பக்கத்துல, கலெக்டர், இன்ஜினியர், டாக்டர்னு போட்டிருக்கீங்க. என் பேருக்குப் பக்கத்துல ஏன்டா விவசாயினு போடலை’னு சண்டை போடுற தீவிர விவசாயி. பைக்ல, ‘விவசாயி’னு பெருமையா எழுதிப்பான். ‘ஊருக்கே சோறு போடுறவன்டா’னு கெத்தா இருப்பான்.  மாசம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிற வெற்றிகரமான விவசாயிதான் என் ஹீரோ. ஏற்கெனவே ஐ.டி இளைஞர்கள் பலர், விவசாயிகளா மாறுவதைப் பார்த்துட்டு இருக்கோம். இந்தக் `கடைக்குட்டி சிங்கம்’ படம் பார்த்தபிறகு, நிச்சயம் நிறைய இளைஞர்கள் பயிர்செய்ய விரும்புவாங்கனு நம்புறேன்” இயக்குநர் பாண்டிராஜின் வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை. ‘பசங்க’ படத்துக்குப்பிறகு, ‘இந்தக் கடைக்குட்டி சிங்க’த்துக்காக மீண்டும் கிராமத்தை நோக்கிப் போகிறார்.

“நகரத்துல செட்டிலானாலும் குறிப்பிட்ட இடைவெளியில் நான் கிராமத்துக்குப் போய் வருவேன். அப்படிப் போகும்போது  அண்ணன், அக்கா குடும்பங்கள், என் குடும்பம், குழந்தைகள்...எல்லாரும்  வீட்டுக்கு வெளியில ரவுண்டு கட்டி இலையைப்போட்டு உட்கார்ந்து ஒண்ணா சாப்பிடுவோம். `நீ ஏன் ஊருக்கு வர்றேன்னு சொல்லிட்டு வரலை’னு அண்ணன் கேப்பார். நான் என் பிரச்னைகளைச் சொல்லுவேன். ‘இந்த லீவுல நாம எங்கபோகலாம்’னு விவாதிப்போம். அந்த ஒன்றுகூடலுக்குக் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது.  இந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ கதையே அப்படி ஒரு ரவுண்டு கட்டல் சந்தோஷத்துல கிடைச்சதுதான்.”

"சூர்யா, கார்த்தி ஒரே படத்தில்!”

“சூர்யாவை வெச்சு, ‘பசங்க-2’ பண்ணின நீங்க, இப்ப அவரின் தயாரிப்பில் அவரின் தம்பியை இயக்குறீங்க. இது எந்தப் புள்ளியில் அமைஞ்சது?”

“ ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு முன்பே இந்தக் கதையை நான் கார்த்தியிடம் சொன்னேன். அப்போது ஞானவேல் ராஜா சார்தான் கார்த்தியிடம் என்னை அழைத்துப்போனார். கதையைக் கேட்டதுமே ‘நிச்சயம் நடிக்கிறேன்’னு கார்த்தி ஒப்புக்கிட்டார். ஆனால், வேறுசில காரணங்களால் அப்ப இதைப் பண்ண முடியவில்லை. பிறகு சமீபத்தில் ‘2டி’ தயாரிப்பு நிறுவன இணைத் தயாரிப்பாளரான ராஜ்சேகர்  கற்பூர சுந்தரபாண்டியன் இந்தக் கதையைக் கேட்டுட்டு, “நாம பண்ணின ‘பசங்க-2’வுக்குக் கிடைச்ச மாதிரியே இதுக்கும் நல்லபெயர் கிடைக்கும். இதையும் நம் கம்பெனியிலேயே பண்ணுவோம்’னு சொன்னார். பிறகு கதைகேட்ட சூர்யா சார்,  ‘ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதையை இவ்வளவு டீட்டெய்லா கேட்டு வெகுநாளாச்சு. அதில் விவசாயம் களமா இருக்கிறதும் நல்லாயிருக்கு. கார்த்திக்குச் செமயா இருக்கும்’னு சொன்னார். அந்தப் புள்ளியில்தான் இந்தப்படம் தொடங்கினது.”

“கதையைக் கேட்டுட்டு கார்த்தி என்ன சொன்னார்?”

“இது, கதையா, பட்ஜெட்டா பெரிய படம். ஸ்கிரிப்ட் பண்ணவும் நிறைய நேரம் எடுத்துக்கிட்ட கதை. ‘விவசாயம், கூட்டுக் குடும்ப வாழ்க்கை... ஏதோ எங்க லைஃபையே சொன்னமாதிரி இருக்கு சார்’. இது, கதையைக் கேட்டதும் கார்த்தி சொன்ன வார்த்தைகள்.”

“விவசாயியைப் பற்றிய கதை. நிறைய நடிகர்-நடிகைகள் இருக்காங்க. அப்படி இது என்ன கதை?”

“  ‘சூர்யா சாரின் தம்பி கார்த்தி. அதனால்தான் படத்துக்கு அந்தத் தலைப்பு’னு சிலர் சொன்னாங்க. அப்படிக் கிடையாது. ஐந்து அக்காக்களுக்கு அடுத்து, கடைசியா ஒரு தம்பி. அதுதான் `கடைக்குட்டி சிங்கம்’. இவர்களுக்குள் இருக்கும் உறவின் பிணைப்புதான் படம். இன்னைக்குப் பணப் பிரச்னையைவிட மனப்பிரச்னைதான் பெரிய விஷயமா இருக்கு.அந்தப் பிரிவினைதான் கோபத்தில் தொடங்கி  கொலை வரை உறவுகளுக்குள் கொண்டுவந்து சேர்க்குது. ‘அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, அத்தைனு எல்லாரும் சேர்ந்து வாழப்போறது ஒரேஒருமுறைதான்.  அடுத்தபிறவினு ஒண்ணு இருந்தாலும் எல்லாருமே திரும்பச் சேரப்போவது இல்லை. அப்படி இருக்கும்போது ஒருமுறை கிடைக்கிற இந்த வாழ்க்கையை ஏன் இழக்கணும். நமக்குள் ஏற்படுற பிரச்னைகளை ஈகோ இல்லாமப் பேசித் தீர்த்துப்போம்... வாங்க’னு உறவுகளை அழைப்பவன்தான் இந்தக் கடைக்குட்டி சிங்கம். ஆம், இது முழுக்கமுழுக்க ஒரு குடும்பப்படம்.”

“கிராமத்துக் கதைனா கார்த்தி அசால்ட்டா நடிச்சிட்டுப் போயிடுவார். இதில் எப்படி?”

“ஒரு அறிமுக நடிகரை எப்படி டீல் பண்ணுவேனோ அப்படித்தான் கார்த்தியை டீல் பண்ணினேன். வெயில், பனி, மழை...னு எதையும் பார்க்கலை.  பயங்கர மழை பெய்யும், ‘சேத்துல இறங்கி வாங்க’ம்பேன், வருவார். ‘பைக்கை எடுத்துட்டுபோங்க’னா போவார். மரம் ஏறுங்கம்பேன், ஏறுவார். ஓர் இடத்தில் கம்மாய்க்குள் குளிக்கணும். தேங்கி நின்ன அந்த தண்ணியோட நாற்றத்தை என்னாலகூடத் தாங்கிக்க முடியலை. ‘பரவாயில்லை சார், குளிக்கிறேன்’னு தயாரா நிக்கிறார். இப்பச் சமீபத்தில் கால் முட்டியில் அடிபட்டுக் காயம். இதோ இன்னைக்கு பிசியோதெரபி டாக்டரைக் கூட்டிட்டு வந்து பக்கத்துல வெச்சுகிட்டு டான்ஸ் ஆடிட்டு இருக்கார். அண்ணன்தான் தயாரிப்பாளர். ‘கேன்சல் பண்ணுங்க சார். முடியலை’னு போயிட்டே இருக்கலாம். 26 ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க. நாம கஷ்டப்படுறதைக் கண்ணால பார்க்கிறார். அதனால அவரும் கஷ்டப்படத் தயாராகிடுறார். என் கதையை எனக்கடுத்து அதிகமா உள்வாங்கியிருக்கிறது கார்த்திதான்.’’

"சூர்யா, கார்த்தி ஒரே படத்தில்!”

“ஐந்து அக்காக்கள் உள்பட ஏகப்பட்ட தெரிந்த முகங்கள். அந்தத் தேர்வு எப்படி நடந்தது?”

“கதாபாத்திரத் தேர்வைப் பொறுத்தவரை இது எனக்கு `பசங்க’ படத்துக்குப்பிறகு சவாலான படம்தான். வைக்கணும் என்பதற்காக எந்தக் கதாபாத்திரத்தையும் வெக்கலை. அதுக்குப்பின் ஒரு காரண காரியம் இருக்கும். எதிர்வீடு, பக்கத்து வீடு...னு நான் பார்த்த அக்காக்கள், மாமன் மகள்கள், அத்தான்கள்னு அத்தனை ஒரிஜினல் கேரக்டர்களையும் ஒவ்வொருத்தரின் மீதும் ஏவிவிட்டு இருக்கேன். இதில் இருக்கும் 26 பேர்களையும் என் ஊர்களில் பார்க்கலாம். குறிப்பா கார்த்தியின் அக்காக்களாக வரும் மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி ஐந்து பேரும் நிஜ அக்காக்களாகவே வாழ்ந்திருக்காங்க. ஆனால், இவர்களை அந்தக் கிராமத்து முகங்களா படியெடுக்கிறதுலதான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். சூரிக்கு கார்த்தியுடன் படம் முழுதும் பயணிக்கற    கேரக்டர். அவர் பாணியில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.”

“படத்தில் நடிகர் சத்யராஜ்க்கு என்ன கதாபாத்திரம்?”

“இதில் சத்யராஜ் சார், கார்த்தியின் அப்பா. 60 வயசு ஆகிடுச்சுன்னா, தன் பொறுப்புகள் அத்தனையையும் புள்ளைகிட்டக் கொடுத்துட்டு, அதை அவன் பொறுப்பா பாத்துக்கிறானானு பாத்துக்கிறதுதான் பொறுப்பான அப்பாவுக்கு அழகுனு நினைக்கிற கேரக்டர். சாரை அப்ரோச் பண்ணும்போது ‘தாத்தாவா நடிக்கணும் சார்’னு சொல்லிட்டேன். ‘என்ன தலைவரே...  ‘அமைதிப்படை’ மாதிரி நமக்கு இப்பதான் வயசான ஹீரோ கேரக்டர்லாம் வருது. நீங்க என்னன்னா தாத்தானு சொல்றீங்க?’னு கேட்டார். பிறகு, ‘அப்படி என்னதான் கதை சொல்லுங்க பார்ப்போம்’னார். சொன்னேன். ‘அடச் சண்டாளா... இந்தக்கதையை மிஸ் பண்ணத் தெரிஞ்சேனே’னு வந்துட்டார்.   எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு அப்பாவா நிச்சயம் இருப்பார்.”

"சூர்யா, கார்த்தி ஒரே படத்தில்!”

“மூணு ஹீரோயின்கள். ஒவ்வொருத்தருக்கும் நடிக்க ஸ்கோப் இருக்கா?”

“நான் ‘வனமகன்‘ பார்க்கலை. ஆனால்,  இணை தயாரிப்பாளர் ராஜா சார்தான், ‘சாயிஷா சரியா இருப்பாங்க’னு சொன்னார். ‘இவ்வளவு வெள்ளையா இருக்காங்க, நம்ம நேட்டிவிட்டி மிஸ் ஆகுமேனு அரைமனதாதான் ஓ.கே பண்ணினேன். ‘பசங்க’ படத்தில் வேகாவை அப்படித்தான் வேற வழியே இல்லாம ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டுப்போனேன். ஆனால், அவங்க எப்படி சோபிக்கண்ணாவே வாழ்ந்துட்டுப் போனாங்களோ, அப்படித்தான் இதில் சாயிஷாவும் ‘கண்ணுக்கினியா’ளா வாழ்ந்திருக்காங்க. டான்ஸ், நடிப்புனு பின்னியிருக்காங்க. நாளையைப் பற்றி யோசிக்காத நம் பசங்களுக்கு மத்தியில், நம் எதிர்லயே நிக்கிற பொண்ணுங்க, ‘இவனைக் கட்டிக்கிட்டா எப்படி வெச்சுப்பான், குழந்தை பிறப்புக்கு நடக்கக் கூடிய விஷயங்கள்’னு யோசிச்சிட்டு இருப்பாங்க. அந்தத் திட்டமிடல்தான் இந்தக் கேரக்டர். அடுத்து ப்ரியா பவானி சங்கர். ‘பொம்பளைப்பிள்ளைனா இப்படித்தான் இருக்கணுமா’னு கண்ணாடி போட்டுக்கிட்டு, ரேஸ்னா பசங்களுக்குமுன் தன் என்ஃபீல்டை எடுத்துக்கிட்டு கெத்தா நிக்கிற பெண். மூணாவதா அர்த்தனா. சில பொண்ணுங்களைப் பார்த்தா எப்பவுமே முகத்துல ‘ஐயோ பாவம்’ தோற்றம் இருக்கும். ‘உன்னைப் பார்த்தாலே பாவமா இருக்கு. தயவு செய்து போயிடு’னு சொன்னா, ‘ஏன் மாமா’னு கேட்டு மறுபடியும் பாவமா பார்க்கிற பெண். எல்லாத்துக்குமே கண்ணீர்லயே பேசுற கேரக்டர். நான் எழுதின ஸ்கிரிப்ட்தான். ஆனால், அதையும் மீறி நான்கைந்து இடங்கள்ல என்னையும் அழ வைக்கிற அளவுக்கு நடிச்சிருக்காங்க. ஆட்டம், பாட்டத்துக்குனு சேர்க்காம மூணு ஹீரோயின்களையும் குணச்சித்திர கேரக்டர்னு நினைச்சு சேர்த்திருக்கோம்னு சொல்லலாம்.”

"சூர்யா, கார்த்தி ஒரே படத்தில்!”

“சூர்யா, கார்ததி இருவரையுமே இயக்கியிருக்கீங்க. இருவரையும் சேர்த்து இயக்கும் எண்ணம் இருக்கா? அதை அவர்களிடம் பேசியிருக்கீங்களா?”

“அதுக்கு அப்படி ஒரு மாஸான, கிளாஸான கதை வேணும். ஏன்னா இன்னைக்கு இருவருமே பெரிய, பெர்ஃபெக்ட்டான நடிகர்கள், கூடவே நல்ல மனிதர்கள். இந்த கான்செப்ட் பற்றி இருவரிடமும் பேசியிருக்கேன். சீக்கிரமே என் இயக்கத்தில் இணைவார்கள்ங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு