சினிமா
தொடர்கள்
Published:Updated:

தேவரகொண்டாவின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் இருக்கும்!

தேவரகொண்டாவின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் இருக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
தேவரகொண்டாவின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் இருக்கும்!

அலாவுதீன் ஹுசைன்

‘விஜய தேவரகொண்டா’ தமிழுக்கு வருகிறார்! `பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என இரண்டே படங்களில் ஆந்திர சினிமாவையே அலறவிட்டவர். ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந் ஷங்கரின் அடுத்த படத்தில் விஜய தேவரகொண்டாதான் ஹீரோ.

“ரெசிடென்ஷியல் ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ்ல பி.காம் சேர்ந்தேன். தினமும் பஸ்ல கூட்ட நெரிசல்ல காலேஜுக்கும் வீட்டுக்கும் போயிட்டு மட்டும் வந்துட்டிருக்கிறது ரொம்ப போர் அடிச்சது. வித்தியாசமா இருக்கட்டுமேனு மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். நானே நாடகங்கள் எழுத ஆரம்பிச்சேன். பிறகு படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்கத் தொடங்கினேன். ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்னும் தெலுங்குப் படத்தில் வெளியே தெரியும்படியான ரோல் கிடைச்சது. சில வருடக் காத்திருப்புக்குப்பிறகு கிடைச்சதுதான் ‘பெல்லி சூப்புலு.’ பிறகு ‘அர்ஜுன் ரெட்டி.’ அந்தக் கதை மக்களுக்குப் பிடிக்கும்னு நம்பிக்கை இருந்தது. ஆனா, உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் இருக்கும்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை.”

“இந்தத் தமிழ்ப்பட வாய்ப்பு எந்தப் புள்ளியில் அமைந்தது?”

“ஆரம்பத்திலிருந்தே தமிழ் சினிமா வாய்ப்புகள் வந்துட்டிருந்ததுதான். நான் நடித்த படங்களோட தமிழ் ரீ-மேக்கிலும் நடிக்கக் கூப்பிட்டாங்க. ஆனா, அதுக்கு ஓகே சொல்ல பயமா இருந்துச்சு. நடிகர்களோட எமோஷன்ஸ் தாண்டி, அவங்க பேசும் வசனங்களும் ஆடியன்ஸ்கிட்ட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கணும்னா, எனக்கு முதல்ல தமிழ் புரியணும், பிறகு அதை நான் பேசணும். இந்த இரண்டு விஷயங்களையும் மனசுல வெச்சுக் குழம்பிட்டிருந்தேன். அந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ஆனந் ஷங்கரை அறிமுகப்படுத்தினார். ஆனந் சொன்ன கதை பிடித்திருந்தது. நடிக்க வந்துட்டேன். சென்னை வெயிலை நெனச்சாதான் பயமா இருக்கு. அதுவும் செட்டாகிடும்னு நம்புறேன். நிச்சயம் விஜய தேவரகொண்டாவின் தாக்கம் தமிழ் சினிமாவில் இருக்கும்.”

தேவரகொண்டாவின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் இருக்கும்!

“இது என்ன மாதிரியான படம்?”

“ஒரு அழகான ரொமான்டிக் டிராமா. படம் உங்க எல்லோருக்கும் பிடிக்கிறமாதிரியும் ரிலேட் பண்ணிக்கக்கூடிய வகையிலும் இருக்கும். ஆனந் ஷங்கரின் படங்களைப் பார்த்ததில்லை. ‘இருமுகன்’ படத்தில் ஹெலனா ஹெலனா பாட்டு பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. இயக்குநர் சொல்ற கதை நமக்குப் பிடிச்சிருக்கானு மட்டும்தான் பார்ப்பேன். அவங்க முன்னாடி என்ன பண்ணியிருக்காங்கன்னு பாக்குறது கிடையாது. முன் அனுபவம் உள்ளவங்ககூடத்தான் படம் பண்ணணும்னு நினைச்சிருந்தா, ‘பெல்லி சூப்புலு’, `அர்ஜுன் ரெட்டி’ படங்களில் நான் நடிச்சிருக்க முடியாது.”

“தமிழ் சினிமாவில் ஃப்ரெண்ட்ஸ் பிடிச்சிட்டீங்களா?”

“ ‘பெல்லி சூப்புலு’ படம் பார்த்துட்டு கௌதம் மேனன் சார் போன்ல கூப்பிட்டுப் பாராட்டினார். அவரோட டீம் ரொம்ப ஃப்ரெண்ட்லி யான க்ரூப். அதுக்குப்பிறகு `ஜோக்கர்’, `அருவி’ படங்களைப் பார்த்துட்டு நானே எஸ் ஆர்.பிரபுவுடன் பேசினேன். சினிமாமேல அதீதமான காதல்கொண்ட சிலர்ல அவரும் ஒருவர். இதுதவிர, தனுஷ், கார்த்தி இருவரையும் நடிகர்களாக எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

“நீங்க நடிச்ச இரண்டு தெலுங்குப் படங்களையுமே இயக்குநர்கள் பாலா, கௌதம்மேனன் தமிழில் ரீமேக் பண்றாங்க. அந்த ஃபீல் சொல்லுங்க?”

“ ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை பாலா சார் தமிழ்ல எப்படி எடுக்கப்போறார்னு பார்க்க ஆர்வமா இருக்கு. கண்டிப்பா ‘வர்மா’ அப்படியே ஒரு ரீமேக் படமா இருக்காது. தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்றமாதிரியும், பாலா சாரோட ஒரிஜினாலிட்டி யோடும் செமயா இருக்கும்னு எதிர்பார்க்கிறேன். கௌதம் மேனன் சார் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர் படங்கள் எடுக்கும்போது விஜய் தேவரகொண்டான்னு ஒருத்தன் இருக்கான்னுகூட அவருக்குத் தெரிஞ்சிருக்காது. அவரே என் படத்தின் ரீமேக்கைத் தயாரிப்பது, ஒரு ‘ஃபேன்பாய் மொமென்ட்தான்.”