சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

எம்.குணா, தமிழ்ப்பிரபா

“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

``டீஸர் சிறப்பா வந்திருக்கு ப்ரோ... பாக்குறீங்களா?’’ - அன்போடு கேட்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். ரஜினியுடன் இரண்டாவது இன்னிங்ஸையும் வெற்றிகரமாக முடித்துவிட்ட திருப்தி அவரது முகத்தில் தெரிகிறது. டீஸரைப் பார்த்துவிட்டு இரஞ்சித்துடன் நடத்திய  உரையாடல் இங்கே!

`` `கபாலி’ முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டிருந்தப்ப, ‘அப்பா உங்களை மீட் பண்ண நினைக்கிறார்’ன்னு சௌந்தர்யா சொன்னாங்க. சாரை மீட் பண்ணேன். ‘கபாலி கொடுத்த புத்துணர்ச்சியில நான் இன்னும் எட்டுப் படம் பண்ற அளவுக்கு எனர்ஜியா இருக்கேன் டைரக்டர் சார். திரும்பவும் நாம சேர்ந்து படம் பண்ணலாம்’னு சொன்னவர் `கபாலி இரண்டாம் பாகமே பண்ணலாமா?’ன்னு கேட்டார். `சரி சார்’னு சொல்லி அதுக்காக வொர்க் பண்ணேன். ஆனா, இந்தக் `கபாலி’ கதை வேற ஒரு களத்துல பயணிக்கணும்னு சார்கிட்ட சொல்லிட்டு  மும்பைக்குக் கிளம்பிட்டேன். அங்க இருக்கிற கேங்ஸ்டர்களைப் பத்தி தெரிஞ்சிக்க நிழல் உலக தாதாக்களைச் சந்திச்சேன். ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை முழுசா ஆராய்ச்சி பண்ணேன். மும்பைத் தெருக்கள்ல சும்மா சுத்திட்டிருந்தேன். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரம், எங்க போனாலும் பெரிய பெரிய கட்டடங்கள்... அதன் காலடியில சுற்றி இருக்கிற குடிசைப்பகுதிகள்... இதெல்லாம் பாக்குறப்ப அது எனக்கு வேறொரு புரிதலையும் பார்வையையும் கொடுத்தது. கேங்ஸ்டர் கதையை விட்டுட்டு அந்த மக்களோட வாழ்க்கையையும் அவங்க பிரச்னையையும் பதிவு பண்ணணும்னு நினைச்சேன். அவங்க சந்திக்கிற பிரச்னை இந்தியப் பெருநகரங்கள்ல வாழ்கிற எல்லா விளிம்புநிலை மக்களுக்கான பிரச்னையாகவும் இருந்தது. அதன் அடிப்படையில அங்க இருக்கிற தமிழ் மக்களோட தொடர்ந்து உரையாடினேன். அந்த பாதிப்புல முற்றிலும் வேறொரு கதையை உருவாக்கிட்டு சார்கிட்ட போனேன். அதுதான் ‘காலா’ ’’ 

``கபாலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருந்த ரஜினி, `காலா’ கதையைக் கேட்டுட்டு என்ன சொன்னார்?’’

`` 80-கள்ல மும்பையில் வாழ்ந்த ரௌடிகள், அவங்களுக்குள்ள இருக்கிற மோதல்கள்னு கேங்ஸ்டர் கதையைத்தான்  எழுதிட்டு வருவேன்னு சார் எதிர்பார்த்தார். ஆனா, நான் கொண்டுபோனது ஒரு எமோஷனல் குடும்பத்தலைவனோட கதை. ஒரு அப்பா, அவருக்கு நான்கு மகன்கள், கணவன் மனைவி, காதல், பேரன் பேத்திகள், வயதான நண்பர்கள், இப்டின்னு கதை சொல்லிட்டுப் போறப்போ... சார், தலையாட்டி சிரிச்சுக்கிட்டே “இப்படி ஒண்ணை நான் எதிர்பார்க்கவே இல்லையே டைரக்டர் சார். ஆனா, நல்லா இருக்கு.. மேல சொல்லுங்க”ன்னு தாடியைத் தடவிக்கிட்டே கேக்க ஆரம்பிச்சதும் எனக்கு அவ்ளோ சந்தோஷம். ஏன்னா இந்தக் கதையை அவர் ஏத்துக்குவாரான்னு ரொம்பத் தயங்கினேன். எப்படி இரண்டாவது படமும் ரஜினி உங்களுக்குக் கொடுத்தார்னு சிலபேர் கேக்குறாங்க. ஒருவாட்டி நானே சார்கிட்ட அதைக் கேட்டேன். ‘உங்க வொர்க், உங்ககிட்ட இருக்கிற நேர்மை. இது ரெண்டுதான் உங்களோட படம் பண்ண வெச்சது, இனியும் வைக்கும்’னு சொன்னார். அவரோட நம்பிக்கையைக் காப்பாத்தியிருக்கேன்னு நம்புறேன்.’’

“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

`` ‘காலா’ பெயர்க் காரணம் என்ன?’’

`` படத்துல கரிகாலன் அவருடைய பேர். அதுல காலன் அப்டிங்கிற பேரைத்தான் சுருக்கிக் காலான்னு வெச்சிருக்கோம். திருநெல்வேலி மாவட்டத்துல வழிபடப்படுற சிறுதெய்வங்கள்ல காலா சாமியும் ஒருத்தர். ரஜினி சார் அந்த மாவட்டத்தைச் சார்ந்தவராக நெல்லைத் தமிழ் பேசுபவராக இருப்பதால் இந்தப் பேர் பொருத்தமா இருந்துச்சு. அதே நேரத்துல இந்தி மொழியில காலான்னா கறுப்புன்னு அர்த்தம். கறுப்பு என்பது உழைக்கும் மக்களின் வண்ணம். படத்துலேயும் கறுப்பு நிறம் ஒரு குறியீடா பயன்படுத்தப்பட்டுருக்கிறதால காலாங்கிற பெயர் பலவகையில இந்தக் கதைக்குத் தொடர்புடையதா இருக்கும்னு அதை டைட்டிலா வெச்சோம்.’’

``காலா எங்களுடைய கதைதான் என்று சிலர் சொல்கிறார்களே?’’

``இது எந்தத் தனிநபரின் கதையும் இல்ல, தனிநபரைப்பற்றிய கதையும் இல்ல; மக்களின் வாழ்வியலைப் பற்றிப் பேசுற படம். அதுவும் தாராவி, குறிப்பிட்ட மக்களின் கலாசாரத்தை மட்டும் பிரதிபலிக்கிற பகுதி கிடையாது. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மராத்தி, இந்தி, நெல்லைத் தமிழ், தெலுங்குன்னு பல்வேறு மொழிகள் பேசுற, சாதியடையாளங்களை வலுவாக முன்னிறுத்துகிற பல்வேறு இனக்குழுக்கள் வாழுற பகுதி. திருநெல்வேலில இருக்கிற தமிழர்கள் பெரும்பான்மையாக அங்க இருக்காங்க. இந்த எல்லாத் தரப்பினரையும் மையமா வெச்சு கற்பனையைக் கலந்து நானா எழுதினதுதான் காலா. சொல்லப்போனா இந்தக் காலா கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் எங்க தாத்தாதான். அவர் பேர் பஞ்சாட்சாரம். எங்க ஊர்ல முக்கியமான ஆள். தான் வாழ்ந்த நிலத்தின் மீது ரொம்பப் பற்றுதலோட இருந்தவர். எங்க குடும்பம், குழந்தைங்ககிட்ட, அவர் நண்பர்கள்கிட்ட அவ்ளோ அன்பா இருப்பார். ஊர்ல ஜனங்களுக்கு ஒரு பிரச்னைன்னா அந்த வயசுலயும் எதுக்கும் பயப்படாம முன்னாடிபோய் நிப்பார். ஒரு பிரமிப்பான மனுஷனான அவரைப் பாத்துதான் வளர்ந்தேன். காலா கதாபாத்திரத்தை அவரை அடிப்படையா வெச்சுத்தான் உருவாக்குனேன்.’’

“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

``தயாரிப்பாளர் தனுஷுடன் பணிபுரிந்த அனுபவம் சொல்லுங்க?’’

`` `அட்டகத்தி’ கதை எழுதிட்டு தனுஷை அணுகலாம்னுதான் இருந்தேன். அந்தச் சூழல்ல முடியலை. `காலா’ கதையை ரஜினி சார் ஓகே பண்ணதும் தனுஷை மீட் பண்ணி கதை சொல்லச் சொன்னார். தனுஷ் தீவிரமான ரஜினி ரசிகர். கதையைக் கேட்கக் கேட்க செம்மையா என்ஜாய் பண்ணார். எந்தெந்தக் காட்சிகள்ல ரசிகர்கள் ரசிப்பாங்கன்னு சொல்லி எக்சைட் ஆனார். இந்தப் படத்தை இவ்ளோ சீக்கிரம் எடுத்து முடிச்சு ரசிகர்கள்கிட்ட கொண்டு சேர்க்கிறோம்னா தயாரிப்பாளர் தனுஷ் அவர்களோட ஒத்துழைப்பு மிக முக்கியமானது.’’

`` `கபாலி’யில் ரஜினி நடிப்பு பல பரிமாணங்களை உள்ளடக்கி இருந்தது. `காலா’வில் எப்படி?’’

`` ‘காலா’வில் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கலாம். `கபாலி’ல ஆரம்பம் முதலே தன் கடந்த கால நினைவுகளைச் சுமந்துகிட்டு ஒருவிதமான சோர்வுடனும், இறுக்கத்துடனும் விரக்தி மனநிலையிலேயே கபாலி கடைசிவரை இருப்பார். ஆனா இதுல ரஜினி சார், காலா சேட்டுங்கிற கதாபாத்திரத்துல ரகளை பண்ணியிருக்கார். அடிப்படையில் காலா ரொம்பப் பிடிவாதமான ஆள். யார் எதிரே நின்னாலும் தனக்கும் தன் மக்களுக்கும் இதுதான் தேவைன்னா அதுல ரொம்ப உறுதியா நின்னு போராடுற ஒரு மனிதன். இன்னொரு பக்கம் தன் மனைவியோட ரொமான்ஸ், மகன்கள்கிட்ட தன் காதல் கதைகளைப் பேசி நெகிழுறது, பேரப்பிள்ளைகளோட கிரிக்கெட், ஃபுட்பால் விளையாடுறது, ஊர்மக்களை வழிநடத்துற தலைவன், எதிரிகள் கிட்ட காட்டுற மூர்க்கம்னு ரஜினிசார் செம சூப்பரா நடிச்சிருக்கார். படப்பிடிப்புக்கு வெளிய அவர் சாதாரணமா எப்படிப் பேசுவாரோ, அவரோட உடல்மொழி எப்படி இருக்குமோ அதைத்தான் திரையில் கொண்டு வந்திருக்கார். ஒரு மனுஷனுக்குள்ள இருக்கிற ஒட்டுமொத்த எமோஷனையும் காலா சேட்டுகிட்ட பார்க்கலாம். ரஜினிசார் ரொம்ப இயல்பா நடிச்ச படங்கள்ல `காலா’வுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும். ஸ்டைலுக்கு மட்டுமல்லாம அவருடைய நடிப்புக்குன்னு ஒரு இடம் இருக்கில்ல, அது இந்தப் படத்துல முழுமையடைஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்.’’

“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

``கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தே கலக்கியிருப்பாங்க. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடி யார்?’’

``காலாவின் மனைவியாக செல்விங்கிற கதாபாத்திரத்தில் ஈஸ்வரிராவ் நடிச்சிருக்காங்க. ரொம்ப எமோஷனலான கதாபாத்திரம்.  நிச்சயம் பேசப்படும். ஏன்னா அந்தச் செல்வியை எல்லா வீடுகளிலும் பொருத்திப் பார்த்துக்கலாம். சகிப்புத்தன்மையுடன் ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்ற, கணவனையும், நான்கு மகன்களையும் மருமகள்களையும், பேரப்பிள்ளைகளையும் கட்டி மேய்க்கிற ஒரு பெண்மணி. `கபாலி’யைப் பற்றி நியாயமாகச் சொல்லப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து சில விஷயங்கள்ல வேலை பண்ணியிருக்கோம். அதுல ஒண்ணு, `கபாலியில் வில்லன் கதாபாத்திரம் இன்னும் வலுவா இருந்திருக்கலாம்’கிற விமர்சனம். அந்த வகையில் `காலா’வில் வில்லனாக நானா படேகர். ரஜினி சாரும், நானாஜியும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. காலாவுக்கு நண்பனா வாலியப்பன்ங்கிற கேரக்டர்ல சமுத்திரக்கனி நடிச்சிருக்கார். அஞ்சலி பாட்டில், சம்பத், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, ‘வத்திக்குச்சி’ திலீபன்னு நிறைய கதாபாத்திரங்கள்.  அவங்க இயல்பா எப்படிப் பேசிப் பழகுவாங்களோ அந்த உடல்மொழியைத்தான் எல்லோருடைய நடிப்புலயும் கொண்டு வந்திருக்கோம். இவங்க தவிர படத்துல  முக்கியமான கேரெக்டர்ல ஹூமா குரேஷி நடிச்சிருக்காங்க. `கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ எனக்கு ரொம்பப் பிடிச்ச, நிறையவாட்டி பார்த்த படம். அந்தப் படத்துலதான் ஹூமா குரேஷியைப் பார்த்தேன். `காலா’ படத்துல சரினாங்கிற கதாபாத்திரத்துக்கு அவங்க கரெக்ட்டா இருப்பாங்கன்னு தோணுச்சு. கதையில ரஜினிசார்க்கும் அவங்களுக்கும் உள்ள உறவு ரொம்பவே சுவாரஸ்யமானது.’’

“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்
“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

`` `காலா’ பெரும்பாலும் செட் போட்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் உண்மைக்கு எந்த அளவு நெருக்கமாக இருக்கும்?’’

``இதுவரையிலான என்னுடைய படங்கள் லைவ் லொகேஷனில் எடுக்கப்பட்டவைதான். ரஜினி சாரைக் கூட்டிட்டு வந்து தாராவிலதான் ஷூட் பண்ணோம். படப்பிடிப்பு நடக்கிற இடத்தைச் சுற்றி ராத்திரி, பகல்னு மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்தது. ஆனாலும், தாராவியிலேயே எடுத்தாக வேண்டிய காட்சிகள்ல நான் உறுதியா இருந்தேன். அதனடிப்படையில் நாலுநாள் ரஜினிசார் தொடர்பான காட்சிகள் எடுத்துட்டு அப்புறம் பதினைந்துநாள் அங்க ஷூட் பண்ணோம். சென்னைக்கு வந்து தாராவி மாதிரி செட் போட்டோம். தாராவி எப்படி இருக்கோ, மும்பையில இருக்கிற ஸ்லம்ஸ் எப்படி இருக்கோ அதேமாதிரியான டூல்ஸ், மெட்டீரியல்ஸ வெச்சு 25 கோடி ரூபாய் செலவுல ஒரு ஊரையே கிட்டத்தட்ட உருவாக்கியிருக்கோம். எது செட், எது ரியல் தாராவின்னு பார்வையாளர்களால எளிதில கணிக்க முடியாத மாதிரி கலை இயக்குநர் ராமலிங்கம் வேலை பண்ணியிருக்கார். உண்மைத்தன்மையுடனும் அதேசமயம் கலைநயத்துடனும் அவர் செஞ்ச வேலை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். படம் ரியலிஸ்டிக்கா இருக்குன்னா அதுக்கு இன்னொரு முக்கிய பலம் ஒளிப்பதிவாளர் முரளி.’’

“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

``ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மையமாக வைத்து காலாவில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளதா?’’

`` `காலா’ கதையை ரஜினிசாரிடம் சொல்லும்போதிலிருந்து, படப்பிடிப்பு நடந்து முடியும்வரை அவருக்கு அரசியலில் களமிறங்கணும்ங்கிற ஆர்வம் இருந்த மாதிரி எனக்குத் தெரியல. அரசியலுக்கு வருவேன்னு அவர் அறிவிக்கிறதுக்கு முன்னாடியே எழுதப்பட்டு, படமாக்கப்பட்டிருக்கிற ஒரு படம் இது.  அவருடைய அரசியல் நுழைவை இந்தப் படம் வலுப்படுத்தினால் அது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.’’

``படத்தின் இசை, பாடல்கள் எப்படி வந்திருக்கிறது?’’

``கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுதியிருக்காங்க. இவங்க தவிர்த்து, ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’வில் பாடல்கள் பாடிய அறிவு ஒரு பாட்டு எழுதியிருக்கார். காதல் பாடல், குடும்பப் பாடல், ரஜினி சார் ரசிகர்களுக்கான பாடல்னு எல்லாவிதமான உணர்வுகளையும் இசைவடிவங்கள்ல கொண்டு வர்ற தருணங்கள் படத்தில் உண்டு. புதுவிதமான சில இசைக்கருவிகளை வெச்சு சந்தோஷ் பண்ணியிருக்கிற மியூசிக் அதகளமா இருக்கும். மெட்ராஸ்ல இருக்கிற விளிம்புநிலை மக்களுக்கு கானா பாடல்கள் மாதிரி பாம்பே விளிம்புநிலை மக்கள் ராப், ராக் வகைப் பாடல்களை அதிகமாக பாடுவாங்க. முதல்பாடலே அப்படியொரு பாடல்தான். `மெட்ராஸ்’ படத்துல டான்ஸ் குரூப் இருந்த மாதிரி இதுல ராப் குரூப் இருக்கு. கதையில் சில முக்கியமான இடங்கள்ல அவங்களைப் பயன்படுத்தியிருக்கேன். ஒரு வாழ்க்கைமுறையை அதன் அசலான அடிப்படைகளுடன் கொண்டு சேர்க்கிற முயற்சிகள்தான் இவை எல்லாமே.’’

“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்!” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்

``அடுத்த படத்துக்கான கதை, களம் முடிவு பண்ணிட்டீங்களா?’’

``கதை எழுதி முடிச்சாச்சு. இன்னும் மற்ற விஷயங்கள் முடிவு பண்ணலை. ஆனால் என்னுடைய எல்லாப் படங்களும் அரசியல் படமாகத்தான் இருக்கும்ங்கிறதுல யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.’’