சினிமா
தொடர்கள்
Published:Updated:

“மாஸ்டரா... நான் சின்னப் பையன் சார்!”

“மாஸ்டரா... நான் சின்னப் பையன் சார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மாஸ்டரா... நான் சின்னப் பையன் சார்!”

அய்யனார் ராஜன், படங்கள்: க.பாலாஜி

`` ‘பெரிய பேனர்ல என்ன படம் பண்ணியிருக்க’ன்னு கேட்டே இந்த பிராட்வே பையனைப் பின்னங்கால் பிடறியிலடிக்க ஓட வச்சாங்க ப்ரோ. ஒரு கட்டத்துல, ‘ஷோ பண்ணினபடியே வாழ்க்கையைக் கடத்த வேண்டியதுதான்; நாமெல்லாம் டான்ஸ் மாஸ்டராகவே முடியாது போல’ன்னு வெக்ஸ் ஆகிட்டேன். ‘கடைசி முயற்சியா ஒரு தடவை வாய்ப்பு கொடுங்க’ன்னு கெஞ்சி வீட்ல டான்ஸ் ஆட அனுமதி வாங்கின மாதிரியே ரஞ்சித் அண்ணன்கிட்ட ‘மெட்ராஸ்’ சமயத்துல போனேன். ‘அடுத்து பார்க்கலாம்’னார். ‘கபாலி’ வந்தது. ‘மெட்ராஸ்’ டீம் அப்படியே ரஜினி சார்கூட வொர்க் பண்ணட்டுமே’னு சொல்லிட்டார். நான் பொறுமையா இருந்தேன்.

‘காலா’ பட அறிவிப்பு வந்தது. திடீர்னு ஒருநாள் ரஞ்சித் அண்ணன் கூப்பிட்டு டைட்டில் பாட்டு கேக்கச் சொன்னார். பாட்டு செமையா இருந்தது. ‘கொரியோ நீதான், சும்மா வெச்சு செஞ்சிடு’ன்னார். அந்த நொடி என் வாழ்க்கையில மறக்க முடியாதது. ஸ்க்ரீன்ல டான்ஸ் தூள் கிளப்பும் பாருங்க” - சிரிப்பும் சிலிர்ப்புமாகப் பேசுகிறார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. `மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் சந்தோஷாக அறிமுகமானவர் சாண்டியாக மாறி  வெளியே வந்தார். தற்போது விஜய் டிவியின் `கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சியின் நடுவராகவும் கலக்கிக்கொண்டிருக்கிறார் சாண்டி.

“மாஸ்டரா... நான் சின்னப் பையன் சார்!”

``டான்ஸ் ஆடப்போறேன்னு சொன்னதுக்காக வீட்ல வாங்கின அடியையெல்லாம் மறக்கவே முடியாது. நாலாவது அஞ்சாவது படிச்சிட்டிருந்த நேரம். அக்கம்பக்கத்து வீட்டுல யாராவது இறந்துட்டா கூட்டம் பார்க்கப்போவேன். பொதுவா யாராவது போய்ச் சேர்ந்துட்டா, ‘அவன் ஆட்டம் முடிஞ்சிடுச்சு’ங்கிறாங்க. அந்த ஆட்டம் முடிஞ்ச இடத்துலதான் என் ஆட்டம் தொடங்குச்சு. ஏரியா அண்ணங்க அந்தச் சாவு ஊர்வலத்துல போடுற ஆட்டம் பார்த்தே என் காலும் என்னை அறியாம ஆடத் தொடங்கிடுச்சு.

அப்பாவும் அண்ணனும் போலீசா இருக்கிற எங்க குடும்பம் இதை விரும்பலை. டான்ஸ் ஆசைனாலேயே பள்ளிக்கூடம், காலேஜ் எதுவும் எனக்கு இஷ்டமா இல்லை. இங்கெல்லாம் போறதா சொல்லிட்டு, டான்ஸ் ஆடப் போயிடுவேன். பொணத்து முன்னாடி ஆடிட்டு இருந்தவனுக்கு அப்படியே திருவிழா, சின்னச் சின்ன நிகழ்ச்சிகள்னு வாய்ப்பு கிடைச்சது. ‘படிக்கவே மாட்டேங்கிற... பாக்கெட் மணியெல்லாம் ஒரு கேடா’ன்னு வீட்டுல அஞ்சு பைசா தரமாட்டாங்க. பிஸ்கட் கம்பெனிக்கு வேலைக்குப்போய் டான்ஸ் தேவைகளை நிறைவேத்திக்குவேன்.

“மாஸ்டரா... நான் சின்னப் பையன் சார்!”

டிகிரி ஃபெயிலானதுல வீட்ல ரொம்பவே கடுப்பாகிட்டாங்க. ‘ஏதாச்சும் வேலைக்குப் போ, இல்லையா வீட்டை விட்டு வெளியில போ’ன்னு சொல்லத் தொடங்கிட்டாங்க. சரியா அந்த நேரம், யார் மூலமாகவோ டான்ஸ் மாஸ்டர் கலாவின் அக்கா ஜெயந்தி மாஸ்டர் குரூப்ல சேர்ந்திருந்தேன். நடிகர் சங்கக் கட்டடத்துல வகுப்பு. காலங்காத்தாலயே அங்க போயிடுவேன் அந்தத் தெரு பிளாட்ஃபாரத்துலயே கிடப்பேன். ஒருவேளைதான் சாப்பாடு. ரெண்டு மாசத்துக்குப் பிறகு ஃபீஸ் கட்ட முடியலை. ஆனாலும், ஜெயந்தி மாஸ்டர் ‘நல்லா ஆடுறான்’னு கலா மாஸ்டர்கிட்ட கொண்டு போய் விட்டாங்க. குரூப்ல இருந்தவனை, ‘மானாட மயிலாட’ ஷோ  முன்னாடி கொண்டு வந்தது. வீட்லயும் ‘தேறிடுவான்’னு நம்ப ஆரம்பிச்சாங்க.

துக்கத்தைத் தூக்கத்தானே சாவு வீட்டுல ஆடுறோம். அங்க இருந்து தொடங்கினதாலேயோ என்னவோ, என்னோட டான்ஸ்ல எப்பவுமே கொண்டாட்டம் தூக்கலாவே இருக்கும்.  டான்ஸ்ல இஷ்டத்துக்கு ஃபன் பண்ணுவேன். என்னோட நோக்கம், சினிமாவுக்குப் பண்றேன்னா அது கமர்ஷியலா ஹிட் ஆகணும். ஸ்டேஜ்ல பண்றேன்னா அது அப்ளாஸ் அள்ளணும். வேற எதுவுமில்லை’’ என்கிற சாண்டியின் பேச்சை அவ்வளவு ஆர்வமாகக் கேட்கிறார் மனைவி சில்வியா.

“மாஸ்டரா... நான் சின்னப் பையன் சார்!”

``சில்வியா எனக்கு ஒரு ரசிகை மூலம் அறிமுகமானாங்க. இவங்க தங்கைதான் அந்த ரசிகை. சாதாரண ரசிகையா பிறந்தநாள் அன்னைக்கு அவங்க வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டாங்க. போனேன். தங்கையின் அன்போட அக்காவின் லவ்வும் கிடைச்சது’’ என்னும் சாண்டி இன்னும் நான்கு மாதத்தில் அப்பாவாகப் போகிறார்.

நீண்ட நேரம் சைலன்ட்டாவே இருந்த சில்வியாவிடம் பேசினேன். ‘`போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு. கல்யாணம் முடிஞ்சதுல இருந்தே  செம பிசியா இருக்கார்.  ஹனிமூனைக்கூட ஷூட்டுக்காக பாதியிலேயே முடிச்சுட்டு வந்துட்டோம். ‘பெரிய பேனர்ல பண்ணிட்டு வா’ன்னு விரட்டிவிட்ட சினிமாவுல, தொடர்ந்து நின்னு ரஜினி சார் படம் பண்ணிட்டிருக்கார். அவர் மேல எனக்கு மிகப்பெரிய மரியாதையும், அவர் மனைவியா இருக்கிறது ரொம்பப் பெருமையாவும் இருக்கு. ரஜினி சாரைப் பார்க்க ‘காலா’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருந்தார். அப்ப ரஜினி சார் ‘மாஸ்டர் பட்டையைக் கிளப்புறார்மா’னு இவரைப் பார்த்துச் சொன்னார். ‘மாஸ்டரா... நான் சின்னப் பையன் சார்...’னு இவர் பதறிட்டார்’’ என்று கூச்சத்துடன் சிரிக்கிறார் சில்வியா.

சிரிப்பும் சிறப்புமா இருங்க மக்களே!