என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - கோவை
Published:Updated:

கமல் நம் காலத்து நாயகன்!

கமல் நம் காலத்து நாயகன்!

##~##

மல் நம் காலத்து நாயகன்’ - பரமக்குடியில் துவங்கி ஆழ்வார்பேட்டை வரையிலான கமல் வாழ்க்கையைப் பரபர டூர் அழைத்துச் செல்லும் புத்தகம். கமலின் வெளிவராத புகைப்படங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் பேட்டிகள் எனத் தகவல்கள் நிரம்பித் ததும்பும் வகையில் மணா தொகுத்துள்ள புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்...    

 பேட்டி என்று எப்போதும் பேசியிராத கமலின் அண்ணன் சந்திரஹாசன் மனம் திறந்து பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

''கமல் சார் (ஆம், கமல்ஹாசனை அவர் 'கமல் சார்’ என்றுதான் குறிப்பிடுகிறார்!) ரொம்ப சின்னப் பிள்ளையில் இருந்தே ஆர்மோனியப் பெட்டியில் எந்த சுதி அடிச்சாலும் கரெக்டா சொல்லிடுவார். பேச வராது. ஆனா, சுதியைப் பிடிச்சுடுவார். அப்பவே கட்டபொம்மன் டயலாக் சொல்வார். எம்.ஜி.ஆரோடமதுரை வீரனைக் கிட்டத்தட்ட நூறு தடவைக்கு மேல பார்த்திருப்பார். எங்க அப்பா 'கட்டபொம் மன் டயலாக் சொல்லுடா’னு சொன்னார்னா, உடனே 'திரை வட்டி, மஞ்சள் அரைத்துப் பணி செய்தாயா’ அப்படினு டயலாக் சொல்வார். இங்கே இருந்து அங்கே தவ்வி, அங்கே இருந்து இங்கே தவ்வினு எம்.ஜி.ஆர். மாதிரி ஸ்டன்ட் பண்ணிட்டு இருப்பார். அந்தச் சமயத்துல இவர் நடிகர் ஆவார்னுலாம் நான் நினைக் கலை!

கமல் நம் காலத்து நாயகன்!

ஆனா, எங்க அப்பா நினைச்சார். பன்னெண்டு வயசுல கமல் சார் படிப்பை நிறுத்தினப்ப, எனக்கும் அவருக்கும் ஆர்க்யூமென்ட். 'நீ படிக்கணும். கிராஜுவேட் ஆயிரு. அப்புறம் சினிமாவில் ஆக்ட் பண்ணு’னு நான் சொன்னேன். அப்போ எங்க அப்பா சொன்னார், 'அவன் நடிகன் ஆகட்டும்டா. இவன் என்ன பண்ணுவான். பி.ஏ. பாஸ் பண்ணிட்டு எம்.ஏ., பாஸ் பண்ணிட்டு, ஐ.ஏ.எஸ். ஆகி தமிழ்நாட்டுல ஏதோ ஒரு சின்ன டிஸ்ட்ரிக்ட்ல பேர் தெரியாத ஒரு மூலைல ஆபீஸரா இருக்கணும்கிறயா? அவன் நடிகனா வந்து உலகத்துக்கே தெரியணும்!’ கமல் சார் மேல அவருக்கு அவ்வளவு கான்ஃபிடன்ஸ்!

கமல் நம் காலத்து நாயகன்!

கமல் சாருக்கு 'மூன்றாம் பிறை’க்கு தேசிய விருது கிடைச்சிருச்சுனு அப்பாவுக்குத் தந்தியடிச்சோம். பதிலுக்கு கங்கிராஜுலேஷன்ஸ்லாம் வரலை. 'வென் ஆஸ்கர்?’னு திருப்பித் தந்தியடிச்சார். அவ்வளவு கான்ஃபிடென்ட்டா இருந்தார். சும்மா இருக்கிற நேரத்தில் எல்லாம் அம்மா, டான்ஸ் கத்துக்க, வீணை கத்துக்க, குதிரைச் சவாரி கத்துக்கனு சொல்லி ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க!''

''சென்னை வந்த பிறகு கமலுக்கு எப்படி நடிக்கும் வாய்ப்பு வந்தது?''

''எங்க ஃபேமிலி டாக்டர் சாராதான் ஏவி.மெய்யப்பச் செட்டியார் ஃபேமிலிக்கும் டாக்டர். அவங்க வீட்டுப் பிறந்த நாள் பார்ட்டியில் வெச்சுத்தான் கமல் சாரை ஏவி.மெய்யப்பச் செட்டியார் பார்த்தார். அன்னைக்கே டெஸ்ட்டுக்குக் கூப்பிட்டாங்க. அங்கே போனப்ப ஜெமினி சார், சாவித்திரி அம்மா கூடலாம் போட்டோ எடுத்தப்ப கமல் சார் சிரிச்சுட்டே இருந்தார். ஆனா, ஷூட்டிங்குக்குப் போகும்போது போக மாட்டேன்னுட்டார். 'அண்ணன் வந்தாதான் போவேன்’னு அடம் பண்ணிட் டார். பரீட்சைக்குக்கூடப் போகாம அவர் கூட ஷூட்டிங்குக்குப் போனேன்!

அப்புறமும் தினமும் கமல் சாரைக் கூட்டிட்டு ஸ்டுடியோவுக்குப் போவேன். தினமும் காலையில் இருந்து சாயந்திரம் வரை கமல் அங்கேதான் இருக்கணும்னு செட்டியார் சார் சொல்லிட்டார். பிரேக்ஃபாஸ்ட்ல இருந்து டின்னர் வரை அங்கேயே கொடுத்துருவாங்க. அதனால், ஷூட்டிங் இருக்கோ, இல்லையோ காலைல இருந்து சாயங்காலம் வரை அங்கேயே இருக்கணும். அங்கே நிறைய நடிகர்களைப் பார்ப்போம்.

கமல் சார் யாரையும் நீன்னோ, அவன்னோ சொல்ல மாட்டார். 'அவர் வந்திருக்கார்’, 'இவர் வந்திருக்கார்’னுதான் சொல்வார். அது எப்படி ஆச்சுனு பார்த்தா, அவர் சின்னப் பிள்ளையா இருக்கும்போது பெரிய நடிகர் ஒருவரைப் பார்த்து 'அங்கே பார்... அவன் வர்றான் பார்’ அப்படினு சொன்னார் என்கிட்ட. 'அவர் வர்றார்’னு சொல்லுனு சொன்னேன். வீட்டுக்கு வந்த அப்புறம், 'வாசல்ல பிச்சை எடுக்க பிச்சைக்காரர் வந்திருக்கார்’ அப்படினு ஆரம்பிச்சு, இப்ப வரை அந்த மரியாதை யைத் தக்கவெச்சிருக்கார்.

வட இந்தியாவில் முகமது ரஃபினு பாடகர். அவர் ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு இந்திப் பாட்டு ரிக்கார்டிங்குக்காக வந்திருந்தார். ரிக்கார்டிங்கின்போது நான் கமல் சாரைக் கூட்டிட்டுப் போய் உட்கார்த்தி வெச்சிருந்தேன். கேட்டுட்டே இருந்தார். கொஞ்ச நேரத்தில் வெளியே வந்துட்டோம். வெளியே வந்தபோது முகமது ரஃபி வந்தார். சரவணன் சார் ரஃபிகிட்ட, 'இந்தப் பையன் ஆக்ட் பண்றான்’னு சொன்னார். அவர் தட்டிக் கொடுத்துட்டு, 'கானா காவோகி... பாட்டுப் பாடுவியா?’னு கேட்டார். 'ஆங்...’ அப்படின்னுட்டுப் பாடினார். உள்ளே ரெக்கார்ட் பண்ணின பாடலை 'ஸ்வர் பதலே கைஸே, கைஸே கிஸ்மத் கி’னு பாடினார். அந்தப் பாட்டு உள்ளே ரெக்கார்டு பண்ணி டேப்புக்குக்கூட டிரான்ஸ்ஃபர் ஆகி இருக்கலை. ஆனா, கமல் சார் முதல் ரெண்டு வரியை அற்புதமாப் பாடிக்

கமல் நம் காலத்து நாயகன்!

காண்பித்தார். ரஃபி சார் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டார். அந்த மாதிரி ஒரு ஷார்ப்னஸ் எப்பவுமே அவர்கிட்ட இருக்கும்!''

''ஆரம்பக் காலத்துல இருந்து நீங்க அவரைப் பார்த்துட்டு வர்றீங்க... அவருடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?''

''என்கிட்ட 'நீங்கதான் அவருக்கு ஆக்ட் பண்ண சொல்லித்தர்றீங்களா?’னு கேட்டுஇருக்காங்க. அவருக்கு யார் சொல்லித் தர்றது? சில ஏரியாக்களில் அவருக்கு கைடு பண்ணவங்க இருக்காங்க. ஆனா, டோட்டலா பார்த்தா, எல்லாமே அவர் க்ரியேஷன்தான். அவர் எந்த அளவுக்கு ஹார்டு வொர்க் பண்ணுவாருன்னா, 'அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிக்கிறதுக்கு முன்னாடி அவர் மிருதங்கம் வாசிக்கக் கத்துக்கிட்டு வந்தார். 'உண்மையான மிருதங்க வித்வான் மாதிரி இருக்கு கை விழுகிறதெல்லாம் பார்த்தா. அச்சரம் தப்பாம வந்திருக்கு’னு மிஸ்டர் சுப்புடுகூட எழுதியிருக்கார்.

'சாகர்’னு ஒரு இந்திப் படம். அதுல ஒரு பெரிய டிரம்ல ஏறி நடிக்கணும். அதைப் படுக்கப்போட்டா, எட்டடி உயரம் இருக்கும். அதுல ஏறி உருண்டுட்டே சண்டைபோடுற மாதிரியான காட்சி. வீட்டு வாசல்ல அதே மாதிரி மரத்தால் பண்ணச் சொல்லி பதினஞ்சு நாள் இவர் பிராக்டீஸ் பண்ணிட்டுப் போனார். இவர்கூட நடிச்சவரால அதில் ஏறி நிக்கக்கூட முடியலை. பேலன்ஸ் பண்ண முடியலை. எதைச் செய்யணும்னாலும் அதுக்குனு பிரிப்பேர் பண்ணுவார். எவ்வளவு சின்ன விஷயமா இருந்தாலும் டோட்டல் இன்வால்வ்மென்ட் இல்லாம அதில் ஈடுபடவே மாட்டார்.

காலைல எழுந்தா சினிமா, மத்தியானம் சாப்பாடும் சினிமா, டின்னரும் சினிமாதான்! அமெரிக்காவுக்கு ஹாலிடேக்குப் போறேன் அப்படிம்பார். போயிட்டு வந்த பிறகு, ஹாலிடே எல்லாம் எப்படிப் போச்சுனு கேட்டா... 'நடிப்புக்காக ஒரு கோர்ஸ் அட்டென்ட் பண்ணேன். சினிமா பட்ஜெட் பண்றதுன்னு ஒரு கோர்ஸ் பண்ணேன். மேக்கப் ஸ்பெஷலிஸ்ட் இருந்தார். அவரைப் பார்த்தேன்’னு அடுக்குவார். ஏங்க ஹாலிடேவுக்குப் போறேன்னு சொன்னீங்களேனு கேட்டா, 'இதுதான் எனக்கு ஹாலிடே. இங்கே இருந்து அங்கே போனா ஹாலிடே. அங்கே இருந்து இங்கே வந்தா ஹாலிடே. எல்லாமே ஹாலிடேதான்’னு சொல்வார்!

ஒரு முறை ஷூட்டிங்ல 25 அடி உயரத்துல இருந்து குதிக்கணும். நான் 'டூப் போட்டுருப்பா’னு சொல்லிட்டு வந்துட்டேன். எங்கிட்ட சரி சரின்னு சொல்லிட்டு, பிறகு அவரே நடிச்சிருக்கார். 'என்ன இப்படிப் பண்ணிட்டீங்க? அத்தனை புரொடியூசர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க கால்

கமல் நம் காலத்து நாயகன்!

உடைஞ்சு மூணு மாசம் படுத்துட்டா, அவங்க போட்ட பணம் என்னாகும்’னு கேட்டா, அடிபடாமப் பார்த்துக்குவேன்னு சொல்றாரே தவிர, அப்படி ரிஸ்க் எடுக்கிறதை நிறுத்த மாட்டார். இவர் மாதிரி எந்த ஆர்ட்டிஸ்ட்டும் அடிபட்டு இருக்க மாட்டாங்க. எங்கே பார்த்தாலும் காயங்கள். போர் வீரன் மாதிரி உடம்பெல்லாம் தழும்புகள்.

ரிவார்டு வருதானு பார்த்து எதையும் அவர் செய்யலை. ரிவார்டு எதிர்பார்த்துச் செய்திருந்தா, பல கல்யாண மண்டபங்கள் வந்திருக்கும். கல்யாண மண்டபம் இல்லாத நடிகர் இவர் ஒருவர்தான்னு கிண்டலுக்குச் சொல்வாங்க. சினிமாதான் அவருக்கு வாழ்க்கை!

'கமல் 50’ விழாவுக்கு விஜய் டி.வி. இவர்கிட்ட அனுமதி வாங்கிட்டாங்க. உடனே, மத்த சேனல்லாம் வந்து, 'சார், எங்களை விட்டுட்டீங்களே’னு கேட்டாங்க. அப்போ நான், '75 வருஷத்துக்கு வேணும்னா, இப்பவே அக்ரிமென்ட் போட்டுக்கங்க. லேட்டா வந்தா, அப்புறம் 100-க்குத்தான் போடணும்’னு சொன்னேன். ஏன்னா, இவர் சாதனை பண்ணாத வருஷமே இருக்கப்போறது இல்லை. ஏதாவது பண்ணிட்டே இருப்பார். திஸ் இஸ் வாட் ஹி டூ. ஹி இஸ் பெஸ்ட் அட் இட்!''