Published:Updated:

சினிமா விமர்சனம் : மெளனகுரு

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : மெளனகுரு

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

ளிமைதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்பார்கள். அப்படி, இது மௌனத்தின் குரல்!

 போலீஸ் நினைத்தால் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து, ஒரு சாதாரணனை என்ன பாடுபடுத்த முடியும் என்பதே மௌன குரு. ஒரு சாதாரணக் கதையை செம சஸ்பென்ஸ் த்ரில்லராக்கி கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சாந்தகுமார். காவல் துறையின் கறுப்பு ஆடுகளைப் பதிவு செய்த அதே பாதையில், சின்சியர் அதிகாரிகளின் சிரமத்தையும் கச்சிதமாகச் சொன்ன விதத்துக்காக சாந்தகுமாருக்கு... ஒரு புன்னகைப் பூங்கொத்து!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா விமர்சனம் : மெளனகுரு

டைட்டில் துவங்கி விரியும் திரைக்கதையின் ஒவ்வொரு மடிப்பிலும் ஒரு சம்பவம் புதைத்து, இறுதியில் அதைத் தொகுக்கும் திரைக்கதைதான் படத்தைத் தாங்கி நிற்கும் அசல் ஹீரோ. அருள்நிதி, ஜான் விஜய், உமா ரியாஸ், அம்மா சுஜாதா, ஃபாதர் ஆனந்த் வர்மா எனப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அத்தனை நேர்த்தியான தேர்வு.  

நடிகராக அருள்நிதிக்கு 'மௌன குரு’தான் அறிமுக மைல்கல்! சரக்கு, சலம்பல் இல்லாத, ஆனாலும் வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக அச்சு அசல் வார்ப்பு. அண்ணன் வீட்டுக்கு அம்மாவை அனுப்ப விரும்பாத பொறாமை, இரண்டு ரூபாய்க்காக மல்லுக்கட்டும் பிடிவாதம், ஸ்டிரைக் சமய துப்பாக்கிச் சூட்டுக்கு அசராத தைரியம், காதலியிடம் பட்டாம்பூச்சி சிலாகிப்புகள் இல்லாமல் 'பசிக்குது... சாப்பிடணும்... காசு இருந்தா குடு’ என்று இறைஞ்சுவது, என சீனுக்கு சீன் 'கருணா’வாகவே... வெல்டன் அருள்!  

கிரிமினல் அசிஸ்டென்ட் கமிஷனராக ஜான் விஜய், மிரட்டல் வில்லன். 'போட்டுத் தள்ளிருங்க ராஜேந்திரன்!’ என்று ஜூனியர் அதிகாரிகளைக் கண்டிப்பும் நட்புமாகத் தனக்குச் சாதகமாகச் செயல்படவைக்கும் இடங்களில் மிரட்டி எடுக்கிறார்.  

கிரைம் இன்ஸ்பெக்டர் உமா ரியாஸ்கான் ஆச்சர்ய அசத்தல். கர்ப்பிணியாக, காக்கிச் சேலையில் அசதியான நடை யில் மெள்ள நூல் பிடித்து விசாரிக் கும் வியூகமும், மருத்துவமனை செக்கப்பில் 'மூணு பேருக்குஅப்புறம் தான்’ எனும்போதுகூட போலீஸ் சாதகத்தைப் பயன்படுத்தாத நேர்மையுமாக... தமிழ் சினிமாவின் அரிதான போலீஸ்!

ஹீரோவைப் பார்த்ததும் வெட்கத்தில் முகம் சிவந்து காதல் வயப்படும் வழக்கமான காதலி கேரக்டர்தான் இனியாவுக்கு. எந்த ரொமான்ஸும் இல்லாமல் கைவருடல்களிலேயே காதலை நகர்த்திச் சென்ற விதம்... கவிதை அழகு! தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் மகனின் கன்னம் எட்டாமல் நெஞ்சில் 'சொத் சொத்’ என்று ஆற்றாமையுடன் அடிக்கும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார் சுஜாதா. பாலியல் தொழிலாளியாக வரும் காஜல்... சின்னக் கதாபாத்திரத்திலும் காரம் சேர்க்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் திருதிரு விழி, 'ஓட்ட’ நடை என மனநிலை பிறழ்ந்தவராக நச்சென்று மனதில் பதிகிறார் முருகதாஸ்.

திரைக்கதைக்கு ஏற்ற பக்கவாத்தியமாகத் தோள் கொடுக்கும் வசனங்கள் படத்தின் பெரும் பலம். விபத்து நேர்ந்த இடத்தில், 'காரை ஓட்டிட்டு வந்தவன் இறந்துட்டான்’ என்று ஒருவர் சொல்ல, 'அக்கம் பக்கம் யாருமே இல்லை’ என்று அடுத்தவர் எடுத்துக் கொடுக்க, 'வெளியில தெரிஞ்சாதானே தப்பு’ என்று ஒருவர் சமாதானம் செய்ய... பணத்தைத் திருட நான்கு போலீஸ் அதிகாரிகள் முடிவெடுக்கும் இடம்... ஒரு சோறு பதம்!

ஆசையும் உதறலுமாக சட்டத்தை வளைக்கக் காய் நகர்த்தும் ஜான் விஜய், மது, பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி அடங்கிய போலீஸ் டீம்... பக்கா வில்லன் கூட்டணி. சக போலீஸ் உட்பட எவரையும் கொல்லத் தயங்காத ஜான் விஜய், பிரச்னைக் குக் காரணமான அருள்நிதியை மட்டும் பத்திரமாக வைத்து அழகு பார்ப்பது... தயக்கம் என்ன சாரே!

சினிமா விமர்சனம் : மெளனகுரு

பாடல்களில் கோட்டைவிட்டாலும் திகுதிகு காட்சிகளில் தீப்பிடிக்கவைக்கிறது தமனின் பின்னணி இசை. காதல் அத்தியா யங்களுக்கு பளிச், சேஸிங் காட்சிகளுக்கு ப்ளீச் என மகேஷ் முத்துசுவாமியின் கேமரா விதவிதமாக... ரகரகமாக விளையாடி இருக்கிறது.

எதிர்பார்க்காத ஒரு சமயத்தில் காதலனை மனநோயாளியாகப் பார்க்கும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியின் துடிப்பு எப்படி இருந்திருக்க வேண்டும்? ஆனால், இனியாவிடம் காதல் ரியாக்ஷனோ, என்ன சிகிச்சை அளிக்கிறார்கள், ஏன் அருள்நிதி அப்படி ஆனார் என்று தெரிந்துகொள்ளும் மெடிக்கல் ஆக்ஷனோ... இல்லவே இல்லையே! அட, தினமும் அருள்நிதியை இனியா வந்து சும்மா பார்த்துச் சென்றிருந்தாலே பிரச்னையின் காரணத்தை அறிந்துகொண்டு இருக்கலாமே!

இருந்தாலும், க்ளைமாக்ஸில் வழக்கமான கமர்ஷியல் திருப்பங்களுக்கு ஸ்கோப் இருந் தும் 'அடக்கி வாசித்து இருப்பது’... ஹாட்ஸ் ஆஃப் இயக்குநரே!  

சஸ்பென்ஸ் ப்ளஸ் ஆக்ஷன் த்ரில்லரை சுவாரஸ்யமாகப் படைத்த விதத்தில் மௌன மாகவே கவர்கிறான் குரு!