Published:Updated:

குமாரு... யாரு இவரு?

குமாரு... யாரு இவரு?
பிரீமியம் ஸ்டோரி
குமாரு... யாரு இவரு?

ப.சூரியராஜ் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

குமாரு... யாரு இவரு?

ப.சூரியராஜ் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

Published:Updated:
குமாரு... யாரு இவரு?
பிரீமியம் ஸ்டோரி
குமாரு... யாரு இவரு?

`யாரு நீங்க' எனும் தலையைச் சுற்றவைக்கும் கேள்விக்குப் பிறகு தமிழகத்துக்கே கிச்சுகிச்சு மூட்டிய கேள்வி, `குமாரு... யாரு இவரு'. இந்தக் கேள்வியை காலா சேட்டு `காலா'வில் கேட்டுக் கலவரமாக்கியதுபோலவே, நிஜத்தில் சிலரைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது. கேட்டுடறேன்...

குமாரு... யாரு இவரு?

* ஆங்கிலப் படங்களுக்கு நிகரான திகிலும் சுவாரஸ்யங்களும் நிறைந்த பயணம் மேற்கொண்டேன் என, பஞ்சபூதத்தின் சக்திகளைக்கொண்ட மோடியையே பொறாமைப்படவைக்கிறார். `இலங்கையில் என் வலதுகாலை எடுத்து வைக்கையில், வானவில் வட்டமடித்தது; சிங்கள ராணுவம் பட்டாசு வெடித்தது’ என ஊதுவத்தி கொளுத்துகிறார். இதுவரை ஆமைவடை சாப்பிடாதவர்களே ஊருக்குள் பலர் இருக்க, `ஆமைக்கறி சாப்பிட்டேன்’ என ஏப்பம்விடுகிறார். ஆஸ்திரேலியாக் கப்பலில் 40,000 டன் அரிசியை துப்பாக்கியால் சுட்டு, கப்பலில் ஓட்டையைப் போட்டதாக, அதிரடி வியாழன்கள் கண்டிராத கதைகளைச் சொல்கிறார். குமாரு... யாரு இவரு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குமாரு... யாரு இவரு?

* தென் தமிழகத்தில் இருந்துகொண்டு தென்னாப்பிரிக்க மாஃபியாவையே பொடனியில் தட்டி, சிறைக்குள் தள்ளும்  துறை. போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியும்போது எதையாவது கொளுத்திப்போட்டு அணைக்கும் துறை. துணை வட்டாட்சியரின் ஆணையைக்கூட அதிபரின் ஆணையைப்போல் எடுத்துக்கொண்டு கடமையில் கண் தவறாது கச்சிதமாகச் செய்துமுடிக்கும் துறை. அது ஸ்காட்லாந்து யார்டையே `இன்னாடா இன்னா..?’ எனக் கேள்வி கேட்கும் நம் தமிழகக் காவல்துறை. அப்படிப்பட்ட நம் காவல்துறைக்கே ஒருவர் பல நாளாக கேன் கேனாய் மினரல் வாட்டர் காட்டிக்கொண்டிருக்கிறாரே, குமாரு... யாரு இவரு?

குமாரு... யாரு இவரு?

* கட்சியில் எந்தப் பிரச்னை என்றாலும், தானாகவே மனமுவந்து தலையைக் கொடுத்து பஞ்சர் ஆகிறார். போதாக்குறைக்கு `சைபர் சைக்கோ’, `முறுக்கிட்டுப் போன மாப்பிள்ளை’ என விதவிதமாய்ப் பட்டப்பெயரையும் வைத்து, பற்பசை விளம்பரங்களில் பல்லையும் காட்டுகிறார். மீம்களில் மறக்காமல் வீட்டு அட்ரஸ் எழுதச் சொல்லி, ஸ்டாம்ப் ஒட்டச் சொல்லி, போஸ்டர் மாஸ்டரைப்போல் கோபம்கொள்கிறார். எந்தப் பிரச்னையானாலும் மீம் க்ரியேட்டர்களைவிட வேகமாய் உள்ளே புகுந்து, பிரச்னையை காமெடியாக்கி தானும் காமெடியாகிக் கிளம்பிவிடுகிறாரே, குமாரு... யாரு இவரு?

குமாரு... யாரு இவரு?

* `வேங்கையன் மவன் ஒத்தையில நிக்கேன். தில் இருந்தா மொத்தமா வாங்கலே’ என சொடக்குமேல சொடக்கு போடுகிறார். அதை நம்பி வில்லன்களும் மொத்தமாய்க் கிளம்பி வந்தால் `பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ எனக் கலாய்த்து சிரிப்பு காட்டுகிறார். படத்தில், `இந்த உடம்புதான் நம்ம ஆயுதம். நிலம், நீர் நம் உரிமை. போராடுவோம்!’ என பன்ச் அடிக்கிறார். நிஜத்தில் `போராடினால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்’ என டின்ச் அடிக்கிறார். சரி, போராடினால் தமிழ்நாடுதான் சுடுகாடு ஆகும், தாராவி சுடுகாடு ஆகாதெனச் சொல்லவருகிறார் என மனதைத் தேற்றினாலும், `போராட்டத்தில் சமூகவிரோதிகள் உள்ளே புகுந்துவிட்டார்கள்’ என பா.ஜ.க-வுடன் பின்ச் அடிக்கிறார். சேம் பின்ச்! இப்படி நாலைஞ்சு நூடுல்ஸை. கொசகொசன்னு பிசைஞ்சு கையில கொடுத்த மாதிரியே கருத்து சொல்றாரே, குமாரு... யாரு இவரு?

குமாரு... யாரு இவரு?

* இறுதியாக, சமீபகாலமாக வலைதளங்களில் கறுப்பா, கனமா, சுருட்டைமுடி வைத்துக்கொண்டு `இப்பலாம் முன்னமாதிரி இல்ல குமாரு. நேத்துகூட ரொம்ப அசிங்கமாப்போச்சு குமாரு’ என தாரை தாரையாகக் கண்ணீர் சிந்தி படுபிரபலம் ஆகியிருக்கிறாரே ஒருவர். ஏப்பா குமாரு... யாருப்பா இவரு?