Published:Updated:

பிஜிலி ரமேஷ் முதல் ஃபிலிப்ஸு வரை... நெட்டிசன்களின் `2018 டார்லிங்ஸ்!'

பிஜிலி ரமேஷ் முதல் ஃபிலிப்ஸு வரை... நெட்டிசன்களின் `2018 டார்லிங்ஸ்!'
பிஜிலி ரமேஷ் முதல் ஃபிலிப்ஸு வரை... நெட்டிசன்களின் `2018 டார்லிங்ஸ்!'

இந்த ஆண்டில் நெட்டிசன்களின் லைக்குகளை அள்ளி, மீமாக உருவாகி, மக்களின் ஹாஹாக்களை அள்ளிய எளிய மனிதர்களின் பட்டியல் இது. `ஷ்ரூவ்வ்வ்' கரணும் `நாதஸ்வரம்' கோபியும் திரைப்பிரபலங்கள் என்பதால் பட்டியலில் சேர்ப்பில்லை. கரண், கோபி வெறியர்கள் கோபப்படவேண்டாம்..! ஸ்ரூவ்வ்வ்....

பிஜிலி ரமேஷ், ஃபிலிப்ஸ், மோகன் என 2018-ம் ஆண்டில் நெட்டிசன்களின் லைக்குகளை அள்ளி, மீமாக உருவாகி, ஹாஹாக்களை அள்ளிய எளிய மனிதர்களின் பட்டியல் இது. `ஷ்ரூவ்வ்வ்' கரணும் `நாதஸ்வரம்' கோபியும் திரைப்பிரபலங்கள் என்பதால் பட்டியலில் சேர்ப்பில்லை. கரண், கோபி வெறியர்கள் கோபப்படவேண்டாம்..! ஸ்ரூவ்வ்வ்...


`பிஜிலி' ரமேஷ் :

சிவனேனு போய்கினு இருந்தவரை தூக்கி லாக் பண்ணி, சினிமா நடிகராக மாற்றிய துப்ளாக் ஷீப் டீம். பிஜிலியின் இந்தத் திடீர் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்கு பிஜிலியை விட மீம் க்ரியேட்டர்களின் பங்கே அதிகம். ``அவ்ளோ பெரிய லார்டுனா, நீ ஒயின் ஷாப்பை மூடுய்யா", ``நீ மூடப்பா", ``சூப்பர்ஸ்டார் வந்ததும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே ஆப்பு இருக்கு", ``சிந்தலாகிடும்" என பிஜிலி உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் மீம்களாகச் சிதறியது. கிருஷ்ணரின் கீதா உபதேசத்தைவிட பிஜிலியின் போதா உபதேசம் பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. ``அடுத்த முதல்வரே எங்க அண்ணன்தான்" என அறைகூவல் விட்டது பிஜிலி ரசிகர் மன்றம். ஜூன் போய் ஜூலைக் காற்று வந்தும், பிஜிலி சூறாவளி மட்டும் ஓயாமல் சுழன்றது. விளைவு, `கோலமாவு கோகிலா'வின் `கபிஸ்கபா'வில் "டக்டக்டிகுடிகு டக்டிக் டகுடுகு" எனத் தலைமுடியைக் கோதினார். எளிய மனிதர் ஒருவரை `ப்ரான்க்' என்ற பெயரில் கேலிப்பொருளாக்கியுள்ளனர் என்ற சர்ச்சைகள் கிளம்பினாலும், அதன்மூலம் அவர் அடைந்த பிரபலம், சர்ச்சைகளை அமிழ்த்தியது.

`வேணாம்' ஃபிலிப்ஸ் :

பாகுபலி-பல்வாள்தேவன் பகையைவிட, ஃபிலிப்ஸ்-மோகன் பகைதான் முரட்டு சென்சேஷன்! `வேணாம் ஃபிலிப்ஸே... மரியாதை குடுத்துகிட்டு இருக்கேன்" என ஆரம்பித்த வீடியோவின் அடுத்தடுத்த வார்த்தைகளை எல்லாம் ஹெட்போன் துணையின்றி கேட்பது சங்கடம். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் மோகனை, சுற்றிச் சுற்றி வம்பிழுத்தது ஃபிலிப்ஸ்தான். ``உன் மூக்குல
நியாநியான்னு வருது பார்த்தியா" என்று அவர் கேட்கும்போதெல்லாம் ஊரே `குபுக்'கெனச் சிரித்தது. ``ஃபிலிப்ஸ் பேசிய பேச்சுக்கு, கையைச் சுழற்றிய வேகத்துக்கு என்ன ஆனாரோ மோகன், பாவம்" என ஆழ்ந்த யோசனையில் இறங்கியிருந்தபோதே வெளியானது அடுத்த பாகம். வீடியோவின் முடிவில் ஒரேயொரு அடியில் நாக்-அவுட்டாகி ஃபிலிப்ஸ் மல்லாந்ததைப் பார்த்து, ``என்ன தலைவன் தாக்கப்பட்டாரா" எனத் துக்கத்தில் மூழ்கியது தமிழகம்.

ரௌடி பேபி :

``அனிதா பிரச்னையப்போ எங்க போன, தூத்துக்குடி தெருலைட் எப்போ எங்க போன, ஜல்லிக்கட்டு தயிர் பாரம்பர்யம் போராடுனப்போ எங்க போன, அங்க எல்லாம் என் தலைவன் வந்தாருடா. அதுதான் எங்க சர்காரு. அவர்தான் எங்க தளபதி" என அமுல் பேபி ஒன்று ரௌடி பேபி அவதாரமெடுத்து அப்லோடிய வீடியோக்கள் அனைத்தும் தெறி வைரல். சிவப்பு கலர் வாட்டர் கலரை வாயில் ஊற்றிக்கொண்டு ``ஒருநாள் எங்கள் கை ஓங்கும்" என பெர்ஃபாமன்ஸ் செய்ததெல்லாம் மெர்சலோ மெர்சல்! `தல-தளபதி ரசிகர்கள் நாங்க ஒண்ணு சேர்ந்துட்டோம்’ என ரௌடி பேபியும், ரௌடி பேபியின் ஃப்ரெண்ட் பேபியும் செய்த டிக்டிக் வீடியோ,  திடீரென, விவசாயம் பற்றியும் மாடு பற்றியும் வகுப்பெத்துக் கொண்டிருக்கிறது இந்தக் கடைக்குட்டிச் சிங்கம்!
 


`குணமா சொல்லணும்' குழந்தை :
``சேட்டை பண்றது தப்பா, இல்லையா" என பூசையெல்லாம் முடித்துவிட்டு அம்மா கேட்ட கேள்விக்கு, ``தப்புதான். ஆனா, குணமா வாயில சொல்லணும். திட்டாம அடிக்காம வாயில சொல்லணும்" என பதில் சொன்ன குழந்தையும் செம வைரல். இம்புட்டு குழந்தைக்குள்ளே இவ்வளவு முதிர்ச்சியா என வாயடைத்துப்போனார்கள் அனைவரும். `குணமா வாயில சொல்லணும்' என்கிற வார்த்தை மட்டும் சில மாதங்களுக்கு மீம்களை ஆக்கிரமித்தது. அதேநேரம், குழந்தைகளை அழவிட்டு வீடியோ எடுத்தவர்களும் நெட்டிசன்களிடம் ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்.

`பேரிகேட்' பீட்டர் :

2018 பிறந்ததே பேரிகேட் பீட்டரோடுதான். வருடப் பிறப்பை விமரிசையாகக் கொண்டாடுகிறேன் எனப் பொதுமக்களிடம் ஒரண்டையிழுத்து, போலீஸ் வைத்திருந்த பேரிகேடை பிடித்து, நெருப்புப் பறக்க தரதரவென இழுத்து வந்து, தட்டிகேட்ட போலீஸை ஒருமையில் பேசி, அதை ஏதோ வீரதீர பராக்கிரமச் செயல் போல, ஃபேஸ்புக்கில் லைவில் சொல்லி வைத்தார் பீட்டர். அந்த வீடியோவை யாரோ போலீஸிடம் ஷேர் பண்ண, பீட்டரோடு சேர்ந்து சேட்டை செய்தவர்கள் எல்லோரையும் கூப்பிட்டு மிரட்டி அனுப்பியது போலீஸ். அடுத்த சில நாள்களிலேயே, `பண்ணது தப்புதான் மன்னிச்சுடுங்க' எனச் சமத்தாய்ப் பேசி இன்னொரு வீடியோ அப்லோட, `கப்'பெனப் பிடித்துக்கொண்டது மீம் வட்டாரம்.


போயிடு :

`வடசென்னை' பார்த்துவிட்டு வந்த பார்வையாளர்களிடம் `படம் எப்படி' எனக் கருத்து கேட்டபோது நடந்தது இந்த காமெடி! `தலைவர் தனுஷ் வந்து பிச்சிட்டாரு. சத்தியமா...' என உணர்ச்சிப்பொங்க பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போது, `அண்ணா அவன் இன்னும் படமே பார்க்கலைனா, இப்போதான்னா பார்க்க வந்தான்' என இடைமறித்து பத்தாயிரம் வாட்ஸ் பல்பு கொடுத்தார் அவரது நண்பர். அதில் கடுப்பாகி `போயிடு, படம் வேற லெவல்...' என ஆவேசமான அவர்தான், அடுத்த ஒரு மாதத்துக்கு மீம் டெம்ப்ளேட். `போயிடு...' என்பதிலிருந்த வெகுளித்தனமும் நண்பர்களுக்கிடையே நடந்த ஜாலி கேலி தருணமும் எல்லோருக்குமே பிடித்திருந்தது.


`ஐ.க்யூ' அப்புட்டா :

அரவிந்த வெங்கடேஷ் (எ) அப்புட்டா. நெட்டிசன்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட முகம். ``வீகனாக மாறுங்கள்" என்கிற பிரசார வீடியோவில் ``நான் பீத்திக்குறதுக்காகச் சொல்லலை. என் ஐ.க்யு லெவல், 160-க்கு மேல" என ஒரே போடாய் போட்டதில், அதிர்ந்து போனார்கள் மக்கள். ``நான் பீத்திக்குறதுக்காகச் சொல்லலை" என்ற வார்த்தை மட்டும் நெட்டிசன்கள் மத்தியில் மரண வைரல். பலரது கமென்ட் பாக்ஸில் அப்புட்டாவின் ராஜ்ஜியம்தான்! இது நான் பீத்திக்கறதுக்காகச் சொல்லலை...

`நா பிளக்க' நித்யானந்தம் :

ஆண்டாள் சர்ச்சை வெடித்தபோது, வெளியாகி குபீர் கிளப்பிய வீடியோ இது. ``நா பிளக்க பொய்பேசி" என தூய்மையாய் ஆரம்பித்த வீடியோவில், அடுத்தடுத்து வந்து விழுந்த வார்த்தைகளெல்லாம் அயய்யோ அபசாரம்! கெட்டவார்த்தைகளில் கழுவிக் கழுவி காக்காய்களுக்கு ஊற்றிவிட்டு, சமத்துப் பிள்ளையாய் `நித்யானந்தம்" என முடித்ததில் நிற்கிறது , எல்லாமும்!

சாப்பிடணும்ல :

வருடத்தின் இறுதியில் வெளியான வீடியோ. உலகத் தத்துவங்கள் ஒட்டுமொத்தத்தையும் ஒரே வார்த்தையில் சொன்ன வீடியோ. ``சங்கம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா" என்ற கேள்விக்கு `சாப்பாடு முக்கியம், பசிக்கும்ல... சாப்பிடக்கூடாதா" எனக் கொந்தளிப்பார் அந்தச் சிறுவன். இன்றைய தேதிக்கு இந்த `பசிக்கும்ல' தான் தமிழக டிரெண்ட்!

அடுத்த கட்டுரைக்கு