ஆனந்த விகடன் விருதுகள்
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இல்லுமினாட்டி பொங்கல்!

இல்லுமினாட்டி பொங்கல்!
பிரீமியம் ஸ்டோரி
News
இல்லுமினாட்டி பொங்கல்!

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

பொங்கல் அன்று வெண்பொங்கல் வைத்தாலே வெறித்துப் பார்க்கின்ற சமூகம். புதிது புதிதாய் எதையாவது கண்டுபிடித்துச் சாப்பிட்டால்தானே சமூகம் வளரும். ஆக, சென்ற ஆண்டு வெளியான சில படங்களின் ஃபார்முலாக்களைப் பானைக்குள் தூக்கிப்போட்டுப் புதுப்பொங்கல்கள் ரெசிப்பிகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். உண்மையான பொங்கல் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்யுங்கள்.

இல்லுமினாட்டி பொங்கல்!

தனிப்பெரும் பொங்கல்!

இந்தப் பொங்கலின் சாரம், பால்யத்தின் வேர்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. அதனால், நம் பள்ளிப் பருவத்தில் ஆலாக்கு அரிசியை டவுசர் பாக்கெட்டில் ஊறப்போட்டு மென்ற அதே நுட்பத்தைப் பின்பற்றி அரிசியை டவுசர் பாக்கெட்டில் ஊறவைக்கவும். பானையில் யமுனை ஆற்றின் நீரை சில டம்ளர்கள் ஊற்றிவிட்டு, ஊறவைத்த அரிசியை கைபடாமல் எடுத்து பானையில் போடவும். கைபட்டால் பொங்கல் கெட்டுவிடும்! பின்னர், தம்மாத்தூண்டு பெயரை மறந்துபோய் கதைக்கே வில்லியான வசந்தியை மனதில் நினைத்துக்கொண்டு, வெல்லத்தை `நங்நங்’கென இடித்து நொறுக்கவும். அதையும் பானைக்குள் போட்டுவிட்டு, கோயம்பேட்டிலிருந்து மீனம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயிலில் போய் ரிட்டர்ன் வரவும். அதற்குள், அந்தப் பொங்கல் ஜானுவின் சுடிதார் கலருக்கு மாறி, நன்றாக வெந்திருக்கும். பதம் சரியாக வரவில்லையென்றால் வயலினை எடுத்து வாசிக்கவும். கவனம், இஷ்டத்துக்கு வயர்களைப் பிடித்து இழுத்தால் பொங்கல் ரொம்பக் கருகி கோந்தாகிவிடும். பொங்கிய பொங்கலை அப்படியே பானையோடு சேர்த்து தூரக் கடாசிவிட்டு, சிங்கப்பூர் உப்புமா செய்து சாப்பிடவும். சாப்ட்டியா ராம்?

ஒரு விரல் பொங்கல்

லாஸ் வேகாஸின் சூதாட்ட விடுதியில் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் கண்டுபிடித்த வில்லங்கப் பொங்கல் இது. அரிசி, வெல்லம், திராட்சை, முந்திரியோடு சேர்த்து அரைக் கிலோ தக்காளியையும் நறுக்கி குக்கரில் போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். சமைக்கும் அடுப்பு, அரசு கொடுத்த இலவச கேஸ் அடுப்பாக இல்லாமலிருப்பது சிறப்பு. இல்லையேல், அந்த அடுப்புக்கு முதலில் போகி கொண்டாடிவிட வேண்டும். அதேபோல், சமைக்க பொருள்கள் வாங்கும்போது கொசுறாகக் கொத்தமல்லி, கறிவேப்பிலை அல்லது உடைத்த கடலை கொடுப்பார்கள். அதையும் கொல்லையில் போட்டுப் புதைத்துவிடுவது நல்லது. ஆனால், நீங்கள் என்ன முக்கினாலும் இந்தப் பொங்கல் பொங்கவே பொங்காது. அதற்கு, மக்கரு குக்கருமா என்று சந்தேகிக்க வேண்டாம். நீங்கள் பொங்கல் வைப்பதைக் கண்டு சிலர் வயிறு எரிவார்கள். அவர்களைப் பிடித்துவந்து மல்லாக்க படுக்கவைத்து, குக்கரை வயிற்றின் மீது வைத்தால் மட்டுமே விசில் பறந்து படாரெனப் பொங்கும் இந்தப் பல்தி பக்குற பொங்கல். ஒரு விரலால் எடுத்து டேஸ்ட் பார்த்துச் சொல்லவும்.

சீம சீம பொங்கல்

அடுப்பில் பொங்கல் கிண்டுவதைவிட, அடுப்பங்கரையில் ரங்கோலி கோலம் போட்டு, கலர் பேப்பர் தோரணம் கட்டி, நான்கைந்து பேருக்குக் கரும்பைக் கவ்வக் கொடுத்து சிலம்பம் கற்றுக்கொடுத்து கலர்ஃபுல்லாக மாற்றுவதுதான் முக்கியம். அலங்காரங்களை முடித்துவிட்டு, புளியம்பட்டி சந்தையில் வாங்கிய வெல்லத்தை, வளரியைத் திருப்பிப் பிடித்து அடித்து நொறுக்கவும். நொறுக்கிய வெல்லத்தை சீரகசம்பா அரிசியோடு சேர்த்துப் பானைக்குள் போட்டுக் கொதிக்கவிடவும். ராஜா வீட்டுப் பொங்கல் மற்ற வீடுகளைப்போல மஞ்சள் கலரில் இருந்தால் எப்படி? அதனால், ஆறு வண்ண கோலப்பொடிகளைக் கைப்பிடி அளவுஅள்ளி பானைக்குள் போடவும்.ஆசமரக்காயா! 

இல்லுமினாட்டி பொங்கல்!

பொங்கல்2.0

அடுப்பை இடுப்பைச் சுற்றித் தூக்கி எறிந்துவிட்டு, மைக்ரோவேவ் ஓவனில் சமைக்க வேண்டிய டெக்கி பொங்கல் இது. பெண் ரோபோக்களுக்கு குலவைக்கு பதில் ‘குக்கூ’ டோனை இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும், சத்தம் களைகட்டும். அரிசி மற்றும் வெல்லத்தோடு பொட்டாசியம் கார்பனேட் சில சிட்டிகைகள், கொஞ்சம் மெமரி கார்டு துண்டுகள் மற்றும் ரிமோட் பேட்டரி மூன்றையும் சேர்த்துக் கொதிக்க விடவேண்டும். இதெல்லாம் போடுவதால் நாம் செய்வது சர்க்கரைப்பொங்கலா சாராயத்தண்ணியா என, சில சமயம் சந்தேகங்கள்கூட வரலாம். டோண்ட் ஒர்ரி! ஓவனின் அடியில் பாசிட்டிவ் ஆராவைப் பற்றவைத்தால், பொங்கல் அடி பிடிக்காமல் சுவையாக வரும். மாட்டுப்பொங்கலன்று கால் நடைகளுக்கு மரியாதை செய்வதுபோல, இந் புள்ளினப்பொங்கல் அன்று பறவைகளுக்கு மரியாதை செய்தால் பட்சிராஜனின் ஆன்மாவும் சாந்தியடையும். 

இல்லுமினாட்டி பொங்கல்!

பொங்கல் ஸ்கொயர்

பாலுக்கு பதில் பீர் ஊற்றி சமைக்க வேண்டிய விவகாரப் பொங்கல். ஒரு கட்டப்பையைக் கக்கத்தில் செருகிக்கொண்டு திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டுக்கு வாடகை சைக்கிளில் செல்லவும். அங்கிருந்து மதுரைக்கு பஸ் பிடித்து, மாட்டுத்தாவணி போய் இறங்கவும். இறங்கிய சூட்டோடு, மதுரை விமானநிலையத்திற்கு டவுன் பஸ் ஏறவும். மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து,அங்கிருந்து பல்லாவரத்துக்கு ஷேர் ஆட்டோவில் செல்லவும். அங்கிருக்கும் அண்ணாச்சி கடையில் அரைக்கிலோ அரிசி வாங்கிவிட்டு, அரை மணி நேரத்தில் மீண்டும் திருநெல்வேலி திரும்பவும். வெல்லம் வாங்க, திருச்செந்தூருக்கு ஹெலிகாப்டரில் சென்று வரவும். வாங்கிவந்த வெல்லத்தை உருட்டுக்கட்டையை வைத்து நன்றாக அடித்து நசுக்கவும். அரிசி, நசுக்கிய வெல்லம் இரண்டையும் தாமிரபரணித் தண்ணீரோடு சேர்த்துப் பானைக்குள் கொட்டவும். குலவைக்குப் பதில், ‘பருப்புல ஒசந்தது முந்திரி, பதவில ஒசந்தது மந்திரி’ போன்ற பானிபட் போர் காலத்து பன்ச் டயலாக்குகளைத் திரும்பத் திரும்பச் சொல்லவும். கடைசியாக, தாய் வயிற்றில் பிறக்காமல் பேய் வயிற்றில் பிறந்தவரின் கையில் கரண்டியைக் கொடுத்து, ஃபாஸ்ட் ஃபார்வர்டில் கிண்டவிட்டால் போதும்.  ஒரு மூட்டை அரிசிக்கு ஒன்றரை டன் பொங்கல் வீதம் பொங்குபொங்கெனப் பொங்கும்!

விஸ்வரூபப் பொங்கல்

மெனக்கெடத் தேவையில்லாத பொங்கல் இது. போன பொங்கலன்று பொங்கியதில் கொஞ்சம் மீந்து சட்டியோடு ஒட்டிப்போயிருக்கும். அதை மறுபடியும் பானையில் போட்டு, நீரை ஊற்றி, புதுப்பொங்கல் வைத்ததைப்போல் பொங்கவிட்டு எடுத்தால் விஸ்வரூபப் பொங்கல் ரெடி. சிம்பிள்! தொழில் ரகசியம் என்னவென்றால், இதெல்லாம் இல்லுமினாட்டிகளின் சதியால் உருவான உணவுகள். சமைத்து சாப்பிட்டுவிட்டு ஆம்புலன்ஸ் ஏறிவிடாதே தமிழா!

பா.சூரியராஜ்