சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

டீ with பன்னீர்

டீ with பன்னீர்
பிரீமியம் ஸ்டோரி
News
டீ with பன்னீர்

ஓவியம்: அரஸ்

பிரதமர் மோடியை, `பட்சிராஜன்’ அக்‌ஷய் குமார் பேட்டி எடுத்ததுதான் சமீபத்தில் வைரல். இதே மேட்டரை நம்மூர் அரசியல்வாதியையும் நடிகரையும் வைத்து யோசித்துப் பார்த்தோம். `அ’வுக்கு `அ’ என அக்‌ஷய் குமாருக்குப் பதிலாக அஜித்குமாரையும், அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஓ.பி.எஸ்-ஸையும் கொண்டு குதர்க்கமாய் யோசித்துப் பார்த்ததில்...

டீ with பன்னீர்

அஜித் : வணக்கம் அய்யா... ( தன் கைகளைத் தானே கூப்பி வணக்கம் வைக்கிறார். எளிமை!)

ஓ.பி.எஸ் : வணக்கம் தம்பி, எப்படியிருக்கீக! (குறுங்கோணத்தில் குனிந்து கும்பிடு வைக்கிறார்)

அஜித் :
ஏன் இவ்ளோ குனியுறீங்க, என்ன ஆச்சு?

ஓ.பி.எஸ் : உங்க கையில இருக்கிற குட்டி ஹெலிகாப்டரைப் பார்த்ததும், பழக்கதோசத்துல குனிஞ்சுட்டேன் தம்பி.

அஜித் : புரியலையே...

ஓ.பி.எஸ் : எல்லாம் பழகிப்போச்சு தம்பி. கார் டயர்ல இருந்து ஹெலிகாப்டர் டயர் வரைக்கும் பார்த்திருக்கேன். ( எதையோ சிந்திக்கிறார் )

அஜித் : நீங்களும் மெக்கானிக்கா?

ஓ.பி.எஸ் : அட ஏன் தம்பி நீங்க வேற. குனிஞ்சு கும்பிடு வெச்சிருக்கேன்னு சொல்ல வந்தேன்.

அஜித் :  (அதிர்ச்சியாகிறார் ) உங்களுக்கு முதுகெலாம் வலிக்கலையா!

ஓ.பி.எஸ் : இல்ல தம்பி, எத்தனையோ பேர் என்னை முதுகுல குத்தியிருக்காங்க. அதைவிட இது பெருசா வலிக்கலை...

அஜித் : ஓ, உங்களையும் நிறைய பேர் முதுகுல குத்தியிருக்காங்களா! சியர்ஸ்...

டீ with பன்னீர்ஓ.பி.எஸ் : சியர்ஸ் தம்பி!

அஜித் : இப்பலாம் பேசுறதுக்கு முன்னாடி “தாய்நாடு காக்கும் தங்கத்தாரகை, நான் வணங்கும் தாயுருவத் தெய்வத்தின் தலை வணங்கி”ன்னு எல்லாம் ஆரம்பிக்குறது இல்லையா?

ஓ.பி.எஸ் : உங்களுக்கு போன படத்துல பேசின வசனம் ஞாபகம் இருக்கா?

அஜித் : இல்ல...

ஓ.பி.எஸ் : அதுமாதிரிதான் இதுவும். ஞாபகம் இல்ல, மறந்துபோச்சு.

அஜித் : ஆனா, என் பிறந்தநாளை மறக்காம வாழ்த்து சொல்லியிருந்தீங்க. நன்றிங்கய்யா!

ஓ.பி.எஸ் : அது நம்ம தொகுதிக்காரராச்சேன்னு சொன்னேன் தம்பி.

டீ with பன்னீர்

அஜித் : உங்க தொகுதியா?! ( அதிர்ச்சியாகிறார் )

ஓ.பி.எஸ் : நீங்கதான தம்பி, பேரு தூக்குதுரை, ஊர் தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டின்னு சொல்லியிருந்தீங்க. பயலுக காமிச்சாய்ங்களே...

அஜித் : அது நான் படத்துல பேசின வசனங்கய்யா! பல்கேரியக்காரனுக்குத் தமிழ்ல பேசினதே புரிஞ்சுடுச்சு. உங்களுக்கு இது புரியமாட்டேங்குதே!

ஓ.பி.எஸ் : மன்னிச்சுடுங்க தம்பி. நீங்களே பார்த்தீங்கள்ல... இப்படித்தான் ஏமாத்தி முதுகுல குத்துறாய்ங்க... ( கண்ணீரை அந்த வெள்ளை கர்ச்சீப்பால் துடைக்கிறார்)

அஜித் : அழாதீங்க, உங்களுக்கு மாம்பழம்னா பிடிக்குமாமே!

ஓ.பி.எஸ் : எனக்கு மாம்பழம் பிடிக்குதோ இல்லையோ. ஆனா, மாம்பழத்துக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. கொஞ்சம் சூதானமா இருந்துக்கோங்க!

அஜித் : இஞ்சார்றா, நீங்க பயணம் பண்ணதுலேயே உங்களுக்குப் பிடிச்ச இடம் எது!

ஓ.பி.எஸ் :
இதோ இப்போ போயிட்டு வந்த வாரணாசிதான் தம்பி.

அஜித் : ஏன்?

ஓ.பி.எஸ் : ஏன்னா, அங்க மட்டும்தான் போய் சுத்திப் பார்த்திருக்கேன். வேற இடம்னா தஞ்சாவூர் பெரியகோழி பிடிக்கும்.

அஜித் : கோழியா...

ஓ.பி.எஸ் : ஆமா...

அஜித் : ரொம்ப வெகுளியா பேசுறீங்கய்யா. நீங்க முதல்வர் ஆகலைன்னா என்ன ஆகியிருப்பீங்க!

ஓ.பி.எஸ் : முதல்வராகிமட்டும் என்ன தம்பி ஆனேன்? என்ன சொல்றதுன்னு தெரியலையே.

அஜித் : ஒரு காபி சொல்லுங்க.

ஓ.பி.எஸ் : ஆங் தெரிஞ்சுடுச்சு தம்பி... இப்போ ஆள் இல்லாத கடையில் டீ ஆத்திட்டு இருக்கேன்ல. முதல்வர் ஆகலைன்னா ஆள் இருக்குற கடையில டீ ஆத்தியிருப்பேன்.

அஜித் : தினமும் எவ்ளோ நேரம் தூங்குவீங்க?

ஓ.பி.எஸ் : பக்கத்துல யாரும் இல்லாத நேரங்கள்ல தூங்குவேன்.

அஜித் : அது ஏன்?

ஓ.பி.எஸ் : நான் கண்ணை மூடினதும், ` தியானம் - 2’, ‘தர்மயுத்தம் - 2’னு கிளப்பிவிட சிலர் காத்துக்கிட்டிருக்காய்ங்க.

அஜித் : நீங்க தர்மயுத்தம் பண்ணீங்கதானே..?

ஓ.பி.எஸ் : அது பீச்ல காத்து வாங்கப் போனேன். அடிச்ச காத்துக்குக் கண் செருகிடுச்சுன்னு தூங்கினது தம்பி. அதைத்தான் `தர்ம யுத்தம்’னு கிளப்பி விட்டாய்ங்க...

அஜித் : என்னங்கய்யா, ஏதோ டிமாண்டெல்லாம் வெச்சீங்க!

ஓ.பி.எஸ் : ஆட, ஆமாம்ல... என்ன தம்பி அது!

அஜித் : அதை விடுங்க. எதிர்க்கட்சியினர் உடனான உறவு பற்றிச் சொல்லுங்க...

ஓ.பி.எஸ் : முன்னால, அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்போம். இப்பலாம் பண்றது இல்ல தம்பி.

அஜித் : உங்க குடும்பத்தைப் பற்றி..!

ஓ.பி.எஸ் : என் மகன் ரவீந்திரநாத், எம்.பி தேர்தல்ல போட்டியிட்டார். அவர்தான் தஞ்சாவூர் பெரிய கோழியை எனக்குக் கூட்டிப்போய்க் காட்டினது. நல்ல பொறுப்பா இருப்பார். தேனியின் தோனி அவர்...

அஜித் : அப்படியே இந்தக் கேணி மேட்டரும் என்னன்னு சொல்லிடுங்களேன்.

ஓ.பி.எஸ் : வேணாம் தம்பி, நீங்க டீக்கடையில டீதான் குடிச்சிருக்கீங்க. நான் அந்த டீக்கடையே நடத்தியிருக்கேன்.

அஜித் : புரியல அய்யா.

ஓ.பி.எஸ் : மன்னிச்சுடுங்க தம்பி. இந்த ஒரு டயலாக்தான் எனக்குத் தெரியும்.

அஜித் :  ‘அ.தி.மு.க-வில் காலம் தள்ள முடியுமா?’ன்னு  நாஞ்சில் சம்பத்கிட்டே ஒருமுறை நீங்க கேட்டதா சொல்றாங்களே...

ஓ.பி.எஸ் : ஆமாம் தம்பி. அதுக்கு அவர் ‘நாங்கெல்லாம் இல்லையா, அதுமாதிரி  நீங்களும் இருங்க. பாத்துக்குறோம்’னு சொன்னாப்ல. இப்போ அவர் படம் நடிச்சுட்டிருக்கார்.

அஜித் : உங்களுக்குப் படம் நடிக்கிற ஆர்வம் இருக்கா?

ஓ.பி.எஸ் : உங்க படத்துல ஏதாவது வில்லன் ரோல் இருந்தா தாங்க... ( சிரிக்கிறார் )

அஜித் : என் படத்துல நான்தான் வில்லன்.

ஓ.பி.எஸ் : சரி, அப்போ ஹீரோ கேரக்டராவது தாங்க.

அஜித் : (அதிர்ச்சியாகிறார்)  வாழுங்க, வாழ விடுங்கய்யா. நன்றி, வணக்கம்!

ப.சூரியராஜ்