Published:Updated:

ப்ரே பண்ணுவோம்!

ப்ரே பண்ணுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரே பண்ணுவோம்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

லையில் சுத்தியல் விழுந்து மூர்ச்சையான நேசமணிக்கு #PrayForNesamani என நெய் ஊற்றி, நேசங்கொட்டி வேண்டிக்கொண்டது தப்பில்லை தமிழினமே! ஆனால், நேசமணியை விட அடி மேல் அடி வாங்கிவிட்டு, தெம்பாய் நடமாடிக்கொண்டிருக்கும் இவர்களுக்காகவும் நாம் ஒரு நிமிடம் ப்ரே பண்ணுவோம்.

ப்ரே பண்ணுவோம்!

‘உன்னை அடிச்சும் பார்த்தாச்சு, அவுத்தும் பார்த்தாச்சு. உன்ன என்னதான்டா பண்றது?” என கட்டதுரையே பார்த்துக் கலங்கிய ஆண் சிங்கம், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நிரந்தரத் தலைவர் கைப்புள்ள. சண்டை என வந்ததும் சங்கத்து உறுப்பினர்களே அத்துவிட்டு ஓட, ஒத்தையில் நின்று காலிலேயே அடிவாங்கிய கரிகாலன். அவரின் கால் குணமாகவும் கொஞ்சம் பிரார்த்திப்போம்.

`கிட்னிலாம் இல்ல, கொஞ்சூண்டு சட்னி வேணா இருக்கு’ என, தன் வாழ்வின் பெரும் அவலத்தை போகிறபோக்கில் சொல்லிவிட்டுச் சென்றவர் வீரபாகு. அவரை மூத்திர சந்தில் வைத்து ஊமைக்குத்து அடித்தவர்கள்கூட “எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்டா, இவன் ரொம்ப நல்லவன்டா” என நன்னடத்தைச் சான்றிதழ் தந்திருக்கிறார்கள். அந்த நல்லவருக்காக ஒரு நிமிடம் வேண்டிக்கொள்வோம்.

முட்டுச்சந்தில் நாயிடம் கடிவாங்கினார். குட்டிச்சந்தில் பசுவிடம் முட்டுவாங்கினார். கடைசியில், யானைக்கு பயந்து முதலை இருக்கும் குளத்தில் குதித்தார். இத்தனைக்கும் முதலையிடம் அவர் வம்பிழுக்கவே இல்லை. இப்படி, வாயில்லா ஜீவன் எல்லாம் வஞ்சம் வைத்து அவரைப் பழி வாங்கிக்கொண்டிருக்கிறது. அவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம். அரோகரா..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ப்ரே பண்ணுவோம்!

இக்காலத்தின் பெரும் பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னையை, அப்போதே எடுத்துரைத்தவர் `ஆட்டோ’ குழந்தைவேலு. பெயருக்கேற்றவர் போல் குழந்தை மனம் படைத்தவர் அவர். அவசர வேலையை முடித்துவிட்டுத் தண்ணீர்க் குழாயைத் திறந்தவர், “ஆத்தி... தண்ணி வரலையே” எனப் பதறிப்போனார். உடனே,  பதிலுக்கு ஒரு பக்கெட் தண்ணீர் கிடைத்தது என்னவோ அதிர்ஷ்டம்தான். அது ஆவிபறக்கும் சுடுதண்ணியாய்ப் போனதுதான் துரதிர்ஷ்டம். “எரிச்சல் தாங்க முடியலை. ஃபேனை 12-ம் நம்பர்ல வையி” என வலியில் துடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்காக ப்ரே பண்ணுவோம்.

ஏழு ஊர் ரௌடிகளைப் பார்த்தவர் `நாய்’ சேகர். அதாவது, ஏழு ஊர் ரௌடிகளிடம் அடிவாங்கியவர். “நானும் ரௌடிதான்யா” என வான்டடாய் வண்டியில் ஏறிப்போய், கொரில்லா செல்லில் சிக்கிய அந்த இலவு காத்த கிளிக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

பால்டாயிலே தொட்டுப்பார்த்து தோற்றுப்போன பராக்கிரமசாலி `ஸ்நேக்’ பாபு. அவர் ஏரியாவில், ஒரு கிலோ தக்காளி ஐந்நூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட அநியாயத்தைத் தட்டிக்கேட்ட களப்போராளி. அதற்காக, அவரை குண்டுகட்டாய்த் தூக்கிப்போய் கும்மி அடித்தனர் சில குண்டர்கள். அநியாயத்தை எதிர்த்துப் போராடிய கவுன்சிலர் `ஸ்நேக்’ பாபுவுக்காக ப்ரே பண்ண வேண்டியது நம் கடமை.

ப்ரே பண்ணுவோம்!

ராங் நம்பரைப் போட்டு ராங்காய்ப் பேசியது என்னவோ அவரின் உதவியாளர்கள்தான். ஆனால், அடி வாங்கியது `வட்டச் செயலாளர்’ வண்டுமுருகன். அவரை வயிற்றிலேயே மிதித்து `நண்டு’ முருகன் ஆக்கினர். மனிதர்களிடம் மட்டுமல்ல, தண்ணீர் தெளித்து, தெளிய வைத்து அடிக்கும் மெஷினிடமும் அடிவாங்கியிருக்கிறார். இப்படி, பாரபட்சம் இல்லாமல் எல்லா இடத்திலும், எல்லாரிடத்திலும் அடிவாங்கிக்கொண்டிருக்கும் அவருக்காகவும் பிரார்த்திப்போம்.

இதேபோல், புலிப்பாண்டியைப் பிடித்துக் கூண்டில் அடைத்து கால்களை அமுக்கச் சொன்னது உலகம். பாடிசோடாவை எத்தனை பேர்தான் குலுக்கியெடுப்பார்கள்? விஷம் குடித்த சூனாபானா, போலீஸிடம் சிக்கிக்கொண்ட `அலார்ட்’ ஆறுமுகம், 23-ஆம் புலிகேசி, என்கவுன்டர் ஏகாம்பரம் எல்லோருக்கும் சேர்த்தே ப்ரே பண்ணுவோம். எல்லோரும் வல்லாரை லேகியத்தை வளைத்து வளைத்துச் சாப்பிட்ட, வைரம் பாய்ந்த உடம்பைக் கொண்டவர்கள். ஆக, பயப்படாமல் ப்ரே பண்ணுவோம்!

- சூர்யராஜ்