பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“கலாய்ச்சேன்... ஜெயக்குமார் பாராட்டினார்!”

“கலாய்ச்சேன்... ஜெயக்குமார் பாராட்டினார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கலாய்ச்சேன்... ஜெயக்குமார் பாராட்டினார்!”

ஓவியம்:அரஸ்

‘நியூஸ் 7’ தொலைக்காட்சியில் அரசியல்வாதிகளை நையாண்டியுடன் விமர்சனம் செய்யும் ‘நியூஸ் கராத்தே’ நிகழ்ச்சிக்கு ஏக வரவேற்பு. ஒன்றரை வருடங்களாகத்  தன் தனித்துவ உடல்மொழியால் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வேல் பிரசாந்த்திடம் ஒரு சாட்.

“கலாய்ச்சேன்... ஜெயக்குமார் பாராட்டினார்!”

‘`திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பக்கத்துல பூங்கொல்லைமேடு கிராமம்தான் என் சொந்த ஊரு. அப்பா முறுக்குக் கடை வெச்சிருந்தாரு. சின்ன வயசுல இருந்தே மீடியா மேல ஆர்வம். எங்க ஊருல பட்டதாரிகளை விரல்விட்டு எண்ணிடலாம். அதனால, என் படிப்பு எங்கப்பாவுக்கு ரொம்ப முக்கியமானதா இருந்துச்சு. ஒரு விபத்தில் காலை இழந்த மாற்றுத்திறனாளியா இருந்தும் எங்களைப் போராடி வளர்த்த எங்கப்பாவுக்காக, இன்ஜினீயரிங் முடிச்சேன். தொடர்ந்து, நானும் என் நண்பர் கோபிநாத்தும் சேர்ந்து சாஃப்ட்வேர் பிசினஸ் ஆரம்பிச்சோம்.

ஒரு கட்டத்துக்கு மேல மீடியா ஆசை மறுபடியும் எனக்குள்ள முழிச்சுக்க, அ து தொடர்பான வேலைகளைத் தேட ஆரம்பிச்சேன். அஞ்சுநாள் கட்டட வேலை, ரெண்டு நாள் மீடியா வேலை தேடுறதுன்னு போச்சு வாழ்க்கை. பல சேனல்கள்ல ரிஜெக்ட்டட். ஒருவழியா புதிய தலைமுறை சேனல்ல ‘உரக்கச் சொல்லுங்கள்’ விவாத நிகழ்ச்சியில பகுதி நேர புரொடியூசரா வேலை கிடைச்சது. அடுத்து நியூஸ் 7 தமிழ்ல வேலை கிடைச்சது. ஆரம்பத்தில் ரிப்போர்ட்டிங், வெப் டீம்னு மாறி மாறி வேலை பார்த்துட்டிருந்தேன். சேனலின் இணை ஆசிரியர் நெல்சன் சார்தான், ‘அரசியல்வாதிகளைக் கலாய்ச்சு ஒரு ஷோ பண்ணணும், அதை நீ பண்ணு’ன்னு என் ரூட்டை மாத்திவிட்டார். 

‘நியூஸ் கராத்தே’ ஷோ, நெல்சன் சாரின் ஐடியா. அதுக்கு, சீனியர் ஷோ புரொடியூசர் புதியபரிதியோட எழுத்து வேற லெவல்ல பலம் சேர்த்தது. நானும் புதியபரிதியும் சேர்ந்து ஸ்க்ரிப்ட் டிஸ்கஸ் பண்ணுவோம். ஒரு கட்டத்துல, நெல்சன் சார் புதியபரிதிக்கு வேற வேலையை அசைன் பண்ணிட, அதுலேருந்து  நான்தான் ஸ்க்ரிப்ட் எழுதுறேன். ஷோவின் எடிட்டர்ஸ் சபரீஷ் மற்றும் ரூபேந்திரன் இல்லாம இந்த ஷோவே இல்லை. அப்புறம், கடந்த ஆறு மாசமா இந்த ஷோவை என்னுடன் சேர்ந்து தொகுத்து வழங்குற கார்த்திக்குக்கும்  ஹைஃபை.

“கலாய்ச்சேன்... ஜெயக்குமார் பாராட்டினார்!”

முதன்முறையா நான் டி.வி-யில் வந்த அன்னிக்கு, ‘நம்ம ஊரு பய’ன்னு எங்க கிராமமே அதைக் கொண்டாடுச்சு. எங்கப்பா, ‘இவன் தந்தை என்நோற்றான்கொல் எனும் சொல்’னு எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாரு. அந்த நொடி நான் அனுபவிச்சதை சந்தோஷம்னு எப்படி அவ்வளவு சின்னதா சொல்ல  முடியும்?!

‘பிரச்னை எதுவும் வராதாப்பா..?’ன்னு பலரும் கேட்கறாங்க. யாரும் நேரடியா என்னைத் திட்டினதில்லை. சிலர், என் ஸ்டைல்லயே என்னைக் கலாய்ச்சிருக்காங்க. ஆனா, அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் சார் உட்பட, சில அரசியல்வாதிகள் பர்சனலா கூப்பிட்டு என்னைப் பாராட்டியிருக்காங்க. மூணு மாசத்துக்கு முன்னாடி எங்கப்பா தவறிட்டாரு. இறந்துபோறதுக்கு முன்னாடி அவர் கடைசியா இந்த ஷோவைப் பார்த்தப்போ, ‘தம்பிக்கு கறுப்புச்சட்டை நல்லாருக்குல்ல’ன்னு சொல்லியிருக்காரு’’ என்கிறார் வேல் பிரசாந்த், நெகிழ்ச்சியுடன்.

‘நியூஸ் கராத்தே’ நிகழ்ச்சியை வேல் பிரசாந்த்துடன் இணைந்து கடந்த ஆறு மாதங்களாகத் தொகுத்து வழங்கி வரும் கார்த்திக் ஹரி பிரசாத், இந்நிகழ்ச்சியின் புரொகிராம்  புரொடியூசராக இருந்தவர். ஆங்கரிங் மீதிருந்த ஆர்வத்தால் ஆன் ஸ்கிரீன் வந்துள்ளார். “படிப்பு முடிஞ்சதுமே மீடியாவுக்குள்ள என்ட்ரியாகிட்டேன். ஜீ தமிழில் புரொகிராம் புரொடியூசர், பிறகு விகடனில் ‘Mr.K’ வெப் சீரிஸ்னு பண்ணினேன். இப்போ இந்த ஆங்கரிங் வேலை. சீக்கிரமே ஒரு கலக்கலான ஷோவைத் தனியா தொகுத்து வழங்கப்போறேன்’’ என்கிறார் கார்த்திக்.

- வெ.வித்யா காயத்ரி; படம்:க.பாலாஜி