Published:Updated:

கமுக்கமாகக் கூட்டணி பேசி முடிக்க கன்னாபின்னா யோசனைகள்!

கமுக்கமாகக் கூட்டணி பேசி முடிக்க கன்னாபின்னா யோசனைகள்!
கமுக்கமாகக் கூட்டணி பேசி முடிக்க கன்னாபின்னா யோசனைகள்!

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க வரலாறு காணாத குழப்பத்தைச் சந்தித்துவருகிறது. அ.தி.மு.க கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் இருக்கும்போதே தி.மு.க-வுடனும் சுதீஷ் பேச, அதை மக்கள் மத்தியில் துரைமுருகன் வெளிப்படையாகக் கூற, ``ஆம், அண்ணன் துரைமுருகனுடன் போனில் பேசினேன்’’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் சுதீஷ்! `இந்த அவமானம் நமக்குத் தேவையா?’’ என்ற பரிதாப நிலையில் இருக்கிறது தே.மு.தி.க. கூட்டணிப் பேச்சுவார்த்தையை கமுக்கமாகப் பேசி முடிக்காததால்தான் இந்தச் சிக்கலே. இதற்காக தனியாக எந்தப் பயிற்சியும் எடுக்கத் தேவையில்லை. `பாபநாசம்’ படத்தில் கமலுக்குக் கைகொடுத்ததுபோல, நம் திரைப்படங்களே பல்வேறு ஐடியாக்களை அள்ளித் தெளிக்கின்றன. அவற்றையே முயற்சி செய்யலாமே பாஸ்!

பழைய த்ரில்லர் படங்களில் கொள்ளைக்கூட்ட பாஸ் எங்கே இருக்கிறார் என்றோ, அவர் முகம் எப்படியிருக்கும் என்றோ தெரியாது. முகத்தைக்கூட ஆடியன்ஸ் பக்கம் காட்டாமல் கமுக்கமாக மிரட்டலாகப் பேசி, தனது திட்டத்தை நிறைவேற்றுவார். அதேபோல கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தன்னை யார் என்றே காட்டிக்கொள்ளாமல் ஏதேனும் ஒரு செல்போனிலிருந்து தங்கள் கட்சிக்காகக் கூட்டணி பேசலாம். `கூட்டணி ஓகேயானால் மட்டுமே எனது பெயரையும் முகத்தையும் வெளிப்படுத்துவேன்’ என்றும் கூறலாம். இப்படிப் பேசினால், கூட்டணி படியாமல் போனாலும்கூட நம் முகத்தின்மீது யாரும் சாணி அடிக்காமல் தப்பிக்கலாம்!

கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஊருக்கு மத்தியில் இருக்கும் ஸ்டார் ஹோட்டலில் நடத்தக் கூடாது. பரங்கிமலை அடிவாரம் அல்லது டிமாண்டி காலனி வீடு போன்ற பாழடைந்த பங்களாவில் வைத்து ரகசியமாக நள்ளிரவில் சந்தித்து நடத்த வேண்டும். போலீஸார் கண்களில் மண்ணைத் தூவுவதுபோல ஒரு மணி நேரத்துக்கு ஓர் இடமாக மாறிக்கொண்டே இருக்க வேண்டும்!

கூட்டணிப் பேச்சுவார்த்தையை தமிழில் நடத்தினால்தானே துரைமுருகனைப்போல் நாம் என்னென்ன பேசினோம் என்பதை செய்தியாளர்களிடம் புட்டுப்புட்டு வைக்க முடியும்? காளகேயர்களைப்போல புரியாத மொழியில் பேச்சுவார்த்தை நடத்தினால் எப்படி வெளியில் சொல்ல முடியும்? வெறுமனே சீட்டு எண்ணிக்கையை மட்டும் ஆறு, ஐந்து என தமிழில் சொல்லிவிட்டு, மற்றதையெல்லாம் புரியாத பாஷையில் பேசலாம்! எதிர் அணியினர் நாம் பேசியதைப் பதிவு செய்தாலும்கூட யாருக்கும் புரியாது. அதேபோல் கடத்தல்காரர்கள் பேசிக்கொள்ளும் `குதிரைக்கு அஞ்சு கால்’, `மாட்டுக்கு ஏழு தலை’ என சங்கேத பாஷையில் பேசி, கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவரலாம்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வர்ற கட்சியை, `குருதிப்புனல்' படத்துல கமலோட கண்ணைக்கட்டி கூட்டிட்டு வர்ற மாதிரி கூட்டணி பேச வர்றவங்களையும் கண்ணைக்கட்டி கூட்டிட்டு வந்து, அதேபோல பேச்சுவார்த்தை முடிஞ்சதும் கண்ணைக்கட்டி கூட்டிட்டு போயி விட்டுடணும்! பேச்சுவார்த்தை புட்டுக்கிட்டாலும், எங்க பேசினோம், யார்கூடப் பேசினோம்னு எதையுமே சொல்ல முடியாது!

`திருடா திருடா’ படத்தைப்போல பல்லாயிரம் கோடிகளே கன்டெய்னரில் சுற்றிச் சுற்றி வந்ததைப் பார்த்தவர்கள் நாம். கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் இதேபோல கன்டெயினருக்குள் வைத்து நடத்தி முடிக்கலாமே? சென்னையில் கிளம்பி மதுரைக்குச் செல்வதற்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும்! ஓடும் கன்டெயினரில் வைத்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடப்பதால், `டிராவலிங்கில் எனக்கு வாமிட் வரும்!' என்று சொல்லும் அரசியல்வாதிகளை இந்தப் பேச்சுவார்த்தையில் சேர்க்கக் கூடாது!

நடிகர் விவேக் ஒரு படத்தில் தீப்பெட்டியில் நூலைக்கட்டி, மாடியில் இருக்கும் புவனேஸ்வரியுடன் போன்போல பேசுவார். இதேபோன்ற போனைப் பயன்படுத்தி, அடுத்தடுத்த கட்டடத்தில் அமர்ந்துகொண்டு பேசினால் எந்தவித ரிக்கார்டிங்கும் செய்ய முடியாது. கூட்டணி பேசியதற்கான செல்போன் ஆதாரமும் கிடைக்காது. இருவரும் சந்தித்ததாகவும் இருக்காது. கூட்டணி படியவில்லையென்றால், சிம்பிளாக நூலை அறுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

இறுதியாக, கொஞ்சம் காஸ்ட்லி ஐடியா பாஸ்! பெரிய பட்ஜெட் கட்சிகளுக்கு மட்டும்தான் செட்டாகும். ஷங்கர் படம் மாதிரி இதுவரைக்கும் யாருமே போகாத வெளிநாட்டு லொகேஷனுக்கு கூட்டிட்டுப் போயிடணும்! பேச்சுவார்த்தையை சுமுகமா முடிச்சுட்டுதான் ஊருக்கே திரும்பணும். இதே டைரக்டர் ஷங்கரோட `அந்நியன்' படம் மாதிரி கருடபுராண தண்டனைகளை வைத்து மிரட்டியே கூட்டணி வைக்கணும்னாலும் வைக்கலாம்... அதைத்தான இப்பவே மத்த கட்சிகள் பண்றாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்!