Published:Updated:

தேர்தல் சமயம்... வாட்ஸ் அப்வாசிகளே உஷார்... உஷார்!

தேர்தல் சமயம்... வாட்ஸ் அப்வாசிகளே உஷார்... உஷார்!
தேர்தல் சமயம்... வாட்ஸ் அப்வாசிகளே உஷார்... உஷார்!

``என்னங்க, எங்கப்பாவக் கடுப்பேத்துற மாதிரியே மீம்ஸ் போடுறீங்க... கொஞ்சமாவது பெரியவங்களுக்கு மரியாதை குடுங்க...’’ என மனைவி அட்வைஸ் கொடுப்பார். ``ஏங்க, நம்ம மாப்பிள்ளைதான் வேற கட்சின்னு தெரியுதுல்ல, ஏற்கெனவே போன தீபாவளிக்கு செயின் செஞ்சு போடலைன்னு கடுப்புல இருக்காரு... நமக்கெதுக்கு அரசியல்?’’ எனக் கணவருக்கு புத்தி சொல்லும் மனைவியிடம், ``அதுக்காக பொய்யும் பித்தலாட்டமுமா மகாமட்டமான மீம்ஸை அனுப்புனா கம்முன்னு இருக்கச்சொல்றியா?’’ என மாமனார் எகிறுவார்.

தேர்தல் தேதி அறிவித்ததும், அரசியல் கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கினார்களோ இல்லையோ, வாட்ஸ் அப்வாசிகள் அவரவர் கட்சிக்காக தேர்தல் பிரசார மீம்ஸ்களைத் தெறிக்கவிடத் தொடங்கிவிட்டார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் அப் குரூப்களில் தீவிர விவாதத்தையே தொடங்கிவிட்டார்கள். வாட்ஸ் அப் குரூப்களில் இணைந்த காலத்திலிருந்தே ஸ்லீப்பர் செல்களாக இருந்துவந்த பலரும், `நானும் இம்புட்டு நாளா இந்த குரூப்லதான் இருக்கேன்' என்பதுபோல பிரசார நக்கல் நையாண்டி மீம்களை ஃபார்வேர்டு செய்து ஆச்சர்யப்படுத்துகிறார்கள். இப்படி ஆளாளுக்கு பிரசாரத்தில் இறங்குவதில் சில சங்கடங்களும் இருப்பதால், தேர்தல் முடியும் வரை கொஞ்சம் சூதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

தேர்தல் சமயம்... வாட்ஸ் அப்வாசிகளே உஷார்... உஷார்!

எல்லா வாட்ஸ் அப் குரூப்பிலும் பொதுவாக `குட்மார்னிங்’ மெசேஜை மட்டுமே கர்மசிரத்தையாகத் தினமும் அனுப்பும் ஒருவர் இருப்பார். அதைத் தாண்டி வேறெந்த விவாதத்திலும் கலந்துகொள்ள மாட்டார். ஆனால், அவருக்குள்ளேயும் பிடித்த அரசியல் தலைவர் ஒருவர் இருப்பார். அந்தத் தலைவரை பலரும் நக்கலடிப்பது அவருக்குத் தாங்காது. உடனே நாசூக்காக, `நம் நண்பர்களுக்குள் அரசியல் விவாதத்தைத் தவிர்க்கலாமே’ என பாலீஷாகத் தெரிவிப்பார். பதிலுக்கு யாராவது, `இந்த வயதில் அரசியல் பேசாமல், பிறகு எந்த வயதில் அரசியல் பேசுவது, வெறுமனே குட்மார்னிங் மெசேஜ் மட்டும் அனுப்புறதுக்கா வாட்ஸ் அப் குரூப்பு?' எனக் கேள்வியெழுப்பும் சாக்கில் அவருக்கு குட்டு வைப்பார். அப்புறமென்ன, குறிப்பிட்ட அந்த குட்மார்னிங் நண்பர், வாட்ஸ் அப் குரூப்பைவிட்டு வெளியேறியதாக வாட்ஸ் அப் காட்டும். அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி திரும்ப அழைத்துவரும் அட்மின் நிலைதான் பரிதாபம்!

தேர்தல் சமயம்... வாட்ஸ் அப்வாசிகளே உஷார்... உஷார்!

சில நண்பர்களின் வாட்ஸ் அப் குரூப்பில் ஃபார்வேர்டு செய்திகளை வைத்து மோதிக்கொள்வதை வேடிக்கை பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கும். `காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள்' என்று ஒரு பட்டியலை ஒருவர் ஃபார்வேர்டு செய்வார். அவருக்குப் பதிலடியாக, மோடி ஆட்சியில் நாட்டைவிட்டு ஓடிப்போன ஊழல்வாதிகளின் பட்டியலை தேதி, தொகை வாரியாக ஃபார்வேர்டு மெசேஜை இன்னொருவர் அனுப்புவார். பதிலுக்கு அவர், அனைத்து ஊழல்வாதிகளுக்கும் வங்கிக்கடன் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான் என்ற விவரத்துடன் ஃபார்வேர்டு மெசேஜை அனுப்புவார். உடனே பதிலடியாக அம்பானி, அதானி, பாபா ராம்தேவுக்கு மோடி ஆட்சியில் கொடுக்கப்பட்டுவரும் சலுகைகளைப் பட்டியலிட்டு, ஒரு ஃபார்வேர்டு மெசேஜை இவர் அனுப்புவார். `இவிங்களுக்கு மட்டும் எப்படி இம்புட்டு மேட்டர் கிடைக்குது?' என்ற ஆச்சர்யத்தோடு டென்னிஸ் மேட்சைப் பார்க்கும் பார்வையாளர்கள்போல மற்ற உறுப்பினர்கள், இங்குட்டும் அங்குட்டுமாக வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள்.

நாள்கணக்காகத் தொடரும் இந்த ஃபார்வேர்டு சண்டைக்கு நடுவே, தன் பொண்ணுக்குப் பிறந்த நாள், தனக்கு திருமண நாள் என்று எவராவது செய்தி அனுப்பினால்தான் இந்தச் சண்டை முடிவுக்கு வந்து வாழ்த்துகளைப் பரிமாறத் தொடங்கும்!

அதேபோல தேசபக்தி கொஞ்சம், ஆன்மிகம் கொஞ்சம், பெண்களுக்கான கலாசாரப் பாடம் கொஞ்சம் எனக் கலந்துகட்டி ஃபார்வேர்டுகள், படங்கள், மீம்களை மட்டுமே தொடர்ந்து அனுப்பும் தேசபக்தர் ஒருவர், அனைத்து நண்பர்கள் குரூப்களிலும் இருப்பார். அப்படிப்பட்ட தேசபக்தருக்கு, நீங்கள் இந்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து விவாதிப்பது பிடிக்காது. உடனே சமயோஜிதமாக, `அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்ததால் வாட்ஸ் அப் குரூப் அட்மின் கைது' என்றோ பத்திரிகையில் வந்த செய்திக்குறிப்பை ஃபார்வேர்டு செய்துவிடுவார். இதன்மூலம் வாட்ஸ் அப் அட்மினை வார்னிங் செய்வார். இதையும் மீறி விவாதங்கள் தொடர்ந்தால் `வாட்ஸ் அப் சண்டையால் குரூப் அட்மின் படுகொலை’ என்ற கொலைவெறிச் செய்தியையும் ஃபார்வேர்டு செய்துபார்ப்பார். அப்போதும் குரூப் அட்மின் அந்த விவாதங்களைத் தடுக்கவில்லையென்றால், இறுதியாக குரூப்பைவிட்டே வெளியேறிவிடுவார்!

தேர்தல் சமயம்... வாட்ஸ் அப்வாசிகளே உஷார்... உஷார்!

குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில், அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான தாத்தா தொடங்கி, உற்றார் உறவினர், நண்டுசிண்டுகள் வரை இருப்பார்கள். அதில் பெரும்பாலும் பிறந்த நாள் வாழ்த்துகள், மருத்துவக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் மட்டுமே இதுநாள் வரை பகிரப்பட்டுவந்திருக்கும். ஆனால், இப்போது அரசியல் சாயத்துக்கு மாறியிருக்கும். தாத்தா ஒரு கட்சி, பெரியப்பா ஒரு கட்சி, மாமா ஒரு கட்சி, மருமகன் ஒரு கட்சி என மாறி மாறி மீம்ஸ் தட்டிவிடுவார்கள்.

``என்னங்க, எங்க அப்பாவைக் கடுப்பேத்துற மாதிரியே மீம்ஸ் போடுறீங்க... பெரியவங்களுக்கு கொஞ்சமாவது மரியாதை குடுங்க...’’ என்று அட்வைஸ் கொடுப்பார் மனைவி. ``ஏங்க, நம்ம மாப்பிள்ளைதான் வேற கட்சின்னு தெரியுதுல்ல. ஏற்கெனவே போன தீபாவளிக்கு செயின் செஞ்சு போடலைன்னு கடுப்புல இருக்காரு... நமக்கெதுக்கு அரசியல்?’’ என கணவருக்கு புத்திசொல்லும் மனைவியிடம், ``அதுக்காக பொய்யும் பித்தலாட்டமுமா மகாமட்டமான மீம்ஸை அனுப்புனா கம்முன்னு இருக்கச் சொல்றியா?’’ என மாமனார் எகிறுவார். ஆக மொத்தம், தேர்தல் முடிவதற்குள் குடும்ப வாட்ஸ் அப் குரூப்பே டன்டணக்கா டன் ஆகிடும்போன்ற நிலை!

தேர்தல் சமயம்... வாட்ஸ் அப்வாசிகளே உஷார்... உஷார்!

இன்னும் சில குரூப்களில் யாராவது இருவர், வேலைவெட்டி இல்லாததுபோலவே எந்நேரமும் வாட்ஸ் அப்பில் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் அமெரிக்காவில் வேலைபார்ப்பவராக இருந்துவிட்டால், அந்த குரூப்பில் 24 மணி நேரமும் அரசியல் விவாதம்தான். இருவரும் எப்ப தூங்குறாங்க, எப்ப எந்திரிக்குறாங்கன்னே தெரியாது. மற்ற உறுப்பினர்களும் இதில் இருபக்கமாகச் சேரும்போது மொத்த வாட்ஸ் அப் குரூப்பிலும் அனல் பறக்கும்... இடையிடையே யாராவது, ``இந்தத் தேர்தலே வேஸ்ட்டுன்னு இதுக்குத்தான் சொல்றேன்’’னும், ``இவங்க ரெண்டு பேருமே யோக்கியமில்ல. இதுக்குத்தான் சீமானுக்கு ஓட்டு போடச் சொல்றேன்’’னும் சைக்கிள் கேப்பில் அவங்களோட பிரசாரத்தை நுழைப்பாங்க! ஆக, இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் தேர்தல் முடியும் வரை வாட்ஸ் அப் குரூப்பைக் கட்டிக் காப்பாற்றுவதற்குள் அட்மின்களுக்கு தாவு தீர்ந்திடும் பாஸ்! 

அடுத்த கட்டுரைக்கு