Published:Updated:

இப்பவும் நான் நித்யானந்தாவின் பக்தைதான்!

இரா.வினோத், படம்:ஆர்.ராஜேஷ்

பிரீமியம் ஸ்டோரி
##~##
'அ
ந்த’ சம்பவத்துக்குப் பிறகு... இத்தனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிதா!

பெங்களூரில் சந்திக்கச் சம்மதித்தார் ரஞ்சிதா. சொன்ன இடத்தில், காத்திருந்தேன். ஒரு மணி நேரம் கழித்து, செல்போன் சிணுங்க... 'ரஞ்சிதா காலிங்’!

''ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்..!'' என்று முடிக்கும் முன், ''ஆங்... பார்த்துட்டேன்!'' சர்ர்ரக்என்று ஒரு சான்ட்ரோ அருகில் வந்து நின்றது. ஜன்னல் கதவு தாழ்ந்து இறங்க.... ரஞ்சிதா!

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்... இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்’ என்று காருக்குள் மெல்லிசை. ''வெளியே எங்கே போனாலும், பிரைவஸி இல்லே. அதான், கார்லயே பேசிடலாம்ல?'' என்று ரஞ்சிதா தலை சாய்த்துக் கேட்க, கார் கப்பன் சாலையில் ஊர்ந்து நகர்கிறது. எந்தக் கேள்விக்கும் முகச் சுளிப்போ, 'வேண்டாமே ப்ளீஸ்!’ கெஞ்சலோ இல்லை. 'ஆஃப் தி ரெக்கார்ட்’ ஆக ஜோக் சொல்லிச் சிரிக்கவைக்கிறார். சட்டென்று உருக்கமாகிக் கண் கலங்குகிறார். சில நிமிடங்களிலேயே உற்சாகமாகச் சிரிக்கிறார். சுருக்கமாக... ரஞ்சிதா ராக்ஸ்!

இப்பவும் நான் நித்யானந்தாவின் பக்தைதான்!

''நல்லா இருக்கீங்களா?''

''ரொம்ப! ரொம்ப நல்லா இருக்கேன். இப்பத்தான் 'சந்தோஷம்’னா என்னன்னு புரியுது. ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு வாழறேன்!''

''இந்தக் கேள்வி கேட்க சங்கடமாகத்தான் இருக்கு. ஆனாலும், அது இல்லாமல் இந்தப் பேட்டியை ஆரம்பிக்க முடியாது. சாமியார் நித்யானந்தாவுடன் அந்த சர்ச்சைக்குரிய சி.டி-யில் இருந்தது நீங்கதானே?''

''இந்தக் கேள்விக்கு இதுதான் கடைசியாப் பதில் சொல்றதா இருக்கட்டும். நான் ஆரம்பத்தில் சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன்... அந்த சி.டி-யே பொய். அதில் இருப்பது நான் இல்லை. இதை எங்கேயும் எப்பவும் சொல்வேன்!''

''ஆனா, ஹைதராபாத், டெல்லியில் இருக்கும் புகழ் பெற்ற எஃப்.எஸ்.எல் போன்ற தடயவியல் பரிசோதனைக் கூடங்களே 'அந்த சி.டி காட்சிகள் உண்மை’னு சான்றிதழ் கொடுத்து இருக்காங்களே?''

''எந்த சி.டி காட்சியையும் 'முழுக்க உண்மை’, 'முழுப் பொய்’னு 100 சதவிகிதம் சொல்ல முடியாது. நாங்களும் அமெரிக்கா, இந்தோனேஷியான்னு பல லேப்களில் கேட்டுப் பார்த்துட்டோம். 'chain of custody' விவரம் இருந்தால்தான், எதையும் தெளிவா சொல்ல முடியும். அதாவது, அந்த சி.டி எந்த கேமராவில் ரெக்கார்ட் செய்யப்பட்டது, பிறகு எங்கெங்கு 'ரைட்’ செய்யப்பட்டதுன்னு எல்லாத் தகவல்களும் தேவை. அது இல்லாமல், அந்தக் காட்சிகள் உண்மைன்னு சொல்லவே முடியாது!''

''ஆனா, சி.டி. உண்மைன்னு நித்யானந்தா சொன்னதா லெனின் சொல்றாரே?''

''அதை நீங்க நித்யானந்தாகிட்டதான் கேக்கணும். ஆனா, லெனின் மாதிரி ஒரு நம்பிக்கைத் துரோகியை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை. பிப்ரவரி 27-ம் தேதி சென்னையில் மீடியேட்டர்கள் மூலமா பேரம் பேசினார் லெனின். 'இந்த மாதிரி ஒரு சி.டி கிடைச்சு இருக்கு. நாங்க கேட்கும் தொகையைக் கொடுத்தா, சி.டி-யை உங்ககிட்டயே கொடுத்துர்றோம்’னு சொல்லி, யோசிக்கவே முடியாத ஒரு பெரிய தொகையைக் கேட்டாங்க. கொடுக்கலைன்னா, அதை மீடியாவில் பப்ளிஷ் பண்ணிடுவோம்னு மிரட்டினாங்க. பிளாக்மெயில் பண்ண நினைச்சவங்களை, பிடதி ஆஸ்ரமத்துக்கு வரவெச்சு, போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கலாம்னு திட்டம் போட்டோம். ஆனா, அப்புறமும் வேற குரூப் மூலமா மிரட்டினாங்க. 'என் மேல் எந்தத் தப்பும் கிடையாது. நான் போலீஸ்ல சொல்லப் போறேன்’னு சொல்லிட்டேன். பயத்துல என்ன பண்றதுன்னு தெரியாம, சி.டி-யை ரிலீஸ் பண்ணிட்டாங்க. இதுக்குப் பின்னாடி லெனினோடு... ஒரு பெரிய கேங்கே இருக்கு!''

இப்பவும் நான் நித்யானந்தாவின் பக்தைதான்!

''வீடியோ வெளியானதும் உங்க உறவினர்கள், நண்பர்கள் எப்படி எதிர்கொண்டாங்க? குறிப்பா... உங்க குடும்பம்?''

''என் கணவரும் குடும்பமும் என்னை முழுசா நம்பினாலும், எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லையா? (சட்டென்று உதடு கடித்துக் கண்ணீரைக் கட்டுப்படுத்துகிறார்) தினமும் இஷ்டத்துக்கு எல்லை தாண்டிக் கற்பனையா எழுதினா, அவங்களும் எப்படித் தாங்குவாங்க. என் கணவர் என்ன சொல்லி இருப்பார்னு எதிர்பார்க்கிறீங்க? அவரோட நல்ல மனசுக்கு இந்த வேதனை, அவமானம்லாம் தேவையா? மன உளைச்சலின் உச்சகட்ட வேதனையில் நான் சுருண்டுட்டேன். ரெண்டு நாள் எந்திரிச்சு நிக்க முடியாத அளவுக்குக் காய்ச்சல். கடந்த எட்டு மாசமும் தனிமையும் அழுகையும்தான் என் துணை. இவ்வளவு துயரங்களுக்கு நடுவிலும், 'நல்லவேளை, நமக்கு இன்னும் குழந்தை பிறக்கலை. இருந்திருந்தா, அதோட மனசு என்ன பாடுபட்டு இருக்கும்’னு நினைச்சுக்கிட்டேன்!''

இப்பவும் நான் நித்யானந்தாவின் பக்தைதான்!

''கிட்டத்தட்ட 18 வருஷம் சினிமாவில் இருந்தீங்க. இந்த நேரத்தில் உங்க சினிமா நண்பர்கள் யாருமே உதவிக்கு வரலையா? ஆறுதலாச்சும் சொன்னாங்களா?''

(நீண்ட யோசனைக்குப் பின்) ''எனக்கு உதவினா அவங்களுக்கும் பிரச்னைதானே! பாவம்... என்னால் அவங்க ஏன் கஷ்டப்படணும் சொல்லுங்க? (மீண்டும் விழியோரத்தில் நீர்.) என்னை இண்டஸ்ட்ரியில் நிறையப் பேருக்குப் பிடிக்கும். அவங்கள்லாம் என்கிட்ட பேச விரும்பி இருந்தாலும், என்னை எப்படி கான்டாக்ட் பண்றதுன்னு தெரியாம இருந்திருப்பாங்க!'' (கண்ணீர் துடைத்துச் சிரிக்கிறார்)

''சினிமா கேரியர் எப்படி இருக்கு?''

''ம்ம்ம்... அந்தப் பிரச்னைக்குப் பிறகு நான் எந்தப் படமும் கமிட் ஆகலை. இப்ப ஒரு மலையாளப் படத்தில் கேட்டு இருக்காங்க. பார்க்கலாம்!''

''நித்யானந்தாவை உங்களுக்கு அறிமுகம் செய்தது யார்?''

''உண்மையைச் சொல்லணும்னா... யு-டியூப்!

ஆமா... அதில்தான் அவரைப்பற்றி முதல்ல தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் அவரோட வெப்சைட் பார்த்து மேலும் தகவல்கள் தெரிய வந்தன. எனக்குக் கடவுள் பக்தி அதிகம். நித்யானந்தா சித்த தத்துவங்கள், உபநிடதங்கள், பகவத் கீதைன்னு அறிவுரைகளை இன்றைய உலகத்துக்கு ஏத்த மாதிரி, லாஜிக் மீறாம யதார்த்தமா சொல்ற விதம் எனக்குப் பிடிச்சது. சும்மா போற போக்குல யாரும் அவரோட பக்தை ஆக மாட்டாங்க. நான் எந்த 'ப்ரைன்-வாஷுக்கும் மயங்கி அவர் பின்னாடி போகலை!''

''சமீபத்தில் நித்யானந்தாவைச் சந்திச்சீங்களே... என்ன சொன்னார்?''

''ஜனவரி 1-ம் தேதி அவரோட பிடதி ஆசிரம விழாவில் என் அக்கா, அம்மாவுடன் கலந்துக்கிட்டேன். அப்ப ஸ்வாமிகிட்ட பேசிட்டு இருந்தேன். 'அத்தனை சங்கடங்களும் விலகிவிடும். நல்லவை எல்லாம் நிகழும்’னு ஆசி வழங்கினார்!''

''சரி, இப்ப சொல்லுங்க... உண்மையில் உங்களை மிரட்டியது யார்?''

''ம்ம்ம்ம்ம்ம்... சொல்லலாம். ஆனா, இன்னும் கொஞ்ச நாள் நான் உயிரோடு இருக்கணுமே! எனக்கும் என் குடும் பத்துக்கும் பாதுகாப்பு தர்றேன்னு தமிழக முதல்வர் சொன்னால், அவங்களைப்பத்திச் சொல்லலாம். ஆனா, சும்மா ரெண்டு நாள் பாதுகாப்புன்னு சொல்லிட்டு, அப்புறம் என்னை நடு ரோட்ல நிறுத்திட்டா... நான் என்ன பண்றது? ஆனா, ஒண்ணு மட்டும் சொல்றேன்... 'சிலப்பதிகாரம்’, 'மகாபாரதம்’ ரெண்டிலும் கெட்டவங்க அழிஞ்சதுக்குக் காரணம் கண்ணகி, திரௌபதின்னு ரெண்டு பெண்களின் சாபம்தான். நானும் வயிறு எரிஞ்சு சொல்றேன்... அவங்கவங்க பண்ண வினை... அவங்கவங்க குடும்பத்தை அழிக்கும்!''

''இப்போ என்ன பண்றீங்க?''

''அமைதியைத் தேடிய என் வாழ்வில் இவ்வளவு பெரிய புயல் வீசும்னு எதிர்பார்க்கலை. இப்போ நான் உறுதியான, தெளிவான பெண்ணாக உணர்கிறேன். இப்பவும் நான் நித்யானந்தாவின் பக்தைதான்!

இப்பவும் நான் நித்யானந்தாவின் பக்தைதான்!

சின்ன வயசுல இருந்தே நிறைய புக்ஸ் படிப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்லயும் புத்தகம் படிச்சுட்டு இருப்பேன். அதனாலேயே 'பொண்ணு ஓவரா ஸீன் போடுது’ன்னு நிறையப் பேர் நினைச்சு இருப்பாங்க. இப்போதான் தினம் தினம் என்னைப்பத்தி வர்ற செய்திகளைப் படிக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கே. இதில் எங்கே போய்ப் புத்தகம் படிக்க? ஆனா, இப்போ என் வாழ்க்கையையே புத்தகமா எழுதிட்டு இருக்கேன். கடந்த ஏழெட்டு மாசமா என் வாழ்க்கையில நடந்த அத்தனை சம்பவங்களின் பின்னணியும் அதில் இருக்கும். புத்தகம் வெளி வந்ததும் நிறைய உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்!''

மர்மமாகப் புன்னகைத்த ரஞ்சிதாவிடம் புத்தகத்தின் பெயர் என்ன என்று கேட்டேன்... புன்னகையின் மில்லி மீட்டரை அதிகரித்துச் சொன்னார்,

''கூத்து!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு