Published:Updated:

சினிமா விமர்சனம்: அரவான்

சினிமா விமர்சனம்: அரவான்

சினிமா விமர்சனம்: அரவான்

சினிமா விமர்சனம்: அரவான்

Published:Updated:

18-ம் நூற்றாண்டின் பலி வீரன் இந்த 'அரவான்’!

சினிமா விமர்சனம்: அரவான்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

களவையே தொழிலாகக்கொண்ட வேம்பூரின் தலைவன் பசுபதி, அசலூர் திருடன் ஆதியின் திறமையைப் பார்த்து வியந்து, தன் 'கொத்’தில் சேர்த்துக்கொள்கிறார். ஆனால், களவுச் சமூகத்தில் வாழ்க்கை நடத்துகிற ஆதி, உண்மையில் காவல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் மகாபாரதத்து அரவானைப் போன்ற பலியாள் என்பதும் தெரியவருகிறது. ஆதி யார்... அவர் ஏன் பலியாள் ஆனார் என்பதற்கு எல்லாம் பதில் சொல்கிறது பின் பகுதி!

வரலாற்றுப் படம் என்றாலே மன்னர்கள், பிரமாண்டம், யுத்தம், சுத்தத் தமிழ் வசனங்கள் எனப் பார்த்துப் பழகிய க்ளிஷேக்களுக்கு நடுவே 'அரவான்’ முற்றிலும் புதிய அனுபவம். இது மன்னர்களின் கதை அல்ல. களவையும் காவலை யும் வாழ்க்கை முறையாகக்கொண்ட எளிய மக்களின் கதை. சாகித்ய அகாடமி விருது வென்ற சு.வெங்க டேசனின் 'காவல்கோட்டம்’ நாவலின் ஒரு பகுதியை, தீவிரமான மெனக்கெடலுடன் சினிமாவாக்கிய வகையில் வாழ்த்துக்களுக்கு உரியவர் வசந்தபாலன்!

நிலம், பேச்சு வழக்கு, உடை என அத்தனையையும் பார்த்துப் பார்த்து பதிவுசெய்ததில் அபாரமாக மிளிர்கிறது வசந்தபாலன் அணியினரின் உழைப்பு!

வேம்பூர் கொம்பூதியாக முதல் பாதி முழுக்க ஆக்கிரமிப்பது அட்டகாச பசுபதி. உச்சரிப்பில் இருந்து உடல்மொழி வரை மிரளவைக்கிறார். நட்சத்திரங்களைப் பார்த்து காலத்தைக் குறித்து களவுக்குச் செல்லும் உத்தி, ஊரின் பசி போக்குவதற்காகக் களவாடியதை விழிகள் விரியப் பார்க்கும் தவிப்பு, திருடப்போன இடத்தில் கிணற்றில் விழுந்து சிக்கி அடிவாங்கும் பரிதாபம், 'ஆதி யார்?’ என்று புரியாமல் குழம்பும் தடுமாற்றம் என விளையாடி இருக்கிறார் பசுபதி.

உண்மையில் ஆதிக்கு இதுதான் முதல் படம். அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்ததில்... ஹாட்ஸ் ஆஃப் பாஸ். இரும்பு உடம்பும் எக்கச்சக்க உழைப்புமாக இரண்டாம் பாதியைத் தாங்குவது ஆதிதான். முதல் பாதி முழுவதும் குறும்பும் துள்ளலுமாக வருகிறவர், அப்படியே இரண்டாம் பாதியில் வேறு ஆளாக உருமாறுகிறார். குற்றமே செய்யாமல் பலியாளாகிவிட்ட தவிப்பு, உண்மை யைக் கண்டறியத் துப்பறியும் பரபரப்பு இறுதிக் காட்சியில் கொப்ப ளிக்கும் உணர்வுகளிலும் வாழ்ந்திருக் கிறார் ஆதி!

சினிமா விமர்சனம்: அரவான்

இன்னும் 30 நாட்களில் சாகப்போகிறவன் ஆதி என்று தெரிந்தும் திருமணம் செய்துகொள்கிற தைரியப் பெண்ணாக தன்ஷிகா. ''சாகாத மனுஷன் யாரையாவது காட்டுங்க... கட்டிக்கிறேன்'' என்கிறபோது பொளேர் என்கிறது. சற்றே ஆண்மை கலந்த இவரது குரல் இன்னும் ப்ளஸ். பசுபதியின் தங்கையாக அர்ச்சனாகவி. தன்னைத் திருமணம் செய்துகொள்ள ஆதியிடம் முரட்டுப் பிரியத்துடன் பேசும் காட்சியில் மட்டும் அசத்தல்கவி.  

பலியாள் ஆகி தலைமறைவாகத் திரியும் காவல் சமூகத்தைச் சேர்ந்த ஆதி, ஏன் களவு செய்கிறார்? அவ்வளவு பொருட்களை எதற்குத் திருடி சேர்த்துவைக்கிறார் என்ற கேள்விகளுக்குப் படத்தில் பதில் இல்லை. வாசனைத் திரவியம் விற்கிறவராக வரும் பரத் ஏன் ஏதோ நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்தவரைப் போல இருக்கிறார் என்பது தெரியவில்லை. பரத்தின் பாத்திரமும் சரி... அஞ்சலியின் பாத்திரமும் சரி... அரைகுறை!

தன் நண்பனுக்காகப் பலியாள் ஆகத் துணியும் திருமுருகன் நெகிழவைக்கிறார். 'கொழுந்தியாளைப் பாதுகாக்கணும்’ என்று சின்னச் சின்னதாகச் சிரிக்கவைக்கிறார் சிங்கம்புலி.

இப்படியான ஒரு படத்தைத் தாங்கி நிற்க வேண்டிய பெரும் பொறுப்பு இசையமைப்பாளரின் தோள்களில் இருக்கும். ஆனால், 'நிலா நிலா’ பாடலும் அது படமாக்கப்பட்டு இருக்கும் விதமும் மட்டுமே ஜில்ஜில். அறிமுக இசையமைப்பாளர் கார்த்திக் பாடல்களில் இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.

களவாடச் செல்லும் இரவுகள், கருப்புக் கோயில், ஜல்லிக்கட்டு எனப் புழுதியில் புரண்டு உழைத்திருக்கிறது சித்தார்த்தின் கேமரா. வேம்பூர், மாத்தூர், சின்னவீரன்பட்டி, ராஜாவின் அரண்மனை என வெவ்வேறு ஊர்களை வித்தியாசப்படுத்தி நுணுக்கமாகக் காட்டுவதற்கு ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார் விஜய் முருகன்.

சினிமா விமர்சனம்: அரவான்

விறுவிறுப்பாகச் செல்லும் கதையில், நியாயவானாக நடிக்கும் ராஜாதான் உண்மையில் ராஜகளவாணி என்பதில் செயற்கைத்தனம் தலைதூக்குகிறது. பல ஊர்களைத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் ராஜா, தானே மந்தைக் குச் சென்று பரத்தின் கழுத்தை நெரிப்பதும், அது ஊரில் எவருக்கும் தெரியாமல் இருப்பதும்... கதையால்ல இருக்கு!

மாத்தூர், சின்னவீரன்பட்டி இரண்டு ஊர்களுக்கு இடையில் ராஜா சமரசம் செய்யும்போதே பரத்தின் அம்மாவும் தங்கையும் கண்ணீரும் கம்பலையுமாகப் பேசுகிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு மாத்தூருக்கு ரகசியமாகச் செல்லும்போது, அவர்கள்தான் பரத்தின் அம்மா, தங்கை என்று தெரிந்து ஆதி திகைப்பது ஏன்?

பிரிட்டிஷ் ஆட்சி நடக்கும் 18-ம் நூற்றாண்டுதான் கதைக் காலம். ஆனால், 'சுற்றுலாவாசி’யாகக்கூட ஆங்கிலேயர்கள் யாரும் படத்தில் எட்டிப்பார்க்கவில்லை. கதையின் மையம் காவல் ஊரான இரண்டு ஊர்களுக்கு இடையிலான மோதலும் அதில் பலியாளாகும் ஒருவனும்தான் என்றால், முற்பாதி முழுக்க களவு ஊர்பற்றிய விரிவான சித்திரிப்பு ஏன்? படத்தின் நீளத்தைப் போலவே கேள்விகளும் நீள்கின்றன!

ஆனாலும், தமிழ்த் திரையில் இதுவரை வரலாறாகச் சொல்லப்பட்டவை எல்லாம் மன்னர்களின் வரலாறாகவே இருக்க, முதன் முதலாக மக்கள் வரலாற்றைத் தீவிரமாகக் காட்சிப்படுத்திய விதத்தில், இந்த 'அரவான்’... மதிப்புக்குரிய பலவான்!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism