என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

சினிமா விமர்சனம் : 3

விகடன் விமர்சனக் குழு

##~##

'கொலவெறி’ப் படம்!

 ஒரு விடலைப் பருவக் காதல். அது முளைப்பதற்கான சிக்கல், அதைத் திருமணத்தில் முடிக்கும் போராட்டம், திருமணத்துக்குப் பிறகான உளவியல் துயரம்... '3’ பருவங்களையும் அந்தக் காதல் கடக்கும் கதை!  

தனுஷின் இறுதிச் சடங்கில் தொடங்கும் படம், தனுஷ் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொள்ளும் இறுதிக் காட்சி, டிஸ்கொதெ அரங்கில் ஸ்ருதிக்கு தனுஷ் தாலி கட்டும் திருமணக் காட்சி... அறிமுக இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ§க்கு நல்வரவு!

உதடுகளைக் கடித்துக்கொண்டே ஸ்ருதியைத் திரும்பித் திரும்பிப் பார்க்கும் தவிப்பும் சரியாக இன் பண்ணாத சட்டையுடன் ஜம்பமாக வகுப்பில் நடந்து வரும் கடைசி பெஞ்ச் கெத்தும்... 15 வருடங்களுக்கு முன் படம் பிடித்ததுபோல அச்சு அசல் பள்ளி மாணவனாக தனுஷ். 'லைஃப்

சினிமா விமர்சனம் : 3

மேட்டர்ப்பா!’ என்ற இரண்டு வார்த்தைகளை வெவ்வேறு சமயங்களில் அப்பாவிடம் சொல்லும்போது காட்டும் வித்தியாசத்திலேயே டிஸ்டிங்ஷன் தட்டுகிறார்.

தனுஷின் காதலை ஏற்றுக்கொண்டு, 'நானா சொன்னேன்?’ என்பதுபோல வாயைத் திறந்தபடி ஆச்சர்யப்படும் விடலை வெட்கம், 'இன்னும் ஒரு நிமிஷம்!’ என்று மொட்டை மாடியில் தனுஷின் கை பிடித்துக்கொள்ளும் காதல் ஏக்கம், முதலிரவில் டி ஷர்ட்- ஜீன்ஸுடன் டம்ளர் பாலைக் குடித்துவிட்டு 'நீ என்ன வேட்டி- சட்டையா கட்டியிருக்க?’ என்று கலாய்க்கும் கிறக்கம், இவை போக பலப்பல சூடு பறக்கும் முத்தம்... நடிப்பில் டீன்-ஏஜ் அழகு மிளிர்கிறது ஸ்ருதியிடம்!  

சிவகார்த்திகேயனின் சிக்சர் கமென்ட்டுகளுக்குத்தான் தியேட்டரில் விசில். பிரபு, பானுப்ரியா, ரோகிணி... யாவரும் நலம்.

ஸ்ருதியின் வாய் பேச முடியாத 'தம்ஸ் அப்’ தங்கை 'அக்...கா... போக...ட்டு...ம் வி...டுப்...பா’ என்று திக்கித் திணறி அக்காவுக்கு ஆதரவு அளிக்கும் இடம், மணமுடித்த மகளின் வீட்டுக்கு முதன்முதலில் செல்லும் அம்மாவின் பார்வை மகளின் தாலி, தோடு, குங்குமம், நெற்றி வகிட்டுப் பொட்டு என்று ஒவ்வொரு தடமாகத் தாவும் காட்சிகள் நெகிழ்ச்சி!

'உலகப் புகழ்’ கொலவெறிப் பாட்டை... குதறிவைத்த கொடுமையும் பார்க்கலாம். 'மயக்கம் என்ன’ பார்த்ததே இன்னும் நினைவில் இருக்கையில்... தனுஷ§க்கு அதே போன்ற கேரக்டர். கூட வரும் நண்பன் உட்பட. அதுவும் இரண்டாம் பாதியின் நீளம் பொறுமையை செமத்தியாகச் சோதிக்கிறது.

சினிமா விமர்சனம் : 3

'கொலவெறி’ தாண்டியும் வசீகரிக்கும் 'கண்ணழகா...’, 'போ நீ போ...’ பாடல்களில் வசீகரிக்கும் அனிருத்தின் இசை பின்னணியிலும் செமத்தியாக ஸ்கோர் செய்கிறது. பள்ளிப் பருவத்துக்குத் தனி வண்ணம் பூசியதிலும் துர்மரணம் நிகழ்ந்த வீட்டை அந்த சஸ்பென்ஸுடன் நீல நிறத்தில் படம£க்கியதிலும் கவர்கிறது வேல்ராஜின் கேமரா.  

தனுஷின் 'உயிரைப் போக்கும்’ அவஸ்தை குறித்து கொஞ்சம்கூடவா உணராமல் இருப்பார் ஸ்ருதி? தனுஷின் பிரச்னையை அவருடைய பெற்றோரிடம்கூடச் சொல்லாமல் தற்கொலைக்குச் செல்லும் வரை யிலா நிலைமையைச் சிக்கலாக்குவார் அந்த உயிருக்கு உயிரான நண்பர்? இரு நபர்களுக்குள் மட்டும் அடங்கிவிடக் கூடிய ரகசியமா அந்த உயிர் பறிக்கும் விபரீத பைபோலார் அவஸ்தை? இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் தவறும் ஒவ்வொரு இடத்திலும் சொதப்புகிறது படத்தின் திரைக்கதை.  

இருந்தாலும், தனுஷ், இளமை துள்ளும் முதல் பாதி, தனுஷ் - ஸ்ருதி கெமிஸ்ட்ரி ஆகிய மூன்று விஷயங்கள் இந்த '3’க்குப் பலம்!