Published:Updated:

வழக்கு எண் 18/9 டீம் மீட்டிங்!

பாரதி தம்பிபடம் : கே.ராஜசேகரன்

வழக்கு எண் 18/9 டீம் மீட்டிங்!

பாரதி தம்பிபடம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

ப்போது தமிழ்நாட்டின் பரபரப்பான வழக்கு இதுதான்... 'வழக்கு எண் 18/9’. 'காதல்’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படைப்பு!  

 ''காரைக்குடி தியேட்டர்ல படம் முடிஞ்சதும் எழுந்து நின்னு கை தட்டுறாங்களாம் சார்!'' - முகம் நிறைந்த புன்னகையுடன் பூரிக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி. 'திருப்பதி பிரதர்ஸ்’ அலுவலகத்தில் குழுமி இருக்கும் 'வழக்கு எண் 18/9’ டீம், வந்து குவியும் வாழ்த்துகளால் உற்சாகமாக இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'காதல்’ படம் மாதிரி இதுவும் ஒரு உண்மைக் கதைதான். ஆனா, ஒரே கதை இல்லை. பேப்பர்ல படிச்ச பல கதைகளை ஒண்ணுசேர்த்து ஒரே கதையா மாத்தியிருக்கேன்!'' - 'வழக்கு’ விவரம் சொல்கிறார் பாலாஜி    சக்திவேல்.

வழக்கு எண் 18/9 டீம் மீட்டிங்!

படத்தில் நடைபாதைக் கடை இளைஞனாக பாக்குக் கறைபடிந்த பற்களுடன் பங்கரையாக நடித்திருக்கும் ஸ்ரீ, நேரில் செம ஸ்மார்ட். ''சார் 'கல்லூரி’ பண்ணும்போது சான்ஸ் கேட்டுப் போயிருந்தேன். கிடைக்கலை. அப்புறம், விஜய் டி.வி. 'கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடிச்சேன். அதைப் பார்த்துத்தான் சார் கூப்பிட்டார். ஒருநாள், 'உனக்கு ஷாட் இல்லை’னு சொல்லிட்டாங்க. பொழுது போகாம பக்கத்தில் இருந்த பார்க்கில் படுத்துத் தூங்கிட்டேன். திடீர்னு முழிப்பு வந்து பார்த்தா, என்னைச் சுத்தி எந்தச் சத்தமும் இல்லாம கேமரா ஷூட் பண்ணிட்டு இருக்கு. எனக்கு அப்படியே ஒரு மாதிரி கண் கலங்கிருச்சு'' என்று நெகிழ்கிறார் ஸ்ரீ.

ப்ளேபாய் வில்லத்தனம் செய்யும் மிதுன் முரளி, கேரளத்துப் பையன்.''குழந்தை நட்சத்திரமா மூணு மலையாளப் படம் பண்ணி இருக்கேன். பெரிய ரோலில் நடிக்கிறது இதுதான் முதல் தடவை. ஷூட்டிங்ல நடிக்கிற மாதிரியே இல்லாம ரொம்ப கேஷ§வலா நடிச்சோம். இப்போ தியேட்டர்ல பார்த்தா, 'நாங்களா இப்படி நடிச்சோம்’னு ஆச்சர்யமா இருக்கு. எல்லாமே சார்தான்!'' என்று பாலாஜி சக்திவேலை நோக்கி கை நீட்டுகிறார்.

வேலைக்காரப் பெண் பாத்திரத்தில் வரும் ஊர்மிளா மஹந்தா, பூனே பெண். ''சார்கிட்ட வாய்ப்பு கேட்கும்போது, 'கதைப்படி நீ ஒரு பிராஸ்டியூட். உன்கிட்ட வந்த ஒருத்தன் காசு கொடுக்காம ஓடிப் போயிடுறான். இன்னொரு நாள் அவனைத் தெருவுல பிடிச்சுட்டே. எப்படி ரியாக்ட் பண்ணுவே, நடிச்சுக் காட்டு’ன்னு சொன் னார். இந்தி, குஜராத்தி, மராத்தி, அசாமின்னு பல மொழிகள்ல கெட்ட வார்த்தை பேசி திட்டி நடிச்சேன். பயந்துபோய் சார் வாய்ப்பு கொடுத்துட்டார். ஆனா, படத்துல 'அம்மா, சர்ஃப் தீர்ந்துபோச்சு’, 'பொறுக்கி’, 'கத்தி எல்லாம் கையில வெச்சுக்கக் கூடாது’... இவ்வளவுதான் நான் பேசுற டயலாக்!'' என்று சிரிக்கிறார்.

படத்தில் இன்ஸ்பெக்டராக வரும்முத்து ராமனின் நடிப்பு 'பக்கா புரொஃபஷனல்’ என்று பாராட்டுகள். ஆனால், சாருக்கும் சினிமாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. லெதர் தொழிலில் இருக்கிறார். ''எனக்கு பாலாஜி சக்திவேல், லிங்குசாமி எல்லாரும் உதவி இயக்குநரா இருக்கும்போதே பழக் கம். இந்தப் படத்தில் கூப்பிட்டு இன்ஸ் பெக்டர் டிரெஸ்ஸைப் போட்டுவிட்டு, 'உங்களை ஒரு போலீஸ்காரனா நினைச்சுக் கோங்க... இதுதான் கதை. இஷ்டப்படி நடிங்க’ன்னு சொல்லிட்டார் இயக்குநர். பெருசா எதுவும் மெனக்கெடாம நடிச்சேன். பல காட்சிகள் ஒரே டேக்கிலேயே ஓ.கே. ஆச்சு!'' என்பவர் 'காதல்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் ரெஜிஸ்ட்ரார் ஆக நடித்திருக்கிறார்.

மொத்தப் படத்தையும் கேனான் 5டி என்ற டிஜிட்டல் கேமரா மூலம் படம் பிடித்து தொழில்நுட்பக் கவனம் குவித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். ''நார்மல் சினிமா கேமரா, 35 கிலோ எடை இருக்கும். கேனான் 5டி ஸ்டில் கேமராபோல இருக்கும். நிறையக் காட்சிகளில் கதாபாத்திரங்களுக்கு நடுவில் கேமராவைத் தூக்கிப் போட்டுப் படம் பிடிச்சது மாதிரி இருக்கும். இது ரசிகர்களுக்கு, தானே ஸ்பாட்டில் இருந்து கவனிக்கும் உணர்வைக் கொடுக்கும்!'' என்கிறார்.  

அந்தப் பள்ளிக்கூட கரஸ்பாண்டென்ட் பெயர் ஜெயலட்சுமி, செல்போனில் ஆபாச க்ளிப்பிங்ஸ் வைத்திருக்கும் பையனின் அப்பா பெயர் தூய இருதயம், கெமிஸ்ட்ரியில் சந்தேகம் என இருவரும் படித்துக்கொண்டு இருப்பது ஆசிட்பற்றிய பாடம், ஆங்காங்கே பல ஃப்ரேம்களில் லோ ஆங்கிளில் கிடக்கும் பாட்டில், ஆசிட் வீச்சுக்குப் பிறகு ஆம்புலன்ஸ் கடந்து செல்லும்போது பின் பக்கம் இருந்து கேட்கும் 'ஒரு ஆஃபாயில்’ குரல், வேலை பார்க்கும் வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம் செருப்பை எடுத்து ஓரமாக வைக்கும் வேலைக்காரப் பெண் எனப் படம் நெடுகிலும் விரவிக்கிடக்கும் நுணுக்கமான காட்சிகள் பல கதைகள் சொல்கின்றன.

இந்தப் படத்தில் 'கூத்துக்காரன்’ சின்ன சாமி இணைந்த கதை சுவாரஸ்யமானது.

வழக்கு எண் 18/9 டீம் மீட்டிங்!

''எங்க ஊர், தருமபுரி பக்கம் எர்ரப்பட்டி. எனக்கு படிப்பு வரலை. அதான் நாலைஞ்சு வருஷமாக் கூத்து கட்டுறேன். மஹாபாரதம், ராமாயணம் எல்லாம் நடிப்போம். நான் பொண்ணு வேஷமும் கோமாளி வேஷமும் போடுவேன். அதுக்குத்தான் முடியெல்லாம் வளர்த்துவெச்சிருக்கேன். அப்படி ஒரு தடவை மேய்ச்சேரியில கூத்து நடக்கிறப்போ, குண்டா ஒருத்தர் கேமராவை வெச்சு நான் நடிக்கிறதைப் படம் பிடிச்சாப்ல. 'சினிமாவுல நடிக்கலாம்’னு கூப்பிட்டாப்ல. 'எனக்குத் தோதுப்படாது’னு சொல்லிட்டேன். அப்புறமா, 'நடிக்கிறது ஈஸிதான், அப்படி, இப்படி’னு சொல்லி நைஸ் பண்ணிக் கூப்பிட்டு வந்துட்டாப்ல. சினிமாவுல எல்லாமே புதுசா இருந்துச்சு. இங்கே தப்பா நடிச்சா உடனே நிறுத்திட்டு, மாத்தி நடிக்கச் சொல்றாங்க. ஆனா, கூத்துல அதெல்லாம் முடியாது. சினிமாவை விட கூத்துதான் கஷ்டம்!'' என்கிற சின்னசாமிக்கு 17 வயது. கூத்து என்பதைத் தாண்டி உலகமே தெரியவில்லை.

''நிறையப் பேர் பாராட்டுறாங்க. 'நம் தகுதிக்கு மீறிய பாராட்டோ?’னு தோணுது. ஆனாலும், இதை அடுத்த நல்ல சினிமாவை எடுக்கிறதுக்கான பெட்ரோல் மாதிரி எடுத்துக்கிறேன்'' என்று அதிர அதிரச் சிரிக்கிறார் பாலாஜி சக்திவேல்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism